மனிதர்கள் – சர்வர் சுந்தரம்

நடுத்தர வர்க்கத்திற்கான ஓட்டல்களில் சர்வர்கள் அலட்சியம் தாங்க முடியவில்லை. தண்ணீர் டம்ளர்களில் விரலை நுழைத்து அதை நமக்கு பருக தந்து விட்டு போகிறார்கள். என்ன இருக்கு என்றால் ஒரே நான்கு ஐட்டம் தான் சொல்வார்கள்.

“இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா.”

பக்கத்து டேபிளில் ஒருவர் குழி பனையாரத்தையும், இன்னொருவர் சாம்பார் இட்லியையும் சுவைத்து கொண்டிருக்கும் போது இந்த நான்கு ஐட்டம் மட்டும் ஏன் சொல்கிறாய் என்று கேட்டால் மெனு கார்ட்டை டேபிளில் வைத்து விட்டு போய் விடுவார்கள்.

சில ஓட்டல்களில் சர்வர்களை பிடிப்பதே கஷ்டம். சாம்பாருக்காக எச்சக் கையோடு சர்வருக்காக நிமிஷக்கணக்கில் காத்து கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.

என் நண்பன் ஒருவனோடு இப்படி ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது இதே மாதிரியான வேதனை (உட்கார்ந்து கால் மணி நேரமாகியும் ஆர்டர் எடுக்க ஆள் வரவில்லை.) என் நண்பன் மேனேஜரை கூப்பிட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டான். அடுத்தடுத்த உபசரிப்புகள் கடகடவென நடந்தன.

நண்பனின் திறமை எனக்கு தெரியும். ஏனெனில் அவன் ஆறு மாதம் சர்வராய் வேலை பார்த்தவன் ஆயிற்றே.

நண்பனின் பெயர் சுந்தரம். கல்லூரியில் என்னுடன் படித்தவன். திருநெல்வேலி அருகே ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன். அப்பா இல்லை. வீட்டில் பிரச்சனை. கல்லூரி முடித்த பிறகு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. ஒரு நாள் தாயாருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளிவந்தவன் என் அறைக்கு வந்தான். நான் நாளிதழ்களில் கிளாசிவைட் விளம்பரங்களில் பார்த்து வேலை தேட சொன்னேன்.

சென்னையில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமா? முதல் நாள் அலைச்சலுடன் சோகத்துடன் அமர்ந்திருந்தான். அடுத்த நாள் ஓர் ஓட்டலில் நிர்வாக வேலைக்கு நேர்காணலுக்கு போகிறான்.

“கிடைக்காதுன்னு சொல்லாதீங்க. வேற என்ன வேலை இருக்கோ அத கொடுங்கன்னு கேளுடா,” என்றேன்.

அடுத்த நாள் இரவு, சுந்தரம் என்னிடம் அவனுக்கு அந்த ஓட்டலிலே வேலை கிடைத்ததாகவும், அங்கேயே தங்கி கொள்ள போவதாகவும் சொல்லி விட்டு போனான். அப்புறம் மூன்று மாதங்கள் கழித்து ஓரு நாள் என்னை சந்திக்க வந்தான். வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள், கையில் தங்க காப்பு என தோற்றமே மாறி வந்தான். எல்லாருக்கும் விருந்து வைத்தான்.

மாதங்கள் உருண்டோடின. பிறகு வேறு ஒரு நண்பன் மூலம் நடந்த கதையை அறிந்தேன்.

வேலை தேடி சுந்தரம் அந்த ஓட்டலுக்கு போன போது, அந்த நிர்வாக வேலை அவனுக்கு கிடைக்கவில்லை. நான் சொன்னபடி எனக்கு வேறு எதாவது வேலை கொடுங்க என கேட்டு இருக்கிறான். சர்வர் வேலை தானிருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள். அதை செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். பட்டதாரிகளுக்கு இந்த வேலை ஒத்து வராது என்று சொன்னவுடன் அப்படியானால் இப்பவே கல்லூரி சர்டிபிகேட்களை கிழித்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறான். கிடைத்து விட்டது சர்வர் வேலை. சில மாதங்களுக்கு பிறகு அவனது வீட்டார் தேடி வந்து அவனை மீட்டு ஊருக்கு திரும்ப கூட்டி போனார்கள்.

பிறகு நிலைமை சகஜமானது. சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னை சந்திக்க வருவான். என்னை பொறுத்த வரைக்கும் சுந்தரம் பற்றிய மதீப்பீடை இரண்டு காலவகையாக வைத்து இருக்கிறேன். சுந்தரம் ஓட்டல் வேலைக்கு போவதற்கு முன், சுந்தரம் ஓட்டல் வேலைக்கு போனதற்குப் பின்.

சுந்தரம் அந்த ஓட்டல் வேலைக்கு சேர்வதற்கு முன் அப்பாவி இளைஞன். எளிதில் பயப்படுவான். மிக நல்லவன். யாரிடமும் சண்டைக்குப் போக மாட்டான். அதாவது ஓட்டலில் நான் சொன்ன மாதிரி சண்டையெல்லாம் போடும் ரகமில்லை. ஆனால் சண்டையிடுமளவு எப்படி மாறினான்?

ஓட்டலில் சர்வர் வேலை அவனை மாற்றி விட்டது. அவன் பட்டதாரி என்பது அவனுக்கும் ஓட்டல் முதலாளிக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அதனால் மற்றவர்களுடன் கலகலப்பாய் பழகுவதில் ஒன்றும் பிரச்சனையில்லை. ஆனால் மனதினுள் தீராத வெறி. பணம் சம்பாதிக்க வேண்டுமென்கிற வெறி. அதற்கும் அங்கே ஒரு குழு இருந்தது. சர்வர் வேலை பார்த்தது போக மற்ற நேரத்தில் வேறு வேலைகளில் ஈடுபட தொடங்கினான். ரெயில் நிலையங்களில் பிளாக் டிக்கெட் டெலிவரி பாய், அமெரிக்கன் தூதரகத்தில் வாசலில் கியூவில் நிற்பதற்கு வாடகை ஆள் – இப்படி அவன் செய்த வேலைகளின் பட்டியல் நீளமானது. அந்த ஒரு வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் அவன் நிறைய சம்பாதித்து விட்டான். வீட்டிற்கு போகும் போது தங்க ஆபகரணங்களாய் எல்லாவற்றையும் மாற்றி கொண்டு போனான்.

ஓகே! இப்போது அந்த சுந்தரத்துடன் தான் ஓட்டலில் சாப்பிட்டு வெளியே வந்து கொண்டிருக்கிறேன். ஓட்டலில் அவன் சண்டை போட்டதும் கல்லூரி காலத்தில் இதே சுந்தரம் எப்படி வாயில்லா பூச்சியாய் இருந்தான் என நினைத்து பார்த்தேன். காலம் மனிதர்களை எப்படியெல்லாம் பதப்படுத்துகிறது.

“ஏண்டா சர்வருங்க எல்லாம் பெரும்பாலும் இப்படி இருக்காங்க,” என சுந்தரத்திடம் கேட்டேன்.

“இப்படி இந்த வேலையில இருக்கோமே அப்படிங்கிற எரிச்சல், தாழ்வு மனப்பான்மை, வர்றவன் போறவன் எல்லாம் நம்மை வையற மாதிரியான இடத்துல இருக்கோமேனு வருத்தம் இதெல்லாம் சர்வர்களுக்கு அதிகம். குறிப்பா முப்பது வயசு தாண்டின சர்வர்களுக்கு அதிகம். அடுத்து இது ஒண்ணும் கஷ்டப்பட்டு கிடைச்ச வேலையில்ல. இந்த ஓட்டலில் இல்லையானா அடுத்த ஓட்டல்ல வேலை கிடைச்சுடும். இது ஒரு மனோநிலை. அடுத்து நீ நினைக்கிற மாதிரி சுறுசுறுப்பான சர்வரா இருக்கிறது ரொம்ப கஷ்டம். வேலைக்கு சேர்ந்த முதல் இரண்டு நாள் அப்படி இருக்கலாம். ஆனா அதுக்கு அப்புறம் எப்படியிருந்தாலும் திட்டு விழ தான் செய்யுதுன்னு மத்தவங்களை மாதிரி ஆகிவிட வேண்டியது தான்.”

“இவ்வளவு தெரிஞ்ச நீ எதுக்கு அந்த சர்வரையும் மானேஜரையும் திட்டுன?”

சுந்தரம் புன்னகைத்தான்.

“சர்வர் உலகத்தை பத்தி அக்கறைபடறது வேற. ஒழங்கா நமக்கு வேலை நடக்கணும்கிறது வேற. அப்புறம் இன்னொரு விஷயம். சண்டை போட்டா தான் கொஞ்சம் உபசரிப்பு இருக்கும். ஆனா எல்லை மீறி சண்டை போட்டா வேற மாதிரி ஆகிடும்.”

சுந்தரம் விடைபெற்று தனது காரில் கிளம்பி சென்றான்.

நன்றி:

ஓவியம்: Victoria Heryet

மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


Comments
12 responses to “மனிதர்கள் – சர்வர் சுந்தரம்”
  1. ஆ.ஞானசேகரன் Avatar
    ஆ.ஞானசேகரன்

    என்ன சொல்ல வரிங்கனு புரியல

  2. இராகவன் நைஜிரியா Avatar
    இராகவன் நைஜிரியா

    // “சர்வர் உலகத்தை பத்தி அக்கறைபடறது வேற. ஒழங்கா நமக்கு வேலை நடக்கணும்கிறது வேற. அப்புறம் இன்னொரு விஷயம். சண்டை போட்டா தான் கொஞ்சம் உபசரிப்பு இருக்கும். ஆனா எல்லை மீறி சண்டை போட்டா வேற மாதிரி ஆகிடும்.”//இருக்கு ஆனா இல்ல அப்படின்ற மாதிரி இருக்கு

  3. Sai Ram Avatar

    உங்கள் கருத்தினை பதிவு செய்தமைக்கு நன்றி @ஆ.ஞானசேகரன் & @இராகவன் நைஜிரியா!இருவருமே இந்த பதிவு சற்று குழப்புவதாக நினைப்பதால் என் பக்கமே தவறு இருக்கலாம் என நினைக்கிறேன். என்றாலும் இந்த பதிவு மூலம் நான் எந்த கருத்தினையும் சொல்ல வரவில்லை, வாழ்வின் பல அனுபவங்களையும் பிரதிபலிக்க மட்டுமே செய்தேன் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

  4. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    //இருவருமே இந்த பதிவு சற்று குழப்புவதாக நினைப்பதால் என் பக்கமே தவறு இருக்கலாம் என நினைக்கிறேன்.//அப்படி குழப்பம் எல்லாம் ஒன்னும் இல்லீங்க.//என்றாலும் இந்த பதிவு மூலம் நான் எந்த கருத்தினையும் சொல்ல வரவில்லை, வாழ்வின் பல அனுபவங்களையும் பிரதிபலிக்க மட்டுமே செய்தேன் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.//ஆமாம், உங்கள் மனிதர்கள் தொடர் முழுக்கவுமே இப்படித் தான். தொடரை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.

  5. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    11 அல்லது 12ஆம் வகுப்பு துணைப்பாடத்தில் ஒரு கதை. மும்பையில் இருந்து ஊருக்கு வரும் server ஒருவர் ஏகப்பட்ட பந்தா காட்டிவிட்டுத் திரும்ப மும்பைக்கே போய் வழமையான வாழ்க்கை வாழ்வார். நல்ல கதை. கதை பெயர், எழுதியவர் பெயர் மறந்துவிட்டது.

  6. வடகரை வேலன் Avatar
    வடகரை வேலன்

    நல்ல பதிவு. //சர்வர் உலகத்தை பத்தி அக்கறைபடறது வேற. ஒழங்கா நமக்கு வேலை நடக்கணும்கிறது வேற.//இந்தப் புரிதல் இல்லாமல்தான் சில மேலாளர்கள் தவறு செய்கிறார்கள். வேலை செய்பவரின் குடும்ப சூழ்னிலைக்காக வருந்துவது வேறு அவரிடம் வேலை வாங்குவது வேறு இறண்டையும் குழப்பக் கூடாது. ரவிசங்கர் அது நாஞ்சில் நாடன் எழுதிய கதை என நி்னைக்கிறேன்.

  7. moulefrite Avatar
    moulefrite

    நான் உலகின் தலைச் சிற்ந்த விமானத்தளங்களில் ஒன்றான (சும்மா ஒரு பந்தாதான்) பிரான்ஸ் CDG-Airportல்சர்வராகத்தன் வேளைப் பார்க்கிறேன்.நீங்கள் சொல்வதுபோல் என்மேல் கஸ்டமர்கள் எர்ந்து விழுவதெல்லாம்,என் வேளையை பொறுத்தவரை அத்திப் பூத்தாற்ப்பொல் நடப்பது.கரணம் நான் வேலைச் செய்வது customs areaவில்அதாவது செக்கிங்களெல்லாம் முடிந்துபோர்டிங்கார்டு வாங்கிக் கொண்டு,அப்பாடா ஒரு காப்பி குடிக்கலாமாஎன்று நினைப்பீர்களெ அந்த ஏரியாவில்!!!அங்கெ காப்பி மட்டரகமாக(விலை யனை விலைஇருக்கும் ஜாக்கிராதை)இருந்தாலும் எங்கள்மேல் எரிந்து விழ்வதெல்லாம் (பப்பு வேகாது) நடக்காது. ஏதாவது பிர்ச்சனை என்றால் கஸ்டம்போலிஸ்சாரால் கவனிக்கப்படுவார்கள்தெளிவாயிடிச்சா இராகவன் சார்,மப்ப குரையுங்க!!சும்மா தாமாசுக்குஉலகின் பலதரப்ப்ட்ட மக்களைச் சந்திப்பதால் இந்த வேலையில்எங்களுக்கு ஒரு தெளிவு்?!! பிறந்துவிடுகிறது. பலதரப்பட்ட நாணயங்கள் டிப்ஸாக கிடைக்கும்.என் அறிவுக்கு தெரிந்து நான் எந்த பந்தாவும் காட்டியதில்லை,ஒரு செய்திக்கு சொல்கிறேன்,,, என் கம்பெனியில்( select service partner) நான் இர்ண்டாவதுசர்வராக வந்துள்ளேன்(பன்னிரண்டுநாட்டு சர்வர்கள் கலந்து கொண்டனர் )படம் கிழெ உள்ள முகவரியில்சன்மானம் ஒரு Piaggio 125cc MP3Scooter பரிசாக பெற்றேன்விலை 5570 ஈரொக்கள் 68டால்பெரிக்கி நம்மூர் விலையைத் தெரிந்துகொள்ளவும் முதல் பரிசுஒரு இத்தலியன்காரிக்கு கார் FIAT 500கிடைத்தது படம் கிழெhttp://img23.imageshack.us/img23/636/img5011j.jpgஇத்தாலிகாரி காருடன் நான்http://img254.imageshack.us/img254/5530/img5016.jpgசர்வர் அனுபவங்களை ஒரு பதிவாகவே போடலாம்

  8. Sai Ram Avatar

    @<>ரவிசங்கர்<>, நன்றி! நீங்கள் என்னிடம், “மனிதர்கள் தொடரை மீண்டும் எழுதுங்கள்,” என சொன்ன பிறகு தான் மீண்டும் இப்படி எழுதவே தோன்றியது.@<>வடகரை வேலன்<> – நன்றி!@<>moulefrite<> – நன்றி! உங்கள் அனுபவங்களை தனி பதிவுகளாக போடுங்கள். அதை பதிக்கும் போது எனக்கு இமெயில் மூலம் கட்டாயம் தெரிவியுங்கள்.

  9. She-nisi Avatar

    நல்லதொரு நிகழ்வு பதிவு!சர்வருங்க ஏன் இப்படி வேலை செய்யறதுக்கு கஷ்டபடறானுங்க…னு நானு யோசித்ததுண்டு. இந்தப்பதிவு அதற்கான காரணங்களை ஓரளவுக்கு அலசியுள்ளது!

  10. Sai Ram Avatar

    @<>ஷீ-நிசி<> நன்றி! சர்வர்களின் உலகத்தை பற்றி ஒரு நாவலே எழுதலாம். அது ஒரு தனி உலகம்.

  11. victoria heryet Avatar
    victoria heryet

    Hi
    I was quite surprised to see my painting on your blog. I don’t speak your language so I don’t know what you have written about it. Please could you tell me what the context is for its use. Also, bear in mind that this is a copyrighted image and it can’t be used without my permission.
    Thanks,
    Victoria Heryet

  12. @victoria heryet – Thanks for your email communication. And Thanks for allowing me to use your painting in my post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.