மனிதர்கள் – சர்வர் சுந்தரம்

நடுத்தர வர்க்கத்திற்கான ஓட்டல்களில் சர்வர்கள் அலட்சியம் தாங்க முடியவில்லை. தண்ணீர் டம்ளர்களில் விரலை நுழைத்து அதை நமக்கு பருக தந்து விட்டு போகிறார்கள். என்ன இருக்கு என்றால் ஒரே நான்கு ஐட்டம் தான் சொல்வார்கள்.

“இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா.”

பக்கத்து டேபிளில் ஒருவர் குழி பனையாரத்தையும், இன்னொருவர் சாம்பார் இட்லியையும் சுவைத்து கொண்டிருக்கும் போது இந்த நான்கு ஐட்டம் மட்டும் ஏன் சொல்கிறாய் என்று கேட்டால் மெனு கார்ட்டை டேபிளில் வைத்து விட்டு போய் விடுவார்கள்.

சில ஓட்டல்களில் சர்வர்களை பிடிப்பதே கஷ்டம். சாம்பாருக்காக எச்சக் கையோடு சர்வருக்காக நிமிஷக்கணக்கில் காத்து கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.

என் நண்பன் ஒருவனோடு இப்படி ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது இதே மாதிரியான வேதனை (உட்கார்ந்து கால் மணி நேரமாகியும் ஆர்டர் எடுக்க ஆள் வரவில்லை.) என் நண்பன் மேனேஜரை கூப்பிட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டான். அடுத்தடுத்த உபசரிப்புகள் கடகடவென நடந்தன.

நண்பனின் திறமை எனக்கு தெரியும். ஏனெனில் அவன் ஆறு மாதம் சர்வராய் வேலை பார்த்தவன் ஆயிற்றே.

நண்பனின் பெயர் சுந்தரம். கல்லூரியில் என்னுடன் படித்தவன். திருநெல்வேலி அருகே ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன். அப்பா இல்லை. வீட்டில் பிரச்சனை. கல்லூரி முடித்த பிறகு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. ஒரு நாள் தாயாருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளிவந்தவன் என் அறைக்கு வந்தான். நான் நாளிதழ்களில் கிளாசிவைட் விளம்பரங்களில் பார்த்து வேலை தேட சொன்னேன்.

சென்னையில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமா? முதல் நாள் அலைச்சலுடன் சோகத்துடன் அமர்ந்திருந்தான். அடுத்த நாள் ஓர் ஓட்டலில் நிர்வாக வேலைக்கு நேர்காணலுக்கு போகிறான்.

“கிடைக்காதுன்னு சொல்லாதீங்க. வேற என்ன வேலை இருக்கோ அத கொடுங்கன்னு கேளுடா,” என்றேன்.

அடுத்த நாள் இரவு, சுந்தரம் என்னிடம் அவனுக்கு அந்த ஓட்டலிலே வேலை கிடைத்ததாகவும், அங்கேயே தங்கி கொள்ள போவதாகவும் சொல்லி விட்டு போனான். அப்புறம் மூன்று மாதங்கள் கழித்து ஓரு நாள் என்னை சந்திக்க வந்தான். வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள், கையில் தங்க காப்பு என தோற்றமே மாறி வந்தான். எல்லாருக்கும் விருந்து வைத்தான்.

மாதங்கள் உருண்டோடின. பிறகு வேறு ஒரு நண்பன் மூலம் நடந்த கதையை அறிந்தேன்.

வேலை தேடி சுந்தரம் அந்த ஓட்டலுக்கு போன போது, அந்த நிர்வாக வேலை அவனுக்கு கிடைக்கவில்லை. நான் சொன்னபடி எனக்கு வேறு எதாவது வேலை கொடுங்க என கேட்டு இருக்கிறான். சர்வர் வேலை தானிருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள். அதை செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். பட்டதாரிகளுக்கு இந்த வேலை ஒத்து வராது என்று சொன்னவுடன் அப்படியானால் இப்பவே கல்லூரி சர்டிபிகேட்களை கிழித்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறான். கிடைத்து விட்டது சர்வர் வேலை. சில மாதங்களுக்கு பிறகு அவனது வீட்டார் தேடி வந்து அவனை மீட்டு ஊருக்கு திரும்ப கூட்டி போனார்கள்.

பிறகு நிலைமை சகஜமானது. சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னை சந்திக்க வருவான். என்னை பொறுத்த வரைக்கும் சுந்தரம் பற்றிய மதீப்பீடை இரண்டு காலவகையாக வைத்து இருக்கிறேன். சுந்தரம் ஓட்டல் வேலைக்கு போவதற்கு முன், சுந்தரம் ஓட்டல் வேலைக்கு போனதற்குப் பின்.

சுந்தரம் அந்த ஓட்டல் வேலைக்கு சேர்வதற்கு முன் அப்பாவி இளைஞன். எளிதில் பயப்படுவான். மிக நல்லவன். யாரிடமும் சண்டைக்குப் போக மாட்டான். அதாவது ஓட்டலில் நான் சொன்ன மாதிரி சண்டையெல்லாம் போடும் ரகமில்லை. ஆனால் சண்டையிடுமளவு எப்படி மாறினான்?

ஓட்டலில் சர்வர் வேலை அவனை மாற்றி விட்டது. அவன் பட்டதாரி என்பது அவனுக்கும் ஓட்டல் முதலாளிக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அதனால் மற்றவர்களுடன் கலகலப்பாய் பழகுவதில் ஒன்றும் பிரச்சனையில்லை. ஆனால் மனதினுள் தீராத வெறி. பணம் சம்பாதிக்க வேண்டுமென்கிற வெறி. அதற்கும் அங்கே ஒரு குழு இருந்தது. சர்வர் வேலை பார்த்தது போக மற்ற நேரத்தில் வேறு வேலைகளில் ஈடுபட தொடங்கினான். ரெயில் நிலையங்களில் பிளாக் டிக்கெட் டெலிவரி பாய், அமெரிக்கன் தூதரகத்தில் வாசலில் கியூவில் நிற்பதற்கு வாடகை ஆள் – இப்படி அவன் செய்த வேலைகளின் பட்டியல் நீளமானது. அந்த ஒரு வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் அவன் நிறைய சம்பாதித்து விட்டான். வீட்டிற்கு போகும் போது தங்க ஆபகரணங்களாய் எல்லாவற்றையும் மாற்றி கொண்டு போனான்.

ஓகே! இப்போது அந்த சுந்தரத்துடன் தான் ஓட்டலில் சாப்பிட்டு வெளியே வந்து கொண்டிருக்கிறேன். ஓட்டலில் அவன் சண்டை போட்டதும் கல்லூரி காலத்தில் இதே சுந்தரம் எப்படி வாயில்லா பூச்சியாய் இருந்தான் என நினைத்து பார்த்தேன். காலம் மனிதர்களை எப்படியெல்லாம் பதப்படுத்துகிறது.

“ஏண்டா சர்வருங்க எல்லாம் பெரும்பாலும் இப்படி இருக்காங்க,” என சுந்தரத்திடம் கேட்டேன்.

“இப்படி இந்த வேலையில இருக்கோமே அப்படிங்கிற எரிச்சல், தாழ்வு மனப்பான்மை, வர்றவன் போறவன் எல்லாம் நம்மை வையற மாதிரியான இடத்துல இருக்கோமேனு வருத்தம் இதெல்லாம் சர்வர்களுக்கு அதிகம். குறிப்பா முப்பது வயசு தாண்டின சர்வர்களுக்கு அதிகம். அடுத்து இது ஒண்ணும் கஷ்டப்பட்டு கிடைச்ச வேலையில்ல. இந்த ஓட்டலில் இல்லையானா அடுத்த ஓட்டல்ல வேலை கிடைச்சுடும். இது ஒரு மனோநிலை. அடுத்து நீ நினைக்கிற மாதிரி சுறுசுறுப்பான சர்வரா இருக்கிறது ரொம்ப கஷ்டம். வேலைக்கு சேர்ந்த முதல் இரண்டு நாள் அப்படி இருக்கலாம். ஆனா அதுக்கு அப்புறம் எப்படியிருந்தாலும் திட்டு விழ தான் செய்யுதுன்னு மத்தவங்களை மாதிரி ஆகிவிட வேண்டியது தான்.”

“இவ்வளவு தெரிஞ்ச நீ எதுக்கு அந்த சர்வரையும் மானேஜரையும் திட்டுன?”

சுந்தரம் புன்னகைத்தான்.

“சர்வர் உலகத்தை பத்தி அக்கறைபடறது வேற. ஒழங்கா நமக்கு வேலை நடக்கணும்கிறது வேற. அப்புறம் இன்னொரு விஷயம். சண்டை போட்டா தான் கொஞ்சம் உபசரிப்பு இருக்கும். ஆனா எல்லை மீறி சண்டை போட்டா வேற மாதிரி ஆகிடும்.”

சுந்தரம் விடைபெற்று தனது காரில் கிளம்பி சென்றான்.

நன்றி:

ஓவியம்: Victoria Heryet

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.