நான் பள்ளியில் இருந்த போது பிரம்பிற்குப் பேர் பெற்ற ஒரு டீச்சரம்மா இருந்தார்கள். அவரைக் கண்டாலே மாணவர்கள் நடுங்குவார்கள். ஐந்தாம் வகுப்பு வரை இருந்த ஒரு கிருஸ்துவ பள்ளி அது. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தாம் மூத்தவர்கள். அவர்களின் வகுப்பு ஆசிரியை தான் நம்ம பிரம்பு டீச்சரம்மா.
நான்காம் வகுப்பில் இருக்கும் போதே அடுத்த வருடம் பிரம்பு டீச்சரம்மாவிடம் பிரம்படி வாங்க வேண்டுமே என எல்லாரும் பயந்து போய் இருந்தோம். தினமும் காலை பள்ளி மைதானத்தில் வெயிலில் முட்டி போடும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்; ஐந்தாம் வகுப்பு அறையிலிருந்து கேட்கும் அலறல் சத்தங்கள் என தினமும் எங்கள் திகில் அதிகரித்தபடி இருந்தது. அடுத்த வருடம் நான் வேறு பள்ளிக்குப் போய் விடுவேன் என ஒருவருக்கொருவர் சொல்லி எங்களை நாங்களே ஆறுதல்படுத்தி கொள்வோம். ஆனால் எங்களது பெற்றோர்கள் யாரும் எங்களது பயத்தினைப் பொருட்படுத்தவேவில்லை.
நாங்கள் ஐந்தாம் வகுப்பிற்குப் புலம் பெயரும் நாளும் வந்தது. முதலிரண்டு நாட்கள் அமைதியாக போயின. தடி மாடு முருகேசன் என செல்லமாய் அழைக்கபடும் என் நண்பன் தான் வகுப்பில் தூங்கி பிரம்படியை முதலில் வாங்கினான். பிறகு வகுப்பில் நான்கைந்து மாணவர்கள் குறி வைக்கபட்டார்கள். அவர்கள் அனைவருக்குமே பாடத்தின் மேல் நாட்டமில்லாமல் இருந்தது. ஆனால் வகுப்பினுள் ஆசிரியை நுழையும் போதே அவர்களைத் தான் முதலில் எழுந்திருக்க வைத்து கேள்வி கேட்பார். சில மாதங்களிலே அவர்கள் போர்களத்தில் உணர்விழந்த வீரர்கள் போல பிரம்பினைக் கண்டு மிரளாமல் அடி வாங்கும் அளவு தேர்ச்சி பெற்று விட்டார்கள்.
பரிதாபத்திற்கு உரிய அந்த நான்கைந்து ஜீவன்கள் தவிர வகுப்பு மாணவர்கள் அனைவரும் அவ்வப்போது பிரம்பிற்கு உணவாகி கொண்டு தான் இருந்தோம். ஒரு முறை மாணவி ஒருத்தியை அவள் செய்த தவறிற்காக வகுப்பறையில் அவளது மேல்சட்டையை கழட்ட வைத்தார். ஒரு முறை வகுப்பு மாணவர்கள் அனைவரையும் மைதானத்தைப் பத்து முறை சுற்றி வர செய்து சிலரை வெயிலில் மயங்கி விழு செய்தார்.
பிரம்பு டீச்சரம்மாவை பற்றி நான் இரகசியமாக போலீசிற்கு கடிதங்கள் எழுத தொடங்கினேன். ஆனால் என் கடிதங்களை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. கடிதம் எழுதியவரின் பெயர் இல்லை என்பதால் உதாசீனபடுத்தியிருப்பார்கள் என தோன்றியது. டீச்சரே தன்னைப் பற்றி புகார் எழுதுவதாய் கடிதம் எழுதினேன். அந்த ரகசிய கடிதங்களைப் பற்றி அறிந்த மற்றொரு நண்பன் என்னை இதன் காரணமாய் பல காலமாய் பிளாக் மெயில் செய்து கொண்டிருந்தான்.
ஓரிரவு கனவில் பள்ளி மைதானத்தில் பிரம்பு டீச்சரை ஒரு ராட்சஸ கழுகு தூக்கி கொண்டு போய் விடுவதாக கனவு கண்டேன்.
ஒரு நாள் தடி மாடு முருகேசன் வீட்டு பாடம் எழுதாமல் வந்திருந்தான். ஆசிரியை கேள்வி கேட்கும் போது அவனது முகத்தில் பிரம்பைப் பற்றிய பயமே இல்லாமல் இருந்தது. அவனை முட்டி போட சொன்னார் ஆசிரியை. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என பிரம்படி தொடர்ந்தது. பல மணி நேரங்களாய் பூசை நடந்தாற் போல ஒரு பிரமை. முருகேசன் டவுசரில் மூத்திரம் போயிருந்தான். அவனது தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வர தொடங்கியிருந்தது. அன்று தான் நாங்கள் பிரம்பு டீச்சரம்மாவை கடைசியாக பார்த்தது.
சில மாதங்கள் கழித்து, பள்ளி சிஸ்டர்கள் இருவர் பிரம்பு டீச்சரம்மாவை பற்றி பேசி கொண்டிருப்பதை கேட்டேன்.
“ஒண்ணு நம்ம மாதிரி ஆகியிருக்கணும். இல்ல கல்யாணமாகி செட்டில் ஆகியிருக்கணும். இரண்டும் இல்லாம தெய்வ சேவைன்னு பொய் சொல்லி சுத்தியிட்டிருந்தா. நாப்பது வயசுல வயித்தை ரொப்பிட்டு வந்து இப்படி எல்லார் தலையிலும் இடியை போட்டுட்டாளே.”
Leave a Reply