எங்களூர் நெடுஞ்சாலையில் எப்போதும் வாகனங்கள் நிறைந்திருக்கும். என்னுடைய சிறு வயதில் அந்த சாலையை கடப்பதை ஒரு கலையாக பாவித்து கற்று கொண்டேன். லாரிகளும் பஸ்களும் ஸ்கூட்டர்களும் ஓடி கொண்டிருக்கும் சாலையினை கடக்க ஒரு கணம் நிதானித்து, பிறகு சரியான சந்தர்ப்பத்தில் ஓட்டமும் நடையுமாக கைகளை முன்னால் நீட்டியபடி கடந்து விடுவேன். சாலையை கடக்க முடியாமல் நிற்கும் பெரிசுகளை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும். பள்ளிகாலம் முடிந்து கல்லூரியில் சேர்வதற்காக சென்னைக்கு வந்த போது இந்த கலை கைகொடுக்கவில்லை.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஒரு சிக்னலில், பச்சை விளக்கு எரியும் போதே சாலையை கடக்க முனைந்தேன். அர்ஜுனனின் அம்புகள் போல காவேரி பெருவெள்ளம் போல வாகனங்கள் என்னை அரவணைத்தபடி போனது. சுழலில் மூழ்கி விடுவோம்; இதோ விபத்திற்குள்ளாகி இறந்து விடுவோம் என தோன்றியது. முன்னாலும் போக முடியாமல் பின்னாலும் போக முடியாமல் நான் தவிப்பதை அங்கிருந்த டிராபிக் போலீஸ்காரர் முறைத்தபடி இருந்தார். ஒருவழியாய் தடுமாறி வந்த இடத்திற்கே திரும்பி போது சென்னை என்பது வேறு நிலப்பரப்பு என உறைத்தது.
காலையில் நூற்றுக்கணக்கில் மக்கள் சென்ட்ரல் ரயில் நிலையம் சப்வேயில் ஓட்டமும் நடையுமாக போகும் போது என் நண்பன், “இவங்க எல்லாம் எங்கடா போறாங்க? ஏன் இவ்வளவு அவசரமா போறாங்க? இவங்களை நிறுத்தி கேட்கனும்டா,” என்றான்.
சென்னை மக்களின் வாழ்க்கைமுறையில் என்னை எப்போதும் உறுத்தி கொண்டே இருப்பது அவர்களின் அவசரம் தான். குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்கள். எப்போதும் நிறைந்து கிடக்கும் சாலையில் ஒரு சந்து கிடைத்தாலும் இரண்டு வாகனங்களுக்கிடையே புகுந்து; முடிந்தால் பிளாட்பார்ம் மீது ஏறி, சிக்னல் பச்சையாக ஒளிர்வதற்கு முன்பே பாதி சாலையை கடந்து நிற்கும் அவசரம். நாற்பது ஐம்பது வாகனங்கள் கும்பலாய் சிக்னலை மீறுவதை கவனித்து இருக்கிறேன். டிராபிக் போலீஸ்காரர் சோர்ந்து போய் ஓரமாய் வேடிக்கை பார்த்தபடி இருப்பார். அல்லது இதற்கு சம்பந்தமே இல்லாமல் வேறொரு இடத்தில் நின்று யாராவது அப்பாவியை பிடித்து மாமூல் வசூலிக்க முனைந்திருப்பார்.
முதியவர்கள், குழந்தைகள் சாலையை கடப்பது சிரமம். சிக்னலையே மதிக்காதவர்கள் எப்படி சாலையின் குறுக்கே கடப்பவர்களுக்காக பிரேக் அடிப்பார்கள்? ஒட்டியபடி வளைந்து போவார்கள். அல்லது டென்சனாகி திட்டுவார்கள். சிக்னல் பச்சையான பிறகு தான் வண்டியை நகர்த்துவேன் என நீங்கள் அன்னா ஹசாரேத்தனம் செய்தால் வார்த்தைகளும் ஹாரன்களும் சூடாக அபிஷேகிக்கும்.
அவசரம். நிதானமின்மை. அலட்சியம். இதற்கெல்லாம் என்ன காரணம்? நான் அவர்களில் ஒன்றான பிறகு எனக்கு லேசாக புரிய தொடங்கி இருக்கிறது. சென்னையின் நிலப்பரப்பு பெரியது. அதோடு பத்து கிலோமீட்டரை டிராபிக் ஜாமில் கடக்க ஒரு மணி நேரம் கூட ஆகிவிடுகிறது. நகரத்தின் மைய பகுதிகள் அலுவலகங்களாகவும் புறநகர் பகுதிகள் அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்களின் வீடுகளுமாக இருக்கின்றன. ஒவ்வொருவரும் காலையிலும் மாலையிலும் மணிக்கணக்கில் பயணிக்க வேண்டியதிருக்கிறது. என்னுடைய கவிதைகளிலே எக்கசக்க ஹாரன் சத்தம், டிராபிக் ஜாம், ரோடு என வார்த்தைகள் இருப்பதை சமீபத்தில் யதேச்சையாக கவனித்து ஆச்சரியத்திற்கு உள்ளானேன்.
நகரத்தின் சாலைகள் தங்களுடைய அளவை தாண்டி தினமும் அளவிற்கு அதிகமான வாகனங்களை சுமந்து கொண்டிருக்கின்றன என்கிறது ஒரு சர்வே. வாகனங்களின் எண்ணிக்கை அச்சுறுத்தும் வேகத்தில் அதிகரித்து கொண்டிருக்கிறது. ஒரு வேளை மெட்ரோ ரயில் (மோனோ ரயில்?) வந்தால் இது எல்லாம் ஓரளவிற்கு சரியாகும் என்கிறார்கள். ஆனால் இந்த கட்டுமான பணிக்காக நகரமெங்கும் குழி தோண்டி இன்னும் டிராபிக் ஜாம்கள் அதிகமானது தான் மிச்சம்.
தினமும் காலையிலும் மாலையிலும் சாலையில் பயணிக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு பெரும்பகுதியினை இந்த பயணமே மென்று தின்று விடுகிறது என உணர்ந்திருக்கிறார்கள். நகரத்தின் சூட்சம கட்டங்களில் ஒளிந்திருக்கும் தங்களுடைய வாழ்க்கையினை தேடி அலையோ அலை என அவர்களது மனம் தேடியபடி இருக்கிறது. இந்த தேடலில் சிக்னலில் நிற்பதற்கும், பொறுத்து இருப்பதற்கும், நிதானிப்பதற்கும் நேரமும் இல்லை. பொறுமையும் இல்லை. நாட்கள் போக போக இது ஒரு பழக்கமாகி இதுவே வாழ்க்கையாகி போகிறது.
Leave a Reply