• வெடி மருந்து ஆறாய் ஓடுகிறது.
    தீக்குச்சிகள் அதில் நனைந்து அணைந்து போகின்றன.
    கரையோரம் பெருங்கூட்டம்.
    அழிவு பெருங்கணத்தை காண வியர்வை வாசத்தை பொருட்படுத்தாது காத்திருக்கிறார்கள்.
    சிலர் கூட்டநெரிசலால் கால் தவறி வெடிமருந்தில் விழுந்து புதைந்து போகிறார்கள்.
    யாரேனும் விழும் போதெல்லாம் ஒரு சாட்டையை விசிறினாற் போல சத்தம்.
    அந்த சத்தம் ஓலிக்கும் போதெல்லாம் தொடங்கும் பெரும் ஆரவாரமும் கேலி சிரிப்பு சத்தமும்.
    முரட்டு யானைகள் போன்ற பெண்கள் கூட்டமொன்றில் அரைபட்டு கரைபக்கம் வந்து கொண்டிருக்கிறேன்.
    இன்றாவது கடைசி நாளாக இருக்க வேண்டும்.


  • இருள் கிழிந்து ஒரு நட்சத்திரம் விழுந்தாற் போல

    விழுந்த விண்கல்லை கண்டு

    அவள் கண் மூடி தனது வேண்டுதலை கடவுளுக்கு சொன்னாள்.

    கண் திறந்த போது இருளில் அது மூழ்கி போயிருந்தது.


  • இலங்கையில் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் இன்று நேற்றல்ல அது அரை நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் ஒரு கொடூரம். இலங்கை அரசாங்கமே தலைமை தாங்கி நடத்தும் இந்த கொடூரத்திற்கு லட்சக்கணக்கில் தமிழர்கள் மடிந்திருக்கிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் இந்த தமிழின ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உலகம் முழுவதும் தமிழர்கள் எதிர்ப்பு குரல்களும் கண்டனங்களும் பல காலமாக தெரிவித்து வருகிறார்கள். இந்த தமிழ் ஆதரவு போக்கில் ராஜீவ் காந்தி படுகொலை ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. விடுதலைபுலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யபட்ட அமைப்பாக அறிவிக்கபட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவில் விடுதலைபுலி ஆதரவாளர்கள் மட்டுமல்ல, ஈழத்து தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் பற்றி கண்டன குரல்கள் எழுப்புபவர்கள் கூட ஓரம் கட்டப்பட்டார்கள். இதற்கு காரணங்கள் இரண்டு.

    காரணம் ஒன்று

    இந்திய அரசாங்கத்திற்கு எப்போதுமே தமிழக பிரிவினையாளர்கள் மீது ஓர் எச்சரிக்கை உணர்வு உண்டு. பஞ்சாப் போலவோ காஷ்மீர் போலவோ தமிழகமும் தனி நாடு கோரிக்கை எழுப்பும் அபாயம் உண்டு என்பதால் உளவுத்துறை, பிரிவினைவாதிகளை அடையாளம் கண்டு பிஞ்சிலே களையும் முறையை கையாண்டு வந்தார்கள். விடுதலைபுலிகள் ஒரு வேளை தனி ஈழம் அமைத்தால், தமிழகத்திலும் தனிநாடு கோரிக்கை எழுலாம் என்கிற காரணத்தினால் இந்திய அரசாங்கம் ஈழத்து தமிழர்களுக்கு உதவுவதற்கு தயக்கம் காட்டியது. ராஜீவ் காந்தி படுகொலையை காரணம் காட்டி இந்த நிலைப்பாட்டை உறுதியாக்கி கொண்டது.

    காரணம் இரண்டு

    இந்திய அரசாங்கத்தின் உயர்ந்த பதவியில் இருப்பவர்களை பொறுத்த வரை இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் வேறு. இலங்கையில் இருக்கும் தமிழர்கள் வேறு. இலங்கையில் நடப்பது அவர்கள் உள்நாட்டு விவகாரம். இதில் நாம் ஏன் தலையிட்டு நமது கையை சுட்டு கொள்ள வேண்டும் என்கிற அலட்சியம். உதாரணமாய் சொல்ல வேண்டுமென்றால், பக்கத்து வீட்டில் குடிகார கணவன் தனது மனைவியை போட்டு அடிக்கிறான். தெரு முழுக்க கணவனின் வெறித்தனமான குரலும், மனைவியின் அழுகையும் நிரம்பி இருக்கும் போது எதிர் வீட்டு புருஷன் எதற்கு நமக்கு தேவையில்லாத வம்பு என தனது வீட்டு கதவை இறுக்க தாழிட்டு கொள்கிறான். நாம் பொருளாதார வளர்ச்சியை தான் கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர மனித உரிமை மீறல் பற்றியெல்லாம் கவலை தெரிவித்து நாட்டின் வளர்ச்சி பாதையை குறுக்கி கொள்ள கூடாது என்பதாக தான் சமீப காலங்களில் இந்திய அரசியல் நிலைபாடு இருந்திருக்கிறது.

    சமீபத்திய தமிழின எழுச்சி

    தமிழர்கள் இலங்கையில் கொல்லபட்ட போது தமிழகத்தில் நாம் சினிமா கிசுகிசுக்களை வாசித்து கொண்டிருந்தோம். ஈழத்து தமிழர்களை பற்றி பேசினாலே தடை செய்யபட்ட விடுதலைபுலிகளை ஆதரிப்பவன் என்கிற முத்திரை விழுந்து விடுமோ என்கிற கவலையில் பலர் இதனை பற்றி வெளிப்படையாக பேசுவதில்லை. ஊடகங்களில் ஈழத்து செய்திகள் தணிக்கை செய்யப்படாமலே தணிக்கை ஆயின.

    ஆயிற்று! ஏறத்தாழ பதினைந்து வருடங்களுக்கு இந்த மறக்கடித்தல் நிலையும், மறைப்பு வேலையும் முழு வீச்சில் இருந்தது. அழுத்தபட்ட உணர்வு அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க பெரியளவு வெடிக்கும் என்பதற்கு உதாரணமாக சமீபத்திய நாட்களாக தமிழகம் ஈழத்து தமிழர்களுக்கு ஆதரவாக பெருங்குரலெடுத்து போராட தொடங்கி இருக்கிறது.

    இலங்கை ராணுவம் பெரும்பலத்தோடு விடுதலைபுலிகளின் கடைசி புகலிடங்களையும் முற்றுகை இட்டிருப்பதாக செய்தி. விடுதலைபுலிகளை ஒழித்தே ஆக வேண்டுமென்கிற முயற்சியில் இராணுவம் தான் முன்னேறும் இடங்களில் உள்ள தமிழர்களை கொன்று குவிக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள். பொறுத்தது போதும் என தமிழக முதல்வரிலிருந்து அனைவரும் கொதித்து எழுந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இது தாமதான உணர்வு என்றாலும் தமிழகத்தில் பெரும்குரலெடுத்து கொதிக்கிறது ஆதரவு குரல்கள்.

    தமிழனா? இந்தியனா?

    99% தமிழர்கள் தாம் இந்தியர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லாதவர்கள். தமிழர்கள் இந்தியாவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இந்திய அரசாங்கம் தமிழர்கள் மீது வைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

    இந்திய அரசாங்கம் நினைத்தால் 24 மணி நேரத்தில் ஈழத்து பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றார் தொல்.திருமாவளவன். அது பொய்யல்ல. ஆனால் எது இந்திய அரசாங்கத்தினை தடுக்கிறது? வேறொரு நாட்டின் மீது படையெடுப்பது இன்றைய ஐ.நா விதிமுறைகளை மீறிய செயல் என்பதால் இந்திய அரசாங்கம் பொறுமை காக்கிறது. இதுவே ஆயிரக்கணக்கான இந்திக்காரர்கள் வேற்று நாட்டில் இப்படி கொல்லபட்டால் இந்திய அரசாங்கம் இதே அமைதியை தான் கடைபிடிக்குமா?

    இன்றைய தமிழக சூழலில் தனி நாடு பிரிவினைகளை பற்றி யாரும் யோசிக்க போவதில்லை. ஆனால் மத்திய அரசாங்கத்தின் தொடர் அலட்சிய போக்கு நீடிக்க கூடாது என்பதில் எல்லாரும் உறுதியாக இருக்கிறார்கள். தமிழனாக இருந்தாலும், இந்தியனாக இருந்தாலும், ஏன் சிங்களவனாக இருந்தாலும் மனிதனாக இருப்பதே இன்றைய தேவை. ஏனெனில் மனிதனாய் இருப்பவன் மனித உரிமை மீறல்களை கட்டாயம் தட்டி கேட்பான். அது எந்த இனம் எந்த இனத்தின் மீது செய்தாலும் சரி.


  • அன்று ஜன்னல்கள் அடைக்கபட்டிருந்தன.
    இருளை அறையிலிருந்து வெளியே விடாதபடி
    துக்க வெப்பத்தில் மிதந்து கொண்டிருந்தாள் அவள்.

    கடந்த கால காட்சிகளை தள்ள தள்ள
    அவை திரும்ப மேல் எழும்பி பரிகாசம் செய்தன.

    சுற்றி இறைந்து கிடந்த காதல் கடிதங்களில் இருந்து
    உயிரற்ற வார்த்தைகள் உதிர்ந்து கொண்டே இருந்தன
    கண்ணீரை போல.

    ‘இது ஏற்கெனவே ஒத்திகை பார்த்து
    காத்திருந்த தருணம் தான்,’ என உறைத்த போது
    விம்மியெழுந்த அவளது அழுகை
    மலைகளை தாண்டி அவனுக்கு எட்டியது.


  • 369 வருடங்களுக்கு முன்பு 1639-ம் ஆண்டு மதராஸ்பட்டினம் என்கிற இடத்தில் ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கான உரிமையும் நிலமும் அன்றைய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் வாங்கபட்டது. இந்த சம்பவமே இன்றைய சென்னை நகரம் உருவாக காரணமாக அமைந்தது என சொல்கிறார்கள். அந்த ஒப்பந்தம் கையெழுத்தான நாளான இன்று (22 ஆகஸ்ட்) மெட்ராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒப்பந்தத்தில் மெட்ராஸ்பட்டினம் என்று இருந்தாலும், இன்றைக்கு மெட்ராஸ் மாநகரத்தை நாம் சென்னை என அரசு வழிகாட்டுதல்படி அழைக்கிறோம். அப்படியானால் இன்றைய தினம் மெட்ராஸ் தினம் என்று அழைக்கபட வேண்டுமா? சென்னை தினம் என்று அழைக்கபட வேண்டுமா? 369 வயதாகும் சென்னை அதற்கு முன்னரே பல்லவர் காலத்தில் துறைமுகமாக புகழ் பெற்றிருந்தது. மைலாப்பூர், திருவல்லிகேணி ஆகிய பகுதிகள் குமாஸ்தாக்களின் வருகைக்கு முன்னரே ஊர்களாக வளர்ந்திருந்தன. என்றாலும் ஆங்கிலேயரே இன்றைய சென்னைக்கு தொடக்கம் கொடுத்தார்கள் என நாம் நினைப்பது நியாயமா? சரி அப்படியே கருதி விழா எடுத்தாலும் போர்ச்சீகிய பெயரான மெட்ராஸ் பொருந்துமா? தெலுங்கு பெயரான சென்னை பொருந்துமா?


  • தமிழ் வலைப்பதிவில் பணம் சம்பாதிக்க முடியாது என்பது 99.99% உண்மை. அப்படியானால் தமிழ் வலைப்பதிவர்களின் நோக்கம் தான் என்ன? ஒரு தமிழ் வாத்தியார் தனது சிற்றூரில், அங்கு நூலகத்தில் தான் வழக்கமாக பங்கேற்கும் வாராந்திர இலக்கிய நட்பு கூட்டத்தில், வலைப்பதிவில் எழுதுவதால் தனக்கு தனி மரியாதை கிடைக்கிறது என கருதுகிறார். எழுத்தாளர்கள் பலர் இப்போது வலைப்பதிவு மீது கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்கள். வீட்டிற்கும் உறவினர்களுக்கும் தெரியாமல் எப்போதாவது கவிதைகளை தன் நோட் புக்கில் எழுதி வந்த நண்பர் ஒருவர் அதனை பத்திரிக்கைகளில் பதிக்கும் ஆர்வமில்லாமல் இருந்தார். அவர் இப்போது தனது கவிதைகளை அரங்கேற்றுவதற்கு வலைப்பதிவினை சிறந்த இடமாக இனம் கண்டு கொண்டிருக்கிறார். இப்படி பற்பல விஷயங்கள் பார்க்கிறோம்.

    • வலைப்பதிவு என்றாலே journal மாதிரி தினசரி தனது கருத்துகளை நான்கு பாராக்களில் முடக்கி எழுத வேண்டும் என்கிற கருத்து சரியா? தவறா? அப்படி எழுதுபவர்கள் தான் வலைப்பதிவர் என்கிற சரியான இலக்கணத்திற்குள் வருவார்களா?
    • வலைப்பதிவில் எழுதுபவை அன்றைக்கு படிக்க உகந்ததாக அன்றைய ஹாட் டாபிக்காக இருந்தால் அப்போது படிப்பவர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் பிற்காலத்தில் அந்த பதிவுகள் யாருக்கும் சுவாரஸ்யம் தராமல் அல்லவா போகும். பிறந்தவுடனே புகழ் பெற்று குறுகிய காலத்தில் மாண்டு போதல் தான் வலைப்பதிவின் குணாதிசயமா?

    நண்பர்களே இப்படி இந்த விஷயத்தை பற்றி ரவியின் மன்றத்தில் ஒரு விவாதம் தொடங்கி உள்ளேன். அங்கு வந்து விவாதத்தில் பங்கு பெறுங்களேன்.

    தொடர்புடைய இடுகை: வலைப்பதிவர்களை கைது செய்ய முடியுமா?


  • என் கவிதையின் கதாநாயகி
    இன்று என் கனவில் வந்தாள். 
    என்னை கொல்லும் உக்கிரத்தோடு வந்தவள்
    என்னை கேள்வி கேட்டு நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை.
    அழுவதற்கும் அவள் தயாராக இல்லை.
    நான் அணிவித்திருந்த வெள்ளை உடையை துறந்து
    கறுப்பு ஜீன்ஸ் பேண்டில் இருந்தவளை
    முதலில் அடையாளமே தெரியவில்லை.

    என்னை கொல்வதற்கு ஆயுதங்களை கொண்டு வரவில்லை.
    கண்களாலே கொல்ல முடியுமென நினைத்தாள் போலும்.

    எனது குற்றவுணர்வை சொன்னேன்.
    மன்னிப்பை கோரினேன்.
    கருணை காட்ட அவள் தயாராக இல்லை.
    என் வலது கையின் கட்டை விரலை மட்டும்
    கடித்து எடுத்து கொண்டு
    இரத்தம் வழியும் உதட்டில் புன்னகையோடு
    மீண்டும் மறைந்து போனாள்.


  • கடந்த ஞாயிற்று கிழமை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது அரசியல் பிரவேசத்தை முறைப்படி அறிவித்தார். சில மாதங்களாகவே ஆந்திராவில் எதிர்பார்க்கபட்ட விஷயம் என்றாலும், சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் பலவிதமான எதிர்பார்ப்புகளை தூண்டியிருக்கிறது. அடுத்த தேர்தலிலே முதலமைச்சர் ஆகுமளவு அவரது புகழ் இல்லையென்றாலும் தேர்தல் முடிவுகளில் அவரால் ஓரளவு தாக்கத்தை உண்டு செய்ய இயலும் என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை.

    சிரஞ்சீவி எதற்காக அரசியலில் பிரவேசிக்கிறார்?

    மக்களுக்கு சேவை செய்வதற்காக தான் அரசியலில் நுழைவதாக சிரஞ்சீவி சொல்லியிருக்கிறார். மேலும் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது தன்னால் ஆந்திர அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை கொண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

    சிரஞ்சீவியை கவனித்து வரும் சிலருக்கு சிரஞ்சீவியின் அரசியல் ஆசைக்கு ஜோதிடமும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் அறிவார்கள். நடிகர் சிரஞ்சீவிக்கு பல காலமாகவே கணிதம் மற்றும் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உண்டு. அரசியல் கட்சி தொடங்கும் திட்டம் உருவான பிறகு அவர் மக்களது பிரச்சனைகளுக்காக நேரம் ஒதுக்கியதை விட ராமேஸ்வரத்தில், திருப்பதியில் ஹோமம், யாகம் என்று தான் அதிக நேரம் ஒதுக்கியிருக்கிறார் என சொல்கிறார்கள் விமர்சகர்கள்.

    சிரஞ்சீவியின் ஜாதகத்தின்படி என்னென்ன யாகங்களை நடத்தினால் அவருக்கு ராஜ யோகம் கிட்டும் (முதலமைச்சர் பதவி தாங்க!) என ஜோதிடர்கள் பட்டியலிட்டு கொடுத்து இருக்கிறார்கள் போலும்.

    வருகிற 21, 22 தேதிகளில் சிரஞ்சீவி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் ஒன்று நடத்தவுள்ளார். சண்டி ஹோமம் என்று இந்த யாகத்திற்கு பெயர். இதனை நடத்துபவருக்கு ராஜ யோகம் வாய்க்கும் என்பது நம்பிக்கை. 50 பூசாரிகள் நடத்த போகிற இந்த பிரம்மாண்ட யாகம் அவசியமான ஒன்று தானா என்று நாம் கேளவி கேட்பதற்கு முன் இன்னொரு கூடுதல் தகவல். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் இதே போன்ற சண்டி ஹோமம் நடத்தியிருப்பவர்கள் பெயர்கள் இதோ. முன்னாள் பிரதமர் வாஜ்பேய், பிரதமர் கனவில் இருக்கும் அத்வானி மற்றும் கம்ப்யூட்டர் இந்தியாவினை உருவாக்க முனைந்தவர் என புகழப்படுகிற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.


  • டாக்ஸிக் ரைட்டர் என்றொரு வலைப்பதிவர். இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இவர் பிளாக்கரில் உள்ள தன் வலைப்பதிவில் மும்பையை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தை பற்றி சில குற்றச்சாட்டுகளை எழுதியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை அந்த கட்டுமான நிறுவனத்தால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அந்த வலைப்பதிவருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பதாக முடிவு செய்தார்கள். இதற்காக அந்த வலைப்பதிவர் யார் என்கிற தகவல்களை கூகுள் நிறுவனம் தங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். நீதிபதிகளும் அந்த தகவல்களை சொல்லும்படி கூகுள் நிறுவனத்திற்கு தற்போது உத்தரவிட்டு இருக்கிறார்கள். இப்போது டாக்ஸிக் ரைட்டரின் வலைப்பதிவு ஏற்கெனவே கூகுள் நிறுவனத்தால் அழிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். வலைப்பதிவு அழிக்கபட்டது பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேலில் இதே போன்று ஒரு வழக்கு நடந்தது. ஒரு வலைப்பதிவர் தனது ஊர் முனசிபல் கவுன்சில் தேர்தலுக்கு நிற்பவர்களை பற்றிய குற்றச்சாட்டுகளை தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். அந்த அரசியல்வாதிகள், சம்பந்தபட்ட வலைப்பதிவர் மீது தங்களது ஊர் நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்கள். இஸ்ரேல் நீதிமன்றம் அந்த வலைப்பதிவர் யார் என்கிற தகவல்களை கூகுள் நிறுவனத்தார் தெரிவிக்க வேண்டுமென கேட்டது. கூகுள் நிறுவனம் சார்பாக ஆஜரான வக்கீல்கள் வலைப்பதிவர் சம்பந்தமான தகவல்களை கொடுப்பது கருத்துரிமைக்கு எதிரானது என முதலில் வாதிட்டார்கள். இஸ்ரேல் நீதிபதி இந்த பிரச்சனையில் கிரிமினல் நடத்தை இருப்பதாக சந்தேகபடுவதாக சொன்னவுடன் கூகுள் மறுபேச்சு பேசாமல் தன் வலைப்பதிவரின் IP நம்பரை கொடுத்தது மட்டுமல்ல, அந்த வலைப்பதிவினை அழித்தும் விட்டது. இப்போது அந்த வலைப்பதிவின் முகவரியில் வேறு யாரும் பதிவு தொடங்க முடியாது என கூகுள் அறிவித்து இருக்கிறது.

    சில நாட்களுக்கு முன்பு மகாராஸ்டிரா அரசியல் தலைவர் பால் தாக்கரேயினை கொல்வதாக இணையத்தில் கருத்து சொன்ன ஓர் ஆர்குட் உறுப்பினரை கேரளாவில் கைது செய்ய காவல்துறையினர் முயற்சித்தார்கள். அதோடு பால் தாக்கரேக்கு எதிராக ஆர்குட்டில் ஏற்படுத்தபட்டு இருக்கும் குழுக்களில் உள்ள உறுப்பினர்களை கண்காணிக்கவும் காவல்துறையினரால் முயற்சிகள் எடுக்கபட்டு வருகின்றன. கருத்தளவில் எனக்கு பால் தாக்கரேயின் மீது கோபம் இருந்து நான் என்றோ ஒரு நாள் பால் தாக்கரேயினை விமர்சிக்கும் குழுவில் உறுப்பினராகி பிறகு அதனை மறந்து விட்டால் கூட இன்று நான் காவல்துறையினரால் கைது செய்யபடும் ஆபத்து இருக்கிறது.

    கடந்த ஆண்டு எகிப்தில் 22 வயது மாணவர் அப்துல் கரீம் தனது வலைப்பதிவில் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும், எகிப்திய ஜனாதிபதியை பற்றி தவறான கருத்துகளை சொன்னதற்காகவும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டார் என்பதை இன்னும் பலர் மறந்திருக்க மாட்டார்கள். எகிப்தில் அப்துல் மோனம் மகமூத் என்கிற வலைப்பதிவரும் தன் வலைப்பதிவில் எழுதிய விஷயத்திற்காக 46 நாட்கள் சிறையில் இருந்தார். சீனாவில் அரசாங்கத்தை பற்றி தவறாக எழுதும் வலைப்பதிவர்களின் பக்கங்களை தடை செய்து விட்டார்கள் என கேள்விபட்டிருக்கிறோம். சவுதி அரேபியாவில் தனது உண்மையான பெயரை வெளிப்படையாக சொல்லி வலைப்பதிவு நடத்திய ஃபகுத் அல் ஃபர்கான் கடந்த ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசம்பர் பத்தாம் நாள் கைது செய்யபட்டார்.

    இங்கிலாந்தில் வாழும் 31 வயது பால் ரே என்பவர் லயன் ஹார்ட் என்னும் புனை பெயரில் வலைப்பதிவு எழுதி கொண்டு வந்தார். போதை பொருள் கள்ள வணிகம், இஸ்லாமிய அடிப்படைவாதம், காவல்துறை ஊழல் பற்றி அவரது வலைப்பதிவில் கருத்துகள் எழுதினார். இஸ்லாமியர்களுக்கு எதிரான இவரது எழுத்துகளினால் உண்டான பரபரப்பை அடுத்து இவருக்கு எதிராக இங்கிலாந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நிருபிக்கபட்டால் அவருக்கு ஏழு வருடம் வரை தண்டனை கிடைக்கலாம். தற்போது அவர் அமெரிக்காவிற்கு குடி பெயர முடிவெடுத்திருக்கிறார்.

    இப்போது எழும் கேளவி இது தான்? அரசியல்வாதிகளையோ பெரும் நிறுவனங்களையோ கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு பாதுகாப்பு உண்டா? நம்மூர் பெருந்தலைகளுக்கு விமர்சனங்களை தாங்கி கொள்ளும் பக்குவம் கிடையாது என்பதை பத்திரிக்கையாளர்கள் அறிவார்கள். அப்படியிருக்க ஒரு குறிப்பிட்ட அமைச்சரை பற்றி, அவரது லஞ்ச லாவண்யத்தை பற்றி தக்க ஆதாரங்களுடன் ஒரு தமிழ் பதிவர் தனது வலைப்பதிவில் எழுதினார் என்றால் அவருக்கு பாதுகாப்பு உண்டா என்பது ஒரு பெரும் கேள்விக்குறி. கூகுள் போன்ற பெரும் இணைய நிறுவனங்கள் தங்கள் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கங்களிடம் மோதி தங்களது வியாபார வளத்தை கெடுத்து கொள்ள மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க.

    தமிழகத்தில் வலைப்பதிவர்களை கைது செய்வதும் அல்லது அவர்கள் மீது மானநஷ்ட வழக்குகளை போடுவதும் வருங்காலத்தில் நடப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் இது பற்றிய தெளிவான சட்டங்கள் இல்லை என்கிற விஷயத்தால் வலைப்பதிவருக்கு பாதகம் தான் நிகழும். தீவிரவாதிகள் என்னும் முத்திரை விழுந்து விட்டால் கேள்விகளே கேட்க முடியாது. முக்கியமாக விடுதலை புலிகள், நக்ஸ்லைட்கள், சிமி இயக்கத்தை பற்றி தொட்டும் தொடாமல் எழுதினாலே வலைப்பதிவர் மீது வட்டம் விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம். நீதி மன்றத்தில் நின்று ஜெயிப்பதல்ல விஷயம். காவல் நிலையம், நீதிமன்றம் என்று இழுத்தடிக்க படுவதே தண்டனை தான்.

    வலைப்பதிவர்கள் அனைவரும் தாங்கள் எழுதுவது குறித்து முதலில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கடும் விமர்சனங்களை எழுதுபவர்கள் ஆதாரபூர்வமாய் எழுதுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க யாராவது முனையும் பட்சத்தில் அதனை எப்படி எதிர்கொள்வது என தயாராய் இருக்க வேண்டும்.

    மான நஷ்ட ஈடு வழக்கு
    பேசப்படும் வார்த்தைகள், எழுதபடும் வார்த்தைகள், சைகையால் பரிமாறப்பட்ட தகவல் அல்லது தெளிவாய் புலப்படும் கருத்து பரிமாற்றம் – இவற்றின் மூலம் ஒரு நபருக்கு பாதிப்பு உண்டாக்கும் என தெரிந்தும் அவரது பெயருக்கு மாசு உண்டாக்குவது மான நஷ்ட ஈடு வழக்கிற்கு கீழ் வரும். எனினும் இதில் விதிவிலக்கு உண்டு.

    • பொது நன்மைக்காக ஒரு நபரை பற்றிய உண்மையை வெளியிடுவது.
    • அரசு ஊழியர் தனது கடமையில் இருந்து தவறியதை பற்றிய உண்மைகளை வெளியிடுவது.
    • பொதுவில் விவாதிக்கபடும் விஷயத்திற்காக ஒரு நபரை பற்றிய உண்மையை வெளியிடுவது.
    • நீதிமன்றத்தால் ஊர்ஜிதமாக்கபட்ட விஷயங்களை வெளியிடுவது.
    • பொது மக்களின் கருத்துகளை பெறுவதற்காக செய்யபடும் பொது காரியங்களை பற்றிய கருத்துகள்.
    • சட்டப்படி ஒருவரது நடத்தை விமர்சிக்கும் உரிமை இருக்கும் பட்சத்தில் தவறில்லை.
    • தனது பாதுகாப்பிற்கோ அல்லது நலனிற்காக மற்றொருவரின் உண்மைகளை வெளியிடுவது.
    • ஆபத்தினை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க செய்யபடும் சமூக நலனுக்கான காரியம்.

    நான் வழக்கறிஞரோ சட்ட நிபுணரோ அல்ல. மேற்கோள் காட்டபட்டிருப்பது எனது புரிதலினால் எழுதியிருக்கும் சிறு விளக்கமே தவிர இந்த சட்டத்தை பற்றி முழுமையான விளக்கம் அல்ல. ஒருவரின் பெயருக்கு களங்கம் கற்பித்தது நிருபிக்கபட்டால் இரண்டு வருட சிறைதண்டனை கூட கிடைக்கலாம்.

    தமிழ் வலைப்பதிவர்கள் மீது வழக்குகள், நடவடிக்கைகள் எடுக்கபட்டு பிறகு வலைப்பதிவுகளிலும் ஊடகங்களிலும் கண்டன குரல்களும் எழுந்து, அவற்றிற்கு பிறகு அரசு அதிகார வட்டங்களில் வலைப்பதிவருக்கான கருத்துரிமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் வரை காத்திருந்தால், அதற்குள் சிலரது தலைகள் உருண்டிருக்கும். வருவதற்கு முன்பே தேவை விழிப்புணர்வு.

    நன்றி:

    கருத்து படம்: http://najialali.hanaa.net/

    படம்: கைது செய்யபட்ட எகிப்து மாணவர் அப்துல் கரீம்


  • இந்த மாதம் இரண்டு குழந்தைகளை பற்றிய இரு தனி செய்திகள் பத்திரிக்கைகளில் சர்ச்சைகளாக உருவெடுத்தன.ஒன்று மும்பையில் உள்ள ஹரீஷ் மற்றும் நீகிதா மேத்தா தம்பதியினர் கருவில் உள்ள தங்கள் (25 வார வயதுள்ள) குழந்தைக்கு இருதயத்தில் குறைபாடு உள்ளது கண்டுபிடிக்கபட்டுள்ளதால் அதனை கருகலைப்பு செய்ய அனுமதி கேட்டு மும்பை உயர் நீதிமன்றம் படியேறியதும், அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்த சம்பவம். கருகலைப்பு செய்வதற்கான சட்டம் இந்தியாவில் இப்போது விவாத பொருளாகி இருக்கிறது. 20 வாரங்களுக்குள் அபார்ட் செய்ய சட்டம் அனுமதிக்கிறது. அதற்கு பிறகு அபார்ஷன் செய்வதென்பது தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என சட்டம் பொருள் கொண்டுள்ளதால் இந்த நிலை. இந்த சட்டம் இயற்றபட்ட ஆண்டு 1971-ம் வருடம். இதற்கு பிறகான 35 வருடங்களில் மருத்துவத்துறை பெரியளவு முன்னேறி விட்டது. இன்று தாயாரின் உயிருக்கு பாதகம் விளைவிக்காமல் பிரசவ காலத்தின் எந்த சமயத்திலும் கருகலைப்பு செய்யும் திறன் மருத்துவத்திற்கு உண்டு. என்றாலும் சட்டம் இந்த வளர்ச்சியை கணக்கில் எடுத்து கொண்டு தன்னை மேம்படுத்தி கொள்ளவில்லை. மாறாக இந்த பிரச்சனை தேசிய அளவில் ஊடகங்களால் பெரிதாக்கபட்ட பிறகு, சுகாதார நலத்துறை அமைச்சர் அன்புமணி இதை பற்றிய விவாதங்கள் கவனத்தில் கொள்ளபடும் என சொல்லியிருக்கிறார்.சட்டங்கள் நிகழ்காலத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் சட்டங்களை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்கிற நிலை உருவாகும்.

    சட்டங்களை மதிக்காதவர்களுக்கு உதவி செய்ய இன்று இந்திய தேசத்தில் ஆயிரம் வழிகள் உள்ளன. ஆனால் சட்டபடி நடக்க வேண்டும் என ஹரீஷ் மற்றும் நீகிதா மேத்தா போன்றவர்கள் நினைக்கும் போது அவர்களுக்கான பாதை முட்களால் நிரப்பப்பட்டிருக்கிறது.

    நீகிதா மேத்தாவிற்கு இயற்கையாகவே பிறகு கருகலைப்பு நடந்து விட்டது என்பது கடைசி செய்தி.

    *****************************************

    மற்றொரு சம்பவத்தில் ஜப்பானை சேர்ந்த யமடா தம்பதியினர் இந்தியாவில் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டார்கள். முகம் தெரியா பெண்ணிடம் இருந்து கருமுட்டை (தானமாக) எடுக்கபட்டது. மருத்துவரீதியாக குழந்தையின் தந்தை யமடாவாக இருந்தாலும், குழந்தையின் தாய் அந்த தானமளித்த பெண் தான்.

    இந்தியாவில் கருமுட்டைகளை தானமாக கொடுப்பதும், வாடகைதாயாக இருப்பதும் சட்டபடி (பல நிபந்தனைகளுடன்) அனுமதிக்கபட்டிருக்கிறது. ஆனால் குழந்தையை வாடகைதாய் பெற்றெடுப்பதற்குள் கணவனும் மனைவியும் பிரிந்து விட்டார்கள். மனைவிக்கு இப்போது குழந்தையின் மீது ஆர்வமில்லை என்றாலும் கணவர் யமடா தன் குழந்தையை தன்னோடு ஜப்பானுக்கு அழைத்து செல்ல முயன்று வருகிறார். யமடா சம்பந்தபட்ட வாடகைத்தாய் முறையிலே சரியான சட்ட விதிமுறைகள் பின்பற்றபடவில்லை என்று இப்போது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் குற்றச்சாட்டுகள் எழுப்பியதோடு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் குழந்தையின் மீதான யமடாவின் உரிமையை கேள்விக்கும் உள்ளாகியிருக்கிறது.

    குழந்தை மாஞ்சி யமடா ஜப்பானுக்கு போகுமா அல்லது இந்தியாவில் பொதுநல தொண்டு நிறுவனத்தில் வளருமா என்கிற கேள்வி சில நாட்களாக அலசபட்டது. இப்போது குழந்தை யமடவின் தாயாரிடம் (குழந்தையின் பாட்டியிடம்) இருக்குமெனவும் அடுத்த உத்தரவு வரும்வரை குழந்தையை அவர்களிடமிருந்து பிரிக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது. எனினும் வழக்கு இன்னும் முடிவிற்கு வரவில்லை. குழந்தை மாஞ்சி யமடா இன்னும் மருத்துவமனையிலே தன் பாட்டியின் பராமரிப்பில் இருக்கிறது.

    கருகலைப்பு என்பதும் வாடகைத்தாய் முறை என்பதும் உலகமெங்கும் விவாதத்திற்குள்ளாகி வரும் தலைப்பு. எனினும் இந்தியாவில் இதனை பற்றிய முழுமையான தெளிவு சட்ட நிபுணர்களிடமும் பொது மக்களிடமும் இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஜப்பானை சேர்ந்த ஒரு கணவன் மனைவி எதற்காக இந்தியாவிற்கு வந்து குழந்தை பெற்று கொள்ள வேண்டுமென நினைக்க வேண்டும்? மற்ற நாடுகளை விட இங்கு சட்டங்கள் கடுமையாக இல்லை என்பது தான் காரணமா?

    சரியான சமயத்தில் முறையாக சட்டங்களை மேம்படுத்தாமல், ஏதேனும் பரபரப்பு ஏற்படும் போது மட்டும் அவசர கோலத்தில் மிக கடுமையாக நடந்து கொள்வதே நம் அதிகார வர்க்கத்தினரின் வழிமுறையாக இருக்கிறது.

    இது தான் இரண்டு குழந்தைகள் பற்றிய சமீப செய்திகள் நமக்கு மீண்டும் தெளிவுபடுத்திவிட்டு போயிருக்கும் அவலம்.