ஆயிரக்கணக்கான உத்தபுரங்கள்

உத்தபுரம் கிராமத்தில் நடந்த அவலங்களை கேள்விபட்டீர்களா? கேள்விபட்டவர்கள் அடுத்த பத்தியை தவிர்த்து அதற்கு அடுத்த பத்தியிலிருந்து படிக்கவும். கேள்விபடாதவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமம் உத்தபுரம். இங்கு ஏறத்தாழ இரண்டாயிரம் தலித் குடும்பங்கள் வசிக்கிறார்கள். என்றாலும் இங்கு இருக்கும் சாதி இந்துக்கள் தலித்களை பல காலமாக புறக்கணித்து வந்திருக்கிறார்கள். 1990ம் ஆண்டு இந்த கிராமத்தில் சாதி ரீதியிலான மோதல் நடந்ததாக சொல்லபடுகிறது. இந்த மோதல் சம்பவத்தினை தொடர்ந்து சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கும் தலித் மக்கள் வாழும் பகுதிக்கும் இடையே 600 மீட்டர் நீள காங்ரீட் சுவர் கட்டபட்டிருக்கிறது. கிராமத்தில் உள்ள பொது வசதிகளை தலித் மக்கள் உபயோகிக்க கூடாது என்பதற்காகவே இந்த சுவர் கட்டபட்டிருக்கிறது. ஏறத்தாழ இருபது வருடங்கள் இந்த சுவர் இந்த மண்ணின் சாதி வெறியையும் அதிகாரிகளின் அலட்சியத்தையும் பறைசாற்றியபடி இருந்திருக்கிறது. சில காலத்திற்கு முன்பு இந்த சுவரின் உயரம் அதிகரிக்கபட்டிருக்கிறது. இதோடு அடங்கவில்லை சாதி வெறி. சுவர் ஏறி யாராவது குதித்தால் தீட்டாகிவிடுமே என்பதால் சுவற்றில் மின்சாரத்தை பாய்ச்ச தொடங்கினார்கள். இதற்கு பிறகு சமீப நாட்களாக செய்திகளில் அடிபட தொடங்கி பிறகு அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சனை வந்திருக்கிறது. அரசு மாவட்ட கலெக்டரை பணித்து அந்த சுவரை இடித்திருக்கிறது. சுவர் இடிக்கபட்ட காரணத்தினால் இந்த கிராமத்தில் வாழும் சாதி இந்துக்கள் தங்கள் ரேஷன் கார்டுகளை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுக்கையிட்டு திரும்ப ஒப்படைக்கவும் முனைந்திருக்கிறார்கள். அதாவது தங்களது சாதி வெறியை தடுத்தால் தங்களால் இந்த நாட்டு பிரஜைகளாக இருக்க முடியாது என சொல்லியிருக்கிறார்கள். சாதி வேற்றுமை குறித்தோ சுவர் குறித்தோ கிரிமினல் வழக்கு எதுவும் பதிவானதாக தெரியவில்லை. ஆனால் சாதி இந்துக்கள் தங்களது சாதி வெறி எனும் உரிமை மறுக்கபட்டதால் கோபமுற்று கிராமத்தை விட்டு வெளியேறி வேறு எங்கோ தங்கியிருக்கிறார்கள். இவர்களை சாந்தபடுத்தி மீண்டும் கிராமத்திற்கும் கூட்டி வர மாவட்ட கலெக்டர் முயற்சி செய்து வருகிறார்.

உத்தபுரத்தில் நடப்பது எதோ வித்தியாசமான நிகழ்வு போல ஊடகங்கள் எழுதுகின்றன. உண்மையில் இந்தியாவில் உத்தபுரங்கள் இல்லாத இடங்களே கிடையாது. இதை எல்லாரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையானோர் ஏற்று கொள்ள மறுக்கிறார்கள்.

தமிழக கிராமங்களில் சாதி அடிப்படையில் மக்கள் பிரிந்து வாழ்கிறார்கள். ஒவ்வொரு தெருவுக்கும் சாதியுண்டு. ஏன் கோயில் விழாக்கள் கூட சாதியினை அடிப்படையாக கொண்டுள்ளன. கேவலம், சொல்லவே வெட்கமாக இருக்கிறது. சாமிகளுக்கு கூட சாதியுண்டு. கிராமங்களில் மட்டும் தான் இப்படியா? நகரத்தில் வீடு வாடகைக்கு கிடைக்குமா என கேட்க போனால்,உங்கள் சாதி என்ன?” என கேட்காத வீட்டு உரிமையாளர்கள் மிகவும் குறைவு. திருமணங்களில் சாதி. பழக்க வழக்கங்களில் சாதி, உடைகளில் சாதி என இந்த சமூகம் இன்றும் அவல நிலையில் இருந்தாலும் மேலோட்டமாய், “சாதியா, அதெல்லாம் பிற்போக்குதனம், யாரோ படிக்காத பாமரர்கள் செய்யற வேலை,” என சொல்லி விடுகிறார்கள். ஆனால் நிஜத்தில் மெத்த படித்தவர்கள் தான் இட ஒதுக்கீடுற்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள். திறமை அடிப்பட்டு விடும், உலக அளவில் தரம் குறைந்து விடும் என வாய்சவடால் வேறு.

சாதி தன்மை உயிர்ப்புடன் இருந்தாலும் அதனை ஏன் யாரும் ஏற்று கொள்வதில்லை. குற்றவுணர்ச்சியா? வெட்கமா? அதெல்லாம் இல்லை. வெளிபடையாக சொன்னால் மாட்டி கொள்வோம் என்பதால் தான். ஒவ்வொரு இந்தியனும் தன் பிறப்பிலும் வளர்ப்பிலும் சாதி என்னும் நஞ்சை உண்டு தான் வளர்கிறான். இதனை சத்தமாக சொல்லுவோம். சாதி உணர்வு இன்றும் உண்டு. சாதி வேற்றுமையும் தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் இன்றும் பரவலாக நடந்தபடியே தான் இருக்கின்றன. ஐடி பார்க்குகள் கட்டபட்டாலும், இந்தியா ஜிடிபியில் முன்னேற்றம் காண தொடங்கி விட்டாலும், நம் பங்கு சந்தையில் கோடிக்கணக்கில் அன்னிய நாட்டு முதலீடு குவிய தொடங்கி விட்டாலும், இந்தியா வல்லரசாக மாறுவதற்கான பாதையில் பயணிக்க தொடங்கி விட்டது என ஒரு பொய் பிம்பம் காட்டபட்டாலும் சாதி வேற்றுமையுணர்வு நம் சமூகத்தில் ஆழமாய் வேர் ஊன்றி இருக்கிறது என்பது யதார்த்தம். இந்த நிஜத்தை மூடி மறைக்காமல் சத்தமாய் சொல்வோம். ஏனெனில் பிரச்சனை இருக்கிறது என ஒப்புக் கொள்ளாதவர்கள் கட்டாயம் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு எதிரியாக தான் பார்க்கபடுவார்கள்.