கூடங்குளம் – கண்டனம்

கூடங்குளத்தில் எதிர்பார்த்தது போலவே அரசு தன் முழு வலிமையையும் காட்டி அணுமின் உலைக்குத் திறப்பு விழா நடத்தி விட்டது. அணுமின் உலைகளைக் கட்டும் போது முதலில் சொல்லப்படும் விஷயமே அங்குள்ள மக்கள் அதற்கு அனுமதி தந்து விட்டார்கள் என்பது தான். ஆனால் 144 தடையுத்தரவைப் போட்டு நடந்திருக்கும் இந்த திறப்பு விழா விதிமுறைகளை மீறிய செயல். குவிந்திருக்கும் போலீசார், வாகனங்களுக்கு/மக்களுக்கு அனுமதி மறுத்தல் போன்றவை மனித உரிமை மீறல் மட்டுமல்ல சட்ட புறம்பானதும் கூட.

இடைதேர்தல் வரை காத்திருந்து இந்தச் செயலைச் செய்திருக்கும் அரசு கூடவே கோடி ரூபாய் செலவில் அங்குள்ள மக்களுக்கு நலபணி திட்டம் அறிவித்து எலும்பு துண்டினை எறிந்து இருக்கிறது. மக்களைப் பற்றி அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கும், அவர்களுக்கு ஆலோசனை சொல்பவர்களுக்கும் மக்கள் எலும்பு துண்டுகளைக் கவ்வி கொண்டு நிற்கும் நாய்கள் போல தெரிவார்கள் போல.

மாற்று கருத்தினை எதிர்கொள்ள துளியும் இஷ்டமின்றி, அடக்குமுறைகளை ஏவி போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர துடிக்கும் அதிகாரம் கண்டனத்திற்குரியது.