அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ்

விக்கிலீக்ஸில் சென்னை தூதரக அதிகாரியின் குறிப்புகள்wikileaks
அமெரிக்காவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த விக்கிலீக்ஸ் இப்படி அழகிரியையும் கார்த்தி சிதம்பரத்தையும் பதம் பார்க்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. அரசாங்கத்தால் ஒளித்தோ அல்லது மறைத்தோ வைக்கபடும் தகவல்களை அல்லது கோப்புகளை இணையத்தில் பட்டவர்த்தனமாக போட்டு உடைப்பது தான் விக்கிலீக்ஸ் பிரபலமாக காரணம். உலகமெங்கும் பல முக்கிய தலைகள் இதில் தோலுரித்து காட்டபட்டார்கள். இப்போது வெளிவந்திருப்பது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பெட்ரிக் என்பவரால் எழுதபட்ட குறிப்புகள்.

ஓட்டிற்கு பணம் – சர்வ சாதாரணம்
கார்த்தி சிதம்பரம், அழகிரியின் அரசியல் சகா பட்டுராஜன் ஆகியோர் தாங்கள் 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டிற்காக பொதுமக்களுக்கு பணம் கொடுத்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் ஒப்பு கொண்டதாய் சொல்கிறது விக்கிலீக்ஸ் குறிப்புகள்.

2009 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பெட்ரிக் அமெரிக்க அரசிற்கு அனுப்பிய குறிப்புகளில் தமிழகத்தில் ஓட்டிற்காக பணம் கொடுத்து அரசாங்க கட்சிகள் எப்படி எல்லாம் ஜனநாயகத்தை வளைக்கின்றன என விரிவாக எழுதபட்டிருக்கிறது. குறிப்பாக பொதுமக்களே இப்போது தேர்தலில் பணத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும் பெட்ரிக் சொல்கிறார். நள்ளிரவு நேரங்களில் அரசியல் கட்சிக்காரர்கள் வாக்காளர் பட்டியலை கையில் எடுத்து கொண்டு வீடு வீடாக  பண பட்டுவாடா செய்ததை ஆச்சரியத்துடன் இந்த குறிப்புகள் விவரிக்கின்றன. தான் சந்தித்த தமிழக பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் பலரும் ஓட்டிற்காக பணத்தை கொடுப்பது சர்வ சாதாரணம் என்பதாய் சொன்னதையும் (வாழ்க அவர்கள்!) தூதரக அதிகாரி பதிவு செய்திருக்கிறார்.

திருமங்களம் ஃபார்முலா
ஓட்டிற்கு 500 ரூபாய் என்றிருந்த நிலையை அழகிரி தான் 5000 என்று உயர்த்தினார் என்கிறது அந்த குறிப்பு. அதிகாலையில் எல்லா வீடுகளுக்கும் நாளிதழ்கள் சப்ளை செய்யபடும். அந்த நாளிதழ்களின் உள்ளே கவரில் 5000 ரூபாய் பணமும் அதனோடு திமுகவின் வாக்காளர் அட்டையும் இணைக்கபட்டிருக்கும். இந்த ஃபார்முலா தேர்தல் முடிவினை மாற்றியமைக்கும் வல்லமை படைத்ததாய் இருந்ததாம். (என்ன ஒரு கண்டுபிடிப்பு!)

கார்த்தி சிதம்பரமும் ஓட்டிற்காக பணம் கொடுக்கும் வழக்கத்தை சிவகங்கை தொகுதியில் கடைபிடித்தார் ஆனாலும் அவரால் அழகிரி அளவு வெற்றிகரமாய் செயற்படுத்த முடியவில்லை  என சொல்கிறது விக்கிலீக்ஸ் குறிப்பு.

ஒபாமாவிற்கு டிப்ஸ்
அமெரிக்க தூதரக அதிகாரிகளின் உளவு வேலைகளை அவ்வளவாய் ரசிக்க முடியவில்லை என்றாலும் இத்தனை ஆர்வமாய் நுணக்கமான தகவல்களை அமெரிக்க அரசாங்கம் சேகரித்து கொண்டிருப்பது ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொடுக்க கூடிய விஷயம். தனியே விரிவாக அலசபட வேண்டிய தலைப்பு இது.

ஒருவேளை விக்கிலீக்ஸ் மூலம் இவை வெளியுலகத்திற்கு வராமல் போய் இருந்தால் ஒபாமா திருமங்களம் ஃபார்முலாவை தனது அடுத்த தேர்தல் ஆயுதமாக பயன்படுத்தியிருக்க கூடும் என்று தோன்றுகிறது. 🙂

ஓட்டிற்காக பணம் ஏன் பாப்புலர் ஆனது?

ஓட்டு போடுவதால் தனக்கு என்ன லாபம் என கேட்கிறான் ஒரு சராசரி குடிமகன். ஒருவன் குறிப்பிட்ட தூரம் பயணித்து நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டுவதால் அவனுக்கு என்ன லாபம் இருக்க முடியும்?

அமெரிக்க அரசாங்க அளவில் பேசபட்ட இந்த ‘ஓட்டிற்கு பணம்’ விஷயம் விக்கிலீக்ஸில் வெளிவந்திருப்பது பரபரப்பான விஷயமாக இருக்கலாம் ஆனால் தமிழக மக்களை பொறுத்தவரை இது அறியபட்ட யதார்த்தமான விஷயம். தேர்தல் ஆணையமும் சட்டமும் இப்போதைக்கு இதை பெரியளவு கட்டுபடுத்த முடியாத நிலை தான் உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஓட்டு போடுவதால் தனக்கு என்ன லாபம் என கேட்கிறான் ஒரு சராசரி குடிமகன். ஒருவன் குறிப்பிட்ட தூரம் பயணித்து நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டுவதால் அவனுக்கு என்ன லாபம் இருக்க முடியும்? இந்திய ஜனநாயகத்திற்கு என்னாலான பங்கினை ஆற்றினேன் என சில மத்தியவர்க்கம் சொல்லக்கூடும். தேர்தலில் வெற்றி பெற்ற நபருக்கு தனக்கு ஓட்டு போட்டவர்கள் ஒரு பொருட்டே அல்ல. இந்த ஜனநாயக பிரதிநிதிகள் தங்களுடைய கட்சி தலைமைக்கு கட்டுபட்டவர்களாக தான் இருக்கிறார்களே ஒழிய தங்களை தேர்வு செய்தவர்களுடைய கருத்தினையோ வேண்டுகோளினையோ ஏற்று நடத்துபவர்களாக இல்லை. இதனாலே பெரும்பாலானோர் இந்த ஓட்டு போடும் விஷயம் பயனற்றது என்றே நினைக்கிறார்கள். அல்லது ஓட்டிற்காக பணமோ அல்லது வேறு வகையான உதவிகளை பெறுவதோ தவறில்லை என்றே நினைக்கிறார்கள். தேர்தலில் ஜெயிக்கும் அரசியல்வாதி ஐந்தாண்டு காலம் அரசாங்க பணத்தை கொள்ளையடிக்கிறான். தேர்தல் சமயத்தில் அவனிடமிருந்து பணத்தை பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும் என்பது இன்றைய பெரும்பாலானோர் வாதம்.

ஓட்டிற்காக பணம் கொடுத்தல்/வாங்குதல் என்கிற பிரச்சனை இவ்வளவு பூதாகரமாய் மாறியதற்கு அதிகார பரவலாக்கம் இல்லாமையே காரணம். ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் அல்ல. ஒரு குடிமகனுக்கு ஓட்டு போடும் உரிமையை மட்டும் கொடுத்து விட்டால் அது முழுமையான ஜனநாயகம் ஆகிவிடாது. இன்று இந்திய அரசாங்க அமைப்பு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டு போடும் உரிமையை மட்டுமே ஜனநாயக அடையாளமாக முன்னிறுத்துகிறது. ஆனால் ஐனநாயக நாடானது மக்களின் பிரதிநிதிகளால் மட்டும் அல்ல மக்களாலும் ஆளப்பட வேண்டும். இதற்காக தான் மாநில அரசுகளை தாண்டி உள்ளாட்சி முறையும் அதிகாரம்பலம் பொருந்தியதாய் நிறுவபட வேண்டும் என சொல்லபடுகிறது. ஆனால் இன்றைய பஞ்சாய்த்துகளோ, நகராட்சிகளோ, மாநகராட்சிகளோ பெரிய அரசியல் கட்சிகளின் கட்டுபாட்டில் தான் இயங்குகின்றன. பொதுமக்களுக்கு அங்கு இடமில்லை. அவர்களது குரலுக்கு அங்கு மதிப்பில்லை. ஒரு மனிதன் தான் வாழும் தெருவில் அரசு போடும் சாலையிலோ அல்லது தான் வாழும் பகுதிக்கு அரசு கொண்டு வரும் செயல்திட்டங்களிலோ தன்னுடைய பங்கு எதுவும் இல்லை என்பதை உணர்கிறான். அவனுடைய கருத்து கேட்கபடாத போது இது என்ன ஜனநாயகம்? இத்தகைய ஜனநாயக குழப்பங்களால் தான் ஓட்டிற்காக பணம் வாங்கும் முறை பொதுமக்களால் வரவேற்கபடுகிறது.

democracy

இன்னும் வரும் காலங்களில் ஓட்டிற்காக பணம் வாங்கும் முறை இன்னும் விஞ்ஞானபூர்வமாக செயற்படுத்தபடும். ஏற்கெனவே இலவச டீவி மற்றும் ஏனைய இலவசங்களை பெற்றவர்கள் இப்போது இந்த தேர்தலில் அதற்கு பிரதி உபகாரமாக ஓட்டு போட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளூர் தொண்டர்களால் உட்படுத்தபடுகிறார்கள். பெரும்பாலான மக்களிடம் பணம் கொடுக்கும் போதே, “நீங்கள் எங்களுக்கு ஓட்டு போடுகிறீர்களா இல்லையா என்பதை எங்களால் கண்டுபிடித்து விட முடியும்,” என பயமுறுத்துகிறார்கள் தொண்டர்கள். யார் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பது வெளியில் தெரியாது என தேர்தல் ஆணையம் சொன்னாலும், உள்ளே ஓட்டு போடுகிற அறையில் ஒரு கேமரா இருக்கிறது என தொண்டர்கள் பயமுறுத்துகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் வரைப்படத்துடன் இந்த கேமராவில் ஓட்டு போடுவது பதிவாகாது என நாளிதழ்களில் விளக்கம் சொன்னாலும் கூட சராசரி குடிமகன்/ள் எந்த ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள்.

அமெரிக்க அரசாங்கம், விக்கிபீடியா வரை நமது புகழை எடுத்து சென்ற அரசியல்வாதிகள் வாழ்க. அவர்களுடைய கண்டுபிடிப்புகள் வளர்க. நாடாளுமன்றத்தில் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை பலத்தை காட்ட எம்.பிகளை விலைக்கு வாங்க காங்கிரஸ் கட்சி கோடிக்கணக்கில் பணம் செலவழித்த விவகாரம் இப்போது விக்கிலீக்ஸ் மூலமாக தெரிய வந்திருக்கிறது. பொது மக்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டு பெற்று நாடாளுமன்றத்துக்கு நுழைந்தவர்கள் அங்கு அவர்கள் ஓட்டு போடுவதற்கு பணம் பெற தயங்க போகிறார்களா என்ன? மக்களுக்கு உண்மையான ஜனநாயக அதிகாரம் கிடைக்கும் வரை இப்படிபட்ட கேலிகூத்துகள் நடக்கவே செய்யும்.

இந்த கட்டுரை பற்றி உங்கள் கருத்துகளை கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடர் வாசிப்பிற்கு


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.