700 கோடி மக்கள்தொகை ஒரு பொய்

இன்று முதல் உலக மக்கள்தொகை 700 கோடியாக  உயர்ந்து விட்டது என எல்லா ஊடகங்களும் பரபரப்பாக செய்தி வெளியிடுகின்றன. உத்தரபிரதேசத்தில் அந்த சிறப்பு குழந்தை பிறக்க போகிறது என சொல்கிறார்கள். பிலிப்பைன்ஸில் குழந்தை பிறந்து விட்டதாக அந்த ஊர் ஊடகம் சொல்கிறது. எங்கே எங்கே அந்த 700 கோடியதாக உலகிற்கு வருகை தரும் அந்த மனித பிறவி? ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவலை சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் மக்கள்தொகை 700 கோடியை தொடுவதற்கு இன்னும் ஒரு வருடம் கூட ஆகலாம் என்பது தான் உண்மையாக இருக்கக் கூடும்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அமைப்பு இந்த மக்கள் தொகை பிரிவு. இந்த வருடத்தின் தொடக்கத்தில் அவர்கள் மக்கள்தொகை பற்றியும் அதன் பாதிப்புகளை பற்றியும் வெளியிட்ட ஓர் அறிக்கையின் மீது மற்றவர்களது கவனத்தை ஈர்க்க இந்த வருடம் அக்டோபர் 31-ம் தேதியை 700 கோடியாக மக்கட்தொகை உயரும் தினமாக அறிவித்தார்கள். ஆனால் இந்த கணக்கு அறிவியல்பூர்வமானது அல்ல: ஆறு மாதங்கள் முன்பின் இருக்கலாம் என்பதை ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை பிரிவு அதிகாரிகளே ஒப்பு கொள்கிறார்கள்.

சமீப பத்தாண்டுகளில் உலகத்தின் பல நாடுகளில் அதிகாரப்பூர்வமான மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் முழுமையாக நடந்தேறவே இல்லை. முக்கியமாக ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் தான் இன்றைய நிலவரப்படி மிக வேகமாக மக்கள்தொகை அதிகரித்தபடி இருக்கிறது. இங்கு கடந்த இருபதாண்டுகளில் முழுமையான ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவே இல்லை. இந்த சூழலில் மக்கள் தொகை 700 கோடியாக உயரும் என்பது ஓர் எதிர்பார்ப்பு அவ்வளவு தான். இன்னும் சொல்ல போனால் ஒரு யூகம் என்பதை தவிர வேறு எதுவுமில்லை.

அமெரிக்க நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை உலக மக்கள் தொகை 2012- ம் ஆண்டு 700 கோடியைத் தொடும் என சொல்கிறது. வியன்னாவில் உள்ள மக்கள் தொகை பற்றி ஆய்வு செய்யும் அமைப்பு ஒன்று 700 கோடியாக மக்கள் தொகை 2013 அல்லது 2014-ம் ஆண்டு தான் உயரும் என தனது அறிக்கையில் சொல்கிறது. ஆனால் உலகளவில் மக்கள் தொகை வளர்ச்சியின் விகிதம் குறைந்து கொண்டே வருவதால் ஆய்வாளர்கள் 700 கோடியாக மக்கள் தொகை உயர்வது நாம் எதிர்பார்த்ததை விட தாமதமாக தான் இருக்கும் என சொல்கிறார்கள்.

அந்த “ஹேப்பி பர்த்டே” வாழ்த்தினை சேமித்து வையுங்கள். இன்னும் நாள் இருக்கிறது.

பி.கு: தி குளோப் & மெயில் வெளியிட்ட கட்டுரையை அடிப்பைடையாக வைத்து எழுதபட்டது.