மனிதர்கள் – வீடியோ கேம்ஸ் சுந்தரமூர்த்தி

முதல் சந்திப்பிலே ஆச்சரியப்படுத்தும் மனிதர்கள் உண்டு. சுந்தரமூர்த்தியுடனான முதல் சந்திப்பு அவ்வாறு தான் இருந்தது.

சுந்தரமூர்த்திக்கு அறுபது வயதிருக்கும். வெள்ளை சட்டை, வேட்டி தான் உடுத்தி இருந்தார். பணக்காரர் என்பதை அவரது வீடும் அவரது வீட்டை அலங்கரித்த பொருட்களுமே சொல்லின. அவருக்கென இருந்த பிரத்யேக அறையில் தான் என்னை சந்தித்தார். அந்த அறை வியாபார நிமித்தமாக வருபவர்களைச் சந்திப்பதற்காக என யூகித்தேன். வியாபாரத்திற்கென தனி அலுவலகம் அவருக்கில்லை என சொன்னார். தேர்ந்த ரசனையுடையவர் என்பதை அவர் அந்த அறையை அலங்கரித்து இருந்த விதமே சொன்னது. மென் நீல சுவர். தூசி படியாத நீல தரைவிரிப்பு. நான்கு சேர்கள். ஒரு நீளமான சோபா. பெரிய மேஜை. ஒரு மர பீரோ. சுவரில் அழகான ஓவியங்கள் இரண்டு. யார் வரைந்தது என தெரியவில்லை. ஆனால் மென்நீல சுவருக்குள் பொருந்துவதற்காகவே வரைந்தாற் போலிருந்தன. அறையின் பிரதானம் அந்த கம்ப்யூட்டர் மானிட்டர் தாம். அந்த அறையின் கர்ப்பகிரக தெய்வம் போல நாயகமாக இருந்தது. கம்ப்யூட்டர் மேஜையில் எக்கசக்க டிவிடிகள், சிடிகள் அதற்கான டிரேயில் அடுக்கபட்டிருந்தன.

நான் அவருடன் பேசி கொண்டிருந்த போது ஓர் ஆவலில் என் கை அவரது டிவிடிகளை அலசியது. எல்லாமே வீடியோ கேம்ஸ் டிவிடிக்கள். அப்போது தான் கவனித்தேன். வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்காகவே அலங்கரிக்கபட்ட அறை இது. எல்லாம் புது மெஷின்கள். நவீன கேம்ஸ் வகையறாக்கள். இந்த அறுபது வயது ஆளா இந்த வீடியோ கேம்ஸினை விளையாட போகிறார்? அல்லது அது அவரது பேரன் (?) அறையா?

“எனக்கு டூப்ளிகேட்டே பிடிக்காது. எல்லாமே புதுசு கம்பெனி ஐட்டமா இருக்கணும். சவுண்ட் சிஸ்டம், சாப்ட்வேர் எல்லாமே! கம்ப்யூட்டர் ரிப்பேர் பண்றவர் டூப்ளிகேட் கிராக் கேம்ஸ் தருவேன்னு சொன்னாரு. ஆனா நான் கடையில ஒரிஜினலைத் தான் வாங்கி பயன்படுத்தறேன்.” அறுபது வயதுக்காரர் தான் பேசுகிறார்.

நான் புன்னகைக்கிறேன். அடப்பாவி பணக்கார சொகுசு வாழ்க்கையா?

“வீடியோ கேம்ஸ்ல மூணு வகை இருக்கு. ஒண்ணு கார் ரேஸ் மாதிரியான விளையாட்டு. இன்னொன்று லாவகமாய் நகர்ந்து நகர்ந்து ஒவ்வொரு லெவலாய் ஆடும் பொறுமையான விளையாட்டு. மூன்றாவது தான் ஸ்டரடஜி கேம். எனக்கு மூனாவது தான் பிரியம். செஸ் விளையாடற மாதிரி. ஆனா போர்ட் கேம் இல்ல. ஏஜ் ஆப் எம்ப்பையர் மாதிரி. ஒவ்வொரு லெவலாய் நகர்ந்து கடைசி ஸ்டேஜ் வர பல மாசங்களாகும். அதுவும் என்னை மாதிரி நாள்முழுக்க விளையாட்டே கதின்னு கிடந்தா தான். இல்லன்னா வருஷக்கணக்கா ஒரே கேம் விளையாட்டிட்டு இருக்க வேண்டியது தான்.”

விளையாட்டில் இத்தனை வகையா? நாள்முழுக்க விளையாட்டே கதின்னு கிடப்பாரா?

சுந்தரமூர்த்தியை புரிந்து கொள்ள எனக்கு ஒரு வாரத்திற்கு மேலானது. அவர் ஒரு மிஸ்டர் பெர்பெக்ட். காலையில் நடை பயிற்சி. பகலில் அலுவலக வேலை போல வீடியோ கேம்ஸ். மாலையில் குடும்பத்துடன் காரில் எங்காவது பொழுதுபோக்கு விஷயம். பிறகு நண்பர்கள். இரவு நீண்ட நேரம் மீண்டும் வீடியோ கேம்ஸ். ஒழங்கான குடும்பஸ்தன் போல நடந்து கொண்டார்.

“சிட்டியில எனக்கு நிறைய கடைகள் இருக்கு. எல்லாத்தையும் பார்த்துக்க ஆட்கள் இருக்காங்க, நிர்வகிக்க சொந்தங்கள் இருக்காங்க. வீட்ல பணத்துக்கு குறைச்சல் இல்ல. போதாதுக்கு இன்னும் கொட்டிட்டு இருக்கு.”

சுந்தரமூர்த்தியின் வீட்டில் அவரை யாரும் தொந்திரவு செய்வது கிடையாது. அவருண்டு, அவரது வீடியோ கேம்ஸ் உலகமுண்டு.

“தம்பி! ரொம்ப கஷ்டப்பட்டு ஏழை குடும்பத்துல இருந்து படிப்படியா வளர்ந்து வந்தவன் நான். சின்ன வயசுல இருந்து எனக்கு எது பிடிக்குமோ எது மேல ஆசையோ அது எனக்கு கிடைக்கவே கிடைக்காது. உழைக்கிறது தவிர வேறு எதுவுமில்லாம என் வாழ்க்கைய கழிச்சிட்டேன். இப்ப அதுக்கெல்லாம் சேர்த்து ரெஸ்ட் எடுக்கிறேன்.”

சுந்தரமூர்த்தி பற்றி வியந்தபடி அவரிடமிருந்து நான் விடை பெற்று அவரது அறையிலிருந்து வெளியே வந்தேன். வெளியே ஹாலில் அவரது மகன் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அவர் மகனுக்கு முப்பது வயதிருக்கலாம். டீவியில் ஓடி கொண்டிருக்கும் ஒரு தமிழ் சீரியலை ஆவலாய் பார்த்து கொண்டிருந்தார்.

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.