உத்தபுரமும் காம்ரேடுகளும்

இன்று கம்யூனிஸ்ட் தலைவர் [சிபிஎம்] பிருந்தா காரத் உத்தபுரம் கிராமத்திற்கு சென்றார். அதற்கு முன்பு காலையில் காவல்துறையினர் அவரையும் அவருடன் இருந்த காம்ரேடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து இருக்கிறார்கள்.

உத்தபுரம் கிராமத்தில் நிலவும் பிரச்சனை பற்றி அறியாதவர்கள் இங்கே படிக்கவும்.

சமீப காலமாக காம்ரேடுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க தலித் பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். முக்கியமாக சிபிஎம் கட்சியினர். உத்தபுரம் கிராமம் விஷயத்தில் கூட பிரகாஷ் கரத் தொடங்கி பலர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது கட்டாயம் பாராட்டபட வேண்டிய விஷயம். என்றாலும்…

கம்யூனிச கட்சிகளில் சாதி பாகுபாடு பல ஆண்டுகளாக இருக்கிறது என பல சமயங்களில் பல தலித் நல ஆர்வலர்கள் சுட்டி காட்டி இருக்கிறார்கள். காலம் காலமாக உயர்சாதியினர் மட்டுமே கட்சியின் உயர் பொறுப்புகளை பிடித்து இருந்தார்கள் என சொல்லபடும் குற்றசாட்டை அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட முடியாது. அப்படி இருக்க இன்று கட்சி நலிவுறும் சமயத்தில் தனது பிடியை இறுக்கி கொள்ள இந்த வகை நடவடிக்கைகளில் காம்ரேடுகள் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்களா என்கிற கேள்வி எழுப்புவதில் தவறு ஒன்றும் இல்லை. அப்படியல்ல இன்று தலித் மற்றும் சாதி பாகுபாடு பற்றிய உணர்வு அதிகரித்து உள்ளது, அதனுடைய வெளிபாடு இது என்று கூட காம்ரேடுகள் இதற்கு தன்னிலை விளக்கம் சொல்லக்கூடும். காரணங்கள் எதுவாய் இருந்தாலும் இத்தகைய போக்கினை இவர்கள் இதற்கு முன்னரே செய்து இருந்தார்கள் எனில் கட்சியின் சரிவை கொஞ்சமாவது கட்டுபடுத்தி இருக்கலாம்.

காம்ரேடுகளின் ஆர்வம் ஒருபுறம் இருக்கட்டும், உத்தபுரம் பற்றி பிருந்தா காரத் சொன்ன ஒரு விஷயம் கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது.

“திமுக தலித்களின் நலனை காக்க முற்றிலுமாய் தவறி விட்டது. தலித்களுக்கு சமமான வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு பதில் அவர்களுக்கு தனி வசதிகளை ஏற்படுத்தி அவர்களை பாகுபடுத்தி விட்டது,” என்று குற்றம் சாட்டியிருக்கிறார் பிருந்தா காரத்.

அவர் சொன்னது உண்மை தான். உத்தபுரத்தில் இன்று தனி தனி பள்ளிகூடங்கள், தனி ரேஷன் கடை என அரசாங்கம் ஏற்படுத்தி இருப்பது உண்மை. அரசாங்கத்தை பொறுத்தவரை இந்த பிரச்சனைக்கான நிரந்தர தீர்வினை விட இது உடனே பற்றி எரிய கூடாது என்பதிலே அதிக அக்கறை இருக்கிறது. இதனாலே கூட இந்த கிராமத்தினை பற்றிய செய்திகள் வெளிவர தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும் [1989ம் ஆண்டில் இருந்தே மோதல்கள் நடக்கின்றன] இன்னும் தீர்வு அல்லது தீர்விற்கான பாதை புலனாகவில்லை.

கவனிக்கபட வேண்டிய மற்றொரு விஷயம், காவல்துறையினர் இன்று ஏன் காம்ரேடுகளை கைது செய்ய வேண்டும். கலவரம் வராமல் தடுக்கவாம். பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய விஷயம் தான் இப்போது நினைவிற்கு வருகிறது. ஊரில் காலம் காலமாக சாதி பாகுபாடு இருக்கும். தலித்களை கேவலமான நிலையில் வைத்து இருப்பார்கள். திடீரென அரசியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மூலம் அங்குள்ள இளைஞர்கள் சிலர் சலசலப்பை ஏற்படுத்த தொடங்குவார்கள். கிராமத்தில் கேள்விகள் எழுப்பப்படும் போது பிரச்சனைகளும் அதனுடன் எழுவது உண்மை தானே. அப
்போது காவல்நிலையத்திற்கு நீங்கள் போனால், “ஊரு அமைதியா தான் இருந்தது. இந்த விடுதலை சிறுத்தைங்க வந்தாங்க, ஊருல அமைதி கெட்டுச்சி,” என்று சலித்து கொள்வார்கள்.

இங்கு யாருமே நிரந்தர தீர்விற்கு முனைவதில்லை. முக்கியமாக அரசாங்கம் தன்னளவில் இப்போதைக்கு பிரச்சனை இல்லாமல் இருந்தால் போதும் என நினைக்கிறது. இதனால் பல பிரச்சனைகள் தீர்வதற்கு பதில் என்றாவது வெடிப்பதற்கு நெருப்பு கங்குகளுடன் தயாராக இருக்கின்றன. உத்தபுரம் அதில் ஒன்று. 

நன்றி

முதல் படம்: தி ஹிந்து
இரண்டாவது படம்: rediff news