மாநில சுயாட்சி நமக்கு தேவையா?

கருணாநிதி மீண்டும் கோரிக்கை
நேற்று அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் மாநில சுயாட்சி பற்றி பேச்சை எடுத்து இருக்கிறார். தி.மு.கவின் தொடக்க காலத்தில் மாநில சுயாட்சி முக்கிய கொள்கையாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அதை அப்படியே மறந்து விட்டார்கள். எப்போதாவது இது போல கருணாநிதி மட்டும் இதை எங்காவது சொல்லி டெல்லிக்காரர்கள் வயிற்றில் புளியை கரைப்பார். ஆனால் இது வெறும் பூச்சாண்டி விஷயம் என இப்போது எல்லாருக்கும் தெளிவாகி இருக்கும்.

மாட்டி கொண்ட பிரணாப்
பாவம், பிரணாப் முகர்ஜியும் மேடையில் மாட்டி கொண்டார். 1970-ம் ஆண்டு தமிழகம் வந்த பிரணாப் எப்படி எல்லாம் அன்று மாநில சுயாட்சிக்காக வாதிட்டார் என்பதை கருணாநிதி நேற்று மேடையில் பேசிய போது பிரணாப் அதை கேட்டு அமைதியாய் இருந்தார் என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள்.

“அன்று நாம் சேர்ந்து போராடினோம். இன்று நீங்கள் கொடுக்கிற இடத்தில் இருக்கிறீர்கள்,” என்று கருணாநிதி பேசியது பிரணாப்பிற்கு ஏண்டா இங்க வந்தோம் என்கிற எண்ணத்தை உண்டு செய்திருந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

மாநில சுயாட்சி எளிதாக கிடைக்கும் கனியல்ல
கருணாநிதி மேடையிலே கேட்டார், பிரணாப் உடனே வழங்கினார் என்கிற மாதிரியான சுலபமான விஷயமில்லை இது. காஷ்மீருக்கு கொடுக்கபட்ட சிறப்பு அந்தஸ்தினையே கேள்வி கேட்கும் கட்சிகள் டெல்லியில் இருக்கும் சூழலில் மாநில சுயாட்சி என்கிற வார்த்தைகள் கூட அங்கு மற்றவர்கள் பேச தயங்கும் வார்த்தைகள் தாம். டெல்லியில் இருக்கும் Paranoia அப்படி.

ஒரு காலத்தில் இந்தி எதிர்ப்பு, பிரிவினை கோரிக்கை என படுசூடாக இருந்த தமிழகத்தை இன்றும் டெல்லி உளவுதுறை ஒரு சந்தேக கண்ணோடு தான் பார்க்கிறார்கள். சமீபத்தில் ஈழத்தில் அதிகரித்த இனபடுகொலைகளுக்கு பிறகு தமிழகத்தில் எழுந்த ஆதரவு அலை மீண்டும் டெல்லிக்காரர்கள் மனதில் சந்தேக விதைகளை தூவி சென்றன. நார்மல் டெல்லிக்காரன் இன்றும் மதராஸ்காரர்கள் ரயில்வே போர்டில் ஹிந்தியை தார் பூசிய அழித்த அன்றைய நாளிதழ் புகைப்படங்களை மறக்கவில்லை.

மாநில சுயாட்சி என்பது தேவையா?
ஒரு கட்டுரை நினைவிற்கு வருகிறது. பாடப்புத்தகத்திலே படித்தது. குன்றக்குடி அடிகளார் எழுதியது என்று நினைக்கிறேன். ஓர் உலகம், ஒரு நாடு என்று தலைப்பு. அதாவது உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் இணைத்து ஒரே நாடாக மாற்றினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என எழுதியிருந்தார். இராணுவத்திற்கு செலவாகும் பணத்தினை மிச்சம் பிடித்தாலே வறுமையை இல்லாமல் ஆக்கி விடலாம் என்பது போல எழுதியிருந்தார். ஆனால் இது படிப்பதற்கு உகந்த விஷயமாக இருந்தாலும், நடைமுறையில் இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு சாத்தியமாகுமா என்பது கேள்வி குறியே.

வருங்காலத்தில் இருக்கிற நாடுகள் மேலும் உடைவதற்கான வாய்ப்புகளே அதிகம் என எங்கோ படித்த நினைவு இருக்கிறது. அதற்கு ஏற்றாற் போல உலக நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் எதாவது ஒரு பிரிவினை கோரிக்கை இன்னும் உயிர்ப்புடனே இருக்கிறது.

அதிகார பரவலாக்கம்
Decentralized power என்பதற்கு தான் நான் ஆதரவு தெரிவிப்பது. மத்திய அரசும் அதிகளவு அதிகாரம் கொண்டிருக்க கூடாது. அது போல மாநில அரசும் அதிக அளவு அதிகாரம் வைத்திருக்க கூடாது.

அதிகார பரவலாக்கம் குறித்த எனது முந்தைய பதிவு வோட்டு போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா?

உள்ளாட்சி அமைப்புகள் தன்னாட்சி அமைப்புகளாக செயல்பட வேண்டுமென நமது அரசமைப்பு சட்ட உறுப்பு 40-ன் மூலம் அரசு கொள்கையினை நெறிபடுத்தும் கோட்பாடு (Directive principles of state policy) சொன்னாலும் இன்று யதார்த்தத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பல் பிடுங்கபட்டவைகளாக அதிகாரங்கள் அற்றவையாகவே உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் தரும் விஷயத்தையே இன்னும் தமிழக அரசு பயத்துடன் அணுகி கொண்டிருக்கிறது.  எங்கே இது டெல்லிக்கு மீண்டும் வலு சேர்க்குமோ என்கிற பயம் தான் இதற்கு காரணமாக இருக்கலாம்.

என்னை கேட்டால், மாநில சுயாட்சியா தேவையா என்றால் கட்டாயம் தேவை என்பேன். ஆனால் மத்திய அரசு மாநில அரசிற்கு அதிகாரத்தை தருவது போல மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை தர வேண்டும்.

இன்னும் இதை விரிவாக்கி பார்த்தால் உலகமே ஒரு நாடாக மாறினால் கூட இது போன்ற decentralized power bodies தான் அதனை வலுபடுத்தும் என தோன்றுகிறது. அதிகார பரவலாக்கமே உண்மையான ஜனநாயகத்தை கொண்டு வரும். அப்போது தான் சாதாரண குடிமகனும் ஜனநாயகத்தால் பலனடைவான்.

நீங்கள் மாநில சுயாட்சி பற்றியும் அதிகார பரவலாக்கம் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள். உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் எழுதுங்கள்.

நன்றி

படம்: தமிழ் விக்கிபீடியா


Comments
6 responses to “மாநில சுயாட்சி நமக்கு தேவையா?”
 1. Power tends to corrupt, and absolute power corrupts absolutely. – Lord Acton.

 2. குடுகுடுப்பை Avatar
  குடுகுடுப்பை

  கண்டிப்பாக தேவை. உள்ளாட்சிகளுக்கும் அதிகாரம் தேவை.

 3. D.R.Ashok Avatar

  nice pathivu

 4. @Robin, @குடுகுடுப்பை, @அசோக் – வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. ராபின் மேற்கோள் காட்டிய வரிகள் ஏற்கதக்கவையே.

 5. சுந்தர் Avatar
  சுந்தர்

  நானும் பல இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதைப் பற்றி கூறி வந்திருக்கிறேன். நடுவன் அரசின் வரம்பைச் சற்றுத் தளர்த்தி மாநிலங்களுக்கும், அதே போல உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தர வேண்டும். ஒரு வேண்டுகோள்: விக்கியிலிருந்து பயன்படுத்தியிருக்கும் படம் அங்கிருந்து பெற்றது என ஆற்றுப்படுத்தினால் நன்று.

 6. @சுந்தர் – பதிலுக்கு நன்றி. உங்கள் கருத்தோடு என் கருத்தும் ஒத்து போவது சந்தோஷம். ஆனால் சற்று இதை பற்றி விவரமாய் சொன்னால் இன்னும் விவாதித்து இதை பற்றிய புரிதலை அடையலாம்.

  நீங்கள் சொன்னபடி படத்திற்கான சுட்டியை பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.