தலைப்பு செய்தியை தீர்மானிப்பது யார்?
ஒரு காலத்தில் எல்லா பேப்பர்களிலும் ஆட்டோ சங்கர் பற்றிய தகவல்களாய் இருந்தது. பிறகு வீரப்பன். ஹர்ஷத் மேத்தா, சிவகாசி ஜெயலட்சமி, டாக்டர் பிரகாஷ் என ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு செய்தி பிரதானமாய் ஊடகங்களில் அடிபடும். பிறகு நிறைய செய்தி தொலைக்காட்சி சானல்கள், பரபரப்பு பத்திரிக்கைகள் தோன்றின. ஊடகங்கள் மத்தியில் வளரும் போட்டி மனப்பான்மை காரணத்தால் இன்று பெரிய செய்திகளுக்கு தட்டுபாடு நிலவுகிறது. ஒரு ‘சத்துள்ள’ செய்தி கிடைத்த வேகத்தில் முழுமையாக சக்கையாகபட்டு மிக விரைவில் காலவதி ஆகிவிடுகிறது.

இன்று செய்தி அறையை போர்களம் போல வர்ணிக்கிறார்கள். மக்களுக்கு உண்மையில் தேவையான செய்தியை தான் இன்றைய பத்திரிக்கைகள் செய்தியாய் வடிவெடுக்கின்றனவா என்கிற கேள்விக்கு உள்ளே இந்த கட்டுரை போக போவதில்லை. நோம் சாம்ஸ்கி சிந்தனைகள் இன்று ஊடகத்துறை மாணவர்களுக்கும் தெரியும். பிரபல ஊடகம் என்பது ஒரு வணிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இந்த கட்டுரையின் நோக்கம், ‘ஒரு செய்தியை பிரபலமாக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது?’ என்கிற கேள்விக்கு விடை காண்பது தான்.

நிருபரா? செய்தி ஆசிரியரா? ஊடக நிறுவன உரிமையாளரா?

நிருபர், செய்தி ஆசிரியர், ஊடக நிறுவன உரிமையாளர் எல்லாருக்கும் ‘ஒரு செய்தி’ (பிரபலமாக வேண்டிய ஒரு செய்தி) மிக அவசியமாக மிக அவசரமாக எப்போதும் தேவைப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. யானை பசிக்கு தீனியை உருவாக்கி கொண்டே இருக்கிற கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் கிடைக்கும் செய்தியை உடனே பெரிது செய்யவும் முடியாது. அதற்கு பல கட்டுபாடுகள்/புரிந்து கொள்ள முடியாத புதிர்கள் உண்டு.

உதாரணத்திற்கு ஒன்று. காஞ்சி சங்கராச்சாரியர் கைது செய்யபட்ட சம்பவம். சங்கராச்சாரியர் கைது செய்யபடுவதற்கு முன்பு பல ஊடகங்களில் அவருக்கு வேண்டப்பட்டவர்கள், பக்த கோடிகள் இருந்தார்கள். சங்கராச்சாரியர் ஒரு பெண்ணிற்கு தொலைபேசியில் தினமும் பேசுகிறார் போன்ற குற்றச்சாட்டுகளை பிரபல ஊடகங்களில் செய்தியாக கொண்டு வரமுடியும் என்பதெல்லாம் 100 % முடியாத காரியம் என தான் எல்லாரும் நினைத்து இருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறுவிதம். சங்கராச்சாரியர் கைது செய்யபட்டவுடன் அவரை பற்றிய குற்றச்சாட்டுகள், புரளிகள் என எல்லாவற்றையும் ஊடகங்கள் போட்டி போட்டு கொண்டு வெளிச்சம் போட்டன. இது நடந்தது எப்படி?

விளம்பர நிறுவனங்களா? அரசியல் சக்தியா? வணிக பெரும்புள்ளிகளா?

ஒரு செய்தியை மெல்ல அறிமுகப்படுத்தி பிறகு வளர விட்டு விஸ்வரூபமெடுக்க வைக்கும் சக்திகள் சிலது இருக்கின்றன. இது ஒரு பிரச்சாரம் போல மெல்ல வலுவாகும். இது ஒருபுறம் பின்னணியில் தாக்கம் உண்டாக்குகிறது. அமெரிக்க பிரச்சார சக்தி தொடர்ந்து ‘தீவிரவாத மிரட்டல்’ குறித்து ஒரு பிம்பத்தை உலகமெங்கும் உருவாக்கி வைத்திருப்பது போல. ஆனால் அமெரிக்க அதிபரே சட்டென ஊடக சக்திகளால் மாட்டி கொள்ளும் காமெடிகள் நடப்பது எப்படி?

சதி ஆலோசனை அறையில் தமிழ் சினிமா வில்லன்கள் போல அரசியல்வாதி, பிரபல பிசினஸ் மேன், ஊடக நிறுவன அதிபர் ஆகியோர் அமர்ந்து அடுத்து மக்களை ஏமாற்ற என்ன செய்தியை உண்டாக்கி தலைப்பு செய்தியாக்கலாம் என திட்டம் தீட்டுவதில்லை. அவர்களால் ஊடகத்தில் ஒரு தாக்கம் ஏற்படுத்த முடியும் என்பது உண்மை தான். ஆனால் சதி ஆலோசனை அறை என்பது உண்மை அல்ல. சரி, ஒரு செய்தியை பிரபலமாக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது? பொறுங்கள்.

மிலன் குண்டேரா சொல்வது என்ன?

இன்றைய உலக இலக்கியத்தில் பரவலாக அறியபட்ட எழுத்தாளர் மிலன் குண்டேரா. இவருடைய நாவலான ‘Immortality’ ஆங்கில பதிப்பில் imagology என்கிற வார்த்தை காண கிடைக்கிறது. அவருடைய உருவாக்கமான இந்த சொல் நமது கேள்விக்கு ஒரு புதுவிதமான விடையை தருகிறது.

அவருடைய எழுத்திலிருந்து மேற்கோள்

நூறு வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவில் மார்க்ஸிய கோட்பாட்டின் ஆதரவாளர்கள் சிறு சிறு குழுக்களாய் இரகசியமாய் குழுமி மார்க்ஸிய தத்துவங்களை படித்தார்கள். மற்ற குழுக்களுக்கும் பரப்ப வேண்டி, அந்த தத்துவங்களை எளிமையாக்கினார்கள். எளிமையாக்கபட்ட தத்துவங்களை பெற்ற மற்ற குழுக்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பரப்ப வேண்டி கற்பிக்க வேண்டியதை மீண்டும் எளிதாக்கினார்கள். இப்படியான பிரச்சார போக்கில் எளிமையாக்குதல் ஒவ்வொரு படிநிலையிலும் நடந்தேறியது. உலகம் முழுவதும் மார்க்ஸியம் புகழ் பெற தொடங்கிய போது, ஆறேழு கோஷங்கள் மட்டுமே மிஞ்சியிருந்தன. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அந்த கோஷங்களுக்கு கருத்தியல் என்கிற தகுதியே இல்லை.

சுத்தியலுடன் புன்னகைத்தபடி இருக்கும் ஒரு தொழிலாளி, வெள்ளை மனிதர்கள், கறுப்பு மனிதர்கள், சீன மனிதர்கள் கைகளை கோர்த்தபடி நிற்பது, அமைதி சின்னமாக புறா வானத்தில் பறப்பது போன்ற காட்சிகள் தான் இன்று மார்க்ஸியத்தை விளக்குகின்றன. இந்த சூழலில் கருத்தியல் உலக அளவில் எப்படி காட்சியியலாக (imagology) மாறுகிறது என்பதை பற்றி பேச நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது…

…கருத்தியல் என்பது ஒரு மேடைக்கு பின்புறமிருக்கும் பிரம்மாண்ட சக்கரங்கள் போல. அந்த சக்கரங்கள் உருளும் போது போர்கள் நடந்தன, புரட்சிகள் வெடித்தன, புது சிந்தனைகள் தோன்றின. ஆனால் காட்சியியலின் சக்கரங்கள் வரலாற்றின் மேல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. கருத்தியல்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டன. கருத்தியலின் தாக்கம் ஒரு குறிப்பிட்ட காலத்தையே முழுங்க வல்லது. ஆனால் காட்சியியல் தங்களுக்குள்ளான அடுத்த நகர்வுகளை ஒரு இசை போல ஒழுங்குபடுத்தி கொள்கிறது…

…கருத்தியல் வரலாற்றிற்கு உரியது. ஆனால் வரலாறு முடியுமிடத்தில் தான் காட்சியியலின் ஆட்சி தொடங்குகிறது.

ஐரோப்பாவிற்கு மாற்றம் என்கிற வார்த்தை மிக பிடித்தமானது. விகோ, ஹகேல், மார்க்ஸ் காலத்திற்கு பிறகு மாற்றம் என்பது ஒரு மேம்படுத்தபட்ட வளர்ச்சியின் அடுத்த கட்டம் என அர்த்தமிருந்தது. இன்று மாற்றம் என்கிற வார்த்தை வேறு அர்த்தம் பூண்டிருக்கிறது. ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு நகர்தல், முன்னாலிருந்து பின்னால், பின்னாலிருந்து முன்னால், இடதிலிருந்து வலது, வலதிலிருந்து இடது. அடுத்த சீசனுக்கு என்ன புது ஃபேஷன் என டிசைனர்கள் யோசிப்பது போல…

…ஓர் உடற்பயிற்சி கூடத்தில் பெரிய பெரிய கண்ணாடிகளை சுவர்கள் தெரியாதபடி வைக்கிறார்கள். ஏன்? உடற்பயிற்சி செய்யும் போது பயிற்சி செய்பவர்கள் தங்கள் உடலை பார்த்தபடி இருக்க வேண்டுமென்கிற ஆர்வமல்ல. காரணம் காட்சியியலின் பல வாய்ப்புகளில் இன்று கண்ணாடி வைப்பதின் மேல் அதிர்ஷ்ட தேவதை (காட்சியியல் தேவதை?) கை காட்டியிருக்கிறாள். என்றோ இறந்து போன ஒரு தத்துவாசிரியர் இன்று மோசமாக திட்டபடுகிறார் என்றால் காட்சியியலின் கை இன்று அவருக்கு மோசமான கட்டத்தை வழங்கியிருக்கிறது என்று அர்த்தம். கருத்துகளையும் எதிர்கருத்துகளையும் காட்சியியல் உருவாக்க தான் செய்கிறது. ஆனால் இதற்கு வழங்கபடுகிற காலகட்டம் மிக குறுகியது. ஆனால் இவை நம் மீது மிக பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றன. நமது செயல்பாடு, நமது அரசியல் நம்பிக்கைகள், நம் ரசனைகள், நம் வீட்டு தரைகம்பளத்தின் நிறம், எந்த புத்தகத்தை படிப்பது என்கிற தேர்வு இவை யாவும் காட்சியியல் நம் மேல் விட்டு செல்லும் தாக்கங்கள். ஒரு காலத்தில் இப்பணியை கருத்தியல்கள் செய்திருந்தன...

…பத்திரிக்கையாளர்கள் காட்சியியலையே சார்ந்து இருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் நிலவும் காட்சியியல் வரைகோடுகளே (பத்திரிக்கையாளனையும் பத்திரிக்கையையும்) ஒரு செய்தி பிரபலமாகுவதையும் தீர்மானிக்கின்றன.

காட்சியியல் மேற்பார்வையாளர்கள் (Imagologue)

மிலன் குண்டேராவின் நாவலில் வரும் ஒரு சிறு கதாபாத்திரம் Imagologue. காட்சியியல் பின்பற்றபடுகிறதா என சோதிப்பதற்காகவே இருக்கும் மனிதர்கள் தாம் Imagologue. அவர்களது பணியே அன்றைய ஃபேஷனுக்கு (காட்சியியலுக்கு) ஏற்ப பணிகள் அந்தந்த துறைகளில் இருக்கிறதா என்று சோதிப்பது தான். இந்த மனிதர்கள் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள். இவர்களை தனித்து இனம் காண்பது அவ்வளவு எளிதல்ல. மிக குறுகிய காலத்தில் அந்த பணியை அவரிடமிருந்து பிடுங்கி மற்றொருவர் தம்மை அறியாமல் செய்ய தொடங்குகிறார். உதாரணமாக மிலன் குண்டேரா நாவலில் வரும் imagologue ரேடியோவில் இருக்கும் அறிவுபூர்வமான கலந்துரையாடல் நிகழ்ச்சியை தூக்கி விட்டு நிகழ்ச்சிகளில் சுவாரஸ்யமான மசாலாக்களை கலப்பதை பற்றி பேசுகிறார். அதன் விளைவாய் அந்த நிகழ்ச்சி தூக்கபட்டு, ரேடியோ நிகழ்ச்சிகள் சுவாரஸ்ய மசாலாக்களால் அலங்கரிக்கபடுகிறது.

ஓர் இளம் அதிகாரி தனது நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்து வேலை நேரத்தை அதிகரிப்பது மற்றும் வேலை திறனை பற்றி பேசுகிறார் என்றால் அவர் இன்றைய நடப்பு ஸ்டைலை சொல்கிறார் என்று அர்த்தம். அதாவது அவர் ஒரு imagologue.

இன்று ஒரு செய்தியை பிரபலமாக்குவதும் அல்லது இருட்டடிப்பு செய்வதும் imagologueகள் கையில் இருக்கிறது.


Comments
One response to “தலைப்பு செய்தியை தீர்மானிப்பது யார்?”
  1. களப்பிரர் - jp Avatar
    களப்பிரர் – jp

    // வீரப்பன். ஹர்ஷத் மேத்தா, சிவகாசி ஜெயலட்சமி, டாக்டர் பிரகாஷ் //இருந்தாலும் எனக்கு செரினா தான் நல்ல நினைவில் இருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.