அவருக்கு 35 வயதிருக்கலாம். ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் வரும் கமல் போல தோற்றம். முகத்தில் எப்போதும் ஓர் இறுக்கம் இருந்தது. கண்களினுள் மறைந்திருந்த கோபத்தைத் தாண்டி ஒரு கவர்ச்சி இருந்தது. அவர் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல நாளிதழின் மாவட்ட பிரிவிற்கு உதவி ஆசிரியர்.
உதவி ஆசிரியரின் ஊர் ஒரு மாவட்டத்தின் தலைநகரம். ஆனால் அதற்கான எந்த லட்சணங்களும் இல்லாத ஊர். டெல்லியிலிருந்து மூன்று மணி நேர பயணத் தூரத்தில் இருக்கிறது. இந்திய தலைநகரத்திற்கு அருகாமையில் இருந்தாலும் இங்கே பெரும்பாலான சமயம் மின்சாரம் இருக்காது. மாவட்டத்தில் இருக்கும் பல கிராமங்களுக்கு இன்னும் மின்சார வசதியே ஏற்படுத்தி தரப்படவில்லை. சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக பயணிகளை மசாஜ் செய்யும் ஆற்றலை பெற்றிருக்கின்றன. பஸ் வசதி இல்லாததால் ஒரு ஜீப்பில் இருபது பேருக்கு மேற்பட்டவர்கள் தொங்கி கொண்டும் நசுங்கி கொண்டும் பயணிப்பது தினசரி காட்சி.
ஜனவரி மாதத்தின் குளிர். உடலை நடுநடுங்க வைக்கும் பனி. அதிகாலையில் மாட்டு வண்டிகள் அணிவகுத்து செல்வது போல ஒட்டக வண்டிகள் சாலைகளில் நகர்ந்து போய் கொண்டிருந்தன. அந்நிய மண்ணில் பாஷை தெரியாமல் ஒரு டீக்கடையில் நானும் கேமராமேனும் அமர்ந்திருந்தோம். மண் குடுவையில் நிரம்பி வழிந்த டீயை பருகியபடி இருந்தேன். உலகத்தின் எந்த மூலையிலும் எனக்காக ஒரு டீக்கடை இருக்கிறது என நான் யோசித்த போது தான் இந்த உதவி ஆசிரியரின் அறிமுகம் கிடைத்தது.
நான் சென்னையிலிருந்து உத்திர பிரதேச கிராமத்திற்கு ஒரு ஸ்டோரிக்காக கேமராமேனுடன் குருட்டுத்தனமான நம்பிக்கையுடன் வந்து இறங்கியிருக்கிறேன். உள்ளூர் பத்திரிக்கையாளர் யாராவது உதவினால் தேவலாம் என்பதற்காக அங்குப் பிடித்து இங்குப் பிடித்து இந்த உதவி ஆசிரியரைப் பிடித்தேன். நான் விஷயத்தைச் சொன்னவுடன் யாருக்கோ போனை போட்டார், அடுத்த பத்தாவது நிமிடம் ஒரு ஜீப் என் பயணத்திற்காக வந்தது.
எனக்கு இந்தி தெரியாது. அவருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் இருவரும் உடனே நண்பர்களாகி விட்டோம். சிற்சில இந்தி வார்த்தைகளை நானும் சில ஆங்கில வார்த்தைகளை அவரும் தெரிந்து வைத்திருந்ததினால் எங்கள் உரையாடல் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.
எதோ கேங்க் லீடர் போல ஊரிலிருக்கும் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சூழ தான் உதவி ஆசிரியர் இருப்பார். நிறுவன வேறுபாட்டின்றி அந்த ஊரில் இருக்கும் அனைத்து பத்திரிக்கையாளர்களும் அவரது கட்டுபாட்டில் தான் இருந்தார்கள். பத்திரிக்கையாளர்கள் அனைவரும் எந்த மன கசப்பும் இல்லாமல் ஒன்றாக இருக்கிறார்கள். ஒரே ஊரில் வசிக்கும் சொந்தக்காரர்கள் ஒருவருக்கொருவர் உரிமையோடு பேசி கொள்வது போலவும், ஒருவரது தனிப்பட்ட பிரச்சனைகளை அறிந்து வைத்திருப்பது போலவும் நிருபர்கள் குழு பழகியதைப் பார்த்தேன். நான் அங்கு தங்கியிருந்த ஒரு வாரம் முழுவதும் இவர்களுடன் தான் மாலை பொழுது கழிந்தது.
உதவி ஆசிரியரை விட வயதான பத்திரிக்கையாளர்கள் ஊரில் உண்டு என்றாலும் குழுவிற்கு தலையாய் இருப்பது உதவி ஆசிரியர் தாம். அவரது நிறுவனத்திலே வயதான ஆசிரியரை விட இவரது குரல் தான் எல்லாரையும் வழிநடத்தி கொண்டிருந்தது. ஊரிலிருந்த பெருந்தலைகள், அதிகாரிகள் எல்லாரும் இவருடன் தொடர்பில் இருந்தார்கள். இவருக்கு ஏன் இத்தனை மரியாதை. இவரது ஆளுமை மட்டும் தான் காரணமா? என் ஸ்டோரிக்காக இவர் உதவிய போது இவர் ஒரு நடமாடும் டேட்டாபேஸ் என உணர்ந்து கொண்டேன். செய்திகளை கடகடவென நினைவுபடுத்தி சொல்ல கூடியவர். அதோடு செய்தியின் பின்னாலிருக்கும் அரசியலை வெகு அழகாய் ஆராய்ந்து சொல்வார். பழகுவதற்கு இனிமையானவர்.
சாதீய மனநிலையும், லஞ்ச லாவண்யம் நிகழும் அதிகார வர்க்க பூமியில் இன்று அதற்கு ஏற்றாற் போலவே அவர் மாறி விட்டார். வெளிச்சத்திற்கு வராத திறமைகள் இப்படி தான் புழுதியில் அடித்து போகும் போல.
நான் உதவி ஆசிரியரிடமிருந்து விடை பெறுவதற்கு முந்திய நாள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து விட்டு திரும்பி கொண்டிருந்தோம். வழியில் சாலையிலே வலிப்பு வந்து விழுந்தார். கூட்டம் கூடி அவரை ஆட்டோவில் ஏற்றுவதற்கு முன்னர் சட்டென மதம் பிடித்தவர் போல எல்லாரையும் அடிக்க வந்தார். என்னை அப்போது அவர் பார்த்த பார்வையில் மிருக வெறி தானிருந்தது. பிறகு இன்னொரு பத்திரிக்கையாளர் என்னிடம் காரணத்தை சொன்னார்.
“சாருக்கு ஒரு வித்தியாசமான நோய். திடீரென எல்லாமே மறந்து போயிடும். கொஞ்சம் நேரம் கழித்து சரியாடுவார். இதனை குணப்படுத்த லட்சக்கணக்கில் செலவாகும்ன்னு சொல்றாங்க. அதனால இதுக்கு மருத்துவம் பார்க்காமலே இருக்கார்.”
Leave a Reply