சசிதரூர் கொச்சி அணியின் மூலமாக தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஆதாயம் தேடி கொண்டாரா? லலித் மோடி தன்னுடைய மருமகனுக்கு சாதகமாக தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தாரா? ஐபிஎல்லில் கலந்து கொள்ளும் சில அணிகள் பொய்யாக நஷ்ட கணக்கு காட்டினார்களா? ஊடகங்களில் ஐபிஎல் பற்றி புது புது தகவல்கள் சூடாக வந்து விழுந்து கொண்டிருக்கின்றன.
வர்த்தம் விளையாட்டு துறைக்குள் நுழைந்தவுடன் அதன் பின்னே அழையா விருந்தாளிகளாக நுழைந்து விட்டன ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும். வர்த்தகரீதியாக ஐபிஎல் மிக பெரிய பணத்தை சம்பாதித்து இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இப்போது அதற்கான முறையான வரி கட்டபடவில்லை என குற்றச்சாட்டு வைக்கபடுகிறது.
இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. அது இன்று நம் அரசாங்கம் லாபம் கொழிக்கும் தொழில்கள் வளர வேண்டும் என்றும் நிறைய புது பணக்காரர்கள் உருவாக வேண்டும் எனவும் முன் மொழிகிறது. காரணம் இப்படியாக தனிநபர்களின் வளர்ச்சியில் அரசிற்கு நிறைய வரிகள் கிடைக்கும், நாட்டில் பண நடமாட்டம் அதிகரிக்கும் என்பது தான். ஆனால் இந்த முதலாளித்துவ சிந்தனை பெரும்பாலும் யதார்த்தத்தோடு ஒத்து போவதில்லை. உதாரணமாக ஐபிஎல் என்கிற வர்த்தக வெற்றியை எடுத்து கொள்வோம். பணம் சம்பாதிப்பவர்கள் நமது அமைப்புரீதியான ஓட்டைகளில் புகுந்து பேராசையுடன் பெரும் பணம் எடுத்து செல்லவே விரும்புகிறார்கள் என்றே அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் நம்மை எண்ண வைக்கிறது. ஆக அரசாங்கத்தின் ஆதரவோடு வெள்ளை பணம், அப்புறம் அரசிற்கு தெரியாமல் கறுப்பு பணம் இப்படியாக இரட்டை சம்பாத்தியம் வர்த்த ஆட்களுக்கு. இன்னொருபுறம் அரசிற்கு முறையான பணம் வராமல் வருமான இழப்பு, சலுகைகள் என்கிற பெயரில் மேலும் இழப்பு, மக்களுக்கு பெரியளவு நேரடி பொருளாதார லாபமும் இல்லை. ஐபிஎல் மாதிரி தான் இன்று பல வர்த்தகங்கள் சலுகையை பெற்று கொண்டு அரசிற்கு பட்டை நாமம் சாத்தி கொண்டிருக்கின்றன போல.
மக்களுக்கான நலத்திட்டங்கள், சலுகைகள் தேர்தல் சமயத்தில் அதிகரித்தாலும் கடந்த இருபது வருட காலகட்டத்தை அதற்கு முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடும் போது இவை தற்போது குறைந்து வருவதை கவனிக்க வேண்டும். உலக ஜனதொகையில் ஆறில் ஒருவர் இந்தியர். ஆனால் உலகத்தில் பட்டினியால் பாதிக்கபட்ட மக்களில் ஐம்பது சதவீதம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்.
வர்த்தக நிறுவனங்களை வளருங்கள், எங்களுக்கு ஓர் ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதில் காட்டுகிற அக்கறையில் பத்தில் ஒரு பங்காவது ஜனங்கள் மீதும் காட்டுங்கள் என்பதே இன்றைய காமன் மேன்னின் வாதம்.
Leave a Reply