எங்கள் தெருவிற்குள் நுழைவதற்கு அந்த மதுக்கடையை தாண்டி தான் வந்தாக வேண்டும். இரவு எட்டு மணிக்கு மேலே மதுக்கடையை சுற்றி கும்பலாய் ஆட்கள் குழுமி இருப்பார்கள். தெரு விளக்கு வேறு பல சமயங்களில் எரியாது. அந்த அக்கா ஜீன்ஸ் பேண்டும் கையில்லாத சட்டையும் போட்டு கொண்டு நாலைந்து தடவை மார்க்கெட்டிற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருப்பாள். அவள் அந்தக் கடையை தாண்டி தெருவிறகுள் நுழையும் போதும் வெளியேறும் போது சட்டென பேச்சரவம் குறைந்து அனைவரது கண்களும் அவள் மேல் தான் இருக்கும். தெருவிற்குள்ளோ அனைத்து பெண்மணிகளுக்கும் அவள் தான் பேசு பொருள்.
அவள் பேரு ரேகா. கோபத்தை எப்போதும் முகத்தில் சுமந்து இருக்கவில்லை என்றால் மிக அழகானவளாய் இருந்திருப்பாள். ரொம்ப திமிரானவள் என்று எல்லாரும் அவளை சொல்வார்கள். அதற்காகவே அவள் இன்னும் திமிருடன் திரிய தொடங்கினாள். என்றும் அவள் வெட்கப்பட்டோ பயப்பட்டோ பார்த்ததே இல்லை. பார்வையில் படும் யாரையும் கண்டுகொள்ளவே மாட்டாள். ஆளற்ற சாலையில் செல்பவள் போல பதட்டமில்லாமல் நடந்து போவாள். அவள் சிரித்து யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவளது வாழ்க்கை அப்படி. மனநிலை சரியில்லாத தாய். குடிக்கார தந்தை. மாதத்திற்கு நாலு முறை ஊரை விட்டு போய் விடுவார். எங்கு போனார் எப்போ வருவார் என்று யாருக்கும் தெரியாது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் தங்கை. ரேகா தான் குடும்பத்தை நடத்தி வந்தாள். கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு ஒரு கம்பெனியில் கணக்கு எழுத போய் விட்டாள். ஒவ்வொரு நாளும் வீட்டிற்கும் வேலை செய்யும் இடத்திற்கும் நாற்பது கிலோமீட்டர் தூர பயணம். அதுவும் சென்னை டிராபிக்கில் காலையில் இரண்டு மணிநேரம் மாலையில் இரண்டு மணிநேரம் என அவளது நேரத்தை அவளது பயணமே தின்றது. ஆனால் அவள் களைத்து நின்றது கிடையாது.
ரேகாவிற்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. ஆம்பிள்ளைங்களை நம்பவே கூடாது என்பது சண்டை நேரங்களில் அவள் சொல்லும் வாக்கியம். ஒரு முறை அவளை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் ஒரு தாடிக்காரனோடு பார்த்ததாக எனது பள்ளிக்கூடத்து நண்பன் ஒருவன் சத்தியம் செய்து சொன்னான். நல்ல வேளை தாடிக்காரனோடு பார்த்த விஷயம் எங்கள் தெரு பொம்பளைங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்களது புரணி கற்பனை முழுவதும் ரேகாவைச் சுற்றியே பெரும்பாலும் இருக்கும். முக்கியமாக அவள் அணியும் உடைகள் தான் துவேஷத்தை கிளப்பும்.
ஒருமுறை இரவு பத்து மணிக்கு அவளது வீட்டில் பெரும் கூச்சல் சத்தம். அவளது தாய் காச் மூச்சென கத்தி கொண்டிருந்தாள். தெருவில் இருக்கிற எல்லா குடும்பங்களும் வெளியே வந்து விட்டன வேடிக்கை பார்க்க. ரேகாவின் தந்தை வழக்கம் போல நான்கு நாள் காணாமல் போய் விட்டு இன்று தான் வீடு திரும்பி இருக்கிறான். போகும் போது வீட்டில் இருந்த பணத்தைத் தூக்கி கொண்டு போய் விட்டான் போல. ரேகாவிற்கும் அவனுக்கும் சண்டை. சண்டை இன்று அதிகமாகி ஒருகட்டத்தில் அவள் துடைப்பத்தை வைத்து தகப்பனை அடிக்க தொடங்கி விட்டாள். தாய் கதறுகிறாள். தங்கை விக்கித்து நிற்கிறாள். அப்பன்காரன் அடி வாங்கி கொண்டு சிலை போல நிற்கிறான். தெருவே வேடிக்கை பார்க்கிறது. யாருக்கும் அவளை எதிர்த்து பேச தைரியமில்லை. முணுமுணுப்போடு நிற்கிறார்கள். ஒருகட்டத்தில் ரேகா சோர்ந்து போய் துடைப்பத்தை கீழே போட்டாள். தூ என்று அப்பாவின் முகத்தில் துப்பினாள். வேகமாய் வீட்டிற்குள் போனாள். ஒரு கறுப்பு நிற பையில் அப்பாவின் உடைகளை போட்டு அதை கொண்டு வந்து தெருவில் எறிந்தாள். சிலை போல அவமானத்தைத் தாங்கி கொண்டிருந்த அவளது அப்பா எதோ பேச வாய் திறந்தார். அவள் எட்டி அவரது இடுப்பில் உதைத்தாள். இன்றும் அந்த காட்சியை சொல்லி சொல்லி எங்க தெரு ஆண்களும் பெண்களும் அவளை தூற்றுவார்கள்.
அவளது அப்பா அதற்குப் பிறகு பல மாதங்கள் வீட்டிற்கே வரவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்றே யாருக்கும் தெரியாது. அப்படி ஒருவர் இருக்கிறார் என்பதையே எல்லாரும் மறந்து போய் இருந்தோம். பிறகு ஒரு நாள் குடிபோதையில் தள்ளாடி தள்ளாடி அவர் ரேகா இல்லாத சமயமாய் வீட்டிற்கு வர தொடங்கினார். பிறகு மெல்ல பழைய கதை மீண்டும் தொடங்கியது.
ரேகாவிற்கு திருமணம் நடக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதுவும் அவளுக்கு ஆண்கள் மீது எவ்வளவு வெறுப்பு என தெரிந்தவர்கள் அவளுக்கு காதல் திருமணம் என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள். ஆனால் அவளுக்கு காதல் திருமணம் நடந்தது. அவளோடு வேலை செய்த ஓர் ஆள். பார்ப்பதற்கு நல்லவன் மாதிரியே இருந்தான். மாப்பிள்ளையோட தாய் தான் ஆரம்பத்திலே வில்லி போல தெரிந்தாள். நினைத்தது போல மாமியார் மருமகள் சண்டை உடனே ஆரம்பிக்கவில்லை. சொல்ல போனால் தொடக்க காலத்தில் மாமியாருக்கு ரேகா மீது நிறைய பிரியமிருந்தது.
சில மாதங்கள் கழித்து மாமியாருக்கும் ரேகாவிற்கும் உரசல் தொடங்கியது. என்ன என்ன காரணங்கள் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் காட்டுத்தீ போல இருவருக்கும் இடையில் பகை வளர்ந்து ரேகா மீண்டும் தாய் வீட்டிற்கு வந்தாள். சில நாட்கள் கழித்து அவளது கணவனும் அங்கேயே வந்து விட்டான். அப்போது ரேகா கர்ப்பமாய் இருந்தாள். பிரசவ சமயத்தில் அவளது மாமியார் வந்தாள். குழந்தையை மாமியார் தொடவே கூடாது என்பதில் ரேகா உறுதியாக இருந்தாள். மருத்துவமனையிலே பெரிய வாக்குவாதம் நடந்தது. ரேகாவின் புருஷன் கோபித்து கொண்டு அவனுடைய தாய் வீட்டிற்கு போய் விட்டான்.
பல மாதங்கள் கழித்து ஒரு நாள் மாலை ரேகாவின் கணவன் தரப்பு உறவுக்காரர்கள் இரு வயசாளிகள் ரேகாவின் மாமியாரோடு எங்கள் தெருவிற்கு வந்தார்கள். ரேகா அவர்களை உள்ளே கூட கூப்பிடவில்லை. வெளியே நிற்க வைத்து தான் பேசினாள்.
“குழந்தைய ஒரு முறை தூக்கி பார்த்துட்டு போயிடுறேன்ம்மா,” என்றாள் மாமியார்காரி. இந்த முறை காலில் விழுந்து விடுவாள் என்கிற அளவிற்கு கெஞ்சினாள். வீட்டு கதவு அவளுக்கு திறக்கபடவே இல்லை. வழக்கம் போல தெரு வேடிக்கை பார்த்தது.
“பொம்பளைக்கு இவ்வளவு ஆணவம் கூடாது,” என்றார் பஞ்சாய்த்து பண்ண வந்த வயதானவர்.
“டேய் போயிடு. இன்னும் ஒரு நிமிஷம் நின்ன உனக்கு மரியாதை இருக்காது,” என்று அந்த வயதானவரை பார்த்து உக்கிரமாய் கத்தினாள்.
“பஜாரி கிட்ட எதுக்கு பேச்சு வளர்க்கிறீங்க, போயிடுங்க போயிடுங்க,” என்று யாரோ வேடிக்கை பார்ப்பவன் ஒருவன் கத்தினான்.
“போங்கடா போக்கத்தவன்ங்களா,” என்று சொல்லி விட்டு எல்லாருக்கும் பொதுவாக மொத்தமாய் துப்பி விட்டு வீட்டின் கதவை சாத்தி கொண்டாள் ரேகா. வீட்டின் உள்ளே குழந்தையின் அழுகை ஒலி.
நன்றி:
படங்கள் – பேபோ
Leave a Reply