விக்கிலீக்ஸ்: ஈழப் போரில் இந்தியா

wikileaks2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட ஈழப் போரில் உலக நாடுகள் பெரும்பாலானவை இலங்கை அரசாங்கத்தை போர்நிறுத்தம் செய்யும்படி வலியுறுத்தின. ஆனால் உலக நாடுகளின் இந்த கோரிக்கையினை இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ளாதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியும் காரணம் என்கின்றன விக்கிலீக்ஸில் வெளியான ஆவணங்கள்.

2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புவிற்கு பயணப்பட்டார். வன்னியில் போர்முனையில் நடந்த மனித உரிமை மீறல் செயல்களை பற்றிய கவலைகளை தெரிவிக்க நடந்த பயணம் என்று சொல்லபட்டாலும் இந்த பயணத்தின் போது முகர்ஜி விடுதலைப்புலிகளுக்கான எதிரான போரினை நிறுத்தும்படி கோரவில்லை என்று தெரியவந்திருக்கிறது.

“போர் வெற்றி 23 ஆண்டுக்கால பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வருவதோடு இலங்கை முழுவதும் குறிப்பாக வட இலங்கைக்கும் புதிய அரசியல் வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் என நான் நம்பிக்கை தெரிவித்தேன். ராஜபக்சே தன்னுடைய நோக்கமும் அது தான் என்று உறுதியளித்தார்,” என்று முகர்ஜி சொன்னதாக விக்கிலீக்ஸில் வெளியான ஆவணங்கள் சொல்கின்றன.

ஐ.நா அல்லது மற்ற நாடுகளின் யோசனைகளை இலங்கை செவிமடுக்க வேண்டாம் என இந்தியா அதற்கு யோசனை சொன்னதாக பிறிது ஓர் இடத்தில் இந்திய வெளியுறவு துறை செயலாளர் சிவசங்கர் மேனன் குறிப்பிட்டதாக தெரிகிறது. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்களை காப்பாற்ற இந்திய அரசாங்கம் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. ஐ.நா பாதுகாப்பு சபை மூலமாகவோ அல்லது மனித உரிமைகள் கவுன்சில் மூலமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என சிவசங்கர மேனன் அமெரிக்காவிற்கு தெரியபடுத்தி இருக்கிறார்.

இலங்கை போரினில் உலக நாடுகள் தலையிடுவதை தவிர்ப்பதற்காக இந்தியா பல சமயங்களில் பலவிதமான நிலைபாட்டினை எடுத்தி குழப்பத்தினை உண்டாக்கியது. அதே வருடம் ஏபரல் 25-ம் தேதி சிவசங்கர மேனனும் நாராயணனும் கொழும்புவிற்கு பயணப்பட்டார்கள். இரண்டு நாட்களில் ராஜபக்சே போர்நிறுத்த அறிவிப்பினை வெளியிடுவார் என்றும் அது வரை அமெரிக்க அரசாங்கம் எதுவும் நெருக்கடி கொடுக்க வேண்டாம் என அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ராஜபக்சே வலிமையான ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று மட்டும் அறிவித்தார். அதோடு முழு வீச்சில் விடுதலைப்புலிகள் பதுங்கி இருந்த பத்து கிலோ மீட்டர் சுற்றளவு நிலத்தின் மீதான தாக்குதல் தொடங்கியது.

ராஜபக்சே தங்கள் குரல் எதற்கும் செவிமடுக்கவில்லை என்றான பின்னர் போருக்கு பிறகான நடவடிக்கைகளில் தமிழ் இனவொழிப்பு செயல்கள் இல்லாமல் இருப்பதற்கான முயற்சிகளுக்கு வெளிநாடுகள் முயன்றன. இந்த முயற்சிகளில் இந்திய அரசாங்கம் உலக நாடுகளோடு இணைந்து முயற்சிக்க வேண்டும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்தியா அதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை.

இந்திய அரசாங்கம் உலக நாடுகளை மட்டுமல்லாமல் இந்திய மக்களையும் குறிப்பாக தமிழர்களையும் வேண்டுமென்றே திசைதிருப்பி மறைமுகமாக இலங்கை போரில் ராஜபக்சேவிற்கு பெரும் உதவி செய்திருக்கிறது என்பது விக்கிலீக்ஸ் ஆவணங்கள் மூலம் புலப்படுகிறது. நாடாளுமன்றத்தில் கூட தவறான தகவல் மன்மோகன்சிங் அரசால் சொல்லபட்டிருக்கிறது. ஜனநாயக முறை எதுவும் இல்லாமல் தன்னிச்சையாக இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டம் இரகசியமாகவும் முறைதவறியும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதற்கு காரணம் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பழி வாங்கும் நோக்கமே. இதில் சீனாவையோ பாகிஸ்தானையோ எதிர்கொள்ள நடந்த சாணாக்கியத்தனம் எதுவுமே இல்லை. தற்போது ஈழப்போரில் ராஜபக்சேவின் ராணுவம் செய்துள்ள மனித உரிமை மீறல்கள் ஒவ்வொன்றாய் வெளிவர துவங்கி இருக்கின்றன. போர் குற்றம் என்கிற அளவினை தாண்டி இன அழித்தொழிப்பு நடவடிக்கையாகவே இவற்றை மனித உரிமை அமைப்புகள் பார்க்கின்றன. போருக்கு பின்னரும் இலங்கையில் தமிழர்கள் மீதான பயங்கரவாதமும், சர்வதிகார சட்டங்களும் தொடர்கின்றன. ராஜபக்சேவின் எல்லா குற்றங்களுக்கும் இந்தியா உடந்தை என்பது இன்று வரை தொடர்கிறது.