சட்டங்கள் அமைதியை குலைக்கும் என்றால் இந்த சட்டங்கள் எதற்கு?

உத்தபுரத்தில் அமைக்கபட்ட சுவர்

சாதி என்னும் சுவர்

உத்தபுரத்தில் தலித் மக்கள் தாங்கள் வசிக்குமிடம் அருகே வரக்கூடாது என சாதி இந்துகள் சுவர் எழுப்பி அதன் மேலே மின்சாரம் பாயும் கம்பிகளையும் வைத்தது 21-ம் நூற்றாண்டின் உச்சகட்ட அவலம். (சுட்டி: ஆயிரக்கணக்கான உத்தபுரங்கள்) இந்த சுவரை இடித்த அரசாங்கம் கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட சாதி இந்துகளுக்கும் தலித் மக்களுக்கும் தனி தனி பள்ளிக்கூடம், தனி ரேஷன் கடை என புது தீண்டாமை பழக்கத்தினை உருவாக்கியது. காவல்துறையினரே தலித் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து (கலவரத்தினை அடக்க என சொல்கிறார்கள்) டீவி, சாமான்கள் எல்லாம் உடைத்தார்கள். கலவரத்திற்கு காரணமானவர்கள் என கைது செய்யபட்டவர்களில் அப்போது பிரசவம் முடிந்து மூன்று நாளே ஆன ஒரு பெண், எழுபது வயது முதிய பெண் உட்பட நூற்றுக்கணக்கானோர் இருந்தார்கள். (சுட்டி: உத்தபுரமும் காம்ரேடுகளும்)

மற்றொரு உத்தபுரம்

கிருஷ்ணகிரி அருகே அகரம் என்கிற கிராமத்தில் சாதி இந்துகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்குள் தலித் மக்கள் வரக்கூடாது என வேலி அமைத்த செய்தி சமீபத்தில் வெளியானது. கிராமத்து ஊர் கவுண்டரின் உத்தரவின்பேரில் இந்த முள்வேலி கம்பி கட்டபட்டதாக சொல்லபடுகிறது. ஏற்கெனவே தலித் மக்களை விவசாயம் செய்யவிடாமல் தடுக்கிறார்கள் என இந்த கிராமத்து சாதி இந்துகள் மீது குற்றச்சாட்டு உண்டு.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ மகேந்திரன் இந்த கிராமத்தில் உள்ள தீண்டாமை வேலியை வெளியுலகிற்கு அறிவித்த பின்னரே செய்தி வெளியே தெரிந்தது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த தீண்டாமை வேலி அகற்றபடாவிட்டால் தாங்களே இந்த கம்பியை அகற்றுவோம் என மகேந்திரன் அறிவித்தார். அக்டோபர் 15-ம் தேதி செய்தித்தாள்களில் தகவல் பரவியதால், அடுத்த நாள் அரசு வருவாய்த்துறை அதிகாரிகளால் வேலி அகற்றபட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் ராய் அகரம் கிராமத்திற்கு தானே நேரில் வந்து ஆய்வு செய்தார். ஆட்சித்தலைவரிடம் ஊர் கவுண்டரான நாகராஜ் என்பவர் இந்த முள்வேலி தங்கள் கிராமத்தில் உள்ள பஞ்சாய்த்து பள்ளியின் தலைமையாசியர் கேட்டு கொண்டதனால் உருவாக்கபட்டது என தீண்டாமை புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பிறகு மாலை பத்திரிக்கையாளர்களிடம் ஆட்சி தலைவர் பொது இடங்களில் ஆக்ரமிப்பு செய்பவர்களை எச்சரித்து அறிக்கை வெளியிட்டார். இதற்கு அடுத்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரவீந்திரன் அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கைக்காக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து செய்தி வெளியிட்டார்.

தீண்டாமை வேலி

தீண்டாமை வேலி

கேள்விகள்

  • பொது இடத்தில் ஆக்ரமிப்பு என அறிவிப்பதன் மூலம் மாவட்ட ஆட்சி தலைவர் இதை வெறும் ஆக்ரமிப்பு சம்பவமாக ஏன் மாற்றி காட்டுகிறார்?
  • தீண்டாமையே கொடூர குற்றம் எனும் போது, தலித் மக்களை தாங்கள் வசிக்கும் ஊரிலே வேலி கட்டி பிரித்து வைப்பது என்பது அசாதாரண குற்றம் என்று அல்லவா பாவிக்கபட வேண்டும். குற்றத்திற்கு காரணமானவர்கள் கடுமையான சட்டங்களின் கீழ் அல்லவா கைது செய்யபட்டிருக்க வேண்டும். ஏன் ஒரு புகார் கூட பதிவு செய்யபடவில்லை?
  • ஒரு எம்.எல்.ஏ வெளிச்சமிட்டு காட்டிய விஷயம் அடுத்த நாள் மாநிலம் முழுவதும் பரவிய செய்தியே இப்படி கண்டும் காணாமல் போனால்; இந்த விஷயத்தை அந்த எம்.எல்.ஏவிற்கு பதில் ஒரு தலித் இளைஞன் புகாராய் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றிருந்தால் அவனது புகார் ஏற்கபட்டு இருக்குமா? அந்த இளைஞனின் கதி தான் என்னவாகி இருக்கும்?
  • சட்டப்படி அமைக்கபடும் பஞ்சாய்த்துகளுக்கு போட்டியாக கிராமத்தில் ஊர் கவுண்டருக்கு எப்படி இவ்வளவு அதிகாரம்?
  • வேலியை இடித்து விட்ட பிறகு அந்த கிராமத்தில் தலித் மக்கள் சந்தித்து வந்த தீண்டாமை மற்றும் சாதி பிரச்சனைகள் தீர்விற்கு என்ன நடவடிக்கை எடுக்கபட்டது?

எழுத்தில் ஒரு சட்டம்; யதார்த்தத்தில் ஒரு சட்டம்

நமது அரசியல் சாசனத்தின் 17-வது பிரிவு தீண்டாமை பழக்கம் அழிக்கபட்டதாக அறிவிக்கிறது. யாரும் எந்த வகையிலும் தீண்டாமையை கடைபிடிக்க கூடாது எனவும் சொல்கிறது. 15(2)-வது பிரிவு பொது சொத்துக்களை/பொது இடங்களை ஒரு மனிதன் பயன்படுத்த சாதி தடையாக இருக்க கூடாது என தெளிவாக வரையறுக்கிறது.

தீண்டாமை என்பது குற்றம் என எல்லா பள்ளிக்கூட பாட நூற்களிலும் முதல் பக்கத்தில் தெளிவாக அச்சிடப்பட்டு இருக்கிறது.

யதார்த்தம் என்ன? இந்தியாவில் இன்றும் சாதி வேறுபாடுகள் தலைவிரித்து ஆடுகின்றன என்பதற்கு பல ஆயிரம் உதாரணங்கள் மேற்கோள் காட்டலாம். அவற்றில் எவை எல்லாம் சட்டத்திற்கு முன் வந்து, குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கபட்டார்கள் என கவனித்தால் உண்மையான பதில் அதிர்ச்சி அளிக்கும். சட்டங்கள் காகிதங்களுக்கு மட்டும் தானா? என கேள்வி கேட்கிறார்கள் தலித் உரிமைகளுக்காக போராடுபவர்கள். சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்தால் ஊரில் கலவரமாகும், அமைதி குலையும் என சொல்கிறார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள். அப்படியானால் அமைதியை குலைக்கும் இந்த சட்டங்கள் எதற்காக? யாரை ஏமாற்ற?