மனிதர்கள் – நாத்திகன்

அவனை எனக்கு முதலில் அடையாளமே தெரியவில்லை. தாடியும் சிவந்த கண்களும் அழுக்கேறிய வெள்ளைச் சட்டையும் அவனை வேறு யார் போலவோ எனக்குக் காட்டியது. அவன் ஜியாவுதீன். அவனிடம் நெருங்கி பழகியதில்லை என்றாலும் முந்தைய மூன்று சந்திப்புகளுமே போதும் அவனை நான் மறக்காமல் இருக்க. அப்படி ஒரு வித்தியாசமான குணாதிசயமுடையவனாக இருந்தான். சில வருடங்களுக்கு முன்பு ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தான் அவனைச் சந்தித்தேன். என் நண்பன் ஒருவன் அவனைப் பற்றி மிக உயர்வாக சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தான்.

சிவந்த நிறம். போலீஸ் போல கிராப். துறுதுறுவென சுறுசுறுப்பு. சத்தமாய் பேசும் பாங்கு. அவன் அப்போது ஓர் இளம் கம்யூனிஸ்ட். பொதுவான அந்தச் சந்திப்பிற்கு பிறகு சில நாட்களிலே ஒரு புத்தக அறிமுக விழா கூட்டத்தில் மீண்டும் சந்தித்தோம். சில சம்பிரதாய் பேச்சுகளுக்குப் பிறகு அவனுடைய குடும்பம் பற்றி பேச்சு மாறியது.

“எங்க வீட்ல இப்போ என்னை நாத்திகன்னு திட்டுறாங்க. ஒரு முஸ்லீம் பையன் இப்படிக் கெட்டு போகலாமா அப்படின்னு கவலைப்படறாங்க.”

குடும்பத்தைப் பற்றி அபூர்வமாய் சொன்னது தவிர அவனது பேச்சில் மற்றதெல்லாம் கொள்கைகள் பற்றி தான். பேச்சில் அறிவுமிடுக்கு இருந்தது. கம்யூனிச சிந்தாந்தத்தின் மீது மிகுந்த ஆவலுடன் நிறைய புத்தகங்களைத் தேடி தேடி படித்து கொண்டு இருக்கிறான் என புரிந்தது. நான்கு பேர் நிற்கும் இடத்தில் அவன் பேசுகிற பாணியே தனிதன்மையானது. குரலை உயர்த்தி பேசுவான். சட்டென கோபப்படுவான். கட்டி கொள்வான். அழுவான். உணர்வுகளை ஒளிக்காமல் வெளிப்படுத்தும் அவனிடம் புதுசாய் அறிமுகமாகிறவர்கள் சற்று மிரண்டு தான் போவார்கள். ஆனால் தன்னுடைய கொள்கைகளுக்கு விரோதமான விவாதம் என்றால் முதலிலே எதாவது திட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவான். அவனிடம் பொறுமையாக சற்று பணிந்து நின்றால் தான் அவனுடைய உரையினை முழுமையாக கேட்க இயலும். சுற்றியிருப்பவர்கள் அமைதியாக அவனைப் பேச்சை செவிமடுக்கிறார்கள் என்றால் நீண்ட உரையாற்றி விடுவான். அவனுடைய வித்தியாசமான குணாதிசயம் காரணமாகவே மூன்று சந்திப்புகளுமே எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது.

நடுவில் பல வருடங்கள் உருண்டோடின. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜியாவுதீனைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டிய போது அவனது உருவ மாற்றத்தினைக் கண்டு அதிர்ச்சியானேன். இப்போது அவனுடைய ஆவேசம் தணிந்து இருந்தது. மற்றவர்கள் பேச்சினைக் கண்களைச் சுருக்கி கேட்டு கொண்டிருக்க பழகியிருக்கிறான். கம்யூனிச கொள்கையினைக் கைவிட்டு முழு முஸ்லீமாக மாறியிருந்தான். ஏன் அப்படி என்று நான் அவனிடம் கேட்கவில்லை. அவனாகவே பேசுவான் என்று காத்திருந்தால் அவன் முன் போல வெடித்து பேசுபவனாக இல்லை. நான் அப்போது தங்கியிருந்த இடமும் அவனது வீடும் ஒரே பகுதியில் இருக்கின்றன என அறிந்தேன். சந்திப்புகள் தொடர்ந்தன.

மதத்தின் மீது இப்போது தீராத பற்று கொண்டிருந்தான். மதம் சம்பந்தப்பட்ட பல புத்தகங்களைப் படிப்பதோடு மட்டுமல்லாமல் இணையத்தில் மதப் பிரச்சாரத்திற்கான ஒரு தளத்தில் அவ்வபோது சேவையாற்றி கொண்டிருந்தான். என்னைப் பற்றி அவன் அறிந்திருந்தப்படியால் நாங்கள் பேசிய பெரும்பாலான நேரம் அவன் தனது மதம் எப்படி அறிவியலோடு ஒத்து போகிறது என்பதையே விளக்கி கொண்டு இருந்தான். பல தகவல்கள் ஆச்சரியமூட்டின. நாங்கள் பழகிய அந்தக் குறுகிய காலக்கட்டத்தில் அவன் ஜெர்மனிய நாஜி படைகள் பற்றிய வரலாற்றினைத் தேடி தேடி படித்து கொண்டு இருந்தான். இந்தச் சரித்திரம் தவறாக எழுதப்பட்டு இருக்கலாம், இரண்டாம் உலகப் போரில் தோற்றதால் தான் ஹிட்லர் கொடுங்கோலானாய் சித்தரிக்கப்படுகிறான் என்பது அவனுடைய வாதம். ஒருவேளை போரில் வென்றிருந்தால் உண்மை சரித்திரம் வேறுவிதமாய் இருந்திருக்கும் என சொன்னான்.

ஒரு நாள் அவனுடைய வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவனது குடும்பத்தினர் நான் நினைத்தது போலவே இல்லை. அவர்கள் செல்வசெழிப்புடன் தான் இருந்தார்கள். நகரத்தின் நெரிசலான தெருவில் கிராமத்தில் இருந்து இப்போது தான் வந்தவர்கள் போல நன்றாக பழகினார்கள். கூட்டுக்குடும்பம்; நிறைய பேர் அவன் வீட்டில். பழைய தினசரிகளும் தூசும் பத்திரிக்கைகளும் புத்தகங்களும் ஒரு பழைய கம்யூட்டரும் இருந்த அவனது அறையினைப் பார்த்தாலே அவன் தன்னை எப்படி சுருக்கி கொண்டு விட்டான் என ஆச்சரியமாய் இருந்தது.

“எப்ப பார்த்தாலும் புஸ்தகமும் கையுமா இருக்கான். வயசு பையன் இப்படியா இருக்கணும்? நீங்களாவது சொல்ல கூடாதா?” என்றாள் அவனது தாய்.

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.