விடுதலைப்புலிகளின் தற்போதைய வீழ்ச்சிக்கு பல காரணங்களை பல நிபுணர்கள் விவாதிக்கக்கூடும். ஆனால் நான் சொல்லும் காரணம் சற்று வேறு வகைப்பட்டது. கண்ணுக்கு எளிதில் புலப்படாதது. ஆழ்ந்து பார்க்கின் பின்புலத்தில் இருந்தவாறு காட்சிகளை இயக்கும் வல்லமை படைத்தது.
தேசியத்தின் எழுச்சி
பனிப்போர் நடந்த காலத்தில் அமெரிக்க அரசும் சோவியத் யூனியனும் உலகத்தை இரு நிலைகளாக வைத்திருக்க முயன்றன. இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் மற்றொரு நாடு அரசியல் செய்ய முயன்றது. இதன் காரணமாக உள்நாட்டு கலகங்களுக்கு வெளியுலக அங்கீகாரமும் ஆதரவும் இருந்தன.
ஆப்கானிஸ்தானில் தாலிபானின் முன்னோடிகளை வளர்த்தது அமெரிக்கா தாம். சோவியத் யூனியனுக்கு எதிராக தாலிபானின் முன்னோடிகள் உருவானார்கள். இன்று சீனா இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் கலகக்காரர்களை வளர்த்து விடுவதும், பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் கலகக்காரர்களை ஆதரிப்பதும் இதன் நீட்சிகளே. இந்த போக்கு இன்னும் தொடர்கிறது என்றாலும் இன்று அதனை வெளிபடையாக செய்ய இயலாத நிலை தோன்றியிருக்கிறது. காரணம் பனிப்போர் ஓய்ந்த பிறகு ஒரு நாட்டு அரசாங்கத்தின் அதிகாரம் பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது. ஓர் அரசின் செயற்பாடுகளை வேறு நாடு கேள்வி கேட்டால் அது அந்த நாட்டு இறையாண்மைக்குள் தலையீடுவதாக குற்றம் சாட்டபடுகிறது.
தேசியம் வலுப்பட்ட பிறகு தேசியத்தை கேள்வி கேட்பது மிக பெரிய குற்றமாக பாவிக்கபடுகிறது. பிரிவினைவாதிகள் மிக கொடூரமான தீவிரவாதிகளாக சித்திரிக்கபடுகிறார்கள்.
பனிப்போரும் அதற்கு முந்தைய காலமும் கலகக்காரர்களை போராளிகளாக நாயகர்களாக கொண்டாடியது. சே குவாரா, மகாத்மா காந்தி ஆகியோர் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள் தான். இன்று அவர்கள் இருந்திருந்தால் அவர்களையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி இருப்பார்கள்.
எந்த அதிகாரமும், யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என சொல்லும் அதிகாரமும் ஓடாத தண்ணீர் போல தான். நாற்றமெடுத்து போகும். கம்யூனிசத்தை தொடர்ந்து விவாதித்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என சொன்னார் மார்க்ஸ். ஏன் எனில் ஓர் அதிகாரம் விவாதத்திற்கு உரியதாய் இல்லாமல், யாரும் கேள்வி கேட்க இயலாத வேதமாக பாவிக்கபட்டால் அதன் விளைவு சர்வதிகாரமே.
தேசியம் இன்று பலம் பொருந்திய அதிகாரம். கலகக்காரர்கள் பயங்கரவாதிகளாய் சித்திரிக்கபடுகிறார்கள்.
தேசியம் இத்தகைய சர்வதிகார சக்தியை பெறுவதற்கு முன்பு கலகக்காரர்களாய் இருந்தவர்கள் இன்று தேசியம் வளர்ந்த பிறகு ஒன்று அழிக்கபட்டு விட்டார்கள். அல்லது தேசியத்தை சார்ந்து மிதவாத தளத்திற்கு நகர்ந்து விட்டார்கள்.
விடுதலைப்புலிகள் இலங்கை நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும் மூன்றில் இரண்டு பகுதி கடலையும் தன் அதிகாரத்திற்கு கீழ் ஒரு காலத்தில் வைத்து இருந்தவர்கள். அவர்களது படை வலிமை உலகளவில் சிறந்தது என பாராட்டபட்டது. ஆனால் பாலஸ்தீனத்தில் கலகக்காரர்களுக்கு கிடைத்த நண்பர்கள் போல் விடுதலைபுலிகளுக்கு நண்பர்கள் அமையாமல் போனார்கள். அல்லது அவர்கள் அந்த நட்பு வளையத்தை பெருக்கி கொள்ள இயலாமல் இருந்து விட்டார்கள். இன்னும் மோசம் ராஜீவ் காந்தி படுகொலை போன்ற சம்பவங்களால் தங்களது சர்வதேச நட்பு வளையத்தை சேதபடுத்தி கொண்டார்கள்.
யாசர் அராபத் பாலஸ்தீனத்தின் அதிபராக பொறுப்பேற்று கொண்ட காலத்திற்கு முன்னரே விடுதலைபுலிகள் ஒரு வேளை தங்களது ஆளுமைக்குட்பட்ட பகுதியில் தேர்தல் நடத்தி (அல்லது ஒரு தேசியத்தின் சாயலில் இயங்கி இருந்தால்) பல நாட்டு தூதுவர்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இருந்தால் இன்றைய நிலை வேறு மாதிரி இருந்து இருக்கலாம்.
எந்த உள்நாட்டு கலகக்காரர்களும் வன்முறையை கையாளாமல் இருந்தது இல்லை. ஏன் பகத் சிங் கூட வன்முறையாளர் தாம். ஆனால் இன்றைய நிலையில் போர் திறனும் படைபலமும் மட்டும் கலகக்காரர்களை காப்பாற்றி விடாது. தேசியத்தின் வளர்ச்சிக்கு முன் அரசு இயந்திரத்தின் கேள்வி கேட்க முடியாத அதிகாரத்தின் முன் உலக தேசிய அரசாங்கங்களின் ஒன்றை ஒன்று தழுவி கொள்ளும் புரிதல் உணர்வுக்கு முன் இன்று கலகக்காரர்களின் பலம் ஒன்றுமில்லாததாக மாறி விட்டது.
9/11 சம்பவத்திற்கு பிறகு ‘தீவிரவாதி,’ ‘பயங்கரவாதி’ ஆகிய வார்த்தைகள் புதிய அர்த்தத்தில் பயன்படுத்தபடுகின்றன. ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என சொற்றொடரில் உள் அர்த்தங்கள் ஆயிரமாயிரம் இருக்கின்றன. ராஜபக்க்ஷே தனது போரை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என சொல்லுவதன் அர்த்தம் என்ன? இந்திய அரசாங்கம் ‘இலங்கை பயங்கரவாதிகள்’ என விடுதலைப்புலிகளை சொல்வதற்கான அர்த்தம் என்ன? குழந்தைகளை கட்டாயபடுத்தி தங்கள் படைகளில் சேர்க்கிறார்கள் என பிரச்சாரத்தை ஓயாமல் சொல்வதன் அர்த்தம் என்ன?
உலகம் முழுவதும் தேசியத்தின் எழுச்சிக்கு நிகராய் தன்னை வளர்த்து கொள்ளாமல் தொடர்ந்து கலகக்காரர்களாய் இருந்ததே விடுதலைப்புலிகளின் இன்றைய வீழ்ச்சிக்கு காரணம்.
ஓவியம்: Salvador Dali
Leave a Reply