அரக்கோணம் போகும் வழியில் ரெயில் ஜன்னல் வழியாக நீங்கள் அந்த நகரங்களை பார்ப்பீர்கள். லட்சுமி நகர், பிரதாப் நகர் என ஒவ்வொரு காலனிக்கும் பெயர் பலகைகள் பளிச்சென வைக்கபட்டிருக்கும். அதோடு நகர் அனெக்ஸ் என கூடுதல் காலனிகளுக்கும் பெயர் பலகைகளையும் வாசிக்க முடியும். அதோடு இந்த காலனிகளுக்கு போகும் பாதையில் வழிகாட்டி பலகைகள் வைக்கபட்டிருக்கின்றன.
“தாம்பரத்துல எங்க அப்பாவுக்கு ஒரு நிலம் இருந்துச்சு. இருபது வருஷத்துக்கு முன்னால அவ்வளவு தொலைவில நிலம் வைச்சு என்ன பண்றதுன்னு சொல்லி அந்த நிலத்தை இருபதாயிரத்துக்கு விற்றோம். இன்னிக்கு அந்த நிலத்தோட மதிப்பு என்னன்னு தெரியுமா? எண்பது லட்சம்.” இப்படி பலர் இன்று அங்கலாய்த்து கொண்டிருக்கிறார்கள்.
“பக்கத்து ஆத்து அம்புஜத்தோட ஆம்படையாள் திருவள்ளூருல மூன்னு லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்கியிருக்கிறாராம். இன்னும் அஞ்சு வருஷத்துல அங்க எல்லாம் நிலமே வாங்க முடியாதாம். அப்படியே த்ரீ ஃபோல்டு, ஃபோர் ஃபோல்டு வேல்யூ இன்கீரிஸ் ஆகுமாம். நீங்களும் இருக்கீங்களே, ஒரு செங்கல்லு கூட வாங்காம. இரண்டு பொண்ணு வேற பெத்து வைச்சிருக்கோம்.” இப்படி பல மனைவிமார்களின் அங்கலாய்ப்பு.
நகரத்தை சார்ந்த நிலத்தின் மதிப்பு வேறு எந்த பொருளையும் விட இன்று கடும் விலையேற்றத்தில் இருக்கிறது. மத்திய வர்க்கம் நகரத்தில் நிலம் வாங்க முடியாத அளவு விலை பிரம்மாண்டமாக இருக்கிறது. இதனால் நகரத்திற்கு வெளியே நிலம் வாங்கி போடும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. இதற்கான நிலதரகு கம்பெனிகள், நில தரகர்கள் நகரத்தை ஒட்டிய நிலங்களை பெரிய அளவில் வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள். விவசாய நிலங்கள் தான் பெரும்பாலும் காலனியாகின்றன. விதிமுறைக்கு முரணாக எப்படி இதனை சாதித்தார்கள் என தெரியவில்லை. விவசாயத்தால் பெரிய சரிவினை சந்தித்திருக்கும் விவசாயிகள் கியூவில் நின்று தங்கள் நிலங்களை விற்றிருப்பார்கள் என்பது வெளிபடை.
மத்திய வர்க்கம் தவிர பெரிய பெரிய பணக்காரர்களும் நிறுவனங்களும் கூட நகரங்களுக்கு வெளியே பெரிய அளவில் நிலங்களை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள். டி.நகரில் உள்ள பெரிய பெரிய நகை கடைகள் செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு சாதாரண கிராமத்தில் நிலத்தை போட்டி போட்டு வாங்கி குவித்து வருகிறார்கள் என கேள்விபட்டேன். இன்னும் ஐம்பது வருடங்களில் இன்றைய டி.நகர் வியாபாரம் செங்கல்பட்டு ஏரியாவிற்கு (அப்போது பரந்த சென்னையின் மையம்) குடி பெயர்ந்து விடும் என எந்த ஜோசியன் சொன்னான் என தெரியவில்லை. அல்லது நகர் திட்டமிடும் அரசு குழுக்களின் அறிக்கை இரகசியமாக ஒரு காப்பி இவர்களுக்கு வந்து விடுகிறதா? எனக்கு தெரியாது.
சூது நிறைந்த நில தரகர்களும் அவர்களது நிறுவனங்களும் தாம் இன்று பணம் சம்பாதித்து கொழுத்து கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கெனவே தண்ணீர்வரத்தினை இந்த நிலமோகத்தினால் இழந்தோம். வெள்ளம் வந்தால் ஆறுகள் பழைய ஞாபகத்தில் தங்கள் வழிதடத்தில் வர, அந்தோ பரிதாபம் அங்கு இப்போது இருப்பதெல்லாம் வீடுகள், வீடுகள் வீடுகள் மட்டுமே. இன்று காசு கொடுத்து தண்ணீர் வாங்கி வாழும் அவலத்தில் இருக்கிறோம். விவசாய நிலங்கள் இந
்த வேகத்தில் காலியானால் நாளை உணவு உற்பத்திக்கு பங்கம் வராதா?
தொழில் தொடங்க பணமில்லாமல், வெளிநாட்டு முதலீடுகளை நம்பி இந்திய பொருளாதாரம் நடை பயிலும் இன்றைய சூழலில் மத்திய வர்க்கம் தனது பணத்தையெல்லாம் தங்கத்திலும் நிலத்திலும் போடுவது எவ்வளவு தூரம் ஆரோக்கியமானது?
பணத்தை முதலீடு செய்ய பல வழிகள் இருக்கின்றன. ஆனால் இதனை பற்றிய விழிப்புணர்வு மத்திய வர்க்கத்தினரிடையே இல்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தங்கமும் நிலமும் தாம். ஆனால் நிலத்தை பொறுத்த வரை அவை அவசரத்திற்கு உதவாத முதலீடுகள் தாம். No liquidity. ஒரு பெரும் பகுதி பணம் இதில் முடங்கி போய் கிடக்கும். இதனை பணக்காரர்கள் தாங்கி கொள்வார்கள். ஆனால் மாத தவணை லோன் வாங்கி செய்யும் மத்திய வர்க்க குடும்பத்திற்கு ஒரு பெரிய பொருளாதார இழப்பு நேர்ந்தால் அவர்களால் உடனடியாய் சமாளிக்க முடியுமா?
மத்திய வர்க்கத்தினரின் அபத்தத்திற்கு சாட்சியாய் முளைத்தபடி இருக்கின்றன மனிதர்களற்ற நகரங்கள்.