தொடக்கப் புள்ளி

1999ம் வருடத்தின் பிற்பாதி.

அப்போது தான் கல்லூரி முடித்து, ஆறாம்திணை இணைய இதழில் வேலைக்கு சேர்ந்திருந்தேன். இணையத்தை பற்றிய பேச்சு உச்சமடைந்திருந்த நேரமது. சென்னை நகரத்தில் பல இணையதளங்கள் எல்லா முக்கிய சாலைகளிலும் பெரிய விளம்பர பேனர்கள் வைத்திருப்பார்கள்.

யாகூ குரூப்பில் கவிதைகள் பகிர்தலுக்கான ஓர் ஆங்கில குழுவில் இணைந்திருந்தேன். அந்த குழுவை தொடங்கியவர் ஒரு நாள் IMஇல் என்னை சந்தித்து, குழுவின் moderatorகளில் ஒருவராக என்னை சேர்த்தார். யாகூவில் கவிதைக்கான குழுக்களில் அதிக உறுப்பினர்கள் கொண்ட குழுக்களில் ஒன்று அது. அங்கு என்னுடைய சில கவிதைகளை ஆங்கிலத்தில் பதித்தேன். மற்றவர்களின் கவிதைகளுக்கு விமர்சனங்கள் எழுதினேன். சிலர் நட்பானார்கள்.

நாஸ்டாக் சரிந்தது. நான் பணியை விட்டு விலகினேன். அப்புறம் வாழ்க்கையில் போராட்டம். முதலில் வேலைக்கு போராட்டம். அப்புறம் வேலையை தக்க வைக்க போராட்டம். இதில் கவிதை மனம் தொலைந்தது. இணையத்திற்கு நேரமில்லாமல் போனது.

வருடங்கள் உருண்டோடின. எப்போதாவது அந்த யாகூ தளம் பக்கம் எட்டி பார்ப்பதுண்டு. இன்று நிதானமாய் அந்த தளத்திற்கு போனேன். வெறும் 262 உறுப்பினர்களே பட்டியலில் இருந்தார்கள். ஆனால் ஒருவர் கூட தளம் பக்கம் வருவதில்லை போல. ஒரே மாதத்தில் 1500 பதிவுகள் நடைபெற்ற இடத்தில் சில வருடங்களாகவே உருப்படியான ஒரு பதிவு கூட இல்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு நான் பதித்து சென்ற கவிதைக்கு ஒரு பதில் கூட இல்லை. Spam பதிவுகள் மிகுந்து கிடந்தன. குழுவை தொடக்கியவர் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் தானாய் பதித்து கொள்ளும் ஒரு பொது பதிவினை விட்டு சென்றிருக்கிறார். அந்த ஒரே பதிவு ஒவ்வொர்ரு செவ்வாய் கிழமையும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்கிறது.

பாழடைந்த பங்களாவினுள் நடந்து கொண்டிருப்பது போல ஒரு பிரமை. பலர் உலவிய அடையாளங்கள் இருக்கின்றன. எப்போதோ நடந்த சர்வர் கோளாறில், பதிவுகளுக்கான மறுமொழிகள் தனி தனியாய் பிரிந்து போய் விட்டன. அதனால் பல திரிகள் அர்த்தமற்ற திரிகளாய் தொங்கி கிடக்கின்றன. இணையம் தான் மிக சமீபத்திய தொழில்நுட்பம் என சொல்கிறார்கள். ஆனால் அதனுள்ளே ஒரு பாழடைந்த பங்களா உருவாகி விட்டதை கண்ட போது, இணையத்தினுள் கால சக்கரம் மிக வேகமாய் சுழன்று விடுகிறது என தோன்றியது.

என்னுடைய கவிதைகளை தேடினேன். கிடைத்தன. ஆனால் எதுவும் ‘இப்போதைய எனக்கு’ சொந்தமானதில்லை. சிலவற்றை எடுத்து கொண்டேன். மற்றவற்றை அங்கே இடிபாடுகளுடன் விட்டு வந்தேன்.

தளத்தை விட்டு வெளியே வந்த போது மனம் கனத்து விட்டது. தனியாய் ஒரு blogspot வனத்தில் அங்கிருந்து எடுத்து வந்த விதையை விதைத்து வைக்கிறேன். சுற்றும் முற்றும் பார்த்தால் யாருமில்லை. ஆனால் இந்த விதை மீண்டும் ஒரு தோட்டத்தை உருவாக்கும் என்கிற நம்பிக்கை மட்டும் மிகுந்திருக்கிறது!


Comments
4 responses to “தொடக்கப் புள்ளி”
 1. முத்துலெட்சுமி/muthuletchumi Avatar
  முத்துலெட்சுமி/muthuletchumi

  நம்பிக்கை தானே வாழ்க்கை.. பாழடைந்த பங்களாமாதிரின்னு சொன்னதும்.. கவிதை எல்லாம் வெள்ளைக்கலர் எழுத்துக்களாக அங்கங்க பறந்துகிட்டும், கீழே இலைச்சருகுகளாட்டமா மடித்துப்போன பேப்பருமா ய் கண்ணுக்கு முன்னால வந்துபோகுதுங்க.. :))

 2. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  இணையத்தின் தொடக்க காலத்தில் குழுமங்கள் தேவைப்பட்டன. தற்போது, அவற்றை விட பதிவுகள் கூடுதல் சுதந்திரத்தையும் வசதிகளையும் அளிக்கின்றன. நானும் பல யாகூ குழமங்களில் இருந்து அவை செயல் இழந்ததைக் கண்டிருக்கிறேன். நான் தொடங்கிய பல குழுமங்களையே கூட திரும்பிப் பார்க்கச் சோம்பி விட்டு விட்டேன். ஒன்றிற்கான தேவை, ஈர்ப்பு குறையும் போது செயல் இழப்பு யதார்த்தமே.//வார்த்தைகளுக்கான பொருளை தேடியிருக்கிறோம். ஆனால் பொருளுக்கான வார்த்தையை தேடியிருக்கிறீர்களா? அந்த தேடலே கவிதை என நினைப்பவனின் பக்கங்கள் இவை.//என்ற உங்கள் வரிகள் மிகவும் பிடித்து இருந்தது. செவ்வாய் தோறும் கவிதைகள் என்பது வித்தியாசமாக இருக்கிறது. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

 3. meenamuthu Avatar
  meenamuthu

  மனதை தொட்டது இந்த பதிவு! அன்று கோலாகலமாய் வலம் வந்த பல குழுமங்களின் நிலை இதுவே!நினைத்துப்பார்த்தால்!அன்று ஆனந்தம்!இன்று சுதந்திரம்!

 4. தமிழ்நதி Avatar
  தமிழ்நதி

  அந்தப் பாழடைந்த பங்களாவின் சுட்டியை முடிந்தால் தாருங்கள். போய்ப் பார்க்கிறேன். இடிபாடுகளில் இருக்கின்றன ஆயிரம் கதைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.