உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு நிகராக நடந்து கொண்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கு நிகராக பணம் விளையாடுகிறது. அன்பளிப்புகளுக்கும் பஞ்சமில்லை. அதிமுக, திமுக, ஏனைய அரசியல் கட்சிகள் இந்த உள்ளாட்சி தேர்தலை மிக முக்கியமாக பார்ப்பதால் அவர்களின் பிரச்சாரங்கள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. அதை ஒப்பிட்டு பார்க்கும் போது சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் நிலை பரிதாபமாக இருக்கிறது.
அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலை ஆக்ரமித்து கொள்வதால் வேட்பாளர்கள் தேர்தலில் ஜெயித்தபிறகு கட்சிகளுக்கு உண்மையான ஆட்களாக இருப்பார்களே அன்றி தங்கள் பகுதி மக்களுக்கு உண்மையானவர்களாக இருக்க வாய்ப்பில்லாமல் போகும். (மேலும் வாசிக்க; உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்)
அரசியல் சின்னங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் தடை விதிக்க முடியாத நிலை இருப்பின், உடனடியாக அடுத்த தேர்தலுக்குள் செய்யபட வேண்டிய விஷயம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவுகளை அரசாங்கமே ஏற்று கொள்ள வேண்டியது. இது எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்தலுக்கும் யோசிக்கபடுகிற ஆலோசனையாக இருந்தாலும் அங்கே இது செல்லுபடியாகாமல் போவதற்கு காரணங்கள் உண்டு.
மக்கள் பெரிய பிராண்டுகளை விரும்பும் நுகர்வோர் கலாச்சாரத்திற்கு பழகி விட்டார்கள். கோக், பெப்சி அல்லது விளம்பரங்களில் அடிக்கடி தோன்றும் பிராண்டுகளை உபயோகப்படுத்துவது தங்களது அந்தஸ்தினை பிரதிபலிப்பதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது அதிமுக vs திமுக தான் கண்களில் தெரியும். தங்களது பகுதிக்கு தகுதியான வேட்பாளர் யார் என்று அவர்கள் யோசிப்பதை விட இந்த தேர்தலில் அதிமுக ஜெயிக்குமா? அல்லது திமுக ஜெயிக்குமா? என்றே யோசிப்பார்கள். அப்படியிருக்க அந்த பிராண்டு தகுதியை காப்பாற்றி கொள்ள பெரிய கட்சிகள் ஆடம்பர செலவுகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்த கட்டாயம் நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் பிரதிபலிப்பதை கூட ஓரளவு சகித்து கொள்ளலாம் ஆனால் இது உள்ளாட்சியிலும் தொடர்வது தான் வேதனை.
அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தை மட்டுபடுத்தி எல்லா வேட்பாளர்களுக்கும் சமமான ஆடுகளத்தை நிறுவி தர வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த சூழலுக்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அது உள்ளாட்சியில் போட்டியிடும் பலரும் குற்ற பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது. படித்தவர்களோ அல்லது சமூக சேவகர்களோ ஒதுங்கி கொள்ள ஒரு காலத்தில் சாராயம் காய்ச்சி தங்கள் பகுதியில் வளர்ந்தவர்கள், சட்டபுறம்பான வியாபாரம் செய்பவர்கள் இப்படியான ஆட்கள் சுயேட்சையாக அல்லது அதிர்ஷ்டமிருந்தால் பெரிய கட்சி வேட்பாளர்களாக போட்டியிடுவதை பார்க்க முடிகிறது. இவர்களிடம் பணம் கொட்டி கிடப்பதால் இவர்களது பிரச்சாரத்தில் பணம் ஆறாய் ஓடுகிறது.
எல்லா வேட்பாளர்களுக்கு இடையே சமமான ஆடுகளத்தை உருவாக்க உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களது அனைத்து தேர்தல் செலவுகளையும் அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும். முடிந்தால் தனிதனியான பிரச்சாரம் என்கிற நிலையை கூட மாற்றி விட்டு ஒரே மேடையில் அனைத்து வேட்பாளர்களுக்கும் பேச அனுமதி, ஒரே நோட்டீஸில் அனைத்து வேட்பாளர்களை பற்றிய குறிப்புகள், இணையத்தில் வேட்பாளர்களை ஒப்பிட்டு நோக்கும் அளவு தகவல்கள் என பிரச்சாரத்தை கூட எளிமைபடுத்தி விடலாம் அல்லது பிரச்சாரத்திற்கே தடை விதித்து விட்டு தேர்தல் பூத்தில் வேட்பாளர் பற்றிய விவரங்களை ஒட்டி வைத்து/ஆடியோவில் பதிவு செய்து வைத்து விடலாம்.
Leave a Reply