சுதந்திர நாட்டின் மனிதர்கள்

சென்னை அண்ணா நகர். ஷேர் ஆட்டோ ஒன்றில் இரு பெண்மணிகள் பல காலம் கழித்து சந்திக்கிறார்கள். இருவருமே மத்தியவர்க்கத்தினர். வயதான பெண்மணி ஆஸ்திரேலியாவில் டாக்டருக்குப் படிக்கும் தனது மகளைப் பற்றி பேசி கொண்டு வருகிறார்.

“அவ பத்தாவது, பனிரெண்டாவது படிக்கும் போது இரண்டு தடவையும் நான் இரண்டு மாசம் லீவு எடுத்து வீட்டுலயே இருந்தேன். அவளுக்கு சூப்புன்னா அவ்வளவு இன்ட்ரெஸ்ட். ஒரு அண்டா நிறைய சூப் கொடுத்தா கூட குடிச்சிடுவா. அவ அப்பவே சொன்னா என் படிப்பிற்காக நீங்க அஞ்சு காசு கூட செலவழிக்க கூடாதுன்னு. அதே மாதிரி அவ படிப்பு முழுக்க மெரீட்ல தான் வந்தா. அப்படியிருந்தும் ஆஸ்திரேலியாவுல படிக்க இது வரைக்கும் பத்து லட்சம் செலவாயிடுச்சு. அவங்க அப்பா என்னென்ன ஷேவிங்க்ஸ் வைச்சிருக்கிறாருன்னு எனக்கு தெரியாது. ஆனா என் பணமெல்லாம் உனக்கு தான்டான்னு அவ பனிரெண்டாவது முடிச்சவுடனே பத்து லட்சத்தை எடுத்து வைச்சிட்டாரு. ஆமா, உன் பையன் கூட இப்ப பனிரெண்டாவது படிக்கிறான் தானே?”

அடுத்த பெண்மணியின் முகம் இருள்கிறது. அவரது மகன் படிப்பில் கெட்டியில்லை போலிருக்கிறது.

“அப்படியெல்லாம் விட்டுட கூடாது. நல்ல மார்க் வாங்கல்லைன்னா பிளேஸ்மண்ட் ரொம்ப கஷ்டமாயிடும். உன் பையனோட இமெயில் அட்ரஸ் இருந்தா சொல்லு. என் பெண்ணை அவனுக்கு அட்வைஸ் பண்ண சொல்றேன். இப்ப எல்லாம் வாரத்துக்கு ஒரு நாள் அவளும் நானும் வீடியோ கான்பரன்சிங்கில பேசிக்கிறோம் தெரியுமா. கல்யாணத்தைப் பத்தி பேசினாலே நான் படிக்க நிறைய இருக்கு. கல்யாணத்தைப் பத்தி அது வரைக்கும் பேசாதீங்கன்னு சொல்றா…”

**************************************************************

திருநெல்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம். சைக்கிள் ஓட்டியபடி அங்கு வருகிறான் ஒரு பையன். அவனை ஒரு சிகரெட் வாங்க அனுப்புகிறார் ஓர் இளைஞர். அவனும் சைக்கிளைத் திரும்ப எடுத்து கொண்டு கடைக்குப் போகிறான். தன் அருகில் இருந்த மற்றொருவரிடம் அந்தப் பையனைப் பற்றி பேசுகிறார் அந்த இளைஞர்.

“இவன் இருக்கானே, பள்ளிக்கூடத்துல இருந்து பாதியில ஓடி வந்துட்டான். வயல்ல அப்பா கூட வேலை செய்யுடான்னா முடியாதுன்னு சொல்லிட்டு தறுதலையா திரியறான். சிகரெட், தண்ணீ எல்லா பழக்கமும் உண்டு. நம்ம ஊர்ல தான் தெரியுமே இராத்திரியாச்சுன்னா வயசானவங்கள்ல இருந்து எட்டாவது படிக்கிற பொடிசுங்க வரை அத்தனை ஆம்பிள்ளைகளும் சாராய கடை பக்கம் தான் நிப்பாங்க. இவங்க அம்மா பொறுத்து பொறுத்து பாத்துட்டு விட்டுட்டா. இப்பல்லாம் வீட்டுலயே ஃபிரெண்ட்ஸோட சாராயம் குடிக்கிறான்.”

சிகரெட்டை வாங்கி கொண்டு அந்த பையன் அங்கு வருகிறான். அந்த இளைஞர் மீண்டும் பேசுகிறார்.

“முந்தா நேத்து நல்ல தண்ணீயில்ல வீட்டுக்குள்ள போய் தாழ்ப்பாள் போட்டு தூங்கிட்டான். இவன் அம்மா வந்து கதவை மணிக்கணக்கா தட்டிட்டே இருக்கா. இவன் திறக்கவே இல்லை. அப்புறம் கதவை திறந்தான். வீட்டுக்குள்ள போனா சுவர் முழுக்க பான்பராக் போட்டு துப்பி வைச்சிருக்கிறான். விறகு கட்டையால பையனை அம்மா பின்னி எடுத்துட்டா.”

இருவரும் சிரிக்கிறார்கள். பையன் இவர்கள் தன்னைப் பற்றி பேசுவதை கேட்டு வெட்கப்பட்டு கொண்டே ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து கொள்கிறான்.

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.