சுடுவதற்கு முன் ஒரு கணம் சாதி!

பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது. உயிர்பலி வேதனைக்குரியது. இச்சம்பவத்தில் சாதி மனநிலை மிகுந்து இருப்பதை மறைக்கவே முடியாது.

துப்பாக்கி சூட்டை ஆதரித்து பேசிய முதல்வர் தொடங்கி, மருத்துவமனையில் போய் அட்மிட் ஆன போலீஸ் உயர் அதிகாரிகள், வருட வருடம் விழாவிற்கான அனுமதி/உதவி ஆகியவற்றை சரியான சமயத்தில் தர மறுத்து, சம்பந்தபட்டவர்கள் கோர்ட் படியேற காரணமான அரசு அதிகாரிகள், விழாவில் கலவரம் வரும் என எதிர்பார்த்து அப்படி வந்தால் ஆக்ரோஷமாய் செயல்பட வேண்டுமென தீர்மானித்த அதிரடிப்படை தலைவர்கள், துப்பாக்கி சூடு நிகழ்த்திய போலீஸ்காரர்கள், பிணத்தை எதோ விறகுகளை சுமந்து செல்வது போல தூக்கி கொண்டு வந்த காவலர்கள், இவனுங்க விழாவுல அப்படி ஆட்டம் போடுவானுங்க அதனால் தான் சுட்டிருப்பானுங்க என டீக்கடையோரம் பேசும் நபர்கள் என சாதி மனநிலை என்பது எங்கோ ஆழத்தில் ஒளிந்திருப்பது மட்டுமல்ல, அது கட்டுபடுத்த முடியாமல் வக்கிரத்துடன் பல இடங்களிலும் வெளிபடவும் செய்கிறது என மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது.

சாதி உணர்வும் வெறியும் துவேசமும் இன்றும் எல்லா மட்டங்களிலும் எல்லா வகை மனிதர்களிடமும் ஆழத்திலோ அல்லது வெளிபடையாகவோ இருக்கவே செய்கிறது. என்னுடைய பெற்றோர் தொடங்கி என் அளவு வரை சாதி பற்றிய உணர்வே இல்லாமல் தான் நான் வளர்ந்தேன். பள்ளிக்கூடத்திலும் சாதி உணர்வு என்பது இழிவானது என்று தான் சொல்லி இருந்தார்கள். ஆனாலும் தலித் மக்களுக்கான போராட்டங்களை முன் எடுத்து செல்பவர்கள், அந்த கருத்தாக்கத்தில் பங்கு பெறுபவர்களை சந்தித்த போது என்னுள் எங்கோ ஆழத்தில் சாதி மனநிலை இருப்பது கண்டு துணுக்குற்றேன். என்னுள் வர்க்க பேதம், ஆணாதிக்கம், அறிவு கற்பித திமிர் என பல விஷயங்களுடன் கலந்து கிடந்தது சாதி மனநிலை. என்றாலும் தனித்து இருந்தது. எங்கோ ஆழத்தில் அது என்னை இயக்கும் சக்தி படைத்ததாகவும் இருந்தது. என் சக மனிதர்களும் அவ்வாறே இருப்பதாய் நான் ஒவ்வொரு முறையும் கண்டறிகிறேன்.

துப்பாக்கிச்சூடு, அதனால் நிகழ்ந்த உயிர்பலி ஏன் பெரும் விவாதமாகவில்லை? கலவரம், கலவரசவாதிகள் என்றே ஒரு கூட்டம் இப்போது வண்ணம் அடித்து காட்டபடுவது ஏன்? உயிர்பலிக்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடியாது தடுப்பது எது? துப்பாக்கியை எடுத்து விசையை அழுத்தியவர்கள் மனதில் ஒரு கணம் சாதி உணர்வு தோன்றாது இருந்திருந்தால் அவர்கள் மனிதர்களை பார்த்து சுடாமல் இருந்திருப்பார்களா? அல்லது குறைந்தபட்சம் கால்களை நோக்கி துப்பாக்கியை தாழ்த்தியிருப்பார்களா?

துப்பாக்கிச்சூடு நிகழ்த்துமளவு அங்கு என்ன வன்முறை நிகழ்ந்தது? குடித்து விட்டு கலாட்டா செய்வார்கள் என சொல்கிறார்கள். எனக்கு தெரிந்து சமீப வருடங்களில் எல்லா கட்சி பொதுகூட்டங்களும் அப்படி தான் நடக்கின்றன. ரோட்டில் அந்த சமயம் போகும் கட்சி வண்டிகளில் இருந்து பொது மக்களுக்கு எந்தளவு ஆபாச அர்ச்சனை நடக்கும் என சொல்லி மாளாது. இப்படி அங்கு நடந்ததா என தெரியாது. அப்படி நடந்திருந்தாலும் இத்தனை ஆயிரம் கூட்டங்களில் எதுவும் செய்யாது கை கட்டி கொண்டிருந்த போலீசார் இந்த விழாவில் மட்டும் ஏன் பொங்கி எழுந்தார்கள்? தலித் அல்லாதோர் நடத்திய விழாவாக இருந்ததிருந்தால் இத்தனை தூரம் போலீசார் ஆக்ரோஷம் காட்டியிருப்பார்களா?

வருட வருடம் போலீசார் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் உள்குத்துகளை மீறி தான் இம்மானுவேல் சேகரன் பூசை நடந்து இருக்கிறது. இந்த வருடம் கூட நீதிமன்றத்தை நாடி பிறகு தான் விழாவிற்கான முறையான அரசு உதவி கிடைத்து இருக்கிறது. வருட வருடம் இந்த விழாவை நடத்த சிரமப்பட வைத்த அரசாங்க அதிகாரிகள் யார்? அவர்களுக்கு உத்தரவிட்ட பெருந்தலைகள் யார் யார்?

கலவரத்தை ஒடுக்க எத்தனையோ நவீன வகை சமாச்சாரங்கள் வந்து விட்டன. நீரை அடித்து விரட்டுதல், கண்ணீர் புகைக்குண்டு, ரப்பர் புல்லட் என எதுவுமே நமது போலீசாரிடம் இல்லையா?

இவர்கள் எல்லாரும் குற்றவாளிகள் என்று பொதுப்படையாக சொல்லி விடமுடியாது. எல்லாருமே இப்படியான சாதி உணர்வுடன் செயல்பட்டார்கள் என எல்லார்பக்கமும் கை நீட்டி குற்றம் சாட்டி விட முடியாது தான். ஆனால் எல்லாரும் அறிந்தோ அறியாமலோ வெளிபடையாகவோ மறைமுகமாகவோ தங்களுக்கே தெரிந்தோ அல்லது ஆழ்மன வக்கிரத்தினாலோ சாதி மனநிலையாலே இப்படியான கொடூரம் அரங்கேற தங்களுடைய பங்கினை ஆற்றியிருக்கிறார்கள்.

இம்மானுவேல் சேகரன் சாதி வெறிக்கு எதிராக போராடியவர். அதே சாதி வெறியால் கொல்லபட்டவர். இவ்வளவு வருடங்கள் கழித்தும் நிலைமை இன்னும் பெரியளவு மாறி விடவில்லை என்பது தான் வேதனைக்குரியது.


Comments
6 responses to “சுடுவதற்கு முன் ஒரு கணம் சாதி!”
  1. சையத் Avatar
    சையத்

    இந்தியாவில் போலீஸ் தான் பொறுக்கி + ரவுடிகள் இவனுங்களை பொது மக்கள் ஒன்று கூடி களையெடுக்க வேண்டும்.

    1. பொது மக்களே ரவ்டிதன் இவர்கள் தான் கோட்டர் பாட்டிலுக்கு அல்லைவர்கள்

  2. பக்க சார்பில்லாத சமூக அவலங்களை சொல்லும் பதிவு.பாராட்டுக்கள்.

    1. சாய் ஒரு கேள்வி உங்கள் குழந்தைக்கு எதிர் காலத்தில் சாதி அடையாளம் இல்லாமல் திருமணம் நடத்த முடியுமா

  3. //பக்க சார்பில்லாத சமூக அவலங்களை சொல்லும் பதிவு.பாராட்டுக்கள்//

    என்ன பன்றது சாய்.. நானெல்லாம் ஒதுங்கி வாழ்ந்துட்டு போற சாதி 🙁

  4. etharkku intha vanmurai, manithan manithanaay irukka theriyathathal thaan intha kodumai, kanneer ellam… kadavul, kadavul entru saatrum intha ulagam thannul kadavulai marapathaal thaan intha vethanai. idayam illatha ulagathil izhivu nilai uruvaakum intha ulakathil kadavulai eppadi, enge theduvathu. Aaanaal santhu ponthukalil ellam koyil katti kumbapisekam nadakirathe, saathi matham entra peyaraal marithu poyum manangal kaneer vittu konde irruka kadavuluku oru kuliyala? vedanaiyo vedanai.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.