சமீபத்தில் நண்பர் சந்தானமூர்த்தி மூலமாக அ.மார்க்ஸ் மற்றும் 17 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் பரமக்குடி வன்முறை தொடர்பான அறிக்கை வாசிக்க கிடைத்தது. துப்பாக்கிச்சூடு மாதிரியான அதீத நடவடிக்கைக்கு முன் தயாரிப்போடு தான் காவல்துறையினர் சம்பவத்தன்று வந்திருந்தார்கள் என குற்றம் சாட்டுகிறது அறிக்கை. சாதிய மனநிலை எப்படியெல்லாம் எல்லா மட்டங்களிலும் ஊடூருவி இருக்கிறது என்பதையும் அது தலித் மக்களுக்கு எதிரான சாதிவெறி இயக்கத்தை எப்படி உருவாக்குகிறது என்பதையும் இந்த அறிக்கையை வாசித்தால் புரிந்து கொள்ளலாம் … மேலும் முழு அறிக்கையை வாசிக்க
அந்த அறிக்கையின் மைய நோக்கத்தை தவிர்த்த வேறு இரண்டு விஷயங்கள் எதோ என் கவனத்தை ஈர்த்து கொண்டே இருந்தன.
பள்ளிக்கூடங்களில் சாதி
மண்டல மாணிக்கம் தேவர் சாதி ஆதிக்கம் உச்சமாக உள்ள ஒரு ஊர். இதன் காரணமகவே இந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயில்கிற தேவேந்திரர் குலப் பிள்ளைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்கின்றனர். 2010-11 கல்வியாண்டில் மண்டல மாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 28 தலித் பிள்ளைகளில் இவ்வாண்டு 23 பேர் இவ்வாறு டி.சி. பெற்றுச் சென்றுள்ளனர். – அறிக்கை
ஆழ்மனதில் இருக்கும் சாதிய மனநிலை எங்கு இருந்து உருவாகிறது? எல்லா பாடப்புத்தகங்களிலும் முதல் பக்கத்தில் தீண்டாமை எதிர்த்து பிரச்சாரம் இருப்பது மட்டும் போதாது என்பது தான் நாம் அறிய வேண்டியது. பல கிராமங்களில் பள்ளிக்கூடங்களில் தலித் மாணவர்கள் ஒதுக்கபடுவது, வித்தியாசமாக நடத்தபடுவது அல்லது துரத்தபடுவது இன்றும் நடக்கிறது. கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களிலும் சாதியை பற்றிய அறிவுறுத்தல் பிள்ளைபருவத்திலே தொடங்கி விடுகிறது. ‘அவர்கள்’ vs ‘இவர்கள்’ மனநிலை மேலோங்குகிறது. அதுவும் ஏற்கெனவே சாதி பிரச்சனைகள் அதிகமாக இருக்குமிடத்தில் பத்து வயது சிறுவன் கூட தன் சாதி பற்றிய பிடிப்போடு அல்லது தாழ்வு மனப்பான்மையோடு இருப்பதை காண முடியும். மாணவர்கள் அனைவரும் சாதி பற்றியும் அதன் படிநிலை பற்றியும் தங்கள் சாதி எந்த படிநிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள்.
பாடப் புத்தகங்கள் சாதி பிரச்சனையை பற்றி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. இன்றும் சாதி என்பது எப்படி கொழுந்து விட்டு எரியும் சமூக பிரச்சனையாக இருக்கிறது என்பதை அரசாங்கம், அதிகார மையங்கள், ஊடங்கங்கள் எல்லாம் ஒப்பு கொள்வதில்லை; அவற்றை மறைக்கவே செய்கின்றன. ஒரு பிரச்சனைக்கான தீர்வின் முதல் படி அந்த பிரச்சனையை பிரச்சனை என ஒப்பு கொள்வதில் தான் தொடங்குகிறது.
வாகனத்தை கண்டால் பயந்து ஓடும் மக்கள்
சுமார் 10 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாரை வேண்டுமானாலும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யத்தக்கதாக இந்த முதல் தகவல் அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. 1500 பேருக்கு மேல் கைது செய்ய இருப்பதாக காவல் துறை திட்டமிட்டுச் செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஊட்டுகிறது. தவிரவும், அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று பேருந்து முதலிய பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்காக கைது செய்ய ஆட்களைக் கொடுங்கள் எனவும் காவல் துறையினர் மிரட்டுகின்றனர். பரளை என்ற கிராமத்திலிருந்து வந்த நாகவல்லி, ரேணுகாதேவி உள்ளிட்ட பெண்கள் செப்டம்பர் 18ம் தேதியன்று ஒரு போலிஸ் வேனில் வந்த காவல் துறையினர் இவ்வாறு மிரட்டியதை எம்மிடம் குறிப்பிட்டனர். தவிரவும், சாதாரண உடையில் வந்த போலிசார் சீருடையில் இருந்த போலிசாரை நோக்கிக் கற்களை வீசித்தாக்குவது போல பாவனை செய்து வீடியோ படம் எடுத்ததாகவும் எம்மிடம் குறிப்பிட்டனர். நயினார்கோயில், பரமக்குடி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் இரவில் ஆண்கள் பயந்து வீட்டில் தங்காத நிலை இன்று உள்ளது. எஸ்.காவனூர் என்கிற ஊரில் இருந்த அடிப்பட்ட ஒருவரைக் காண இரவு 8 மணி வாக்கில் நாங்கள் வாகனங்களில் சென்றதைக் கண்ட அக்கிராமத்திலுள்ள அத்தனை ஆண்களும், வருவது காவல்துறையோ என அஞ்சி ஓடியதை நாங்கள் நேரில் கண்டோம். – அறிக்கை
ஈழத்தில் நடந்த போர் குற்றங்கள், எகிப்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த மக்கள் எழுச்சிக்கு அடுத்து அவற்றை கட்டுக்கு கொண்டு வர நடத்தபட்ட அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள், இப்போது பரமக்குடி சம்பவம், வாச்சாத்தி தீர்ப்பு இவை எல்லாவற்றையும் கதைகளாக பாவித்தோ, இவை நடக்கவே இல்லை என உதறி விடவோ, இவை நடந்தது தெரியாது என மறந்து விடவோ தான் மனம் எப்போதும் விரும்புகிறது. ஆனால் ரத்தமும் சதையுமாக அங்கே வன்முறையால் பாதிக்கபட்டவர்கள் எப்படி துன்பப்படுகிறார்கள் என்பதை கேள்விபடும்போது வேதனையாக தான் இருக்கிறது. இவை வெளியுலகம் அறிந்து கொள்ள வேண்டியது. ஊடகங்கள், அதிகார மையங்கள், அரசாங்கம் இவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். குற்றத்தில் ஈடுபடும் காவல்துறையினரையும் அதிகாரிகளையும் மற்றவர்களையும் சட்டம் தண்டிக்க வேண்டும்.
Leave a Reply