Month: March 2008

  • புழுதி படிந்த சாலைகளின் ஓரத்தில்

    கிழிந்து போன டயர்கள்.

    சிதைந்த கட்டிடங்களின் தூசிக்கு கீழே

    உயிர்ப்புடன் இருக்கின்றன

    இறந்தவர்களின் ரகசியங்கள்.


    வேறு மனிதர்களே இல்லை.

    நாய்கள் மட்டும் சோம்பி கிடக்கின்றன.

    காதலியின் மண்டையோட்டை சுமந்தபடி

    சுற்றி கொண்டிருக்கிறேன் நான்.

    புழுக்கள் நெளிகின்றன

    என் விரல்களுக்கு இடையே.


    பிறக்கிறது புன்னகை.

    அழிவே ஆனந்தம்.

    புன்னகை மிதந்தபடி வருடி செல்கிறது

    அழிவின் சாட்சியங்களை.


  • மஞ்சள் வெயில் போர்த்திய வனத்தில்

    இரு பாதைகளுக்கு முன் நான் நின்றிருந்தேன்.

    எந்த பாதையை தேர்ந்தெடுப்பது?

    மனித கால்கள் படாத இலைசருகுகள் மிகுந்த பாதை

    நான் அப்போது தேர்ந்தெடுத்தது.

    தேர்ந்தெடுக்காத பாதையை பற்றிய

    சிந்தனைகளுடன் தான் பயணம் கழிந்தது.

    பாதைகள் இன்று எனக்கு பயனற்று போன சூழ்நிலையில்

    இப்போது

    பாதைகள் எல்லாம்

    சேருமிடம் ஒன்று தான் என

    தெரிந்தும் என்ன பயன்?

    (ராபர்ட் ஃபிராஸ்ட் எழுதிய The Road Not Taken கவிதையின் தாக்கத்தோடு எழுதபட்டது.)


  • வெக்கையடிக்கும் அறையின் ஒரு மூலை.

    அதில் பாதி திறந்து கிடக்கிறது ஒரு ஜன்னல்.

    பச்சை தென்னை கிளைகளும், கரும் காகங்களும்

    அதனுள்ளே நுழைந்து அவன் மனதை திசை திருப்ப தான் பார்க்கின்றன.

    அவன் பார்வையில் ஜன்னல் மூடப்பட்டு பல மாதங்களாகின்றன.


  • பறப்பதாய் கனவு கண்டது எப்போது?

    ஒரு குழந்தை புன்னகைத்ததை நினைவுபடுத்தி பார்த்தது எப்போது?

    கவிதை கிறுக்கி பார்த்தது,

    வாய்விட்டு சந்தோஷமாய் கத்தியது,

    முதல் முத்தத்தின் சுவையை நினைவுபடுத்தி பார்த்தது,

    எப்போது?

    கடைசியாய் எப்போது?