பொம்மை கடையில் ஒரு பதினைந்து நிமிடம்

நான், மனைவி மற்றும் எங்கள் ஐந்து வயது மகன் மூவரும் மருத்துவமனைக்கு போய் விட்டு திரும்பும் போது வழியிலே ஒரு பொம்மை கடைக்கும் போனோம். பொட்டு முதல் பீரோ வரை அனைத்தையும் விற்கும் பெரிய கடை அது. அதில் ஒரு தளத்தில் குழந்தைகளுக்கான பொருட்கள் இருந்தன.

கண்ணாடி பெட்டிகளில் கையளவு கார்கள் நூற்றுக்கணக்கில் பார்க் செய்யபட்டிருந்தன. விதவிதமான கார்களை பார்க்கும் போது அவை அனைத்தும் வெளிநாட்டு படங்களில் வரும் நவீன கார்களை போல் இருந்ததேயன்றி எதுவும் நம்மூர் ரோட்டில் ஓடும் கார்களை போலவே இல்லை. சிறிது நேரம் வேடிக்கை பார்த்தபடி இருந்த போது எனக்கே அந்த கார்களை வாங்கும் ஆசை அதிகரித்து விட்டது. எனது பையனோ தேர்ந்த மெக்கானிக் போல கார்களை ஒவ்வொன்றாய் அலசி கொண்டிருந்தான். வீட்டில் ஏற்கெனவே இது போல முப்பது நாற்பது கார்கள் இருக்கின்றன. அதனால் அவன் தான் அதில் நிபுணர்.

கார்ஸ் என்கிற திரைப்படத்தின் இரண்டாவது பார்ட் சமீபத்தில் ரீலிசானது. அதில் ஒரு அழுக்கு டோ வண்டி வரும். அந்த பொம்மை அழகாய் இருந்தது. கையை விட சிறியதாய் இருந்த அதை எடுத்து திருப்பி பார்த்த போது, அதன் விலை 750 ரூபாய். ஓ!

“லாரி, லாரி, லாரி,” என ஒரு இரண்டு வயது குழந்தை அதன் அப்பா தோளில் சாய்ந்தபடி கால்களை உதைத்து அழுது கொண்டிருந்தது. எந்த லாரியை சொல்கிறது? அல்லது லாரியை தான் சொல்கிறதா? புரியவில்லை.

மாலை நான்கு மணி என்பதால் அங்கு பெரிய கூட்டம் எதுவுமில்லை. எனினும் வரிசைக்கு இருவராவது இருப்பார்கள். முதல் இரண்டு வரிசையில் பொம்மைகள் குவிந்து கிடந்தன. அடுத்த வரிசையில் புத்தகங்களும் செஸ் போர்டு, பந்து போன்ற விளையாட்டு சாமான்களும் இருந்தன. அடுத்த வரிசை கொஞ்சம் பெரியது. ஸ்கேட்டிங், சின்ன சைக்கிஸ் என பெரிய சாமான்களும், டெட்டி பியர்களும் குவிந்து கிடந்தன. ஒரு சுழல் அலமாரியில் குழந்தைகளுக்கான டிவிடி, சிடிகள் இருந்தன. ஒரு லெப்டாப் பொம்மையை நெருங்கி பார்த்த போது அதில் டிவிடி பிளேயர் இருப்பதை பார்த்தேன். டால்பி என்று கூட எழுதியிருந்தது. விலையை பார்க்காமலே அதை வைத்து விட்டு வந்து விட்டேன்.

ஒரு பெண் இறுக்கமான சட்டை ஜீன்ஸ் அணிந்து புதியதாய் பிறக்க போகும் குழந்தைக்காக மனம் போன போக்கில் எது எதோ வாங்கி கொண்டிருந்தார். கூட யாரும் வரவில்லை.

கண்ணாடி போட்ட நபர் ஒருவர் தனியே புத்தக அலமாரிகள் அருகே வெகு நேரம் ஒரே ஒரு புத்தகத்தை வாசித்தபடி நின்றிருந்தார். அவரிடம் என்ன சொல்வது என தெரியாமல் சற்று தள்ளி தயக்கத்தோடு நின்றிருந்தாள் அங்கு பணிபுரியும் பெண். அதே யூனிபார்மில் மற்ற இரண்டு பெண்கள் சிசிடிவி பார்க்காத இடத்தில் அலமாரிகளுக்கு அருகே நின்றபடி இருந்தார்கள். நான் நெருங்கும் போது ஒருத்தி மெல்ல விசும்புவதையும் இன்னொருத்தி அவளுக்கு சமாதானம் சொல்வதையும் பார்த்தேன்.

எப்போது இங்கிருந்து கிளம்புவோம் என்கிற பதைபதைப்பு எனக்கு தோன்றும் போது எனது மனைவியும் மகனும் தீவிரமான ஷாப்பிங்கில் ஈடுபட்டிருப்பதை பார்த்தேன். மஞ்சள் நிறத்திலான கார் ஒன்றை செல்க்ட் செய்து விட்டான். நல்ல வேளை டெஸ்ட் டிரைவ் எல்லாம் இல்லை. அவ்வளவு தானா என்றால் என் மனைவி சின்ன சின்ன ஐட்டங்கள் இருக்குமிடத்திற்கு போய் குழந்தைகளுக்கான சோப்பு சீப்பு என்று பார்க்க தொடங்கி விட்டாள்.

ஒரு பெண்மணி செல்போனில் தான் செல்லவிருக்கும் வீட்டிற்கு பேசி அங்கிருக்கும் குழந்தைக்கு என்ன பிடிக்கும் என கேட்டு அதை வாங்கி செல்வதை பார்த்தேன். எனது பையனை அழைத்து போய் புத்தகங்கள் பகுதியில் இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். ஒன்று காமிக்ஸ் புத்தகம். மற்றொன்று போக்குவரத்து ஊர்திகளை பற்றிய படங்களுடன் கூடிய புத்தகம். அவன் மெக்கானிக் என்பதால் அந்த கலர்கலரான படப்புத்தகம் பிடிக்கும் என அதை வாங்கினேன்.

பில் போடுமிடத்தில் இறுகிய முகத்துடன் ஓர் இளைஞன் செல்போனை வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவனருகே சென்ற போது வேறொரு பெண்மணி அங்கு வந்தாள். அழகிய முகம் அந்த பெண்ணிற்கு. சிகப்பு நிறம். ஆனால் உடலோ பெருத்து போயிருந்தது. ரோஸ் நிற புடவை அணிந்திருந்தாள். முகம் சோகமாயிருந்தது. அவளுக்கு பின்னால் ஒரு தடியான ஆள் அமைதியாய் நின்றிருந்தார்.கணவன் என யூகித்தேன்.

“போன் பண்ணி கேட்டுட்டு தான் வந்தோம். இப்ப இல்லைங்கிறீங்களே?” என புலம்பினாள் அவள்.

“நீங்க கீழ ரிஷப்ஷன்ல கேட்டிருப்பீங்க. எங்க புளோருல கேட்டிருந்தா சொல்லியிருப்போம்.” அவர்களுக்கு பின்னாலிருந்து முன்னால் வந்த பணியாள் இப்படி சொன்னான்.

“அப்ப உங்க புளோர் நம்பரை சொல்லுங்க.” அந்த பெண்மணி ஒரு விலையுயர்ந்த செல்போனை எடுத்து அவர்கள் சொன்ன நம்பர்களை குறித்து கொண்டாள்.

பில் கவுண்டரில் உட்கார்ந்திருந்த இளைஞன் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அவர்களை பார்த்தான். சேட் வட்டிக்கடையில் உட்கார வேண்டிய நபர் என நினைத்து கொண்டேன்.

“வாக்கி டாக்கி வந்தா சொல்லுங்க. பையன் ஆசைபடறான்.” அந்த அம்மாள் அழுது விடுவாள் போலிருந்தது. அந்த இரு குண்டு மனிதர்களுக்கு இடையில் ஓர் ஏழு வயது மதிக்கதக்க சிறுவன் நின்றிருப்பதை அப்போது தான் கவனித்தேன். அழுது அழுது முகம் சிவந்திருந்தது. மிகுந்த ஏமாற்றத்திற்கு பிறகு மீண்டும் அழுகையை துவக்கும் முகபாவனை தோன்றியது. மூவரும் மிகுந்த சோகத்துடன் படிகளில் இறங்கி போவதை பார்த்தபடி இருந்தேன். அந்த பையனின் சோகத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பையனை ஆறுதல்படுத்துவதற்காக கணவனும் மனைவியும் நடிக்கிறார்களா என சந்தேகம் தோன்றியது. ஆனால் அப்படி நினைக்கவும் முடியவில்லை. நானும் படிகளில் இறங்கி போய் இந்த பகுதியில் வேறு எங்கெல்லாம் பொம்மைக்கடைகள் இருக்கின்றன என அவர்களுக்கு சொல்லலாமா என தோன்றியது. பிறகு, ‘ம்கூம் பணக்கார பன்றிகள். பையனை இப்படி வளர்க்கிறாங்க. புத்தகம் வாங்கி தர வேண்டியது தானே அவனுக்கு,’ என சலித்து கொண்டேன். அதே சமயம் புத்தகங்கள் வைத்திருந்த இடத்தில் இது வரை தனியே நின்றிருந்த கண்ணாடி நபர் சட்டென தான் இவ்வளவு நேரம் வாசித்து கொண்டிருந்த புத்தகத்தை திரும்பவும் அலமாரியிலே வைத்துவிட்டு வேகவேகமாய் வெறுங்கையோடு படி இறங்கி போனார்.

நாங்கள் படி இறங்கும் போது மேலும் பல சிறுவர்கள் தங்கள் தாயாருடன் மலர்ந்த முகத்துடன் மேலே ஏறி போனார்கள். இவர்கள் கீழே இறங்கும் போது சோகமான முகத்துடன் ஏன் இருக்கிறார்கள் என யோசித்தபடி நான் படிகளில் இறங்கி கொண்டு இருந்தேன்.