உலகத்தில் எந்த ஒரு சினிமாவிற்கும் இவ்வளவு கண்ணீர் மழை கிடைத்திருக்காது. ஆனால் அது சினிமா அல்ல. கண் எதிரே நடந்து கொண்டிருக்கும் சம்பவம். உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் அந்த நம்ப முடியாத நிகழ்வை நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்தார்கள் நூறு கோடி மக்கள்.
“கடவுள் மீண்டும் ஒரு முறை அதிசயத்தை நிகழ்த்தி காட்டி விட்டார்,” என்றார் ஒரு கிருஸ்துவ போதகர்.
“ஒரு சைக்கிள் சக்கரத்தின் வட்டம் போல தான் இருக்கிறது,” என்றார் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர். அவர் சொன்னது அங்கு நிலத்தில் இருந்த சிறு குழியை தான். அது குழி அல்ல. நிலத்திற்கு அடியில் செங்குத்தாய் பாதாளத்தை நோக்கி நீண்டிருக்கும் உதவித்தடம் அது. அந்த பாதாள குழியில் இருந்து ஒரு சிறு ராக்கெட் போன்ற கூண்டு ஒன்று கொஞ்சம் கொஞ்சமாய் நிலத்திலிருந்து மேல் எழுகிறது. காத்திருக்கும் மக்களிடம் இருந்து கைத்தட்டல் சத்தம்.
“சிலி, சிலி,” என அவர்கள் பாடுகிறார்கள். லிப்ட் போல தோற்றமளிக்கும் அந்த கூண்டில் இருந்து ஒரு மனிதன் வெளிபடுகிறான். இது வரை வாயடைத்து போய் அங்கு நிகழ்பவற்றை பார்த்து கொண்டிருந்த ஓர் ஏழு வயது சிறுவன் ஓடி போய் அந்த மனிதனை, தனது தந்தையை அணைத்து கொள்கிறான்.
“அவர்களை காப்பாற்றி விட்டோம்,” என முழங்குகிறார்கள் குழுமியிருந்த தொழிலாளர்கள். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கேமராக்கள் எல்லாவற்றையும் படம் பிடித்து கொண்டிருக்கின்றன.
இடம்
தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் நீண்ட கடற்கரையை கொண்ட நாடு தான் சிலி. 1990-ம் ஆண்டு முடிவுற்ற ராணுவ சர்வதிகார ஆட்சிக்கு பிறகு இன்று பொருளாதாரத்திலும் அரசியலிலும் நிலையான நிலைக்கு உயர்ந்திருக்கிறது இந்நாடு. உலக சந்தைக்கு கதவை திறந்து விட்டதும் அரசாங்க நிறுவனங்களை படிப்படியாக தனியார்மயமாக்குதலும் தான் நாட்டின் வளர்ச்சிக்கு காரணம் என்கிறார்கள் வலதுசாரிகள். ஆனால் இடதுசாரிகளோ உலகமயமாக்கலின் தாக்கத்தால் சிலியில் வறுமை அதிகரித்து விட்டது, அதை அரசாங்கம் மறைத்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
சிலியின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது அங்கு இருக்கும் சுரங்கங்கள். செம்பும் தங்கமும் நாட்டை செழிப்புற வைத்து கொண்டிருக்கின்றன. நாடெங்கும் 500, 700 மீட்டர்களுக்கு கூட ஆழமாய் சுரங்கங்கள் உருவாகி இருக்கின்றன.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிலியை தாக்கியது ஒரு உக்கிரமான நிலநடுக்கம். ஐநூறு பேர் இறந்து போனார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தார்கள். மோசமானதை பார்த்து விட்டோம் என சமாதானமான சிலி நாட்டு மக்களை ஏழு மாதங்களில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம் பரபரப்படைய வைத்தது. அது அட்டகாமா பாலைவனத்தில் இருந்த சான் ஜோஸ் சுரங்கத்தில் நடந்த விபத்து. விபத்து நடந்த போது முப்பத்தி மூன்று சுரங்க தொழிலாளர்கள் உள்ளே இருந்தார்கள்.
செம்பு மற்றும் தங்கத்திற்கான சான் ஜோஸ் சுரங்கம் நிலத்தில் இருந்து 720 மீட்டர் ஆழமானது. அதன் அடிமட்டத்திற்கு செல்ல ஒன்பது கிலோமீட்டர் வட்ட சறுக்கு பாதை அமைக்கபட்டிருந்தது.
நாள் – ஒன்று – ஆகஸ்ட் ஐந்தாம் தேதி
மதியம் இரண்டு மணிக்கு சுரங்கத்தினுள் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. விபத்தின் போது தூசி படலம் எங்கும் படர்ந்தது. தொழிலாளர்களில் பலர் கண் எரிச்சலில் அவதிபட்டார்கள். அவர்களால் ஆறு மணி நேரத்திற்கு எதையுமே பார்க்க முடியவில்லை.
நிலச்சரிவு நடந்த போது சுரங்கத்தினுள் இரண்டு பிரிவாக தொழிலாளர்கள் இருந்தார்கள். முதல் பிரிவினர் சுரங்கத்தின் வாயிலில் அதாவது நிலத்தின் மேற்புறத்திலே இருந்த காரணத்தினால் அவர்கள் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் தப்பிக்க முடிந்தது. ஆனால் சுரங்கத்தின் கீழ் மட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் வெளிவர முடியாமல் மாட்டி கொண்டார்கள்.
சான் ஜோஸ் சுரங்கத்தின் உரிமையாளர்களான எம்பரசா மின்னரா நிறுவனம் அரசாங்கத்தின் உதவியை நாடியது. சுரங்கத்தினுள் இருந்த முப்பத்து மூன்று பேரும் என்ன ஆனார்கள் என யாருக்கும் தெரியவில்லை. அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் கூட மறைமுகமாக தொடங்கி விட்டன.
தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்?
விபத்து நடந்த அடுத்த நாள், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியது.
சிலி நாட்டில் சுரங்கம் என்பது நூற்றாண்டு தாண்டிய ஒரு தொழிலாகும். உலகிலே அதிகமாய் செம்பு தயாரிப்பது சிலி நாடு தான். தென் அமெரிக்காவிலே சுரங்க தொழிலாளர்களுக்கு அதிக கூலி கிடைப்பது சிலி நாட்டில் தான். இருந்தாலும் சுரங்கங்களில் நடக்கும் விபத்து என்பது அங்கு அடிக்கடி நிகழும் சம்பவங்களாகி விட்டன. 2000-ம் ஆண்டில் இருந்து வருடத்திற்கு சராசரியாக 34 பேர் சுரங்கங்களில் விபத்திற்கு உள்ளாகி இறக்கிறார்கள் என சொல்கிறது அரசுதரப்பு புள்ளி விவரம்.
விபத்து நடந்த சான் ஜோஸ் சுரங்கத்திலே ஏற்கெனவே விபத்துகள் நடந்திருக்கின்றன. 2004-ம் ஆண்டில் இருந்து 2010 வரை 42 முறை இந்த சுரங்கத்தின் மீது பாதுகாப்பு குறைபாடுகள் காரணம் காட்டி அபராதம் வசூலிக்கபட்டிருக்கிறது. 2007-ம் ஆண்டு நடந்த ஒரு விபத்திற்கு பிறகு இந்த சுரங்கம் மூடப்பட்டது. எனினும் 2008-ம் ஆண்டு மீண்டும் சுரங்கம் திறக்கபட்டது. பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்ற சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களை விட 20 சதவீதம் அதிக ஊதியம் வாங்கி கொண்டிருந்தார்கள்.
சுரங்கத்தினுள் மாட்டி கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணி மிக கடினமானதாக இருந்தது. மீட்பு குழுவினர் சுரங்கத்தில் உள்ள அத்தனை பாதைகளும் மூடப்பட்டதை கண்டுபிடித்தனர். அதோடு உள்ளே கற்கள் ஆபத்தான வகையில் இன்னும் நகர்ந்து கொண்டிருந்தன. விபத்து நடந்து இரண்டாம் நாள், ஆகஸ்ட் ஏழாம் தேதியன்று மீட்பு குழுவினர் அதிக சக்தி வாய்ந்த இயந்திரங்களை பயன்படுத்த தொடங்கினர். ஆனால் இதன் காரணமாக மீண்டும் சுரங்கத்தினுள் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு பணிகள் நிறுத்தபட்டன. சுரங்கத்தினுள் உள்ள பாதைகள், ஏற்கெனவே உருவாக்கபட்ட தடங்கள் எதையும் பயன்படுத்தாமல் முற்றிலும் புதிய மார்க்கத்தில் தான் மீட்பு பணி இனி நடந்தாக வேண்டும்.
பதினைந்து சென்டிமீட்டர் அகலமான துளைகள் நிலத்தில் ஏற்படுத்தபட்டு சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் எங்கு சிக்கி இருக்கிறார்கள் என அறியும் பணி தொடங்கியது. முதல் சிக்கல் அந்த சுரங்கம் தொடர்பான அனைத்து வலைப்படங்களும் தவறானவையாக அல்லது பழையவையாக இருந்தன. இரண்டாவது சிக்கல் நிலத்திற்கு கீழே இருந்த பாறைகள் வலுவானவையாக இருந்தன. இதன் காரணமாக துளைகள் போடும் பணி சரியான வகையில் அமையாமல் போனது.
ஊடங்கள் அனைத்தும் சுரங்கத்தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்பதை பற்றி முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட தொடங்கி விட்டன. தொழிலாளர்களின் குடும்பங்களின் நெஞ்சை உருக்கும் சோகம் சிலி நாடு முழுவதும் பரிதாபத்தை உருவாக்கியது.
ஏற்கெனவே நிலநடுக்கமும் சுனாமியும் நிகழ்ந்து அதன்பிறகான மீட்பு பணிகளும் சரியான முறையில் செயல்படுத்தபடவில்லை என்கிற குற்றச்சாட்டு சிலி நாட்டு அதிபர் பினேரா குறித்து சொல்லபட்ட வந்தது. இச்சுழலில் கொலம்பியா நாட்டில் இருந்த அதிபர் பினேரா உடனே நாடு திரும்பினார். தலையில் ஹலிமெட்டும் சுரங்க தொழிலாளர்களுக்கான ஜாக்கெட்டும் அணிந்து அவரே முன் நின்று மீட்பு பணியை கவனிக்க தொடங்கினார்.
விபத்து நடந்து பதினான்கு நாட்கள் கழித்து 19 ஆகஸ்ட் அன்று சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் இருப்பதாக நம்பப்பட்ட இடம் வரை துளைகள் அமைக்கபட்டு விட்டன. ஆனால் அங்கு யாரும் உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மீட்பு பணியை சிலி நாடே உற்று கவனித்து கொண்டிருந்த சூழலில் எங்கும் இறுக்கமான அமைதி நிலவியது.
மூன்று நாட்கள் கழித்து 21 ஆகஸ்ட் அன்று நிலத்தில் இருந்து 688 மீட்டர் கீழே சென்று வந்த ஒரு போர் பம்ப் மீது ஒரு துண்டு காகிதம் ஒட்டபட்டிருப்பதை மீட்பு குழுவினர் கண்டெடுத்தனர்.
மதியம் 3:17-க்கு அதிபர் பினாரா ஊடகங்களுக்கு முன்பு தோன்றினார். மகிழ்ச்சியில் பூரித்திருந்த முகத்தோடு அவர் ஒரு துண்டு காகிதத்தினை உலகத்திற்கு காட்டினார். அது ஒரு சிறு காகித துண்டு.
“பாதுகாப்பு அறையில் நாங்கள் 33 பேரும் பாதுகாப்பாக இருக்கிறோம்,” என்று சிறிய தகவல் அதில் எழுதபட்டிருந்தது. பதினேழு நாட்கள் சுரங்கத்தினுள் சிக்கியிருந்த தொழிலாளர்கள் வெளியுலக உதவியின்றி அதிசயமாக உயிர் தப்பி விட்டார்கள்.
பாதாளத்தில் நரக நாட்கள்
விபத்து நடந்தால் ஓடி பதுங்கி கொள்ள பாதுகாப்பு அறை ஒன்று சுரங்கத்தின் கீழே உருவாக்கபட்டிருந்தது. அங்கு தான் 33 பேரும் தஞ்சமடைந்து இருந்தார்கள்.
ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று விபத்து நடந்தவுடன் சுரங்கத்தின் கீழ்மட்டத்தில் இருந்த தொழிலாளர்கள் ஏணிகள் மூலமாக வேறு பாதையில் தப்பிக்க முயன்றார்கள். ஆனால் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாக ஏணிகள் அங்கு காணோம். அதோடு தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக விரைவிலே அந்த பாதையும் மூடப்பட்டு விட்டது.
லூயிஸ் உர்சூவா என்பவர் தான் விபத்து நடந்த போது கீழ்மட்டத்தில் கண்காணிப்பாளராக பணிப்புரிந்து கொண்டிருந்தார். விபத்து நடந்தவுடன் நிலைமையின் தீவிரத்தினை முதன்முதலில் உணர்ந்தவர் அவர் தான். சுரங்கத்தின் பாதுகாப்பு அறையில் தங்கியிருந்த 33 பேரில் அனுபவமுள்ள சில தொழிலாளர்கள் மட்டும் சுரங்கத்தின் ஏதேனும் ஒரு பாதை திறந்து இருக்காதா, பாதாளத்தில் இருந்து நாம் தப்பி விட மாட்டோமா என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் வெளியுலகத்திலிருந்து எல்லா தொடர்பும் பாதைகளும் மூடப்பட்டு விட்டன.
சுரங்கத்திற்கு உள்ளே வெப்பமும் வெக்கையும் மிக அதிகமாக இருந்தது. தொழிலாளர்கள் தங்கியிருந்த பாதுகாப்பு அறை ஐம்பது சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதோடு சுரங்கத்தின் துண்டிக்கபட்ட இரண்டு கிலோமீட்டர் சுரங்கப்பாதை அவர்கள் வசமிருந்தது. அங்கே சிறு சிறு குழிகள் தோண்டி நீர் எடுத்தார்கள். அதோடு சுரங்கத்தினுள் இருந்த வாகனங்களின் ரேடியேட்டர்களில் இருந்தும் தண்ணீர் கிடைத்தது. வாகனங்களில் இருந்த பாட்டரிகள் மூலம் தங்களது ஹலிமெட்டுகளின் விளக்குகளுக்கு சார்ஜ் செய்து கொண்டார்கள். பாதுகாப்பு அறையில் உணவு மிக குறைவாக தான் இருந்தது. சாதாரண பயன்பாட்டில் மூன்று நாட்களுக்கு மேல் காலியாகி இருக்க கூடிய உணவினை தொழிலாளர்கள் மிக சிக்கனமாக பயன்படுத்தி கொண்டிருந்தனர். இதன் காரணமாக சில நாட்களிலே ஒவ்வொருவரும் பத்து கிலோ எடை குறைந்து போய் விட்டார்கள்.
மீட்பு குழுவினர் துளைகளை ஏற்படுத்தி போர் பம்புகளை நிலத்திற்கு கீழே அனுப்பி கொண்டிருந்த போது அந்த சத்தத்தினை சுரங்கத்தினுள் சிக்கி கொண்ட தொழிலாளர்களும் கேட்டார்கள். ஆனால் அந்த சத்தம் அவர்கள் இருக்கும் பக்கம் நெருங்கி வர நாட்கள் ஆயின. தங்கள் பகுதிக்குள் அந்த பம்புகள் நுழைந்தவுடன் அதில் காகிதத்தினை ஒட்டுவதற்கு ஆயுத்தமாக இருந்தனர். அது நிலத்தின் மேற்பரப்பு செல்லும் வரை கிழியாமல் இருக்க அதன் மேல் ஒட்டுவதற்கு டேப்புகளையும் கைவசம் தயார் செய்து வைத்திருந்தனர்.
முதல் குரல்
காகிதம் கண்டெடுக்கபட்ட சில மணி நேரங்களில் அதே துளை வழியாக ஒரு கேமரா அனுப்பபட்டது. சுரங்கத்தில் இருந்த 33 பேரும் உயிரோடு இருப்பதை வெளியுலகம் அறிந்து கொண்டது இப்படி தான்.
அடுத்த நாள் தொலைபேசி இணைப்பு கீழ்பகுதியோடு ஏற்படுத்தபட்டது. தொழிலாளர்களின் குடும்பங்கள் அவர்களோடு உரையாட முடிந்தது.
மீட்பு பணிகளில் ஒரு சிக்கலும் நேர்ந்து விடக்கூடாது என்பதால் மிக கவனமாக அடுத்தடுத்த நகர்வுகள் திட்டமிடபட்டன. ஆனால் மீட்பு பணி முழுமையடைய பல மாதங்கள் ஆகலாம் என சொல்லபட்டது. டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் வரை ஆகலாம் என்கிற தகவல் உறுதி செய்யபட்டது.
சூரிய வெளிச்சம் இல்லாத வாழ்க்கை
மனித வரலாற்றில் நிலத்தின் இவ்வளவு ஆழத்தில் தனியே சிக்கி கொண்ட மனிதர்கள் இவ்வளவு நீண்ட காலம் உயிரோடு வாழ்தல் என்பது இது முதல் முறை.
தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் உலகம் முழுவதும் இருந்து கொட்ட துவங்கின. அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து தனி குழு ஒன்று மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்டது. விண்வெளியில் உள்ள விண்கலனில் மாதக்கணக்கில் தனியே தங்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை போல நிலத்திற்கு கீழே சிக்கியுள்ள தொழிலாளர்களும் சிக்கனமாக லாவகமாக தங்களுக்கான வசதிகளை உருவாக்கி கொள்ள திட்டங்கள் வகுக்கபட்டன.
உளவியல் மருத்துவர்கள் தொழிலாளர்களுக்கு இடையே மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு குறித்து அச்சம் தெரிவித்தனர். இதனையடுத்து 33 பேர்களும் மூன்று பிரிவுகளாக பிரிக்கபட்டனர். ஒரு பிரிவு மீட்பு பணிகளுக்கு உதவும். மற்றொன்று பாறைகள் மீண்டும் நகரும் ஆபத்தினை கண்காணித்து பாதுகாப்பினை உறுதி செய்யும். மூன்றாவது பிரிவு 33 பேரின் உடல்நலத்தினை மேற்பார்வையிடும். இவர்கள் எல்லாருக்கும் கண்காணிப்பாளர் லூயிஸ் உர்சூவா தலைமை தாங்குவார். இருப்பதிலே வயது முதிர்ந்தவரான மரியோ கோமஸ் ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்தி தொழிலாளர்களுக்கு மன உறுதி ஏற்படுத்துவார் என முடிவெடுக்கபட்டது. வெளியுலகில் இரவு பகல் என ஏற்படும் மாற்றத்தை போலவே சுரங்கத்திற்குள்ளும் வெளிச்சத்தை கூட்டியும் குறைத்தும் காட்டும் விளக்குகள் அமைக்கபட்டன.
33 பேரில் பலருக்கு கடுமையான தோல் வியாதிகள் உண்டாயின. அவர்களுக்கு தேவையான மருந்துகளும் தடுப்பு ஊசிகளும் அனுப்பப்பட்டன. மருத்துவர்கள் வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொழிலாளர்களோடு உரையாடினார்கள். உறவினர்கள் தொழிலாளர்களுக்கு கடிதங்கள் அனுப்ப அனுமதிக்கபட்டனர். ஆனால் கடிதங்கள் பாஸிட்டிவ்வாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தபட்டது.
மீட்பது எப்படி?
உலக ஊடங்களின் பார்வை சான் ஜோஸ் சுரங்கத்தின் மீது படிந்து விட்ட நிலையில், மீட்பு பணிகள் மிக துரிதமாக நடக்க துவங்கின.
1955-ம் ஆண்டு ஜெர்மனியில் சுரங்கத்தினுள் சிக்கி கொண்ட தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தபட்ட டாக்ல்பஸ்ச் பாம் என்கிற லிப்ட் போன்ற கூண்டினை அடிப்படையாக கொண்டு ஒரு கூண்டு தயாரிக்கபட்டது. அந்த கூண்டிற்கு பீனிக்ஸ் என்று பெயரிடப்பட்டது. பீனிக்ஸ் என்கிற பறவை தான் இறந்த பிறகும் தன் சாம்பலில் இருந்து உயிர்த்து எழும் என்பது மேற்கத்திய பழங்கால நம்பிக்கை.
லிப்ட் போன்று பீனிக்ஸ் சுரங்கத்திற்குள் போய் வர 66 சென்டிமீட்டர் அகலமுள்ள துளை உருவாக்கபட்டது. முதலில் முழு நீளத்திற்கும் சிறிய அளவிலான துளை உருவாக்கபட்டது. பிறகு துளையின் அகலம் விரிவாக்கும் பணி நடந்தது. துளையிடும் பணி நடக்கும் போது மிக பெரிய அளவு தூசியும் கற்துண்டுகளும் சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் இருக்கும் பகுதியில் நிரம்பின. ஒவ்வொரு நாளும் இருபத்தி நான்கு மணி நேரமும் ஷிப்ட் போட்டு சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்கள் அந்த குப்பைகளை அகற்றியபடி இருந்தார்கள். மூன்று இடங்களில் மூன்று துளைகள் இப்படி போடப்பட்டன.
பீனிக்ஸ் இயந்திரத்தில் பயணிப்பவர் வயிற்றுபகுதி 35 சென்டிமீட்டருக்கு மேல் இருக்க கூடாது. இதனால் துளையிடும் பணி நடந்து கொண்டிருந்த நேரத்தில் கீழே தொழிலாளர்கள் அனைவருக்கும் கட்டாய உடற்பயிற்சிகளும் சொல்லி கொடுக்கபட்டன.
சிலி நாட்டில் கால்பந்து போட்டி மீது மக்களுக்கு மிக பெரிய காதலுண்டு. முக்கிய கால்பந்து போட்டிகள் நடந்த சமயம் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் தங்களுக்காக அனுப்பப்பட்ட தொலைக்காட்சி பெட்டியில் அதனை ரசித்து பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்கள் போட்டியினை பார்த்து கொண்டிருக்கும் புகைப்படம் அடுத்த நாள் செய்தித்தாள்களில் முதற்பக்கத்தில் இடம் பெற்றன.
33 தொழிலாளர் குடும்பங்களின் சோகம் உலக அளவில் பேசு பொருளானது. ஒரு தொழிலாளரின் மனைவிக்கு இச்சமயத்தில் குழந்தை பிறந்தது. மற்றொரு தொழிலாளரின் மனைவி தன் கர்ப்பமாக இருப்பதாக செய்தி அனுப்பினார். தொழிலாளர்கள் எழுதிய கடிதங்கள் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தன.
மீட்பு பணிகள் துரித வேகத்தில் நடந்தாலும் தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கி 68 நாட்கள் கடந்து போயின. மூன்று இடங்களில் துளையிடும் பணியில் ஓரிடத்தில் மட்டும் வேலை முழுமையாக முடிவடைந்தது. அந்த துளையினுள் பீனிக்ஸ் கூண்டினை இறக்கி தொழிலாளர்களை உடனே மீட்பது என முடிவெடுக்கபட்டது.
மீட்கபட்டது எப்படி?
அக்டோபர் 12-ம் தேதி, அறுபத்தி எட்டாவது நாள் சுரங்கத்தில் உள்ள அனைவரும் ஒருவர் பின் ஒருவராக பீனிக்ஸ் இயந்திரத்தில் நிலத்திற்கு மேலே கொண்டு வரபடுவார்கள் என அறிவிக்கபட்டது. பல நாடுகளில் இருந்து தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த மீட்பு நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப துவங்கின.
33 பேரில் யார் முதலில் செல்வது என போட்டி ஏற்படவில்லை. ஆனால் அதற்கு பதில் யார் இறுதியில் செல்வது என்று தான் போட்டி ஏற்பட்டது. 33 பேருக்கும் தலைமை தாங்கிய லூயிஸ் உர்சூவா கடைசி நபராக வெளியேறுவார் என முடிவெடுக்கபட்டது. சுரங்கத்தில் இருந்து வெளியேறும் முதல் நான்கு மனிதர்கள் இருப்பவர்களிலே நல்ல ஆரோக்கியத்தில் இருப்பவர்களாக தேர்ந்தெடுக்கபட்டார்கள். ஐந்தாம் நபர் தொடங்கி இருப்பதிலே மோசமான உடல்நிலையில் இருப்பவர்கள் முதலில் அனுப்பப்படுவார்கள் என்றும் முடிவானது.
இரவு ஏழு மணிக்கு மீட்பு குழுவை சேர்ந்த மேனுவல் என்பவர் பீனிக்ஸில் ஏறி கீழ் நோக்கி பயணித்தார். சிலி நாட்டின் அதிபர் பினேரா அவரை வழியனுப்பி வைத்து விட்டு அங்கேயே காத்திருந்தார். சிலி நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்களில் பலரும் நடந்து கொண்டிருப்பவற்றை நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்தார்கள். சிலி நாட்டில் பள்ளிக்கூடங்கள் அன்றைய தினம் விடுமுறை விடபட்டன.
திட்டமிட்டதை விட மிக தாமதமாக பீனிக்ஸ் இரவு பதினொரு மணி முப்பத்தி ஆறு நிமிடத்திற்கு தொழிலாளர்கள் இருக்குமிடத்திற்கு வந்தடைந்தது. 68 நாட்கள் கழித்து 33 பேரும் புதிய மனிதரை சந்தித்தார்கள். அவர்கள் அனைவரும் மேனுவலை கட்டி அணைப்பதும் உணர்ச்சிவசப்படுவதும் சுரங்கத்தினுள் நடப்பது அனைத்தும் அங்கிருந்த கேமரா மூலம் வெளியுலகிற்கு நேரடியாக ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. பீனிக்ஸ் இயந்திரத்தின் மேற்கூரையில் இருந்த கேமராவும் மீட்பு பணியை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது.
மேனுவல் கீழே சென்று சேர்ந்தவுடன் பீனிக்ஸ் காலியாக மேலே வரும் அதற்கடுத்து மற்றொரு மீட்பு பணியாளர் கீழே போவார். அதற்கு பிறகே தொழிலாளர்களை மேலே அனுப்புவது என முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த திட்டம் மேனுவல் சுரங்கத்திற்கு சென்று சேர்ந்தவுடனே கைவிடப்பட்டது. உடனே 33 தொழிலாளர்களில் ஒருவரான பிளாரன்சியோ அவலோஸ் பீனிக்ஸில் ஏறி மேல் நோக்கி பயணிக்க தொடங்கினார். ஏறத்தாழ பதினேழு நிமிடங்கள் பாதாளத்தில் பயமுறுத்தும் பயணத்திற்கு பிறகு பிளாரன்சியோ நில மேற்பரப்பை வந்தடைந்தார். அவருக்காக அங்கே அவரது மனைவி மோனிகாவும் ஏழு வயது மகனும் காத்திருந்தார்கள். கூடவே சிலி நாட்டு அதிபரும் மீட்பு குழுவினரும் மருத்துவர்களும் இருந்தார்கள். பிளாரன்சியோ தனது மகனை தழுவிய போது அங்கிருந்தவர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் இதனை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த நூறு கோடி மக்களில் பலரும் ஆனந்த கண்ணீர் வடித்தார்கள்.
இப்படியாக மீட்பு படலம் தொடங்கியது. ஒவ்வொரு தொழிலாளியும் வெளியே வருவதும் அவரது குடும்பம் கண்ணீரோடு அவரை அணைத்து கொள்வதும் அதனை நாட்டு அதிபர் அருகில் இருந்து பார்ப்பதுமாக உணர்ச்சிபூர்வமான சந்திப்பு காட்சிகள் அரங்கேறின.
33 பேரில் ஒருவர் மட்டும் அருகில் இருக்கும் பொலிவியா நாட்டினை சேர்ந்தவர். அவரை அழைத்து செல்ல பொலிவியா நாட்டு அதிபரே சான் ஜோஸ் சுரங்கத்திற்கு வருகை தந்திருந்தார்.
பீனிக்ஸ் முதல் ஆறு கீழ் நோக்கிய பயணத்தில் ஆறு மீட்பு குழு உறுப்பினர்கள் சுரங்கத்தின் கீழ்பகுதிக்கு பயணித்தனர். 33 தொழிலாளர்களும் மீட்கபட்ட பிறகு ஆறு பேரும் ஒருவர் பின் ஒருவராக பீனிக்ஸ் மூலம் மேலே வந்தனர். முதலில் பயணித்த மேனுவல் கடைசி நபராக வெளியே வந்தார். எல்லாரும் நிலத்தின் மேற்புறத்திற்கு சென்று விட்ட பிறகு தனி நபராய் அந்த பாதாள அறையில் தான் இருந்ததை மேனுவல் பிறகு பத்திரிக்கைகளுக்கு பேட்டியாக கொடுக்க கூடும். மேனுவல் மேலே நிலபரப்பிற்கு திரும்பிய பிறகு அதிபர் பினேரா இரும்பு மூடி கொண்டு அந்த பாதாளத்தடத்தினை அடைத்தார். இனி இந்த சுரங்கம் சிலி நாட்டு மக்களின் ஒற்றுமையையும் மன உறுதியையும் குறிக்கும் வகையில் நினைவு இடமாக பாதுகாக்கப்படும் எனவும் அதிபர் அறிவித்தார்.
இரண்டு மாதங்களுக்கு மேலாக சுரங்கத்தினுள்ளே இருந்து விட்ட காரணத்தினால் மீட்கபடும் தொழிலாளர்கள் அனைவரும் கருப்பு கண்ணாடி அணிந்தே இருக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டு இருந்தது. ஏனெனில் திடீர் வெளிச்சம் அவர்களது கண்களை பாதிக்கலாம் என்று மருத்துவர்கள் கருதினார்கள்.
திட்டமிட்டதை விட மீட்பு பணிகள் விரைந்து முடிந்தன. ஒவ்வொரு ஆளாக மேலே வருவதும் தனது குடும்பத்தை கட்டி அணைப்பதும் தொலைக்காட்சிகளுக்கு நல்ல தீனியாக இருந்தது. நாள் முழுக்க கூடவே இருந்த அதிபர் பினேராவிற்கு பல நாட்டு அதிபர்களிடம் இருந்து பாராட்டு போன்கால்கள் வந்தவண்ணமிருந்தன. அவருக்கு சிலியில் மக்களிடையேயான செல்வாக்கு வெகுவாக உயர்ந்து விட்டதாக உள்ளூர் பத்திரிக்கைகள் சொல்கின்றன. போப் ஆண்டவர் மீட்பு பணி நடக்கும் போது அது வெற்றி பெறுவதற்காக பிராத்தனை செய்யும் வீடியோவும் ஒளிபரப்பானது.
கிடைக்கும் பணம் பகிர்ந்து கொள்ளபடும்
சுரங்கத்தில் இருந்து மீட்கபடுவதற்கு முன்னரே உள்ளே இருந்த தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்க போகும் மிக பெரிய புகழ் வெளிச்சத்தை அறிந்தே இருந்தனர். தொலைக்காட்சிகளில் பங்கேற்பதற்கு கொடுக்கபடும் பணம், புத்தகம் எழுத கொடுக்கபடும் பணம், பத்திரிக்கை பேட்டிகளின் மூலம் கிடைக்கும் வருமானம் இவற்றை யார் சம்பாதித்தாலும் அது 33 பேருக்கும் சரி சமமாக பங்கிட்டு கொள்ளபட வேண்டுமென அனைவரும் ஒருமனதாக தீர்மானித்து இருக்கிறார்கள்.
சுரங்கங்களுக்கு பேர் போன சிலி நாட்டில் இனி விபத்து நடக்காமல் தவிர்க்க எல்லாவித பாதுகாப்பு விதிமுறைகளும் உறுதி செய்யபடும் என அதிபர் அறிவித்து இருக்கிறார். 33 தொழிலாளர்களும் அதிபரோடு கால்பந்து விளையாடுவதற்காக அழைக்கபட்டு இருக்கிறார்கள்.
பார்த்தவர்கள் அனைவரையும் உணர்ச்சிவசப்பட செய்த இரண்டு மாத கால மீட்பு சம்பவம் ஒரு வழியாக சுபமாக முடிந்தது. மனித வரலாற்றில் மறக்க முடியாத கணங்களில் ஒன்றாக இதுவும் இருக்க போகிறது.
Leave a Reply