இன்று காலை நான் தூங்கி விழித்த போது என் படுக்கைக்கு நேர் எதிரில் இருந்த தொலைக்காட்சி பெட்டியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஈராக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் தனது ஷுவை எறிந்த காட்சி ஒளிபரப்பாவதை பார்த்தேன். இப்படியாக இந்த காட்சியை பார்த்து என்னுடைய நாள் தொடங்கியது குறித்து ஏனோ எனக்குள் ஒரு மகிழ்ச்சி. எதற்காக இந்த மகிழ்ச்சி?
இன்று முழுவதும் நான் சந்தித்த மனிதர்கள் பல பேர் இந்த காட்சியினை கண்டு சந்தோஷபட்டதை பார்த்தேன். யாரும் தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர்கள் கிடையாது. உலகிலே மிகுந்த அதிகாரமுள்ள ஒருவர் மீது ஷு எறியும் துணிவுள்ளவரை பற்றிய வியப்பும் அல்ல இது. பலருடைய மனதில் இருக்கும் பெருங்கதையாடல் குறித்த கோபம் தான் இப்படி வெளிபடுவதாய் நினைக்கிறேன். அல்லது அதிகாரத்தின் மீதான சராசரி மனிதனுக்கு இருக்கும் கோபத்தின் வெளிபாடு தான் இந்த காட்சி குறித்தான மகிழ்ச்சி என்று நினைக்கிறேன்.
முன்டேசர் அல் சய்தி! ஈராக்கில் உள்ள அல் பாக்தாத்தியா என்கிற தொலைக்காட்சி நிறுவனத்தில் பத்திரிக்கையாளராக வேலை பார்த்து வருபவர். கடந்த வருடம் தீவிரவாதிகளால் கடத்தபட்டு மூன்று நாட்கள் கழித்து விடுவிக்கபட்டார்.
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து அடுத்த மாதம் விலக இருக்கும் ஜார்ஜ் புஷ் 2003-ம் ஆண்டு ஈராக் மீது படையெடுத்தது மூலம் அந்த பகுதியில் அதிகமாய் வெறுக்கபடும் மனிதராய் இருக்கிறார். இச்சூழலில் கடைசி முறையாக அமெரிக்க அதிபராக ஈராக்கிற்கு வருகை தந்த போது இந்த அவமானம் நிகழ்ந்தது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் புஷ் பேசி முடித்தவுடன் அல் சய்தி தனது இருக்கையிலிருந்து எழுந்திருத்து, “நாயே இந்தா எங்களது பிரிவு உபசார பரிசு,” என கத்தியபடி தனது இரண்டு ஷுக்களையும் ஒன்றன் பிறகு ஒன்றாக புஷ்ஷை நோக்கி எறிந்தார். புஷ்ஷின் மேல் அவை விழவில்லை. அவர் குனிந்து தப்பித்து கொண்டார்.
“ஈராக்கில் கொல்லபட்டவர்களுக்காக, அனாதை ஆக்கபட்டவர்களுக்காக, விதவையாக்கபட்டவர்களுக்காக,” என அல் சய்தி ஷுவை எறியும் போது கத்தினார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவரை பார்த்து ஷுவை காட்டுவது அவமானங்களின் உச்சம். அதை விட அவமானத்தின் உச்சம் ஒருவர் மீது ஷுவை எறிவது.
இப்போது ஈராக்கில் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் அல் சய்தி ஒரு ஹீரோவாக பார்க்கபடுகிறார். பல இடங்களில் மக்கள் ஒன்று கூடி அல் சய்தி விடுதலை செய்யபட வேண்டுமென போராட்டம் நடத்துகிறார்கள். சவுதியில் உள்ள சமூக அரசியல் பேராசிரியர் காலித் அல் தக்கில் என்பவர் இந்த சம்பவம் புஷ் ஈராக்கில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் எதிரொலி என குறிப்பிட்டு இருக்கிறார். நீங்கள் சந்தோஷப்பட்டீர்களா? அல்லது புஷ்ஷிற்காக பரிதாபப்பட்டீர்களா? காட்சியை கண்டவுடன் அடுத்த நொடி உங்கள் மனதில் தோன்றிய உணர்ச்சியை கேட்கிறேன்.
Leave a Reply