நமக்கு தெரிந்த தகவல் தான். ஆனால் ஆராய்ச்சி முடிவாய் வெளிவரும் போது அதிர்ச்சியாக தானே இருக்கிறது. அதிகாரம் படைத்தவர் முதலாளியோ, கம்பெனி எம்.டியோ, சிறுவர்களாய் இருந்தால் தந்தையோ, அதிகாரமிக்கவர் யாரேனும் ஆணையிட்டால் அதனை ஏற்று பெரும்பாலனோர் கொல்லவும் துணிவார்கள் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களை சித்ரவதை செய்யவும் துணிவார்கள். இது சாந்தா கிளாரா பல்கலைகழகத்தில் உள்ள முனைவர் ஜெர்ரி பர்கர் என்பவர் வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவு. இதற்கு முன்பு இதே போன்ற ஆய்வு முடிவினை 1963-ம் ஆண்டே யேல் பல்கலைகழகத்தை சேர்ந்த ஸ்டான்லி மில்கிராம் என்பவர் வெளியிட்டார். சர்ச்சைக்கு ஆளான இந்த ஆய்வு முடிவு இப்போது மீண்டும் செய்திகளில் அடிபட தொடங்கியிருக்கிறது. மிக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் கூட கலவரங்கள் நடக்கும் போது சட்டென எதிர் இனத்தவரை கொல்லும் கும்பலில் சேர்ந்து மிக கொடூரமான குற்றங்கள் புரிவது பற்றி இந்த ஆய்வு முடிவு விளக்க முயல்கிறது.
அதிகாரம் என்பது ஒரு கதாபாத்திரம் அல்ல
அதிகாரம் என்பது ஒரு நாட்டின் ராணுவ அதிகாரியையோ அல்லது ஒரு குழுவின் தலைவனை மட்டும் குறிப்பதல்ல. ஒரு சிறு அலுவலகத்தில் இருக்கும் சிடுமூஞ்சி மேனேஜர், பள்ளிக்கூடத்தில் மாணவர்களை பயமுறுத்தும் வாத்தியார், வீட்டில் பிள்ளையை மிரட்டும் தந்தை இவர்கள் எல்லாருமே அதிகாரங்கள் தாம். ஓர் இடத்தில் அதிகாரம் செலுத்துபவராய் இருப்பவர் மற்றொரு இடத்தில் அதிகாரத்திற்கு பயந்தவராய் இருக்கவும் நேரிடுகிறது. அதிகாரம் குறித்த பயமும், அதிகாரம் கிடைத்தால் அதனை துஷ்பிரயோகம் செய்வதும் மனிதர்களிடையே பரவலாய் நடப்பது தானே.
மக்கள் தங்கள் வாழ்க்கைக்கென ஒரு மதீப்பீடு வைத்து இருக்கிறார்களா? அல்லது ஜனநெருக்கடி மிகுந்த தெருவில் கூட்டம் இடித்து கொண்டு முன்னேறும் பாதையில் தாங்களும் ஆற்றில் விழுந்த இலை போல போய் கொண்டிருக்கிறார்களா? இது தான் இன்று நம் முன் நிழலாடும் கேள்வி.
ஓவியம் – Marci Nick
Leave a Reply