மனிதர்கள் – போதையே வாழ்க்கை

லீமா அவனுடைய பெயர். மணிப்பூரைச் சேர்ந்தவன். என்னுடன் கல்லூரியில் படித்தவன். ஒரு பெரிய செல்வந்தர் குடும்பம் அவனுடையது. தாய் சிறு வயதிலே இறந்து விட்டாள். தந்தையின் நான்காவது மனைவியின் பெயர் கூட அவனுக்கு நினைவில்லை. மணிப்பூரில் அவனிருந்த பகுதியில் தினமும் கலவரம் நடக்கும் என்பதால் தொலைதூரத்தில் அவனைப் படிக்க அனுப்பியிருக்கிறார் அவனது தந்தை. மற்றொரு காரணம், இவனது அண்ணன் அங்கிருந்த ஒரு தீவிரவாத அமைப்பில் உறுப்பினர். இரண்டாவது மகனையும் அந்த வழியில் இழக்க அவர் விரும்பவில்லை.

லீமா யாரிடமும் அதிகமாய் பேச மாட்டான். நசுங்கிய மூக்கும் அந்நிய நிறமும் சென்னையில் அவனை இன்னும் அமைதியானவனாய் மாற்றி விட்டது. கல்லூரியில் சேர்ந்த ஓரிரு மாதங்களில் வேறு கல்லூரிகளில் படிக்கும் மணிப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் அவனுக்கு நட்பானார்கள். அவனைச் சந்திக்க அடிக்கடி வர தொடங்கினார்கள். கஞ்சாவும் சிகரெட்டும் மதுவும் தினசரி பழக்கங்களாயின.

லீமாவிற்கு போதையின் மீது மிகுந்த ஆர்வமிருந்தது. அவன் வீட்டிலிருந்து மாதமாதம் சிகரெட் பொடியும், சிகரெட் பேப்பரும் பார்சலில் வரும். கஞ்சா தவிர அவன் சில மாத்திரைகளைத் தொடர்ந்து உண்டு வந்தான். முதலில் தனக்கு ஒரு நோய் இருப்பதாக சொல்லி வந்தான். பிறகு அது கர்ப்பிணி பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் கொடுக்கப்படும் மாத்திரை என சொன்னான். அதனை நார்மலான சமயத்தில் உண்டால் மிகுந்த போதையாக இருக்கும் என சொல்லி கொண்டிருந்தான்.

லீமா அமைதியானவனாய் இருந்தாலும் அவனுக்கும் ஒரு காதலி இருந்தாள். அவள் மணிப்பூரில் இருப்பதாக சொன்னான். சில காலம் கழித்து அமெரிக்க போனதாக சொன்னான். பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்பே இல்லாமல் பிரிந்து போனதாக சொன்னான்.

விரைவிலே சிகரெட் பழக்கத்தை விட்டுவிடுவதாக சொல்லி விடும் ஆட்களை பார்த்திருக்கிறேன். போதை பழக்கம் மட்டும் இல்லையெனில் எப்போதோ செத்து போயிருப்பேன் என்று சொன்னான் லீமா. போதை தான் வாழ்க்கை, போதை தவிர தன் வாழ்க்கைக்கு வேறு எதுவும் அர்த்தம் சேர்ப்பதில்லை என பேசினான். கல்லூரி காலம் முடிவதற்கு முன்பே அடிக்கடி அவனுக்கு வலிப்பு வர தொடங்கியது. ஒரு நாள் கல்லூரி பின்புறம் செத்து கிடந்தான்.

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.