இலங்கையில் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் இன்று நேற்றல்ல அது அரை நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் ஒரு கொடூரம். இலங்கை அரசாங்கமே தலைமை தாங்கி நடத்தும் இந்த கொடூரத்திற்கு லட்சக்கணக்கில் தமிழர்கள் மடிந்திருக்கிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் இந்த தமிழின ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உலகம் முழுவதும் தமிழர்கள் எதிர்ப்பு குரல்களும் கண்டனங்களும் பல காலமாக தெரிவித்து வருகிறார்கள். இந்த தமிழ் ஆதரவு போக்கில் ராஜீவ் காந்தி படுகொலை ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. விடுதலைபுலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யபட்ட அமைப்பாக அறிவிக்கபட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவில் விடுதலைபுலி ஆதரவாளர்கள் மட்டுமல்ல, ஈழத்து தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் பற்றி கண்டன குரல்கள் எழுப்புபவர்கள் கூட ஓரம் கட்டப்பட்டார்கள். இதற்கு காரணங்கள் இரண்டு.
காரணம் ஒன்று
இந்திய அரசாங்கத்திற்கு எப்போதுமே தமிழக பிரிவினையாளர்கள் மீது ஓர் எச்சரிக்கை உணர்வு உண்டு. பஞ்சாப் போலவோ காஷ்மீர் போலவோ தமிழகமும் தனி நாடு கோரிக்கை எழுப்பும் அபாயம் உண்டு என்பதால் உளவுத்துறை, பிரிவினைவாதிகளை அடையாளம் கண்டு பிஞ்சிலே களையும் முறையை கையாண்டு வந்தார்கள். விடுதலைபுலிகள் ஒரு வேளை தனி ஈழம் அமைத்தால், தமிழகத்திலும் தனிநாடு கோரிக்கை எழுலாம் என்கிற காரணத்தினால் இந்திய அரசாங்கம் ஈழத்து தமிழர்களுக்கு உதவுவதற்கு தயக்கம் காட்டியது. ராஜீவ் காந்தி படுகொலையை காரணம் காட்டி இந்த நிலைப்பாட்டை உறுதியாக்கி கொண்டது.
காரணம் இரண்டு
இந்திய அரசாங்கத்தின் உயர்ந்த பதவியில் இருப்பவர்களை பொறுத்த வரை இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் வேறு. இலங்கையில் இருக்கும் தமிழர்கள் வேறு. இலங்கையில் நடப்பது அவர்கள் உள்நாட்டு விவகாரம். இதில் நாம் ஏன் தலையிட்டு நமது கையை சுட்டு கொள்ள வேண்டும் என்கிற அலட்சியம். உதாரணமாய் சொல்ல வேண்டுமென்றால், பக்கத்து வீட்டில் குடிகார கணவன் தனது மனைவியை போட்டு அடிக்கிறான். தெரு முழுக்க கணவனின் வெறித்தனமான குரலும், மனைவியின் அழுகையும் நிரம்பி இருக்கும் போது எதிர் வீட்டு புருஷன் எதற்கு நமக்கு தேவையில்லாத வம்பு என தனது வீட்டு கதவை இறுக்க தாழிட்டு கொள்கிறான். நாம் பொருளாதார வளர்ச்சியை தான் கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர மனித உரிமை மீறல் பற்றியெல்லாம் கவலை தெரிவித்து நாட்டின் வளர்ச்சி பாதையை குறுக்கி கொள்ள கூடாது என்பதாக தான் சமீப காலங்களில் இந்திய அரசியல் நிலைபாடு இருந்திருக்கிறது.
சமீபத்திய தமிழின எழுச்சி
தமிழர்கள் இலங்கையில் கொல்லபட்ட போது தமிழகத்தில் நாம் சினிமா கிசுகிசுக்களை வாசித்து கொண்டிருந்தோம். ஈழத்து தமிழர்களை பற்றி பேசினாலே தடை செய்யபட்ட விடுதலைபுலிகளை ஆதரிப்பவன் என்கிற முத்திரை விழுந்து விடுமோ என்கிற கவலையில் பலர் இதனை பற்றி வெளிப்படையாக பேசுவதில்லை. ஊடகங்களில் ஈழத்து செய்திகள் தணிக்கை செய்யப்படாமலே தணிக்கை ஆயின.
ஆயிற்று! ஏறத்தாழ பதினைந்து வருடங்களுக்கு இந்த மறக்கடித்தல் நிலையும், மறைப்பு வேலையும் முழு வீச்சில் இருந்தது. அழுத்தபட்ட உணர்வு அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க பெரியளவு வெடிக்கும் என்பதற்கு உதாரணமாக சமீபத்திய நாட்களாக தமிழகம் ஈழத்து தமிழர்களுக்கு ஆதரவாக பெருங்குரலெடுத்து போராட தொடங்கி இருக்கிறது.
இலங்கை ராணுவம் பெரும்பலத்தோடு விடுதலைபுலிகளின் கடைசி புகலிடங்களையும் முற்றுகை இட்டிருப்பதாக செய்தி. விடுதலைபுலிகளை ஒழித்தே ஆக வேண்டுமென்கிற முயற்சியில் இராணுவம் தான் முன்னேறும் இடங்களில் உள்ள தமிழர்களை கொன்று குவிக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள். பொறுத்தது போதும் என தமிழக முதல்வரிலிருந்து அனைவரும் கொதித்து எழுந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இது தாமதான உணர்வு என்றாலும் தமிழகத்தில் பெரும்குரலெடுத்து கொதிக்கிறது ஆதரவு குரல்கள்.
தமிழனா? இந்தியனா?
99% தமிழர்கள் தாம் இந்தியர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லாதவர்கள். தமிழர்கள் இந்தியாவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இந்திய அரசாங்கம் தமிழர்கள் மீது வைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.
இந்திய அரசாங்கம் நினைத்தால் 24 மணி நேரத்தில் ஈழத்து பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றார் தொல்.திருமாவளவன். அது பொய்யல்ல. ஆனால் எது இந்திய அரசாங்கத்தினை தடுக்கிறது? வேறொரு நாட்டின் மீது படையெடுப்பது இன்றைய ஐ.நா விதிமுறைகளை மீறிய செயல் என்பதால் இந்திய அரசாங்கம் பொறுமை காக்கிறது. இதுவே ஆயிரக்கணக்கான இந்திக்காரர்கள் வேற்று நாட்டில் இப்படி கொல்லபட்டால் இந்திய அரசாங்கம் இதே அமைதியை தான் கடைபிடிக்குமா?
இன்றைய தமிழக சூழலில் தனி நாடு பிரிவினைகளை பற்றி யாரும் யோசிக்க போவதில்லை. ஆனால் மத்திய அரசாங்கத்தின் தொடர் அலட்சிய போக்கு நீடிக்க கூடாது என்பதில் எல்லாரும் உறுதியாக இருக்கிறார்கள். தமிழனாக இருந்தாலும், இந்தியனாக இருந்தாலும், ஏன் சிங்களவனாக இருந்தாலும் மனிதனாக இருப்பதே இன்றைய தேவை. ஏனெனில் மனிதனாய் இருப்பவன் மனித உரிமை மீறல்களை கட்டாயம் தட்டி கேட்பான். அது எந்த இனம் எந்த இனத்தின் மீது செய்தாலும் சரி.
Leave a Reply