வெற்றியின் களிப்பு ஒரு போதை. தன்னை தானே மறக்க வைத்து, அதிகமான தேனை அருந்திய வண்டாக, மயக்கமாய் சுற்றி வர செய்கிற விஷயம்.
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் நாள். அமெரிக்க அதிபர் ட்ரூமென், ஜப்பான் தோல்வியை ஏற்று சரணடைந்ததை அடுத்து அன்று காலை ஏழு மணிக்கு அதிகாரப்பூர்வமாக இரண்டாம் உலக போர் முடிவிற்கு வந்ததை அறிவித்தார். போர் வெற்றி அமெரிக்கா நாடெங்கும் கொண்டாடபட்டது. நாடு ஜெயித்து விட்டதே என்கிற எண்ணம் ஒரு புறம். இனி இந்த போர் முடிவிற்கே வராதா என்று கடந்த ஏழு வருடங்களாய் உலகை உலுக்கி கொண்டிருந்த அசுர நிகழ்வு முடிந்து விட்ட மகிழ்ச்சி. படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் என எல்லாரும் அளவுகடந்த சந்தோஷத்தில் இருந்தனர்.
அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூ யார்க் நகரத்திலும் வெற்றி எல்லா இடங்களிலும் கொண்டாடபட்டு கொண்டிருந்தது. இராணுவ வீரர்கள் அளவிற்கு அதிகமாக மதுவை குடித்து விட்டு நகரமெங்கும் சுற்றி கொண்டிருந்தார்கள். ஆல்பிரட் எய்ஸ்டென்ட் என்கிற புகைப்படக்காரர் வீதிகளில் மிதக்கும் புகழ் போதையையும் அதன் விளைவாய் மக்கள் என்றுமில்லாமல் வித்தியாசமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருப்பதையும் புகைப்படமாக எடுத்தபடி இருந்தார்.
“[நியூ யார்க் நகரத்தின்] டைம்ஸ் ஸ்கோயரில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தேன். கடற்படையை சார்ந்த ஒரு மாலுமி சாலையில் முரட்டுதனமாய் ஓடி வந்து கொண்டிருப்பதை பார்த்தேன். கண்ணில் படுகிற அத்தனை பெண்களை அவன் இழுத்து முத்தமிட்டு கொண்டிருந்தான். வயதான பெண்ணா? ஒல்லியா? குண்டா? இதை பற்றி எல்லாம் எந்த அக்கறையும் இல்லாமல் அவன் தன் கண்ணில் படுகிற ஒவ்வொரு பெண்ணையும் அணைத்து முத்தமிட்டான். நான் அந்த காட்சியை புகைப்படம் எடுப்பதற்காக அவனுக்கு முன்னால் ஓடி கொண்டு இருந்தேன். ஆனால் சரியான சூழல் அமையவில்லை. ஒரு நொடி பொழுதில் வெள்ளையாய் எதோ அவனிடம் சிக்கியிருப்பதை கண்டேன். நான் உடனடியாக திரும்பி, அந்த மாலுமி ஒரு [இளம் நர்ஸ்] பெண்ணை முத்தமிட்ட அந்த நொடியை புகைப்படம் எடுத்தேன். அந்த பெண் கறுப்பான உடை அணிந்து இருந்திருந்தால் நான் அந்த காட்சியை புகைப்படமாய் எடுத்திருக்கவே மாட்டேன். அல்லது அந்த மாலுமி வெள்ளை உடை அணிந்திருந்தால் இந்த புகைப்படம் சாத்தியமாகி இருக்காது. நான் நான்கு புகைப்படங்கள் எடுத்தேன். ஒன்று தான் திருப்தியாக இருந்தது. மற்றவற்றில் மாலுமியின் உருவம் சரியானபடி பதிவாக இல்லை.” – புகைப்படக்காரர் ஆல்பிரட் எய்ஸ்டென்ட்
ஒரு வாரம் கழித்து லைப் பத்திரிக்கையில் இந்த புகைப்படம் வெளியானது. வெற்றி என பெயரிட்டு பிரத்யேக பனிரெண்டு பக்க புகைப்பட சிறப்பிதழில் வெளியான இந்த புகைப்படம் உடனே புகழ் பெற்றது. இந்த சிறப்பிதழில் இந்த புகைப்படத்துடன் மேலும் சில முத்தக்காட்சிகள் வெவ்வேறு நகரங்களில் வெற்றி கொண்டாடங்களின் போது எடுக்கபட்டவை பிரசுரிக்கபட்டு இருந்தன. அடுத்த நாளே நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் புகைப்படக்காரர் ஆல்பிரட் எய்ஸ்டென்ட் எடுத்த அதே காட்சியை இன்னொரு புகைப்படக்காரர் எடுக்க புகைப்படம் பிரசுரமானது. ஆனால் இந்த புகைப்படம் ஆல்பிரட் எய்ஸ்டென்ட்டின் படமளவு புகழ் பெறவில்லை. காரணம் இதில் வெளிச்சம் சற்று குறைவாக இருந்தது, அதோடு நியூ யார்க் டைம்ஸ் ஸ்கோயர் இதில் தெளிவாக இடம் பெறவில்லை. மாலுமியும் நர்ஸூம் முழுமையாக தெரியவில்லை.
ஆல்பிரட் எய்ஸ்டென்ட் எடுத்த இந்த புகைப்படம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது. 1995-ம் ஆண்டு அவர் இறக்கும் வரை அவர் புகழ் பெற்ற புகைப்படக்காராக கருதபட்டார். அவர் போகுமிடமெல்லாம் மக்கள் அவரிடம் இந்த புகைப்படத்தின் பிரதியில் அவரது கையெழுத்தை பெற்று கொண்டார்கள். பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த போது அவரையும் அவரது குடும்பத்தாரையும் பிரத்யேகமாக புகைப்படங்கள் எடுத்து கொடுக்குமளவு அவரது செல்வாக்கு உயர்ந்திருந்தது. தற்போது கொலம்பிய பல்கலைகழகம் இவரது பெயரில் சிறந்த பத்திரிக்கை புகைப்படங்களுக்கு விருது வழங்குகிறது.
சரி, புகழ் பெற்ற இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த மாலுமியும் நர்ஸும் யார்? ஆல்பிரட் எய்ஸ்டென்ட் அன்றைய அவசரத்தில் அவர்களை பற்றிய எந்த குறிப்பும் எடுத்திருக்கவில்லை. 1980-ம் ஆண்டு ஆல்பிரட் எய்ஸ்டென்ட்டை எடித் சைன் என்கிற பெண் தொடர்பு கொண்டார். படத்தில் இடம் பெற்றிருக்கும் நர்ஸ் நான் தான் என்றார்.
இதனையடுத்து லைப் பத்திரிக்கை 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் இதழில் இந்த புகைப்படத்தில் இருக்கும் மாலுமி தங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவித்தது. இதனை தொடர்ந்து இந்த புகைப்படத்தில் இடம் பெற்றது நாங்கள் தான் என சொல்லி மூன்று பெண்கள், பதினொரு ஆண்கள் வந்தார்கள். முதலில் வந்த எடித் சைன் தான் அந்த நர்ஸ் என பரவலாக நம்பப்படுகிறது. ஆண்களிடையே இந்த மாலுமி நான் தான் என அப்போது யாராலும் உறுதியாக நிருபிக்க முடியவில்லை. என்றாலும் 2007-ம் ஆண்டு கிளன் மெக்டப்பே என்கிற புது நபர் நான் தான் அந்த மாலுமி என அறிவித்தார். தடயவியல் அறிவியல் துறையில் உள்ள அறிஞர் ஒருவரும் கிளன் மெக்டப்பே தான் அந்த மாலுமியாக இருக்க வாய்ப்புண்டு என்று பலத்த நவீன தொழில்நுட்ப ஆய்விற்கு பின் அறிவித்தார்.
2007-ம் ஆண்டு நூற்றுக்கு மேற்பட்ட ஜோடிகள் ‘வெற்றி’யை நினைவுபடுத்த இந்த புகைப்படத்தில் இருந்த காட்சியை மீண்டும் ஒரு முறை நிஜமாக்கினார்கள்.
பல புத்தகங்கள், திரைப்படங்கள் என உலகப்புகழ் பெற்ற இந்த புகைப்படம் இன்றும் வெற்றியின் களிப்பை கவித்துவமாய் உணர்த்தியபடி இருக்கிறது.
Leave a Reply