கூடங்குளம் – அரசின் அணுகுமுறை எப்படி?

ஓர் அரசாங்கம் ஒரு போராட்டத்தினை எப்படி அணுக வேண்டும்? சம்பந்தபட்டவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை கொடுக்கலாம். அப்படி தான் பல சர்வதிகார அரசுகள் செய்கின்றன. ஆனால் இன்றைய இந்திய அரசு சிவில் உரிமைகளை மதிக்கும் அரசு. அதனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதுவும் செய்ய மாட்டார்கள். முதலில் பேச்சு வார்த்தை, பிறகு சமாதான தூதர்கள், அப்புறம் ஊடக பிரச்சாரம், அதன்பிறகு எதிராளிகள் மேல் அவதூறு பரப்புதல், இறுதி கட்டத்தில் காவல்துறை பூச்சாண்டி என்று படிபடியாக தங்களது அணுகுமுறையை விரித்து கொண்டு போவார்கள். (இந்த அணுகுமுறை கூட இடத்திற்கு இடம் மாறும். காஷ்மீரோ வடகிழக்கு மாநிலங்களோ அல்லது இலங்கைக்கு எதிரான போராட்டங்களாக இருந்தால் அரசு அணுகுமுறை இன்னும் கடினமானதாக மாறி போகும்.)

ஓர் அரசு தங்களுக்கு எதிரான அல்லது தாங்கள் எடுத்த ஒரு முடிவிற்கு எதிரான ஒரு மாற்றுகருத்தினை எப்படி அணுகுகிறது என்பதை வைத்து அந்த நாட்டின் ஜனநாயகம் எந்தளவு ஆரோக்கியமாக இருக்கிறது என சொல்ல முடியும்.

எடுத்தவுடன் கைது என்றாலும் சரி அல்லது இப்போது இந்திய அரசு கொண்டுள்ள பலநிலை அணுகுமுறையாக இருந்தாலும் இதன் அடிப்படை ஒன்று தான். அது மாற்றுகருத்தினை சிறிதும் காது கொடுத்து கேட்கவில்லை என்பது தான். கூடங்குளம் பேச்சு வார்த்தையின் போது போராட்டக்குழுவினை எப்படி தாஜா செய்வது என்பது தான் நோக்கமாக இருந்ததேயன்றி மாற்றுக்கருத்தினில் இருக்கும் நியாயத்தினைப் புரிந்து கொள்ளும் நோக்கம் இல்லை.

இப்போது காவல்துறை, வெளிநாட்டு சதி, சிபிஐ என தங்களது அணுகுமுறையின் இறுதிநிலையில் சர்வதிகார அரசு போல தான் இன்றைய அரசு மாறி விட்டது.

மாற்று கருத்தினை காது கொடுத்து கேட்பது என்பது என்ன?

நேரு காலத்து இந்தியா தன்னளவில் கொள்கைகளைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. இன்றோ நாம் வல்லரசு பகற்கனவில் அமெரிக்க சாயத்தைப் பூசிக் கொண்டு திரிகிற சமூகமாக இருக்கிறோம். இந்திய அரசுக்கு இன்று உலக அரங்கில் என்ன மதிப்பு இருக்கிறது? இலங்கை போற்குற்றங்களுக்கு உடந்தை, இஸ்ரேலுக்கு ஆதரவு என அதன் பாதை வேறு பக்கமாய் திரும்பி விட்டது. இந்தியாவின் இன்றைய மத்திய வர்க்கத்தினர் அமெரிக்காவில் உள்ள மத்திய வர்க்கத்தினரை விட பேராசைமிக்கவர்களாய் இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் வாழும் மத்திய வர்க்கத்தினரின் பேராசை உலகத்தில் உள்ள அனைத்து வளங்களையும் ஏற்கெனவே காலி செய்யும் முனைப்பில் உள்ளது. இந்திய மத்திய வர்க்கமும் அந்த வேலையில் இறங்குவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தபடி தயாராக இருக்கிறது. இவர்களுக்கு சாதகமாக நடப்பதாய் பிம்பத்தை உண்டு செய்து தங்களது கொள்கைகளை அமுல்படுத்துகின்றன அந்தந்த நாட்டு அரசாங்கங்கள்.

மாற்று கருத்துகளை உள்வாங்கி மைய நீரோட்டத்தில் ஒதுக்கப்பட்டவர்களையும் அரவணைத்து செல்லுதல் நல்ல அரசாங்கமா? அல்லது ஒரு கட்டுகோப்பான வணிக நிறுவனம் போல நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொண்டே போவதை முதல் குறிக்கோளாய் கொண்டிருத்தல் நல்ல அரசாங்கமா?

பெருகி வரும் மின்பற்றாகுறையைப் போக்க இன்று அணுமின் உலைகளை விட்டால் வேறு வழியில்லை என்று தொடர் பிரச்சாரம் நடக்கிறது. ஆனால் அரசு தரப்பில் யாரும் வெளியில் சொல்லாத சில உண்மைகள் உண்டு.

அணுமின் உலை செயல்பாட்டிற்கு வரும் போது அதில் இருந்து வெளியாகும் கழிவுகள் ஆபத்தான கதிர்வீச்சு நிரம்பியதாக இருக்கும். ஆபத்தான புளுட்டோனியம் இந்த கழிவுகளில் இருப்பதும் ஒரு காரணம். இந்த கழிவுகளின் கதிர்வீச்சு கட்டாயமாக கேன்சர் தொடங்கி பலவித நோய்களைப் பல தலைமுறைகளுக்கும் ஒருசேர ஏற்படுத்தும். முப்பது டன் கழிவுகளிலிருந்து உண்டாகும் கதிர்வீச்சு, இரண்டாம் உலக போரில் ஹீரோசிமா நகரில் வீசப்பட்ட அணுகுண்டு போல ஆயிரம் மடங்கு ஆபத்தானது என்கிறார்கள். இந்தக் கழிவுகள் குறைந்தது 50000 ஆண்டுகளுக்கு கதிர்வீச்சு தன்மையுடையதாக தொடர்ந்து இருக்கும். இந்தத் தகவல்களை அரசு தரப்பில் யாரும் மறுக்க முடியாது. ஆனால் இதை அவர்கள் வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள்.

கழிவுகளை பாதுகாப்பாக ஒளித்து விடுவோம் என்கிறது அரசு. உலகம் எங்கும் இந்தக் கழிவுகளை கடலுக்கு அடியிலோ நிலத்திற்கு அடியிலோ ஆழமாய் ஒளித்து வைக்கிறார்கள். ராக்கெட் மூலம் இத்தகைய கழிவுகளை விண்வெளியில் எறிந்து விடலாம் என்று கூட சில நாடுகள் யோசிக்கின்றன. ஆனால் ஐம்பதாயிரம் வருடங்களுக்கு தொடரும் இந்த ஆபத்தினை எப்படி சரியாக கையாள்வது என்று உலகில் யாருக்கும் இன்று வரை தெரியாது. ஆனாலும் உலகம் எங்கும் பல நாட்டு அரசாங்கங்கள் அணுமின் உலைகளைப் பற்றிய உண்மைகளை மறைப்பதிலே குறியாக இருக்கின்றன.

த்ரீ மைல் தீவு (1979), செர்னோபிள் (1986), ஜப்பான் பூகிசிமா (11 மார்ச் 2010) அணு/அணுமின் விபத்துகளுக்குப் பிறகும் இன்னும் பல அரசாங்கங்கள் இந்த ஆபத்தினைச் சரியாக புரிந்து கொள்ளவே இல்லை. இப்போது ஜெர்மனி மட்டும் 2020-ம் ஆண்டிற்குள் அணுமின் உலைகளைப் படிபடியாக குறைப்பதாய் அறிவித்து இருக்கிறது.

இன்னும் ஐம்பது வருடங்களில் மனிதகுலத்தை ஆட்டி படைக்கும் பிரச்சனையாக ஆபத்தான கதிர்வீச்சு தான் இருக்க போகிறது. சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்திய மனிதகுலம் இறுதியாக தனது அழிவிற்கு வழிகோலுவதாக அணுமின் திட்டங்களை உருவாக்கி கொண்டு இருக்கிறது. ஐம்பது வருடங்கள் கழித்து எல்லா நாடுகளும் தங்களது தவறை நினைத்து வருந்தி திருந்திய பின்னர் திருந்துவது தான் இந்திய அரசின் நிலைப்பாடாக இருக்கும். அது வரை அவர்கள் மாற்றுகருத்தினை உதாசீனப்படுத்தவே செய்வார்கள். அது வரை அவர்கள் அபத்தமான ‘சுனாமி வந்தாலும் ஆபத்தில்லை, நிலநடுக்கம் வந்தாலும் ஆபத்தில்லை,’ போன்ற பிரச்சாரங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியபடி தான் இருப்பார்கள். இன்று இந்திய அரசு உலக நாடுகளுக்கு முன்னோடியாக இல்லை. உலக நாடுகளை பின்தொடர்ந்து செல்லும் ஆட்டுமந்தையில் ஓர் ஆடாகவே இருக்கிறது.