மனிதர்கள் – சினிமாவில் தொலைந்தவன்

ஒரு சினிமா படப்பிடிப்பு தளம். வழக்கம் போல எல்லாரும் பிசியாக இருக்கிறார்கள். ஓர் ஓரத்தில் சிவா நின்று கொண்டிருக்கிறான். நான்கு நாள் தாடி. மெலிந்த உருவம். ஒரு கோணத்தில் அந்தச் சினிமா டைரக்டரைப் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது போலவே இருக்கிறது. டைரக்டரின் கடைக்கண் பார்வைக்காக தான் சிவா நின்று கொண்டிருக்கிறான். அவரும் தினமும் அவனைப் பார்க்கிறார். பார்க்கிறார் என்பதை விட அவரது பார்வை அவனிருக்கும் திசையில் கடந்து போகும். அவன் எழுந்து பணிந்து ஒரு வணக்கம் வைப்பான். அதை அவர் பொருட்படுத்தவே மாட்டார். யாருமில்லாத சுவற்றைப் பார்த்தது போல அவரது ரியாக்ஷன் இருக்கும்.

அவன் நேற்று மதியம் கடைசியாக சாப்பிட்டது. பசியில் வயிறு எரிகிறது. தலை சுற்றல் வேறு.

சிவாவிற்கு சேலம் பக்கத்தில் ஒரு கிராமம் தான் சொந்த ஊர். சிறு வயதில் படிப்பு ஏறாமல் ஊர் சுற்றி கொண்டிருந்தான். அவனது கிராமத்தில் பரோட்டா கடை நடத்தும் தனசேகர் அவனுக்கு ஒரு வகையில் தூரத்து சொந்தம். தனசேகருக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது பல நாளாய் கனவு. இளமையில் சென்னையில் போய் தங்கி முயற்சித்து பார்த்தாராம். ஆனால் எதுவும் சரிப்படவில்லை. பிறகு ஊருக்கு திரும்பி திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகி பரோட்டா கடை நல்லபடியாய் ஓடி கொண்டிருந்தது. அப்போது தான் அவருக்கு நட்பானான் விகாஸ். விகாஸ் சென்னையில் திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக பணிபுரிகிறான். தனசேகரின் போட்டோவை வாங்கி கொண்டு சென்னைக்குத் திரும்பி போனான் விகாஸ்.

விகாஸ் ஊரை விட்டு சென்று மூன்று மாதங்களாகியும் அவனிடமிருந்தும் எந்த தகவலும் வரவில்லை. சரி டீ, பிராந்தி செலவிற்காக ஒரு நாள் முழுக்க நம்மோடு பேசி கொண்டிருந்தான் போல என தனசேகர் கடை வியாபாரத்தில் கவனம் செலுத்தினார். ஒரு நாள் தொலைபேசியில் விகாஸ் அழைத்தான்.

“அண்ணே. அடுத்த சத்யராஜ் படத்துல நீங்க தான் வில்லன். சத்யராஜ் சாரே ஓகே சொல்லிட்டாரு. உடனே கிளம்பி சென்னைக்கு வாங்க,” என சந்தோஷம் பொங்க விகாஸ் சொன்னதும் தனசேகருக்கு அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை. அங்கே போகிறார். இங்கே போகிறார். மகிழ்ச்சி செய்தியை வருபவர் போறவர்களிடம் எல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார். சிவாவைப் பார்த்து, ‘நீயும் என்னோட சென்னைக்கு வந்துடு,’ என கொக்கி போட்டு அழைக்கிறார்.

மூன்று நாள் கழித்து தனசேகரும் சிவாவும் சென்னைக்குப் போனார்கள். வடபழனியில் ஓர் ஒற்றை அறை குடியிருப்பில் உதவி இயக்குனர் விகாஸ் அவர்களை வரவேற்றான். அங்கேயே தங்கி கொள்ளும்படி பணித்தான். சத்யராஜ் சார் பிசியாக இருக்கிறார். சீக்கிரமே நேர்ல போய் பார்க்கலாம் என்று சொன்னான்.

நாட்கள் கழிந்தன. சத்யராஜ் சார் எப்போதுமே பிசியாகவே இருந்தார். அதனால் தனசேரும் சிவாவும் அந்த அறைக்குள்ளே அடைந்து கிடந்தார்கள். மாலை நேரமானால் உதவி இயக்குநர்கள் குழுவொன்று அங்கு வரும். அவர்கள் அனைவரும் வருங்கால இயக்குநர்களாயிற்றே. தனசேகர் தான் அனைவருக்கும் தினமும் மது, இரவு உணவு எல்லாவற்றிற்கும் செலவு செய்வார். அவர்கள் பேசும் சினிமா செய்திகளை இருவரும் வாய் பிளந்தபடி கேட்டு கொண்டிருப்பார்கள். பத்து நாட்களில் ஊரிலிருந்து எடுத்து வந்த பணம் அனைத்தும் காலியானது.

விகாஸ் அறைக்கு இரண்டு நாட்களாக வரவே இல்லை. தனசேகரும் சிவாவும் சாப்பிட்டிற்கே திண்டாட தொடங்கினார்கள். விகாஸின் நண்பன் ஒருவன் அப்போது அங்கு வந்தான். அவனும் ஓர் உதவி இயக்குநர் தான்.

“அவனை நம்பி ஏன் சார் இங்க வந்தீங்க. அவனே வேலை வெட்டி இல்லாம இருக்கான். அவன் எப்படி உங்களுக்கு வில்லன் ரோல் வாங்கி தருவான். ஊருக்கு கிளம்புற வழிய பாருங்க,” என அந்த உதவி இயக்குநர் இருவருக்கும் அறிவுரை சொன்னான்.

“ஊருல எல்லாருக்கும் சொல்லிட்டு வந்துட்டோம் தம்பி. இப்போ இப்படி ஏமாந்து போய் அவங்க முன்னாடி நிக்கறதை விட சென்னையில சாப்பாடு தண்ணியில்லாம செத்து போயிடலாம். கடன் வேற வாங்கிட்டு வந்துட்டேன். அத எப்படி அடைக்கிறதுன்னு தெரியலை. அந்த பய விகாஸை நேர்ல பார்த்து நாலு அடி போடாம வர மாட்டேன்,” என தனசேகர் சொன்னார். அவர் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலி தான் அவரை அப்படி பேச செய்தது. தங்க சங்கிலியை அடகு வைத்தார்கள்.

அவர்கள் தங்கியிருந்த அறையின் உரிமையாளர் வாடகை கேட்டு சண்டை போட்டார். இவர்களே இரண்டு மாத வாடகை பாக்கியை செட்டில் செய்தார்கள். விகாஸை தேடி தினமும் திரிந்தார்கள். அறிவுரை சொன்ன உதவி இயக்குநர், சங்கிலியை அடகு வைத்ததும் வீட்டிற்கு வந்து வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் உட்பட எல்லாருமே விகாஸின் நெட்வொர்க் தான் என மிக தாமதமாக புரிபட ஆரம்பித்தது.

பணம் காலியாவதற்கு முன் ஊருக்குப் போகலாம் என சிவா சொன்னான். மனைவியின் முகத்தில் இந்தத் தோல்வியோடு எப்படி முழிப்பது என்பதால் இன்னும் ஒரு நாள், இன்னும் ஒரு நாள் என தொடர்ந்து சொல்லி கொண்டே தனசேகர் நாட்களைக் கடத்தியபடி முழு பணத்தையும் அங்கேயே காலி செய்தார். இரண்டு நாட்களுக்கு மேல் பசி தாங்க முடியவில்லை. சிவாவின் தூரத்து சொந்தக்கார பையன் ஒருவன் வேளச்சேரியில் ஒரு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான். டிக்கட் எடுக்காமல் பஸ்ஸில் பயணம் செய்து அவனிடம் போய் விழுந்தார்கள். அவன் கொடுத்த பணத்தை வைத்து ஊருக்குத் திரும்பினார்கள். உயிரோடு திரும்பியதே அதிர்ஷ்டம் என மகிழ்ந்தார்கள்.

தனசேகருக்கு கடை சரியாக போகவில்லை. வேறொருவர் கடையில் பரோட்டா மாஸ்டராக இப்போது வேலை செய்கிறார். சிவா அவ்வப்போது சென்னைக்குப் போய் மாதக்கணக்கில் தங்குவான். நடிகனாக வேண்டும் என்கிற ஆசையை விட இப்போது இயக்குநராக வேண்டும் என்கிற ஆசை தான் பலமாக இருக்கிறது. வயித்துக்கு என்ன செய்ய? தனசேகர் மாதிரி சினிமா கனவில் சென்னைக்கு வரும் புது ஆட்கள் தான் இப்போது அவனுக்கு சோறு போடும் உத்தமர்கள். அவர்களை அவன் ஏமாற்றுவதாக நினைக்கவில்லை. தான் இயக்குநரானால் இவர்கள் எல்லாருக்கும் கட்டாயம் வாய்ப்பு கொடுக்க தானே போகிறான்.

நன்றி:

ஓவியம் – Matthew Askey

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.