உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்

இந்த முறை உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல் போல பரபரப்பாக இருக்கிறது. தெரு தெருவாக பிரச்சாரம் தினமும். கட்சி துண்டுகளை அரசியல் தலைவர் ஸ்டைலில் அணிந்து வேட்பாளர்கள் தங்கள் அடிபொடிகளுடன் வலம் வரும் போது அவர்கள் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்களா அல்லது எம்.எல்.ஏ பதவிக்கா என வியப்பு மேலோங்குகிறது. இத்தனை அடிபொடிகள், தேர்தல் அலுவலகம், வண்ணச் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், வாகனங்கள் என எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தால் செலவு கணக்கு கட்டாயம் பெரிதாக தான் இருக்குமென புரிகிறது.

எதற்காக இத்தனை செலவு?

சென்னையில் வார்டு கவுன்சிலர் பதவியே அதிகாரமிக்கது என்கிறார் ஒரு நண்பர். வார்டில் எந்த வேலையாக இருந்தாலும் காண்டிராக்ட் எடுப்பவர் வார்டு கவன்சிலருக்கு 25 சதவீதம் கொடை கொடுக்க வேண்டியதிருக்கும் என்கிறார். மற்றவர்களுக்கு கொடை கொடுத்தது போக அதிகபட்சமாக மிச்சமிருப்பது 60 சதவீதம் அல்லது 65 சதவீதம் தான். அதில் என்ன உருப்படியாக வேலை செய்து கொடுத்து விட போகிறார்கள்? நகராட்சிகளில் வார்டு கவன்சிலர்கள் தங்களுடைய நகரத்தில் எடுக்கபடும் பெரும் காண்டிராக்ட்டுகளில் தங்களுக்கு சரியாக பங்கு கிடைக்கவில்லை எனில் ஒட்டிமொத்தமாக சேர்ந்து சேர்மன் பதவியில் இருப்பவரை தூக்கி எறியும் துணிவில் இருக்கிறார்களாம். நல்ல பணவரத்து மிக்க கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளர்கள் இத்தனை செலவு செய்வது அவர்களை பொறுத்தவரை தேவையானதாக இருக்கும். அதுவும் சம்பாதிக்க போகும் பெரும்பணத்திற்கு முன் இந்த செலவு மிக குறைவாக தான் இருக்கும்.

கட்சிகளுக்கு இந்த தேர்தல் மான பிரச்சனை

கடந்த சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு பெரும் சாதகமாக அமைந்து விட்ட காரணத்தினால் திமுகவிற்கு இப்போது உள்ளாட்சி தேர்தலில் ஜெயிப்பது முக்கியமான விஷயம். இதிலும் முற்றிலுமாக தோற்றால் கட்சிக்கு அனேகமாக பெரும் பின்னடைவு தான். அதனால் கடந்த ஐந்தாண்டுகளில் சம்பாதித்தவற்றை கொட்டியாவது அவர்கள் ஜெயிக்க பெரும் பிரயத்தனம் செய்வார்கள். விஜய்காந்த் கட்சிக்கோ சட்டமன்ற வெற்றியில் தங்கள் பங்கும் இருக்கிறது என நிரூபிக்க வேண்டிய நெருக்கடி. அதிமுகவிற்கு தங்களது மெஜாரிட்டியை தக்க வைத்து கொள்ள வேண்டும். முக்கிய கட்சிகள் எல்லாருமே இந்த உள்ளாட்சி தேர்தலை முக்கியமானதாக பாவித்து வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். விளைவு என்றுமில்லாத அளவு பணம் தேர்தல் செலவிற்காக கொட்டபடுகிறது.

உள்ளாட்சி ஜனநாயகம் கேலிகூத்தாகிறது

சட்டமன்ற, பாராளுமன்ற அதாவது பிரதிநிதித்துவ ஜனநாயகம் ஏற்கெனவே கேலிகூத்தாகி விட்டது. தேர்ந்தெடுக்கப்படும் நம் பிரதிநிதிகள் (அதாவது எம்எல்ஏ அல்லது எம்பி) அதிகாரமற்றவர்களாக தங்கள் கட்சி தலைமை சொல்வதை மறுபேச்சு சொல்லாமல் ஏற்று கொள்பவர்களாக பொம்மைகளாக இருக்கிறார்கள். இந்த பணிவிற்கு பரிசாக அவர்களுக்கு வேறு வழியில் பெரும்பணம் சம்பாதிக்கும் வழிகள் திறந்து விடபடுகின்றன. இன்று பாராளுமன்றத்தில் இருக்கும் எம்.பிக்கள் பலரும் லட்சாதிபதிகள். மத்திய அமைச்சர்கள் பலர் கோடீஸ்வரர்கள். எங்கே இருந்து வந்தது இத்தனை பணம்? எல்லாருக்குமே தெரியும் இது நியாயமான முறையில் வந்த பணமில்லை என்று. ஆனால் மக்கள் அவர்களை ஏற்று கொண்டு தான் இருக்கிறார்கள். சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதில்லை. மாறாக இரண்டு அரசர்களுக்கிடையே ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்கள். ஜெயலலிதாவா கருணாநிதியா? காங்கிரஸா பிஜேபியா? இப்படி அதிகார மையங்கள் தன்னிகர் இல்லா வலிமையுடன் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது இப்படியான கேலிகூத்தாகி விட்டது.

உள்ளாட்சி அமைப்பு என்பது ஜனநாயகத்தின் மற்றொரு வலுவான உறுப்பு. இன்று எப்படி சட்டமன்றம், பாராளுமன்றம் அதிகார மையங்களின் கட்டுபாட்டில் இயங்குகிறதோ அது போல உள்ளாட்சி அமைப்புகளும் அதே அதிகார மையங்களுக்கு கீழே இயங்க தொடங்குகின்றன. உள்ளாட்சி என்பது மக்கள் தங்களுக்கான பிரச்சனைகளை தாங்களே ஒன்றுகூடி முடிவெடுத்து தீர்க்க வேண்டிய இடம். அங்கே கட்சிக்காரர்கள் எதற்கு?

அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்

அரசியல் கட்சிகள் உள்ளாட்சியில் அதிகாரம் செலுத்தினால் அங்கே பிரதிநிதிகள், மக்களின் பிரதிநிதிகளாக இருக்க மாட்டார்கள்; மாறாக கட்சியின் பிரதிநிதிகளாக தான் இருப்பார்கள். எம்.எல்.ஏ-வாகவோ எம்.பி-யாக தகுதியடைகிற நிலையில் இல்லாத கட்சிகாரர்கள் வார்டு கவுன்சிலராகவாது மாறி சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள். கட்சியும் அப்படி அவர்கள் பலனடையட்டும் என நினைக்கிறது. அரசியல் சின்னங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் இடமிருக்க கூடாது. அரசியல் கட்சிகள், கட்சிக்காரர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கபட வேண்டும். இல்லையெனில் இது மற்றொரு பிரதிநிதித்துவ கேலிகூத்தாக தான் முடியும்.

தடை சாத்தியமா?

அரசியல் கட்சிகளுக்கு தடை என்கிற விஷயத்தை செய்ய வேண்டும் எனில் அதை செய்ய வேண்டியவர்கள் அரசியல் கட்சிகளே என்பதே இதில் வேடிக்கை. அதனால் அவர்கள் கட்டாயம் அதை முன்நின்று செய்ய போவதில்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் இந்த பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கேலிகூத்துகள் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தும் போது, உள்ளாட்சி தேர்தலிலாவது அரசியல் கட்சிகள் விலகி இருக்க வேண்டிய கட்டாயம் நிகழ தான் போகிறது. அது வரை நாம் இந்த கேலிக்கூத்துகளை சகித்து கொள்ள தான் வேண்டும்.