2 குழந்தைகள் – ஒன்று வேண்டாம்! ஒன்று வேண்டும்!
இந்த மாதம் இரண்டு குழந்தைகளை பற்றிய இரு தனி செய்திகள் பத்திரிக்கைகளில் சர்ச்சைகளாக உருவெடுத்தன.ஒன்று மும்பையில் உள்ள ஹரீஷ் மற்றும் நீகிதா மேத்தா தம்பதியினர் கருவில் உள்ள தங்கள் (25 வார வயதுள்ள) குழந்தைக்கு இருதயத்தில் குறைபாடு உள்ளது கண்டுபிடிக்கபட்டுள்ளதால் அதனை கருகலைப்பு செய்ய அனுமதி கேட்டு மும்பை உயர் நீதிமன்றம் படியேறியதும், அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்த சம்பவம். கருகலைப்பு செய்வதற்கான சட்டம் இந்தியாவில் இப்போது விவாத பொருளாகி இருக்கிறது. 20 வாரங்களுக்குள் அபார்ட் செய்ய சட்டம் அனுமதிக்கிறது. அதற்கு பிறகு அபார்ஷன் செய்வதென்பது தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என சட்டம் பொருள் கொண்டுள்ளதால் இந்த நிலை. இந்த சட்டம் இயற்றபட்ட ஆண்டு 1971-ம் வருடம். இதற்கு பிறகான 35 வருடங்களில் மருத்துவத்துறை பெரியளவு முன்னேறி விட்டது. இன்று தாயாரின் உயிருக்கு பாதகம் விளைவிக்காமல் பிரசவ காலத்தின் எந்த சமயத்திலும் கருகலைப்பு செய்யும் திறன் மருத்துவத்திற்கு உண்டு. என்றாலும் சட்டம் இந்த வளர்ச்சியை கணக்கில் எடுத்து கொண்டு தன்னை மேம்படுத்தி கொள்ளவில்லை. மாறாக இந்த பிரச்சனை தேசிய அளவில் ஊடகங்களால் பெரிதாக்கபட்ட பிறகு, சுகாதார நலத்துறை அமைச்சர் அன்புமணி இதை பற்றிய விவாதங்கள் கவனத்தில் கொள்ளபடும் என சொல்லியிருக்கிறார்.சட்டங்கள் நிகழ்காலத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் சட்டங்களை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்கிற நிலை உருவாகும்.

சட்டங்களை மதிக்காதவர்களுக்கு உதவி செய்ய இன்று இந்திய தேசத்தில் ஆயிரம் வழிகள் உள்ளன. ஆனால் சட்டபடி நடக்க வேண்டும் என ஹரீஷ் மற்றும் நீகிதா மேத்தா போன்றவர்கள் நினைக்கும் போது அவர்களுக்கான பாதை முட்களால் நிரப்பப்பட்டிருக்கிறது.

நீகிதா மேத்தாவிற்கு இயற்கையாகவே பிறகு கருகலைப்பு நடந்து விட்டது என்பது கடைசி செய்தி.

*****************************************

மற்றொரு சம்பவத்தில் ஜப்பானை சேர்ந்த யமடா தம்பதியினர் இந்தியாவில் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டார்கள். முகம் தெரியா பெண்ணிடம் இருந்து கருமுட்டை (தானமாக) எடுக்கபட்டது. மருத்துவரீதியாக குழந்தையின் தந்தை யமடாவாக இருந்தாலும், குழந்தையின் தாய் அந்த தானமளித்த பெண் தான்.

இந்தியாவில் கருமுட்டைகளை தானமாக கொடுப்பதும், வாடகைதாயாக இருப்பதும் சட்டபடி (பல நிபந்தனைகளுடன்) அனுமதிக்கபட்டிருக்கிறது. ஆனால் குழந்தையை வாடகைதாய் பெற்றெடுப்பதற்குள் கணவனும் மனைவியும் பிரிந்து விட்டார்கள். மனைவிக்கு இப்போது குழந்தையின் மீது ஆர்வமில்லை என்றாலும் கணவர் யமடா தன் குழந்தையை தன்னோடு ஜப்பானுக்கு அழைத்து செல்ல முயன்று வருகிறார். யமடா சம்பந்தபட்ட வாடகைத்தாய் முறையிலே சரியான சட்ட விதிமுறைகள் பின்பற்றபடவில்லை என்று இப்போது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் குற்றச்சாட்டுகள் எழுப்பியதோடு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் குழந்தையின் மீதான யமடாவின் உரிமையை கேள்விக்கும் உள்ளாகியிருக்கிறது.

குழந்தை மாஞ்சி யமடா ஜப்பானுக்கு போகுமா அல்லது இந்தியாவில் பொதுநல தொண்டு நிறுவனத்தில் வளருமா என்கிற கேள்வி சில நாட்களாக அலசபட்டது. இப்போது குழந்தை யமடவின் தாயாரிடம் (குழந்தையின் பாட்டியிடம்) இருக்குமெனவும் அடுத்த உத்தரவு வரும்வரை குழந்தையை அவர்களிடமிருந்து பிரிக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது. எனினும் வழக்கு இன்னும் முடிவிற்கு வரவில்லை. குழந்தை மாஞ்சி யமடா இன்னும் மருத்துவமனையிலே தன் பாட்டியின் பராமரிப்பில் இருக்கிறது.

கருகலைப்பு என்பதும் வாடகைத்தாய் முறை என்பதும் உலகமெங்கும் விவாதத்திற்குள்ளாகி வரும் தலைப்பு. எனினும் இந்தியாவில் இதனை பற்றிய முழுமையான தெளிவு சட்ட நிபுணர்களிடமும் பொது மக்களிடமும் இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஜப்பானை சேர்ந்த ஒரு கணவன் மனைவி எதற்காக இந்தியாவிற்கு வந்து குழந்தை பெற்று கொள்ள வேண்டுமென நினைக்க வேண்டும்? மற்ற நாடுகளை விட இங்கு சட்டங்கள் கடுமையாக இல்லை என்பது தான் காரணமா?

சரியான சமயத்தில் முறையாக சட்டங்களை மேம்படுத்தாமல், ஏதேனும் பரபரப்பு ஏற்படும் போது மட்டும் அவசர கோலத்தில் மிக கடுமையாக நடந்து கொள்வதே நம் அதிகார வர்க்கத்தினரின் வழிமுறையாக இருக்கிறது.

இது தான் இரண்டு குழந்தைகள் பற்றிய சமீப செய்திகள் நமக்கு மீண்டும் தெளிவுபடுத்திவிட்டு போயிருக்கும் அவலம்.


Comments
One response to “2 குழந்தைகள் – ஒன்று வேண்டாம்! ஒன்று வேண்டும்!”
  1. r.selvakkumar Avatar
    r.selvakkumar

    சட்டம் என்று ஒன்று இருக்கிறது.நியாயம் என்று ஒன்று இருக்கிறது.“நீகிதா மேத்தாவிற்கு இயற்கையாகவே பிறகு கருகலைப்பு நடந்து விட்டது” என்பது நியாயம். இது எல்லா சட்டத்திற்கும் அப்பாற்பட்டது.அதே போல “வாடகைத் தாய்” விவகாரம். வருடங்கள் கடந்துவிட்டால் உண்மையில் அது குழந்தை மாஞ்சி யமடாவின் பிரச்சனை. அது வரை அது வெறும் சட்டப் பிரச்சனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.