வலிமையான மிருகம் போல் நின்று கொண்டு இருக்கிறது அந்தப் பீரங்கி டாங்கி. அதன் துப்பாக்கி குழல் தவிர அதன் பிரம்மாண்ட அளவே பயமூட்டுவதாக இருக்கிறது. அது தவிர ரோட்டைத் தடதடக்க செய்கிற சத்தம் வேறு. ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக டாங்கிகள் சாலையை அதிர வைத்தபடி வருகின்றன. வெள்ளை சட்டை கறுப்பு பேண்ட் அணிந்த இளைஞன் அவன். கையில் ஒரு பை. கல்லூரி முடிந்தவுடன் ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறவன் போல ஒரு தோற்றம். முதலாவதாக வரும் பீரங்கி டாங்கிக்கு முன்னால் அதன் வழியை மறித்தபடி நிற்கிறான். தூரத்தில் இருந்து பார்க்கும் போது அவன் அந்த டாங்கியைப் பார்த்து எதோ சொல்கிறான் என புரிந்து கொள்ள முடிகிறது. அவனது செயலைக் கண்டு பீரங்கி டாங்கி குழம்பி போய் சற்று நேரம் நின்று பிறகு மீண்டும் அவனைத் தவிர்த்து சற்று திரும்பி தன் வழியில் செல்ல எத்தனிக்கிறது. ஆனால் அந்த இளைஞனோ மீண்டும் மீண்டும் அந்த மிருகத்திற்கு முன்னால் போய் நிற்கிறான். ஒரு கட்டம் வரை போராடி பார்த்து அந்த அகிம்சை போராட்டத்தால் பயந்து அந்த டாங்கியின் இன்ஜின் அணைக்கப்பட்டது. அந்த இளைஞன் டாங்கியின் மீது ஏறி உள்ளே இருப்பவர்களிடம் எதோ பேசுகிறான். பிறகு மீண்டும் கீழே இறங்குகிறான். இப்போது டாங்கி தன் வழியில் செல்ல முனைகிறது. மீண்டும் அந்த இளைஞன் டாங்கியின் முன்னால் வந்து நிற்கிறான். இந்த முறை நீலநிறை உடையில் இருக்கிற சிலர் பக்கவாட்டில் இருந்து ஓடி வந்து அந்த இளைஞனை அங்கிருந்து இழுத்து கொண்டு போகிறார்கள். அவர்கள் பக்கத்தில் கூட்டத்தோடு கூட்டமாய் மறைந்து போன பிறகு டாங்குகள் ஒன்றன்பின் ஒன்றாய் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன. நடந்து கொண்டு இருக்கும் சம்பவத்தைத் தூரத்தில் சில கேமராக்கள் படமெடுத்து கொண்டு இருக்கின்றன.
சீனாவில் கம்யூனிசம்
1949-ம் ஆண்டு மாவோவின் தலைமையில் சீனாவில் கம்யூனிச அரசாங்கம் உருவானது. புதிய சிந்தாந்தம், புதிய அரசு கொள்கைகள், புதிய கட்டளைகள் என மாவோவின் ஆட்சி புதுமைகளுக்கே உரியதான தொடக்க கால பிரச்சனைகள் பலவற்றை கொண்டிருந்தது. கம்யூனிச ஆட்சி சர்வதிகாரமாய் மாறியது. அங்கே மாற்றுகருத்துகளுக்கோ போராட்டக்காரர்களுக்கோ இடமில்லை என்கிற அளவு கட்டுப்பாடுகள் அதிகரித்தன. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த மாவோ 1976-ம் ஆண்டு இறந்தார். அவரது இறப்பிற்குப் பிறகு இனி இதே பாணியில் அரசை நடத்தி செல்ல முடியாது என சீன கம்யூனிஸ்ட்கள் விவாதிக்க தொடங்கினர். மாவோவின் இறப்பிற்குப் பிறகு டெங் சீயோபிங் என்பவர் ஆட்சியைத் தனது கட்டுபாட்டிற்கு கொண்டு வந்தார். அதிகாரப்பூர்வமாக டெங் எந்த தலைமை பொறுப்பிலும் இல்லாவிட்டாலும் சீனாவின் தலைமை அதிகாரத்தைப் பிறகு 1992-ம் ஆண்டு வரை அவர் தான் இயக்கி கொண்டு இருந்தார்.
அரசியலிலும் பொருளாதாரத்திலும் பல மாற்றங்களையும், ஏற்கெனவே உள்ள கடுமையான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளைக் கொண்டு வருவதில் டெங் முக்கிய பங்காற்றினார். டெங்கின் நம்பிக்கை பெற்ற ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் ஹு யோபாங். டெங் பல பதவிகளை ஹுவிற்கு அளித்தார். 1982-ம் ஆண்டு தொடங்கி 1987-ம் ஆண்டு வரை ஹு கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொது செயலாளராக பதவி வகித்தார். தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக பேசுவதிலும், அரசாங்கத்தினுள் வெளிப்படைத்தன்மை வேண்டும் என சொல்வதிலும் புகழ் பெற்றிருந்த ஹு யோபாங் மீது மற்ற மூத்த கம்யூனிஸ்ட்கள் கோபத்தில் இருந்தனர். மாவோ பாணி சஃபாரி உடைகள் அணிவதை முதலில் துறந்தவர் ஹு தான். ஒருமுறை அவரிடம் நவீன சீனாவிற்கு மாவோவின் எந்தச் சிந்தனைகள் இன்றும் பொருந்தும் என்கிற கேள்வி கேட்கப்பட்டது. மாவோவின் எந்தச் சிந்தனையும் இன்றைய சீனாவிற்கு உதவாது என்று பதில் அளித்தார் ஹு. 1987-ம் ஆண்டு அரசிற்கு எதிராக நடந்த மாணவர் போராட்டத்தைக் கடுமையான முறையில் முறியடிக்கவில்லை என ஹு மீது கம்யூனிஸ்ட தலைவர்கள் குற்றம் சாட்டினர். இதன் நீட்சியாக ஹுவின் மீது டெங்கும் மனகசப்பில் இருந்தார். தொடர்ச்சியாக ஹு தான் வகித்து வந்த பொது செயலாளர் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று. அரசியலில் பிறகு தனிமைப்படுத்தபட்ட ஹு மீது பொதுமக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த நல்லெண்ணம் இருந்தது.
உலகமெங்கும் கம்யூனிசத்திற்கு சரிவு
1980-91 ஆண்டு வரை உலகம் முழுக்க பல கம்யூனிச நாடுகள் முக்கியமான மாற்றங்களைச் சந்தித்தன. சோவியத் யூனியனில் அரசாங்கத்தில் பல புதுமையான மாற்றங்களைச் செய்ய தொடங்கினார் கோர்ப்பசேவ். பிறகு சோவியத் யூனியன் பல துண்டுகளாய் உடைந்தது. ஜெர்மனியை இரண்டு நாடாக பிரித்து வைத்திருந்த பெர்லின் சுவர் உடைக்கப்பட்டது. ஜெர்மனி ஒரே நாடாக ஒன்றிணைக்கப்பட்டது. போலாந்து, செக்ஸ்லோவாக்கியா, ரோமானியா ஆகிய நாடுகளில் கம்யூனிச அரசாங்க அமைப்பு தூக்கி எறியப்பட்டு மாற்று அரசாங்கங்கள் பதவியேற்றன. உலகமெங்கும் நடந்த மாற்றங்கள் சீன மக்களிடத்திலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வலிமையான தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தன.
சீனாவில் மாற்றங்கள்
உலகம் எங்கும் கம்யூனிச நாடுகள் பெரும் மாற்றத்தினைச் சந்தித்த வேளையில் டெங் சீனாவில் பொருளாதார அளவில் பல மாற்றங்களை உருவாக்க முனைந்தார். சந்தைகளை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கி சுதந்திரமாக்கினார். எனினும் தொடக்க காலக்கட்டத்தில் இந்த மாற்றங்கள் தோல்வியைச் சந்தித்தன. 88-ம் ஆண்டு டெங் சீனாவில் பெரும்பாலான பொருட்கள் சந்தை விலைக்கு விற்கப்படும் என்று அறிவித்தார். அதுவரையில் அமுலில் இருந்த குறைவான விலை, வேலைவாய்ப்பிற்கான உத்தரவாதம் மேலும் பல சமூக மேம்பாடு திட்டங்கள் எல்லாம் இனி இருக்க போவதில்லை என பீதி கிளம்பியது. இதைத் தொடர்ந்து பலரும் பணத்தைப் பதுக்க தொடங்கினார்கள். பொருளாதாரம் சரிய தொடங்கியது. அரசாங்கம் தனது திட்டத்தை அப்போதைக்குக் கைவிட்டது. ஆனாலும் பொருளாதார மாற்றங்கள் பலவித விளைவுகளை உண்டு செய்தது. பட்டதாரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு குறையத் தொடங்கியது. நல்ல அரசாங்க வேலை வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் அல்லது அதிகார மட்டத்தில் யாராவது சிபாரிசு செய்ய வேண்டும் என்கிற நிலை நீடித்தது. பொருளாதார மாற்றங்கள் நிகழும் வேகத்தில் அரசியல் மாற்றங்கள் அரங்கேறவில்லை. முக்கியமாக சர்வதிகார தன்மையினைத் தளர்த்துவது குறித்தான விவாதத்தில் முக்கிய முன்னேற்றம் எதுவுமில்லை.
எண்பதுகளின் பிற்பகுதியில் சீனாவில் இளைஞர்கள் பெரிதும் நம்பிக்கை இழந்து இருந்தனர். இந்தக் காலக்கட்டத்தில் தான் பேங் லிசி என்பவர் சீன இளைஞர்களிடையே புகழ் பெற தொடங்கினார். பேங் லிசி ஒரு பேராசிரியர். சிறிது காலம் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவிட்டு சீனாவிற்கு திரும்பிய பேங் லிசி சீன பல்கலைக்கழகங்களுக்கு பயணித்து அங்கு மனித உரிமை குறித்தும், சுதந்திரம் குறித்தும், அதிகார பரவலாக்கம் குறித்தும் பேச தொடங்கினார். அவருடைய பேச்சும் சிந்தனையும் பல சீன மாணவர்களை ஒன்றிணைக்க தொடங்கியது.
1989 தியனன்மென் போராட்டம்
உலகம் எங்கும் கம்யூனிச நாடுகள் சந்தித்த சரிவு, பொருளாதார மாற்றங்கள் கொண்டு வந்த அவநம்பிக்கை, அரசாங்கத்தின் சர்வதிகாரம், கம்யூனிச அமைப்பினுள் பெருகிய ஊழல் மற்றும் அதிகாரத்தினைத் தவறாக பயன்படுத்து சம்பந்தமான குற்றச்சாட்டுகள், ஹு போன்ற தலைவர்கள் பதவி இழந்தது, பேராசிரியர் பேங் லிசி போன்றவர்களின் தாக்கம் இவற்றின் காரணமாக சீன இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கான மனநிலையில் இருந்தனர். இந்தக் காலக்கட்டத்தில் ஹு 1989-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக இறந்தார். அவருக்கு இறுதி மரியாதை செலுத்த பத்து கிலோமீட்டர் தூரம் மக்கள்கூட்டம் வரிசையில் காத்திருந்தார்கள் என சொல்லப்படுகிறது. அவருடைய இறுதி ஊர்வலத்திற்கு 50000-யிற்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டனர். ஹுவின் இறுதி ஊர்வலத்தினை சீன அரசு இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த உணர்வெழுச்சி மாணவர்களை அரசாங்கத்தின் சர்வாதிகார அமைப்பிற்கு எதிராகவும் போராட தூண்டியது. பலவித கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் அரசிற்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். தியனன்மென் சதுக்கத்தில் பெரிய அளவில் உருவெடுத்த இப்போராட்டத்தை இன்றும் தியனன்மென் போராட்டம் என்றே அழைக்கிறார்கள். மாணவர்களின் போராட்டத்திற்கு பொதுமக்களிடத்திலும் பரவலான வரவேற்பு இருந்தது. பல நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. டெங் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தார். அதோடு அவர்களைத் தேச பற்று இல்லாதவர்கள் என வர்ணித்தார். அரசாங்கத்தின் மேல்மட்ட நிலையில் இருந்தவர்கள், வளர்ந்து வரும் போராட்டங்கள் கம்யூனிச ஆட்சியினை முடிவிற்கு கொண்டு வந்து விடும் என்கிற பயத்தில் இருந்தார்கள்.
ஒன்றரை மாதங்களாக சீனாவெங்கும் ஆதரவு பெற்று வளர்ந்த மக்கள் போராட்டத்தினை கடுமையாக எதிர்கொள்வது என டெங் தீர்மானித்தார். ஜுன் மாத தொடக்கத்தில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தினை ராணுவம் எதிர்கொண்டது. ஏகே 47 துப்பாக்கியால் ராணுவம் மக்களை நோக்கி சுட தொடங்கிய போது மக்களால் இதை நம்பவே முடியவில்லை. ராணுவம் சொந்த மக்களை கொல்வதை அவர்கள் கேள்விபட்டிருக்க மாட்டார்கள். நாள் முழுக்க இந்த வேட்டை நிகழ்த்தப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தேடி தேடி கொல்லப்பட்டார்கள். சாலைகளில் இறந்து கிடந்தவர்களின் உடலை அகற்ற முயன்றவர்களும் சுட்டு கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்கள். அரசு கணக்குப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 241.
புகைப்படம்
சீன ராணுவத்தின் வேட்டை நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் தான் இந்த பீரங்கி டாங்கியைத் தனியே ஓர் இளைஞன் எதிர்கொண்ட சம்பவம் நடந்தது. மிருகத்தனமாய் நிற்கும் பீரங்கி டாங்கிக்கு எதிராக தனியாளாய் துணிந்து நிற்கும் இளைஞனின் புகைப்படம் சீன போராட்டக்காரர்களின் துணிவை மட்டுமல்ல, உலகமெங்கும் இது போன்ற அதிகாரத்தை எதிர்த்து போராடும் மக்களின் துணிவைப் பிரதிபலிக்கும் உலகப்புகழ் பெற்ற புகைப்படமாய் மாறியது.
பீரங்கி டாங்கிக்கு எதிரே துணிந்து நின்ற இளைஞனின் பெயர் என்ன என்பதோ அல்லது அதற்கு பிறகு அவர் என்னவானார் என்பதை பற்றியோ இது வரை உறுதியான தகவல்கள் எதுவுமில்லை. ஒரு சிலர் அந்த இளைஞன் பிறகு ராணுவத்தால் கொல்லப்பட்டான் என சொல்கிறார்கள். ஒரு சிலர் இந்த இளைஞன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
இந்தச் சம்பவத்தைப் பல புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுத்து இருந்தாலும் அசோசியேட் பிரஸ் புகைப்படக்காரர் ஜெஃப் வைட்னர் எடுத்த புகைப்படம் தான் இன்றும் பிரபலமாக இருக்கிறது. (இந்தப் பதிவில் உள்ள முதல் புகைப்படம்!)
சீனாவில் இந்தப் புகைப்படம் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
Leave a Reply