மனிதர்கள் – நான் கடவுள்

அவரது பெயர் சீனிவாசன். சீனா என்று சொன்னால் தான் பலருக்கு அவரைத் தெரியும். திரைக்கதை எழுதுவதில் திறமைசாலி. பல நிறுவனங்களில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கபட்டன. முழு திறமையையும் காட்ட வேண்டிய காலகட்டத்தில் திடீரென மனநிலை பிறழ்ந்து பைத்தியமாகி போனார்.

சீனா வட சென்னையில் ஒரு மனநல காப்பகத்தில் இருந்த போது தான் நான் அவரை முதன்முதலாக சந்தித்தேன். நண்பர்களுடன் வேறொரு பணிக்காக நாங்கள் அந்த மனநல காப்பகத்திற்கு சென்றிருந்தோம். அங்கே போகும் வழியில் நண்பர்கள் சீனாவைப் பற்றி தான் பேசி கொண்டு வந்தார்கள். அதனால் அவர் எப்படியிருப்பார் என்பது பற்றிய என் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

சென்னைக்கு வெளியே ஒரு கிராமம் போன்ற இடத்தில் அந்த மனநல காப்பகம் இருந்தது. அமைதியான இடம். காப்பகத்திற்கு நிதி வசதி குறைவாக இருந்ததினால் கட்டிடங்களோ அங்கிருந்த வசதிகளோ மிக சுமாராக இருந்தது. ஆண்களுக்கான தனியார் இலவச மனநல காப்பகங்கள் சென்னையில் மிகவும் குறைவு. அந்த வகையில் அந்தக் காப்பகத்தில் வசதிகள் இல்லையெனினும் அது இருப்பதே ஒரு சேவை தான்.

காப்பகத்திற்குள் நாங்கள் போன போது வெளியிலிருந்து இருவர் உள்ளே நுழைந்தார்கள். ஒருவர் டிப் டாப்பாய் வெள்ளை கறுப்பு உடையில் இருந்தார். இன்னொருவர் லுங்கி சட்டையில் இருந்தார். இருவர் கையிலும் பீடி இருந்தது. டிப் டாப்பாய் இருந்த இளைஞன் அங்கு கவுன்சிலிங் வேலையில் இருப்பவன். லுங்கி சட்டையில் இருந்தவர் தான் சீனா. நாற்பது வயதிருக்கலாம். நல்ல நிறமாய் இருந்தார். ஒரு மூக்கு கண்ணாடி. ஒல்லியாக இருந்தார். படபடக்கும் விழிகளுடன் ஓர் இளைஞனின் உற்சாகத்துடன் இருந்தார்.

சீனாவை அந்த இளைஞனுக்கு மிகவும் பிடித்து விட்டது போல. மிக உயர்வாய் பேசினான். நாங்கள் காப்பகத்தில் இருந்து கிளம்பும் வரை சீனாவிடம் மனநிலை குன்றியது போன்ற செய்கை எதையுமே நான் பார்க்கவில்லை. கிளம்பும் சமயம் அங்கிருந்த மற்ற நோயாளிகளுக்கு அவர் தனிபட்ட வகையில் எதையோ போதித்து கொண்டிருந்தார். தன்னால் கடவுளைக் காட்ட முடியுமென அவர் அவர்களிடம் சொன்னது என் காதில் விழுந்தது. சீனா தன்னை இந்தக் காப்பகத்தினைத் திருத்த வந்த ஆசிரியராக நினைத்து கொண்டிருப்பதாக அந்த இளைஞன் சொன்னான்.

மாதங்கள் உருண்டோடின. சீனா மனநிலை சரியாகி விட்டாரென சொன்னார்கள். அப்போது நான் பணிபுரிந்த நிறுவனத்திலே அவருக்கு ஒரு வேலை கொடுத்திருந்தார்கள். அதோடு அவர் மீது இரக்கப்பட்டு அங்கேயே தங்கவும் அனுமதித்திருந்தார்கள். இந்தச் சமயத்தில் தான் சீனா என்னுடன் பழக தொடங்கினார். அவர் தொடர்ந்து தன் கவிதைகளை எனக்கு வாசிக்க கொடுப்பார். இந்த வகையில் எங்கள் நட்பு வளர்ந்தது.

அந்த காலகட்டத்தில் நான் திருவல்லிகேணி மேன்சனில் தங்கியிருந்தேன். சீனாவும் அங்கு குடிபெயர்ந்து வந்தார். அவருக்கு தனியறை என தனியே வைக்க தான் விரும்பினேன். ஆனால் அவர் எனது மேன்சன் அறையில் தான் தங்கினார். மேன்சனில் மற்றவர்களுக்கு ஒரு தொல்லையாக இருந்து விடக்கூடாதே என்பது தான் என் கவலை. ஆனால் சீனா விரைவிலே மென்சனில் பலருக்கு நெருக்கமாகி விட்டார்.

அவருடன் பல ஊர்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன். எந்த இடத்தில் எது சிறப்பு என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. திருத்தணி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு காளி கோயில், திருவண்ணாமலையில் உள்ள ஒரு பிரபலமாகாத சாமியாரின் மடம், சென்னனயில் வால்மீகி நகர் கடற்கரை, மாம்பலத்தில் உள்ள ஒரு தஞ்சாவூர் மெஸ், திருவொற்றியூரில் உள்ள ஒரு உடுப்பி ஓட்டல் என அவரது கண்டுபிடிப்புகள் ஏராளம். தனது கற்பனை சக்தியைப் பற்றிய கர்வமுடையவர். ஆனால் பாவம் இன்றைய இலக்கிய உலக ஜே.ஜேக்களை அறியாதவராய் இருந்தார். அதனால் அவர் புகழ் பாடும் குழு அவரைச் சுற்றி இல்லை. ஆனால் தொலைக்காட்சி சீரியல் ஆட்கள் அவரைப் பற்றி பேசும் போது அவரது கற்பனை திறனை மிக உயர்வாய் பேசினார்கள்.

சீனாவிற்குத் திருமணமாகி விவாகரத்தும் ஆகியிருந்தது. குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் இதைப் பற்றி அவர் பேசியதே இல்லை. எங்கள் மேன்சன் காலகட்டத்தில் ஒரு நாள் அவர் தன் மனைவியைச் சந்தித்ததாகவும், குழந்தைகளின் எதிர்காலம் கருதி இருவரும் சில நிபந்தனைகளுடன் சேர்ந்து வாழ போவதாகவும் சொன்னார். சீனா என்கிற திரைக்கதை சுபமான முடிவினை நோக்கி போவதைப் பற்றி அப்போது மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால் என் சந்தோஷம் நிலைக்கவில்லை. மனைவியுடனான அவரது பேச்சு வார்த்தை முறிந்தது. ஏன் என்று அவர் சொல்லவில்லை. மீண்டும் மனநிலை தவறினார்.

மனநிலை தவறிய ஒரு நண்பருடன் மேன்சனில் வாழ்வது மிகவும் கஷ்டம். என் நண்பர்களின் உதவியுடன் கொஞ்ச காலத்தை ஓட்டினோம். அவர் முன்பிருந்த மனநிலை காப்பகத்தில் அவரை ஏற்று கொள்ள மறுத்து விட்டார்கள். முன்பு அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் ஓடி வந்து விட்டார் என்பது தான் காரணம். சென்னையில் இருக்கும் மனநல காப்பகங்களில் எல்லாம் முயற்சித்தோம். ஆண்களுக்கான மனநல காப்பகங்கள் மிக குறைவு. தான் மனநல காப்பகத்திற்குப் போவதில்லை என சீனா உறுதியாய் இருந்தார்.

சில சமயம் சீனா மாதக்கணக்கில் காணாமல் போவார். பிறகு திரும்ப வருவார். சினிமா, தொலைக்காட்சி நிறுவனங்கள் பலவற்றில் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களிடம் பணம் வாங்கி தன் அன்றாட செலவுகளைக் கவனித்து கொண்டார். மனநலம் தவறுகிறவர்கள் தங்களது உள் மன அழுக்குகளை வெளிபடையாக பேசும் அவலம் இருக்கிறது. சீனா தன்னை விட நல்ல எழுத்தாளன் இந்த உலகத்தில் இல்லை என பேசி கொண்டிருப்பார். சில சமயம் கடவுளின் தூதுவன் என்றும், ஒன்றிரண்டு முறை தானே கடவுள் என்றும் பிரகடனம் செய்தார்.

சீனாவை ஒரு முறை அண்ணா நகரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு நானும் நண்பர்களும் அழைத்து சென்றோம். உள்ளே வந்த சிறிது நேரத்திலே, “நானா இங்கே பைத்தியக்காரன், இந்த மருத்துவர்களை விட எனக்கு உளவியல் அதிகமாய் தெரியும்,” என சண்டை போட்டு விட்டு வெளியே சாலையை நோக்கி ஓடினார். நண்பர்களில் ஒருவர் அவரைத் துரத்தி கொண்டு ஓடினார். மற்றவர்கள் டீக்கடையில் நின்று விட்டோம். எங்கள் பொறுமை எல்லை கடந்து விட்டது. சீனா எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய சுமையாய் தெரிந்தார்.

அரை மணி நேரம் கழித்து சீனாவை துரத்தி கொண்டு ஓடிய நண்பர் டீக்கடைக்கு வந்தார்.

“சீனாவோட அண்ணன் வீடு இங்க தான் பக்கத்துல இருக்கு.” இது எனக்கு புது தகவல். சீனாவின் தாய், அண்ணன், அண்ணி எல்லாரும் ஒரு வசதியான பங்களாவில் அண்ணா நகரில் இருக்கிறார்கள் என நண்பர் சொன்னார்.

“அப்ப சீனா சேர வேண்டிய இடத்துல சேர்ந்திட்டார்,” என நப்பாசையில் நான் கேட்டேன். நண்பரின் முகத்தில் அவ்விதமான அறிகுறிகள் எதுவுமில்லை.

“அவங்களுக்குள்ள எதோ பெரிய பிரச்சனையிருக்கு. சீனா நேரா அந்த வீட்டுக்கு தான் போனாரு. வீட்டுல அவங்க அண்ணி தான் இருந்தாங்க. கேட்டை கூட திறக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.”

“நாம அவங்க அம்மாக்கிட்ட பேசி பார்ப்போம்,” என்றார் இன்னொரு நண்பர்.

“ம்கூம். அவங்க அம்மா அங்கிருந்தா இவரைப் பார்த்தவுடன் கதவை சாத்திட்டு உள்ளே போயிருப்பாங்கன்னு அவங்க அண்ணி சொன்னாங்க.”

“ஏன் அப்படி?” என்று கேட்டேன் நான். நண்பர் முகத்தில் களைப்பு தெரிந்தது.

“அவங்க சீனாவின் அம்மா பத்தி சொன்னது எனக்கு அது பொய் சொன்ன மாதிரி தெரியலை. இவருக்கு உடம்பு சரியில்ல. நீங்க தானே கவனிக்கணும்னு கேட்டேன். நீங்க ஏன் அத பத்தியெல்லாம் கவலைப்படறீங்க. தெருவில அவரை விட்டுட்டு போங்க. அவருக்கு பிழைச்சுக்க தெரியும்னு சொல்லிட்டு அந்தம்மா கதவை மூடிட்டு உள்ள போயிடுச்சு,” என்றார் நண்பர்.

“அப்ப சீனா எங்கே?” என்று கேட்டார் இன்னொரு நண்பர்.

“எங்க போயிட போறாரு? நம்மளைத் தேடி தான் வருவாரு,” என்று நண்பர் சொன்ன போது நான் தூரத்தில் சீனா எங்களை நோக்கி களைப்புடன் நடந்து வருவதைப் பார்த்தேன்.

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.