பிற: சல்மான் ருஷ்டியும் சாத்தான்களும்

இந்தியாவில் ஒரு புத்தகத்தை தடை செய்வதற்கு நிறைய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். ஒரு மாநில அரசாங்கம் தான் அத்தகைய செயலில் ஈடுபட முடியும். அதற்கு அந்த அரசு, நீதிமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தி தனது நடவடிக்கைக்கு சட்ட ஒப்புதல் பெற வேண்டும். சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் செய்யுள்கள்’ புத்தகம் அத்தகைய முழுமையான சட்ட வழிமுறைகளால் தடை செய்யபட்டது அல்ல. 1988-ம் ஆண்டு ‘சாத்தானின் செய்யுள்கள்’ வெளியான போது உலகம் முழுக்க பல இடங்களில் முஸ்லீம்கள் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தியாவில் அப்போது இருந்த ராஜீவ் காந்தி அரசு இந்த புத்தகத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதற்கு தடை விதித்தது. வெறும் customs act-இல் தடை செய்யபட்டது மட்டுமே இந்த புத்தகம். இப்போது சல்மான் ருஷ்டி ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு வருவது யாருக்கு பிடிக்கவில்லையோ தெரியவில்லை, வழக்கமாய் அவர் இந்தியாவிற்கு வரும் போதெல்லாம் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை காட்டியே இந்த முறை அவரை வரவிடாமல் செய்து விட்டார்கள். இதில் தீவிரவாதிகளின் பெயரில் பொய் வதந்தி வேறு. இறுதியாக அவர் வெப் கேம் மூலம் விழாவில் பேச அனுமதி கொடுத்து பிறகு கடைசியில் வயரை அறுத்து விட்டு என்று காவல்துறையினரும், மாநில அரசாங்கமும் ஜோக்கர்களாயின. ‘சாத்தானின் செய்யுள்கள்’ புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை மேடையில் படித்து காட்டியவர்களும் மிரட்டப்பட்டு இருக்கிறார்கள். முஸ்லீம்கள் ருஷ்டியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது அவர்கள் உரிமை. அது போல சல்மான் ருஷ்டிக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டியது அரசின் கடமை. ஜனநாயக நாட்டின் அரசாங்கம் அப்படி தான் செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பிரச்சனைகள் எதுவுமே நிகழ்ந்து விடக்கூடாது என்கிற பதட்டத்தில் சட்டத்தை தாண்டி அரசு செயலாற்றி இருக்கிறது. தங்களுக்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காக சட்டங்களை புறந்தள்ளி அல்லது சட்டத்தை தவறாக காட்டுகிற அதிகாரத்தின் இரண்டாம் நிலையினரின் சதி இது. மற்றொரு பக்கம் தாங்கள் பாலுக்கும் காவலன், பூனைக்கும் தோழன் என்று டாப் லெவல் அதிகாரம் வேடம் போடுகிறது. வெளிபடையாக அவர்கள் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக பேச மாட்டார்கள். அதே சமயம் திரைமறைவில் இது போன்ற காரியத்தில் ஈடுபடுவார்கள். ஓவியர் எம்.எப்.உசேன், தஸ்லீமா நஸிரீன் என இந்த கபட நாடகத்திற்கு பலியானவர்கள் ஏராளம்.