ஒவ்வொருவரும் தமக்கான மனநிலை ஒன்றை அறிந்தோ அறியாமலோ உருவாக்கி கொண்டு அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு ஒரு நண்பன் இருந்தான். சந்திப்பவர்களை எல்லாம் கேலி செய்து கொண்டிருப்பான். ஜோக்குகளை உதிர்த்தபடி இருப்பான். மாதக்கணக்கில் அவனோடு நட்பு பாராட்டிய பிறகு எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. அவனிடம் இருக்கும் ஜோக்குகளின் எண்ணிக்கை கட்டாயம் 50யை தாண்டாது. இந்த 50 ஜோக்குகளை தான் அவன் சந்திக்கும் நபர்களை பொறுத்தும் சூழுல் பொறுத்தும் மாற்றி மாற்றி சொல்லி கொண்டிருக்கிறான். இந்த 50 ஜோக்குகளை அவனிடமிருந்து பிடுங்கி விட்டால் அவனால் வாழவே முடியாதோ என்கிற அச்சம் எனக்கு தோன்றியது உண்மை. இதே போல இன்னொரு நண்பர். அந்த வாரத்து ஆனந்த விகடன் மற்றும் குமுதம் படித்து விட்டீர்களானால் அவர் பேசுவது முழுவதும் உங்களுக்கு ஏற்கெனவே கேள்விபட்ட விஷயங்களாகி விடும்.
கவிஞனின் மனநிலையில் வாழ்வதென்பது நீங்கள் உங்கள் கற்பனை சக்தியை உயிர்ப்புடன் வைத்திருப்பது என நினைக்கிறேன். பைக்கை சர்வீஸ் செய்து தினம் தினம் துடைத்து, பார்க்கவே பளிச்சென வைத்திருப்பது போல உங்கள் கற்பனை சக்தியை வைத்திருப்பது. இப்படி இருப்பதனால் நமது புலன்கள் கூர்மையாகின்றன. வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் விஷயங்களை/பிரச்சனைகளை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கிவிடுகிறோம். வேறு மனப்பாவத்தோடு அணுக தொடங்குவோம்.
கவிஞனின் மனநிலையில் வாழ முடியுமா? வாழ்பவர்கள் உண்டா? அல்லது அப்படி வாழ முயற்சிப்பது தான் கவிஞனின் மனநிலையா?
Leave a Reply