மனிதர்கள் – கொலை செய்யப்பட்ட ரவுடி

ஒரு காலத்தில் பாண்டிச்சேரி பேருந்து நிலையம் அருகே உள்ள கண் டாக்டர் தோட்டம் என்கிற பகுதி பாலியல் தொழிலுக்கும் ரவுடித்தனத்திற்கும் பேர் பெற்ற பகுதியாக இருந்தது. இங்கே சில வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். என்னுடன் பணபுரியும் பாண்டிச்சேரி நிருபர் அங்குள்ள மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். சந்துரு என்ற 20 வயது இளைஞன் எனக்கு அறிமுகமானது இப்படி தான்.

சந்துருவின் மீது பல அடிதடி வழக்குகள், திருட்டு வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு என பல வழக்குகள் இருந்தன. அந்தப் பகுதி இளைஞர்கள் பெரும்பாலும் அடியாட்களாய் தான் இருந்தார்கள். சிறு வயதிலிருந்தே இந்தச் சூழலில் வளரும் இளைஞர்கள் மிக சிறிய வயதிலே ரவுடித்தனத்தில் ஈடுபட தொடங்கி விடுகிறார்கள். பாலியல் தொழில் தரகர்களாய் சிறுவர்கள் தான் ஈடுபடுத்தபடுகிறார்கள். பாண்டிச்சேரி பஸ் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள பார்களிலோ திரியும் வெளியூர் சபல கேஸ்களைச் சிறுவர்கள் தங்கள் ஏரியாவிற்குப் பேசி அழைத்து செல்கிறார்கள். அங்கே ஆசை வார்த்தைகளுக்கு முரணாக நிஜம் இருப்பதால் இந்தச் சபல கேஸ்கள் சண்டையிட தொடங்கும் போது இளைஞர்கள் உள்ளே நுழைந்து இரண்டு தட்டு தட்டி பிரச்சனையைச் சரி செய்வார்கள். சில சமயம் ஏரியாவிற்குள் வரும் சபல கேஸ்களைக் கண் மண் தெரியாமல் தாக்கி அவர்களது நகை பணத்தைக் கொள்ளையடித்து கொள்வதும் உண்டு. பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சபல புத்தியை நொந்து கொள்ள தான் முடியுமே தவிர காவல்துறையினரிடம் புகார் கொடுக்க முன் வர மாட்டார்கள். அப்படியே புகார் கொடுத்தாலும் பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்கபடாது. ஏனெனில் காவலர்கள் இந்த இளைஞர்களிடம் தொடர்ந்து மாமூல் வாங்கி கொண்டு தான் இருந்தார்கள்.

என்னுடன் இருந்த பாண்டிச்சேரி நிருபர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திலும் பணிபுரிந்து கொண்டிருந்தார். கண் டாக்டர் தோட்டத்து மனிதர்களின் வாழ்வை மேம்படுத்த அவரது களப்பணி சிறப்பாக இருந்தது. நான் முதன்முறையாக சந்தித்த போது சந்துரு துருதுருவென சுற்றி கொண்டு இருந்த இளைஞன். அவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவாகி விட்டதால் ஒரு பயத்துடன் இருந்தான். அவனது நண்பர்கள் அதிக பணத்தைச் சம்பாதிப்பது, அதை ஒரே இரவில் நட்சத்திர ஓட்டலில் சென்று வீணாக்குவது என பகட்டாய் வாழந்த போது சந்துரு பதுங்கி பதுங்கி வாழ்ந்து கொண்டிருந்தான். பாண்டிச்சேரி நண்பர், சந்துரு சரண்டைந்த பிறகு அவனது வழக்கிற்கான உதவியினை செய்வதாக உறுதியளித்து இருந்தார். எல்லாவற்றிற்கும் தலையாட்டிய சந்துரு சரண்டையும் நாளிற்கு முன் அங்கிருந்து காணாமல் போனான்.

சில மாதங்கள் கழித்து ஒரு நாள், பாண்டிச்சேரி நண்பர் என்னுடன் தொலைபேசியில் பேசும் போது சந்துரு திருந்தி வாழ நினைப்பதாகவும் அவனுடன் உள்ள நண்பர் குழாம் அவனை திருந்த அனுமதிக்கவில்லை என்றும் சொன்னார். அத்துடன் இதைப் பற்றி சந்துரு சென்னைக்கு வந்து எங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகம் மறைத்து பேட்டி கொடுக்க விரும்புவதாகவும் சொன்னார். அதன்படியே அந்த ஞாயிற்று கிழமை, அலுவலகத்தில் கூட்டம் குறைவாய் இருந்த போது சந்துருவின் பேட்டியைப் பதிவு செய்தோம். கேமராவிற்கு முன் அவனால் பெரிதாய் ஒன்றும் பேச முடியவில்லை. ஆனால் என்னால் வாழ முடியவில்லை, வாழ ஆசையிருக்கிறது என்பதை மட்டும் திரும்ப திரும்ப சொன்னான். அந்தப் பேட்டி பிறகு வேறு காரணங்களால் ஒளிபரப்பாகவில்லை.

சில மாதங்கள் கழித்து பாண்டிச்சேரி நண்பர் என்னை நேரில் சந்தித்த போது, சந்துரு தற்போது புதிதாய் ஒரு கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளியாக இருப்பதாகவும், தனது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டன என வருந்தினார். சந்துரு காவல்துறையினருக்கு மட்டும் பயந்து தலைமறைவாய் வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கவில்லை. ரௌடிகளுக்குள் தொழில் போட்டி காரணமாக அடிதடி கொலைகள் நடப்பது சாதாரணம் தானே. சந்துருவை குறி வைத்து அவனது பகையாளிகள் காத்திருந்தார்கள். காவல்துறையினர் லிஸ்டில் அவன் தேடப்படும் குற்றவாளி.

ஒன்றிரண்டு வருடங்கள் கழிந்தன. பாண்டிச்சேரி நிருபர் திடீரென ஓர் இரவு போன் செய்தார். சந்துருவைக் கொலை செஞ்சுட்டாங்க. பாடியை இப்ப தான் மீட்டு போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பியிருக்காங்க என வருத்தம் மேலிட பேசினார்.

கல்லூரியில் முதலாமண்டு படிக்கும் மாணவன் போல தான் அவனிருந்தான். நல்லது கெட்டது பற்றிய அறிவு வருகிற வயது அது. ஆனால் அந்த வயதிற்குள் தான் செய்த தவறுகளுக்காக தன் உயிரையும் இழந்து விட்டான்.

நன்றி:

ஓவியம் – Pablo Picasso

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.