100 கிலோமீட்டர் வேகத்தில் மரணம்.
கீழிருந்து உயர்ந்து செல்லும் மேம்பாலம் உச்சியில் முடிவடைய
அதற்கு கீழே தனது அகலமான சேலையை விரித்து
காத்திருக்கிறது கடல்.
இது தற்கொலை மேம்பாலம்.
யார் வேண்டுமானாலும் பைக்கை ஓட்டியபடி சென்று
தற்கொலை செய்து கொள்ளலாம்.
இந்த ஊருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர்
காண விரும்பும் இடம் இது தான்.
சுற்றுலா பயணிகளுக்காகவே மேம்பாலத்தின் வடக்கே
ஒரு திறந்த மண்டபம் அமைந்திருக்கிறது.
அந்த மண்டபத்தினுள் இருந்து பார்த்தால்
மேம்பாலத்தில் எப்போதுமே
ஒன்றிரண்டு பைக்குகள் ஏறி கொண்டிருப்பதையும்
அவர்களை விழுங்க அலைகளை கரகோஷமிட்டபடி
கடல் துள்ளுவதையும் காணலாம்.
கோடைக்காலம் இங்கு உகந்த காலம்.
அச்சமயம் பத்து பனிரெண்டு பைக்குகள் கூட
ஒரே சமயத்தில் மேம்பாலத்தில் ஏறி கொண்டிருக்கும்.
சமயங்களில் டிராபிக் ஜாம் ஆவதும் உண்டு.
மேம்பாலத்தின் கீழே நின்றிருக்கும்
காவலாளியை கண்டு கொள்ளாதீர்கள்.
அவனது வேலை வேடிக்கை பார்ப்பது மட்டுமே.
அதுவும் அவன் கடலுக்கு எதிர் திசையில் தான்
எப்போதும் பார்த்தபடி இருப்பான்.
Leave a Reply