நான் மத அடிப்படைவாதி அல்ல. காருண்யத்தைப் போதிப்பவனும் இல்லை. இந்தியா ஜனநாயக பாதையில் மேலும் மேம்பட வேண்டும் என நினைப்பவன். எதிரிகளை அடித்து கொல்வதும், குற்றவாளிகளின் முதுகை உரிப்பதும், கழு ஏற்றுவதுமாய் இருந்த சமூகம் இன்று நீதிமன்றம், அரசமைப்பு சட்டம் என மாறி வந்து இருக்கிறது. அடுத்து நாம் பயணிக்க வேண்டிய திசை எது? மக்களின் நல்லாட்சி என்பது சிவில் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், மனித உரிமைகளை முன்னிறுத்துகிற ஆட்சியாகவும் இருக்க வேண்டும். உலகமெங்கும் பெரும்பாலான மனித உரிமை ஆர்வலர்கள் மரண தண்டனை ஒழிக்கபட வேண்டுமென குரல் எழுப்புபவர்களாகவே இருக்கிறார்கள்.
அஜ்மல் கசாப் கொடூரமான கொலைகளைச் செய்த தீவிரவாதி. ஒரு நாட்டின் மீது பயங்கரவாதத்தையும் அதன் விளைவாய் மக்களிடையே பெரும் பீதியையும் உருவாக்கிய அணியில் முக்கிய நபர். ஒன்பது பயங்கரவாதிகளுடன் சேர்ந்து மும்பையில் 166 பேரை கொன்ற சம்பவத்திற்குக் காரணமான நபர். கசாப் செய்த குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்திலே இப்போது தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பில், “இது அரிதினும் அரிதான குற்றம், மரண தண்டனை சரியானதே,” என சொல்லியிருக்கிறார்கள். 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொடூரமாக உறவை இழந்தவர்களில் பலர் கசாப்பை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என கருத்து சொல்லியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.கவும் இந்தத் தூக்கு தண்டனையை ஆதரிக்கிறார்கள். வழக்கமாக மரண தண்டனையை எதிர்த்து பேசுபவர்கள் கூட இந்த வழக்கில் குற்றத்தின் அதீத கொடூர தன்மையைப் பார்த்து மௌனம் சாதிக்கிறார்கள். குற்றம் சாட்டபட்டவர் கொடூரமானவராக இருப்பதினால் தூக்கு தண்டனையை ஆதரிக்க வேண்டுமென்று எதுவுமில்லை. மாறாக குற்றத்தின் தன்மை மிக கொடூரமாக இருக்கிற காரணத்தினாலே மரண தண்டனையை எதிர்க்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. கொடூரமான பயங்கரவாதி, குழந்தைகளைப் பலாத்காரபடுத்தி கொன்றவன் இப்படிபட்டவர்களுக்கும் கூட மரண தண்டனை தரக்கூடாது என சொல்வதில் தான் தொடங்குகிறது மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம். எத்தனை கொடூரமான குற்றவாளியாக இருந்தாலும் மரண தண்டனை என்பது கிடையாது என்பதே மனித உரிமைகளை முன்னெடுக்கும் சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும்.
மென்மையான அணுகுமுறை குற்றங்களை ஊக்குவிக்குமா?
இந்தியா மென்மையாக குற்றங்களை கையாள்கிறது, அதனாலே பல குற்றங்கள் முக்கியமாக பயங்கரவாத செயல்கள் பெருகுகின்றன என பலகாலமாய் சொல்கிற கூட்டம் இங்குண்டு. இந்தக் கருத்து இப்போது அதிகார மட்டத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துகிற அளவு வலுத்து இருக்கிறது. அதனாலே பற்பல விஷயங்களில் இனி இந்தக் குற்றத்திற்கு அதிக தண்டனை தரப்படும் என்பது ஒரு தீர்வாக முன் வைக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய தீர்வு பாமர மக்களை ஏமாற்றுவதற்கும் அப்போதைக்கு ஒரு தீர்வு உண்டானதாக பிம்பத்தை உருவாக்குவதற்குமே பயன்படும். என்னைப் பொறுத்த வரை தண்டனையின் அளவினைக் காட்டிலும் தவறிழைத்தால் கட்டாயமாக மாட்டி கொள்வோம் என்கிற பயத்தை உருவாக்குகிற அளவிற்கு வலுவான கண்காணிப்பு முறையே குற்றங்களைக் குறைக்கும். இல்லாவிட்டால் பத்தில் ஒருவர் தான் மாட்டுவார். அவரும் சில சமயம் பலி ஆடாக இருப்பார். பாலியல் பலாத்கார குற்றங்களுக்குத் தூக்கு தண்டனை என்கிற கருத்தாக்கம் சமீப காலமாக வலுத்து வருகிறது. மற்றொரு புறம் இந்தியா எங்கும் இன்றும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கபட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பது, அந்த வழக்குகளில் குற்றவாளிகளின் குற்றம் நிரூபிக்கபடுவது என்பது மிக குறைவாகவே இருக்கிறது என சொல்கிறது ஓர் அதிர்ச்சி புள்ளி விவரம். இங்கே தூக்கு தண்டனை முக்கியமா? நமது அமைப்புகளை மேம்படுத்துவது முக்கியமா? அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அமைப்புகளை வலுப்படுத்துவது என்பது பெரிய வேலை. தண்டனைகளைக் கடுமையாக மாற்றுவதென்பது எளிய வேலை.
கசாப்பிற்குக் கருணை காட்டினால் அது உணர்வுரீதியான பிரச்சனையாக மாற்றப்படும் என கவர்னரும் ஜனாதிபதியும் பயப்படக்கூடும். கருணை காட்டலாம் என்கிற மாதிரியான அணுகுமுறை மக்களிடையே தங்களுடைய பிம்பத்தைக் குறைத்து விடுமென அரசியல் கட்சிகள் பயப்படலாம். இந்தச் சூழலில் ‘இத்தனை கொடூரமான குற்றவாளிக்கும் மரண தண்டனை விதிக்கப்பட கூடாது,’ என அறிவு சூழலில் இயங்குபவர்கள் குரல் எழுப்ப வேண்டும். அதுவே தொலைநோக்கில் மரண தண்டனையை இந்திய தண்டனை சட்டத்தில் இருந்தே அதிகாரப்பூர்வமாக நீக்குவதற்கான முதல் படியாக அமையும்.
Leave a Reply