மழை தூறல் என்னை பதைபதைப்பிற்கு உள்ளாக்குகிறது.
சட்டை பையில் இருக்கும் காகித தாளினை
கைகளால் காப்பாற்றுவதற்கு யத்தனிக்கிறேன்.
என்னை பயமுறுத்துவதற்காகவே
மழை சடசடவென பெய்வதும் பிறகு நிதானிப்பதுமாய்
விகாரமாய் சிரிக்கிறது.
தைல மரக்காட்டில் தன்னந்தனியாய்
பயத்தோடு நடக்கும் போது
பின்னால் யாரோ தொடர்வது போல
ஒரு நிழல் என் மனக்கண்ணில் என்னை தொடர்கிறது.
இருட்டுவதற்கு முன் இந்த காகித தாள்
அந்த நகரத்தில் கை மாற வேண்டும்.
இல்லையெனில் – அதை நினைத்தே பார்க்க முடியாது.
அந்த எண்ணமே என் உடலை நடுநடுங்க வைக்கிறது.
திசையினை அனுமானித்து
நகரத்தின் பக்கமாய்
எனது நடையினை வேகபடுத்துகிறேன்.
கைகள் அன்னிச்சையாக சட்டைபையினை தடவுகின்றன.
மழைநீர் அந்த காகிதத்தில்
மையினை கரைத்து
எழுத்துகளை அழித்து இருக்குமோ?
அந்த எண்ணம் மனதில் கலக்கத்தை உண்டாக்கும்
அதே நேரம்
அருகாமையில் தாங்கவியலா துர்வாசனை.
புதர்களுக்கு பக்கத்தில் ஒரு நாய் செத்து கிடக்கிறது.
ஒரு மணி நேரத்திற்கு முன் நான் பார்த்த அதே காட்சி.
பாதை மாறி மீண்டும் வந்த இடத்திற்கே
வந்து நிற்கிறேன்.
சூரிய அஸ்தமனம் தொடங்குகிறது.
Leave a Reply