டைம் இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளி வந்து இருந்தது. பொதுவாக வெளிநாட்டு இதழ்கள் மற்ற நாட்டு பிரச்சனைகளை சரியாக அணுகுவதில்லை என்பது தான் பல சமயம் நடப்பது. ஆனால் இந்த கட்டுரையை படித்தவுடன் என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. அந்த கட்டுரையின் சுருக்கத்தை கீழே தந்து இருக்கிறேன்.
ஓபாமா வாய் மொழி வீரர் மட்டும் தானா?
ஓபாமா தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ஒரு முக்கிய விஷயம், தான் ஆட்சிக்கு வந்தால் வெறும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் சீதோஷ்ண மாற்றம், வறுமை, சுகாதார பிரச்சனைகள், இனவொழிப்பு செயற்பாடுகள் ஆகியவற்றிலும் கவனம் கொள்வேன் என்பதே. ஜிம்பாம்பேயில் இருந்து ராபர்ட் முகாபே பதவி விலக வேண்டும், டார்பூர் இனவொழிப்பு செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தபட வேண்டும் என அச்சமயம் ஓபாமா உரக்க சத்தமிட்டார். “உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் இனவொழிப்பு வேலைகள் நடந்தால், இனத்தின் பெயரால் மக்கள் மிருகத்தனமாய் வேட்டையாடப்படும் போது நாம் அமைதி காத்தால் அது நம்மை மதிப்பு இழந்தவர்களாய் மாற்றி விடும்,” என்று ஓபாமா தன் தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னார். ஆனால் இப்போது அசுர தனமாய் இலங்கையில் நடந்தேறும் இனவொழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஒபாமா அரசு சிறு சிறு அறிக்கைகள் தவிர வேறு எதுவும் செய்து விடவில்லை.
ஓபாமா என்ன செய்து இருக்க முடியும்?
ஓபாமா என்ன செய்து இருக்க முடியும் என்கிற பட்டியலையும் டைம் இதழ் வெளியிட்டு இருக்கிறது.
- ஐக்கிய நாடுகள் சபையின் செக்யூரிட்டி கவுன்சில் மூலமாக அமெரிக்கா இலங்கையை போர் நிறுத்தத்திற்கு நிர்பந்தித்து இருக்கலாம். போர் பகுதியில் அவதிபடும் மக்களுக்கு உதவிகள் செய்ய மற்றவர்களுக்கு அனுமதி கிடைக்க வழி செய்து இருக்கலாம்.
- அல்லது இந்தியாவை அமெரிக்க அரசு நிர்பந்தித்து இந்தியா மூலமாக இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களை நிறுத்தியிருக்கலாம்.
- மேற்சொன்ன இரண்டும் செய்ய இயலாமல் போனால் கூட ஓபாமா அரசு இலங்கை மீது பொருளாதார தடை கொண்டு வந்து இருக்கலாம். போன வருடம் இரண்டு பில்லியன் டாலர் அளவிற்கு இரு நாடுகளிடையே வர்த்தகம் நடந்து இருக்கிறது என பார்க்கும் போது இந்த வழிமுறை வெற்றியடையும் என்று தோன்றுகிறது.
- எதற்கும் இலங்கை ஒத்துழைக்க மறுத்தால் காங்கோ நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் நேரடி கண்காணிப்பில் போர் நடக்கும் இடத்திலே பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தபட்டது போல வன்னி பகுதியிலும் உண்டாக்கலாம்.
அப்புறம் ‘விமர்சன மூர்த்திகளுக்காக’ டைம் இதழின் இந்த கட்டுரையிலே இருக்கும் இன்னொரு பத்தியையும் சொல்லி விடுகிறேன். ஓபாமா மேற்சொன்னவற்றை எல்லாம் செய்தால் அவர் இலங்கை அரசிற்கு எதிராகவும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் என்று ஆகிவிடாதா? என கேள்வி எழும். அப்படி ஆகாது என்பதே டைம் இதழின் பதில். காரணம், விடுதலைப்புலிகள் அமைப்பினை அமெரிக்க அரசு ஏற்கெனவே தடை செய்து விட்டது. அமெரிக்காவில் விடுதலைபுலிகளின் பொருளாதார நரம்புகள் முடக்கபட்டு விட்டது. விடுதலைபுலிகளை தண்டித்தாகி விட்டது. ஆனால் இப்போது இலங்கை அரசின் அராஜக இனவொழிப்பு போரினை நிறுத்த வேண்டும். ராஜபக்ஷே அரசினை தண்டிக்க வேண்டிய நேரம்.
ஆக ஓபாமா மக்களின் மீது நியாயமான அக்கறை கொண்டவராக இருந்தால், தன் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை உணர்ந்து பேசியவராக இருந்திருந்தால், இலங்கை பிரச்சனையில் அவரது எதிர்வினை வேறு விதமாக இருந்து இருக்கும்.
ம்கூம்! நம்மூர் அரசியல்வாதிகளே ஏமாற்றி விட்ட நிலையில் ஓபாமா ஏமாற்றியதில் என்ன ஆச்சரியம்.
கொசுறு:
By the standard unanimously adopted by the United Nations General Assembly in 2005, the targeting of Tamil civilians—and the unwillingness of either side to protect them — justifies foreign intervention. The Responsibility to Protect convention obligates U.N. member-states to step in if “national authorities manifestly fail to protect their populations from genocide, war crimes, ethnic cleansing and crimes against humanity.” That’s an apt description of what’s happening in Sri Lanka – Time Magazine
டைம் இதழில் வெளி வந்த கட்டுரை: Sri Lanka Puts Obama to the Test — And He’s Failing
நன்றி
ஓபாமா புகைப்படம் – Steve Rhodes
வன்னி காட்சி – http://stop-the-vanni-genocide.blogspot.com/
Leave a Reply