கடந்த ஞாயிற்று கிழமை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது அரசியல் பிரவேசத்தை முறைப்படி அறிவித்தார். சில மாதங்களாகவே ஆந்திராவில் எதிர்பார்க்கபட்ட விஷயம் என்றாலும், சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் பலவிதமான எதிர்பார்ப்புகளை தூண்டியிருக்கிறது. அடுத்த தேர்தலிலே முதலமைச்சர் ஆகுமளவு அவரது புகழ் இல்லையென்றாலும் தேர்தல் முடிவுகளில் அவரால் ஓரளவு தாக்கத்தை உண்டு செய்ய இயலும் என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை.
சிரஞ்சீவி எதற்காக அரசியலில் பிரவேசிக்கிறார்?
மக்களுக்கு சேவை செய்வதற்காக தான் அரசியலில் நுழைவதாக சிரஞ்சீவி சொல்லியிருக்கிறார். மேலும் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது தன்னால் ஆந்திர அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை கொண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
சிரஞ்சீவியை கவனித்து வரும் சிலருக்கு சிரஞ்சீவியின் அரசியல் ஆசைக்கு ஜோதிடமும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் அறிவார்கள். நடிகர் சிரஞ்சீவிக்கு பல காலமாகவே கணிதம் மற்றும் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உண்டு. அரசியல் கட்சி தொடங்கும் திட்டம் உருவான பிறகு அவர் மக்களது பிரச்சனைகளுக்காக நேரம் ஒதுக்கியதை விட ராமேஸ்வரத்தில், திருப்பதியில் ஹோமம், யாகம் என்று தான் அதிக நேரம் ஒதுக்கியிருக்கிறார் என சொல்கிறார்கள் விமர்சகர்கள்.
சிரஞ்சீவியின் ஜாதகத்தின்படி என்னென்ன யாகங்களை நடத்தினால் அவருக்கு ராஜ யோகம் கிட்டும் (முதலமைச்சர் பதவி தாங்க!) என ஜோதிடர்கள் பட்டியலிட்டு கொடுத்து இருக்கிறார்கள் போலும்.
வருகிற 21, 22 தேதிகளில் சிரஞ்சீவி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் ஒன்று நடத்தவுள்ளார். சண்டி ஹோமம் என்று இந்த யாகத்திற்கு பெயர். இதனை நடத்துபவருக்கு ராஜ யோகம் வாய்க்கும் என்பது நம்பிக்கை. 50 பூசாரிகள் நடத்த போகிற இந்த பிரம்மாண்ட யாகம் அவசியமான ஒன்று தானா என்று நாம் கேளவி கேட்பதற்கு முன் இன்னொரு கூடுதல் தகவல். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் இதே போன்ற சண்டி ஹோமம் நடத்தியிருப்பவர்கள் பெயர்கள் இதோ. முன்னாள் பிரதமர் வாஜ்பேய், பிரதமர் கனவில் இருக்கும் அத்வானி மற்றும் கம்ப்யூட்டர் இந்தியாவினை உருவாக்க முனைந்தவர் என புகழப்படுகிற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.
Leave a Reply