• மனிதர்களும்,
    மிருங்களும்,
    பறவைகளும்,
    மனித தலையும் விலங்குகளின் உடலை கொண்டவர்களும்,
    பறவைகளின் இறக்கை கொண்டு பறக்கும் கொடிய மிருகங்களும்,
    மாயஜால மந்திரவாதிகளும்,
    சூன்யக்காரிகளும்,
    வீரத்திற்கு புகழ் பெற்ற தளபதிகளும்,
    தந்திரத்திற்கு பேர் வாங்கிய தலைவர்களும்
    போரிடுவதற்காக கூடும் இந்த போர்க்களம்
    இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இரத்த கறையோடு விளங்க போகிறது.
    நீயும் நானும் பிறப்பதற்கான முதல் வித்து
    தோன்ற போவதும் இங்கு தான்.
    நம் இனத்தின் கடைசி சாபம் உருவாகும் இடமும் இது தான்.


  • ஜனநாயகம் என்பது என்ன?

    இன்று நடைமுறையில் இருப்பது உண்மையான ஜனநாயகம் தானா? ஜனநாயகம் என்பது மக்களே தங்களை தாங்களே ஆண்டு கொள்ளும் முறை என்று சொல்லபடுகிறது. அதில் கண்ணுக்கு தெரியாத சின்ன திருத்தம் ஒன்று இருக்கிறது. மக்கள் தங்களுக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக தங்களை ஆண்டு கொள்ளும் முறை என வரையறுக்கபடுகிறது. பிரதிநிதிகள் ஒழங்கானவர்கள் தானா என எப்படி அறிவது? அதற்கு தானே ஐந்து ஆண்டு காலக்கெடு, அவர்கள் ஒழங்காய் இல்லை எனில் அவர்களை தூக்கி எறிந்து விட்டு வேறு யாரையாவது தேர்ந்தெடுத்து கொள்ளலாமே என சொல்வார்கள்.

    வெகு சிலரிடம் மட்டும் அதிகாரம் இருப்பதால் என்ன பயன்?

    இன்றைய யதார்த்ததை மேற்சொன்னவற்றோடு ஒப்பிட்டு பாருங்கள். அரசியல் கட்சிகள் பெரும்பாலும் யாராவது ஒருவர் கட்டுபாட்டில் இயங்கும் சூழ்நிலைக்கு வந்து விட்டன. உட்கட்சி ஜனநாயகம் என்பது எல்லாம் கேலி கூத்தாகி விட்டன. அரசியலில் ஆர்வமுள்ள தகுதியான ஓர் இளைஞர் பணம் செல்வாக்கு எதுவுமின்றி இன்றைய பெருங்கட்சி எதிலாவது வேட்பாளராக தேர்ந்தெடுக்கபடுவது கிட்டதட்ட முடியாத காரியம். அப்படியானால் மக்கள் தங்களுக்கான பிரதிநிதியை தேர்வு செய்கிறார்களா? அல்லது வெகு சில அரசியல் சக்திகள் சுட்டி காட்டும் நபர்களில் ஒருவருக்கு வோட்டு போடுகிறார்களா? அப்படியானால் இதில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது மக்களா அல்லது அந்த அரசியல் சக்திகளா? வெறும் பத்து இருபது பேர் மட்டும் தான் இந்த ஜனநாயகத்தை ஆள்கிறார்கள் எனில் அப்புறம் எதற்கு இதற்கு ஜனநாயகம் என்று பேர்.

    எழுத்தறிவில்லா சமூகத்திற்கு இதை பற்றி விழிப்புணர்வு இல்லை

    பெருங்கட்சிகளை பிடிக்கவில்லை எனில் மக்கள் சிறுகட்சிகளுக்கோ அல்லது சுயேட்சைகளுக்கோ வோட்டு போட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தகுதியான நபரை பார்த்து வோட்டு போட வேண்டும் என்கிற விழிப்புணர்வு எவ்வளவு பேருக்கு இருக்கிறது? பெரும்பாலும் எழுத்தறிவில்லாத நமது மக்களிடையே குறிப்பிட்ட கட்சிக்கு வோட்டு போடுமளவு தூண்டுவதற்கு அந்தந்த வார்டுகளில் ஒரு பெருந்தலை இருக்கிறது. அந்த பெருந்தலையை அந்த குறிப்பிட்ட கட்சி தான் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் எதாவது டெண்டர் கொடுத்தோ அல்லது வேறு வகையிலோ கவனித்து கொள்கிறது. ஆனால் வோட்டு போட்ட மக்களின் கதி என்ன?

    இதற்கு என்ன தீர்வு?

    சரி இது தான் தேர்தலின் நிலை. தேர்தலில் வோட்டு போடுவதை தவிர ஒரு சாதாரண குடிமகனுக்கு வேறு ஜனநாயக கடமைகளே கிடையாதா? ஜந்து வருடங்களில் அந்த ஒரு நாள் மட்டும் தான் அவனுக்கு அதிகாரமா?

    சென்னையில் காந்தீய காங்கிரஸ் மற்றும் சாத்வீக சமூக சேவகர் சங்கம் ஆகிவற்றின் அமைப்பாளர் வ.சொக்கலிங்கம் என்பவர் ஒரு கூட்டத்தில் நிகழ்த்திய உரையின் சாரம்சத்தை ஓட்டி என் கருத்தினை அதோடு கலந்து கீழே தருகிறேன்.

    எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் நடந்தது ஒரு சம்பவம். சாலை சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் டெண்டர் எடுத்தவர் எதோ பேருக்கு சாலை போடுவது போல அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் என போட்டு விட்டு காணாமல் போய் விட்டார். நான் சொந்த காசு கொடுத்து நேரிடையாக வேலை வாங்கி இருந்தால் இப்படி என்னை ஏமாற்றி விட்டு போக முடியுமா? சம்பந்தபட்ட அதிகாரிகள் இதை எல்லாம் கண்காணிக்கிறார்களா அல்லது லஞ்ச பணத்தை கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்களா? இதை தட்டி கேட்க எங்கு மனு கொடுத்தாலும் ஒன்றும் நடப்பதில்லை. (மனு கொடுத்தவருக்கு அடிஉதை கிடைக்காமல் இருந்தாலே ஆச்சரியம்.) அப்படியானால் சாதாரண குடிமகனாகிய எனக்கு எந்த அதிகாரமும் கிடையாதா?

    உண்மையான ஜனநாயகம் என்பது என்ன?

    நமது ஜனநாயகம் நிறுவபட்ட போது உள்ளாட்சிகளை விரைவில் ஓர் அதிகார பீடமாக கொண்டு வருவதாக சொல்லபட்டது. அரசமைப்பு சட்ட உறுப்பு 40-ன் மூலம் அரசு கொள்கையினை நெறிபடுத்தும் கோட்பாடு (Directive principles of state policy) என்ன சொல்கிறது? அனைத்து மாநில அரசும் கிராம பஞ்சாய்த்துக்களை உருவாக்கவும், அவை தன்னாட்சி அமைப்புகளாக செயல்படுவதற்கு தேவையான அதிகாரங்களையும், அதிகாரம் செலுத்தும் உரிமையினையும் வழங்கவும் வேண்டும் என இந்த நெறிமுறை கோட்பாடு சொல்கிறது. ஆனால் யதார்த்தத்தில் இந்த கட்டளை இன்னும் நிறைவேற்றபடவில்லை.

    அடிதட்டு மக்கள் வரை அனைவரது கைக்கும் அதிகாரம் சென்றடைய வேண்டி இந்த நெறிமுனை கோட்பாடுகள் உருவாக்கபட்டன. ஆனால் இவை ஆளும் அதிகாரத்தால் உதாசீனபடுத்தபட்டு விட்டன.

    உள்ளாட்சிகளுக்கு போதிய அதிகாரங்கள் இன்னும் கொடுக்கபடவில்லை. இன்று நம்மிடையே அதிகாரத்தில் இருப்பது ஒன்று மத்திய அரசாங்கம், இன்னொன்று மாநில அரசாங்கம். இதில் மூன்றாவதாக அதிகாரத்திற்கு வர வேண்டியது உள்ளாட்சிகள். இதன் மூலம் அந்தந்த பகுதி மக்கள் தங்களை தாங்களே ஆண்டு கொள்ளும் முறை அமுலுக்கு வரும். அதிகாரம் ஒரு சிலரது கையில் மட்டும் இல்லாது பரவலாக்கப்படும்.

    அமெரிக்காவில் பிரிட்டிஷ்காரர்கள் வந்து குடியேறினார்கள். பிறகு அவர்கள் பிரிட்டிஷ் மகாராணியை ஏற்று கொள்ள மாட்டோம் என போரிட்டு வென்று தங்களுக்கு ஜனநாயக நாட்டை நிறுவி கொண்டார்கள். இந்த சிவில் யுத்தம் நடைபெற தொடங்கிய சமயம் ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் கூடி தாங்கள் எந்த பக்கம் சேர போகிறோம் என்பதை விவாதித்து முடிவு எடுத்தார்கள். அந்த விவாதத்தில் ஒவ்வொரு குடிமகனும் தனது கருத்தை பதிவு செய்ய அனுமதிக்கபட்டான். நான் சொல்வது சிவில் யுத்தம் பற்றி அல்ல. அந்தந்த கிராமங்களில் இருந்த ஜனநாயகத்தை பற்றி. சாலை போடுவதற்கான டெண்டர் எடுத்தவன் ஏமாற்றினால் கூட அதனை எடுத்து சொல்ல எனக்கு ஒரு சபை தேவை. அது குறைந்தபட்சம் எனது தெருமக்களுக்கானதாக இருக்கலாம். இதில் எனக்கு பிரதிநிதிகளே தேவை இல்லை. நானே பேசுவேன். எனது வரிப்பணத்தை சம்பளமாக பெறும் அதிகாரிகள் எனது குரலை மதிக்க வேண்டுமெனில் எனது உரிமை நிலைநாட்டபட வேண்டும். எனக்கு அதிகாரம் கொடுக்கபட வேண்டும்.

    ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம்

    அதிகார பரவலாக்கம் நடந்தால், பிறகு எனது பகுதியில் சாலை போடுபவர் ஏமாற்றினால் நான் அவரது டெண்டரை கேன்சல் செய்ய ஆவண செய்ய முடியும். எனது குரலுக்கு ஒரு மதிப்பு இருக்கும். லஞ்சம் வாங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஏனெனில் அப்போது நானும் ஆளும் வர்க்கம் தாம். ஜனநாயகத்தில் எல்லாருமே ஆளும் வர்க்கம் தான். மாறாக இன்று நடைமுறையில் இருப்பது ஆள்பவர்கள் ஆளபடுபவர்கள் என்கிற இரு பிரிவு தாம்.

    அடுத்த முறை தேர்தலில் ஓட்டு போடுவது உங்களது ஜனநாயக கடமை என யாராவது பிரச்சாரம் செய்தால், வோட்டு மட்டுமே ஜனநாயக கடமையல்ல, இன்னும் நிறைய கடமைகளும் அதோடு பல உரிமைகளும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கின்றன என நினைவுபடுத்துங்கள்.

    நன்றி:

    வ.சொக்கலிங்கம், அமைப்பாளர், காந்தீய காங்கிரஸ் மற்றும் சாத்வீக சமூக சேவகர் சங்கம்.

    ஓவியங்கள் – Allan Lissner


  • அவரது பெயர் அபிநயா. நாற்பது வயதாகிறது. தோற்றத்தில் இன்னும் முதுமை எட்டி பார்க்கவில்லை. கண்களில் மட்டும் எப்போதும் ஒரு லேசான சோர்வு. கணவனுடன் தனி குடித்தனம். இரண்டு குழந்தைகள். ஒரு பையன். ஒரு பெண். மூத்தவனுக்கு பதினைந்து வயதாகிறது.

    சராசரியான மத்தியவர்க்க பெண்மணி போன்ற வாழ்க்கை. கணவர் அரசு உத்தியோகத்தில் இருந்தார். ஸ்கூட்டர் பைக்காக மாறி ஆறு மாதங்களுக்கு முன்பு காராக மாறி இருந்தது. சொந்த வீடு கனவு நனவாகி விட்டது. மிக்ஸி, கிரைண்டர் என சாமான்களும், தங்க நகைகளும் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்பு பெட் ரூமில் ஏஸி மாட்டினார்கள். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குடும்பமாய் காரில் வெளியே எங்காவது போய் சுற்றி விட்டு வீடு திரும்புவார்கள். வருடத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு பயணம். வெளிநாட்டு சுற்றுலா செல்ல வேண்டும் என ஓர் எண்ணம் உண்டு. இன்னும் கைக்கூடவில்லை.

    சராசரியான மத்தியவர்க்க பெண்மணி போல தான் வாழ்ந்து வந்தார் அபிநயா. ஆனால் வாழ்க்கை அப்படி சுலபமானதாக இருப்பதில்லை போல. அவரிடம் திடீரென ஒரு மாற்றம். மேக்கப் சாதனங்கள் அதிகபடியாய் வாங்க தொடங்கினார். வயதை குறைக்க பிரயத்தனபட்டார். அணியும் ஆடைகளில் கவர்ச்சி அதிகரிக்க தொடங்கியது. நாற்பது வயதினை நெருங்கும் போது வரும் தடுமாற்றம் இது என நினைத்தார் அவரது கணவர். இல்லை ஒரு நாள் அதே தெருவில் வசிக்கும் வாலிபன் ஒருவனுடன் அபிநயா நெருக்கமாய் அமர்ந்து பேசி கொண்டிருப்பதைப் பார்க்கும் வரை.

    கணவருக்குச் சந்தேகம் ஒரு மின்னல் கீற்றாய் மனதில் தோன்றியது. ஆனாலும் அதனை உடனே மறக்க விரும்பினார். காரணம் இருவருடைய வயது. இந்த வயதில் வரக்கூடிய பிரச்சனையா இது? ஆனால் சந்தேக பொறி தீப்பொறியை விட வலிமையானது. படுக்கையில் மனைவி நடந்து கொள்ளும் விதம் புதுவிதமாய் இருந்தது.

    திருமணமான சமயத்தில் படுக்கையை கண்டாலே மிரண்ட மனைவி பின் எப்போதும் படுக்கையறையில் அதீத ஆர்வத்துடன் இருந்தது இல்லை. இப்போது திடீரென சில நாட்களாய் ஏன் வெறி பிடித்தவள் போல் ஆகிறாள்?

    பிறகு ஒரு நாள் உறவினர் இளைஞன் ஒருவன் அவர்களது வீட்டிற்கு வந்த போது அபிநயா அவன் மீது தேவையில்லாமல் உரசுவது போல தோன்றியது அவரது கணவருக்கு. இது போல வேறு வேறு மாதிரியான சம்பவங்கள் பார்க்க நேரிட்டது. ஆனாலும் பொறுமையாய் இருக்க நினைத்தார் அபிநயாவின் கணவர். கம்ப்யூட்டர் கிளாஸிற்கு போவேன் என மனைவி சொன்ன போது அவரால் அதற்கு மேல் பொறுமையாய் இருக்க முடியவில்லை. இது வரை அப்படிபட்ட வார்த்தைகளை அவர் உதிர்த்ததில்லை. ஆனாலும் ஒரு கோபத்தில் சொல்லி விட்டார்.

    சண்டை. திருமணமானதில் இருந்து இப்படி ஒரு வாரம் பேசாமல் இருந்ததில்லை. பிள்ளைகளுக்குக் கூட எதோ பிரச்சனை என புரிந்தது.

    ஒரு நாள் அலுவலகத்தில் அபிநயாவின் கணவர் தனது சக ஊழியருடன் பேசி கொண்டிருந்த போது ‘நாற்பது வயசுல நாய் குணம்’ தலைப்பு பற்றி பேச்சு மாறியது. காமவுணர்வு நாற்பது வயதில் எப்படித் தறிகெட்டு போகிறது என்பதாய் பேச்சு நீண்டது. அபிநயா மீது அவளது கணவருக்கு பரிவு தோன்றியது அப்போது தான். முழுமையான காமவுணர்வே அவளுக்கு இப்போது தான் முதன்முதலாய் தோன்றி இருக்கிறது போல என தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டார். சிறு வயதில் கண்டிப்பான பெற்றோர், பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடம், மிஸ்டர் பெர்பெக்ட் கணவன் இப்படியாக அவள் நாற்பது வருடங்கள் வாழ்ந்து விட்டாள். இப்போது லேட்டாய் வந்த காமவுணர்வு அவளை தவறான வழியில் அழைத்து சென்று விடக்கூடாது, அதற்கு நாம் தான் அவளுக்கு உதவ வேண்டும் என நினைத்தார் அவளது கணவர்.

    இனிப்பு பண்டங்கள், பூ என வாங்கி கொண்டு அலுவலகத்தில் இருந்து சீக்கிரமே அன்று கிளம்பி விட்டார். கார் அவரது வீட்டிற்கு போன போது பிள்ளைகள் இன்னும் வீடு திரும்பி இருக்கவில்லை. வீடு அசாதாரண அமைதியுடன் இருந்தது. கதவு மிக லேட்டாக தான் திறக்கபட்டது. நைட்டியில் மிக கடுப்பாய் முகத்தை வைத்தபடி கதவைத் திறந்த மனைவியின் முகத்தில் புரிந்து கொள்ள முடியாத உணர்வுகள் தெரிந்தன. மனதில் இருந்த தெளிவு சற்றே தள்ளாட அபிநயாவின் கணவர் வீட்டிற்குள் நடந்து போகும் போது வீட்டு பின்கதவு தாழிடப்படாமல் இருப்பதை பார்த்தார்.

    இரகசியம்: நாற்பது வயதில் சந்தேகம் அதிகமாகும் என்பார்கள். அது உண்மையா என தெரியாது. அபிநயாவின் கணவர் சில மாதங்களுக்குப் பிறகு சகஜமாகி விட்டார். ஒன்றிரண்டு வருடத்தில் அபிநயாவும் சகஜமாக மாறி விட்டது போல் தோன்றியது. அன்று பின்கதவு வழியாய் அவசரமாய் வெளியேறிய அந்த இளைஞன் தனது ஷூக்களை வீட்டு வாசல் அருகில் விட்டு சென்று விட்டான். நல்ல வேலையாய் அபிநயாவின் கணவர் அதனைக் கடைசி வரை கவனிக்கவே இல்லை.

    நன்றி:

    முதல் ஓவியம்: Mellisa Fiorentino

    இரண்டாவது ஓவியம்:Tyler Haney

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஈழப்பிரச்சனை தாக்கம் ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் பிரதான தாக்கம் ஏற்படுத்துமா என்பது தான் கேள்வி.

    இந்திரா காந்தி இறந்த போது எழுந்த அனுதாப அலை, ஒரு சமயம் ஜெயலலிதா அரசின் மீதான அதிருப்தியால் அவரது கட்சியை படுதோல்வியை சந்திக்க வைத்த பொது அதிருப்தி இது போன்று ஈழப்பிரச்சனையும் வருகிற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

    தமிழக மக்கள் ஈழப்பிரச்சனை பற்றிய உணர்வுடன் இருந்தாலும், இந்த பிரச்சனையில் அதிமுக, திமுக ஏன் தேமுதிக கூட ஒரே விதமான நிலைபாடுடன் தான் இயங்குகின்றன. அதாவது சந்தர்ப்பவாதம். அப்படியானால் மக்கள் வருகிற தேர்தலில் தங்கள் உணர்வுகளை எப்படி பதிவு செய்வார்கள்.

    என்னை பொறுத்த வரை ஈழப்பிரச்சனை எந்தளவு தாக்கத்தை தமிழக தேர்தலில் ஏற்படுத்தும் என்பதை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடையும் வெற்றி/தோல்வி/படுதோல்வி இவற்றை கொண்டே அளவிட முடியும்.

    ஈழப்பிரச்சனையில் தங்கள் நிலைபாடு இந்த தேர்தலில் தங்களுக்கு பலவீனமாக மாறும் என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்து இருக்கிறது. அதனாலே ப.சிதம்பரம் ஈழப்பிரச்சனைக்கு தாங்கள் தலையிட்டு மனித உரிமை மீறலை தடுத்தது போல தற்போது பேச தொடங்கி இருக்கிறார்.

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பல காட்சிகள் மாறி இருக்கின்றன. அரசியல் தலைமையகங்கள் சற்று நடுக்கத்துடன் தான் இருக்கின்றன. வேட்பாளர்கள் அறிவிக்கபட்டு பிறகு மாற்றபடுவது இந்த நடுக்கத்தினை தான் வெளிபடுத்துகிறது. காய் நகர்த்தலின் ஒரு கட்டத்தில் கூட தவறு இழைக்கபட கூடாது என எல்லாரும் நினைக்கிறார்கள். இதனாலே எல்லாருமே தாங்கள் ஈழப்பிரச்சனையில் தீர்வு காண விரும்புகிறோம் என்கிற தோற்றத்தை வெளிபடுத்தி கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதாவே ஈழப்பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருக்குமளவு தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்து இருக்கிறார் என்றால் ஈழப்பிரச்சனையின் தாக்கம் வருகிற தேர்தலில் கடுமையாக இருக்கும் என்பதினால் தானே.

    தேர்தல் தேதி நெருங்க நெருங்க ஈழத்தில் இருந்து வரும் செய்திகளை பொறுத்து இந்த தாக்கத்தின் வீரியம் அதிகரிக்க கூடும்.

    தேர்தலில் ஈழப்பிரச்சனை தாக்கமேற்படுத்தும் என்றாலும் தேர்தலுக்கு முன்னாலும் பின்னாலும் தமிழக அரசியல் தலைமையகங்கள் ஈழப்பிரச்சனையில் அதே சந்தர்ப்ப வாதத்துடன் தான் இயங்கும் என்பது குரூரமான யதார்த்தம்.


  • செய்யும் காரியத்தில் மோகம். சாப்பிட்டால் சாப்பிட்டு கொண்டே இருத்தல். இல்லாவிட்டால் செய்யும் வேலையில் மோகம். உணவு உறக்கமின்றி வேலையிலே இருத்தல். சினிமாக்கள் பார்க்க தொடங்கி விட்டால் அப்படியே சினிமாக்களிலே லயித்திருத்தல். இப்படியாக ஒரு காரியத்திலே அதீத மோகத்தில் திளைத்திருப்பது பலருக்கு நடப்பது தான். இந்த அதீத மோகம் ஓர் எல்லையை தாண்டினால் மனநோயாகி விடுகிறது என்கிறார்கள். அதில் ஒரு வகை மனவியாதியின் பெயர் Obsessive Compulsive disorder. தமிழில் இதைக் கட்டுப்படுத்தவியலா பிளவுபட்ட மனநோய் என்கிறார்கள்.

    இன்னொரு எளிதான விளக்கம், கைகளைக் கழவினால் கழுவி கொண்டே இருப்பதான ஒரு மன வியாதியைப் பல பேர் கேட்டு இருக்கக்கூடும். பூட்டு போட்ட பிறகு பூட்டு சரியாக போடப்பட்டிருக்கிறதா என சரி பார்த்து கொண்டே இருப்பது. பூட்டிய பிறகு ஒரு முறையோ இரு முறையோ அல்லது மூன்று முறை இழுத்து பார்ப்பது கூட மன பிரச்சனை அல்ல. ஆனால் நடு இரவு தூக்கத்தில் இருந்து எழுந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து வந்து பூட்டை இழுத்து பார்த்தால் மனப் பிரச்சனை இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம்.

    OCD (Obsessive Compulsive disorder) பிரச்சனையின் உச்சத்தில் இருக்கும் ஒரு இளைஞனை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவனது பெயர் மைக்கேல். அவனை இளைஞன் என்று அழைக்க கூடிய தோற்றமல்ல. கல்லூரியில் முதலாமாண்டு படித்து கொண்டிருந்தான். ஒடிசலாய் ஒரு பள்ளிக்கூடத்து மாணவன் போல தோற்றம். ஆனால் கண்களில் ஒரு மெச்சூரிட்டி இருந்தது. நன்றாக படிக்க கூடிய பையன் தான். பாவம் இப்போது இந்தப் பிரச்சனை காரணமாய் படிப்பு கெட்டு விட்டது.

    வேலையாய் கிளம்பும் போது எதிரில் பூனை வந்தால் போகிற காரியம் நிறைவேறாது என நினைப்பது போல அவனுடைய மனம் எல்லாவற்றிற்கும் ஓரு பட்டியல் வைத்து இருந்தது. சாலையில் நடக்கும் போது எதிர்படும் பேருந்துகளின் எண்களை கணக்கெடுத்து கொண்டே போவான். அதன் முடிவில் அன்றைய தினம் எப்படி இருக்கும் என அவனால் யூகிக்க முடிவதாய் அவனாய் நினைத்து கொள்வான். புதிதாய் அறிமுகமாகும் பெண் சிகப்பு நிற உடை அணிந்து இருந்தால் அவளால் ஆபத்து. பச்சை நிற உடை அணிந்து இருந்தால் கட்டாயம் நல்லவளாய் இருப்பாள். ஒரு வீட்டினுள் நுழையும் போது வாசலில் கிடக்கும் செருப்புகளில் எவ்வளவு செருப்புகள் ஜோடிகளாய் இருக்கின்றன, எவ்வளவு ஜோடி மாறி கிடக்கின்றன என்பதை எண்ணி பார்த்தால் அந்த வீட்டின் தன்மையை அறிந்து கொள்ள முடியுமென நம்பினான். இப்படி ஒரு நீளமான பட்டியல். காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்க போகும் வரை அவனது மனதில் இந்த பட்டியல்களும் அதற்கான கணக்கெடுப்புகளும் நிரம்பி கிடக்கின்றன. இதன் காரணமாய் அவனது சிந்தனை வேறு எதிலும் லயிப்பதில்லை. எந்த எளிதான காரியத்தையும் செய்ய இயலாதவனாய் மாறி போனான்.

    அவனோடு சில நிமிடங்கள் பேசிய போதே அவன் அறிவாளியாய் தெரிந்தான். தனக்கு இந்த நோய் இருப்பது பற்றியும் இந்த நோயின் முழு தன்மை பற்றியும் இணையத்தில் முழுமையாய் படித்து தேறியிருப்பது பற்றியும் சொன்னான்.

    அவனுடைய பெற்றோர்கள் அவனை ஒரு நல்ல மனோத்தத்துவ நிபுணரிடம் காட்டியிருந்தார்கள். அவர் இதற்கான பிரத்யேகமான மருந்துகளை அவனுக்கு கொடுத்து கொண்டிருந்தார்.

    பனிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது அவன் கெமிஸ்டரி பாடத்திற்காக ஒரு டீச்சரிடம் டியூசனுக்கு போயிருக்கிறான். டீச்சர் என்று சொன்னால் அது ஓர் இளம் பெண் தான். அந்த பெண்ணின் வீட்டில் தான் டீயூசன் கிளாஸ் நடந்து இருக்கிறது. அந்த பெண் இவன் மீது அதிக அக்கறை காட்டி இருக்கும் போல. அப்புறம் இவன் பிரச்சனைக்குரியவன் என புரிந்ததும் சற்றே விலகி இருக்கும் போல. அந்த பெண் தன்னை காமவயப்படுத்த திட்டமிட்டதாகவும் தான் சற்று தயங்கியதும் தன்னை பழிவாங்க வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாகவும் என்னிடம் சொன்னான் மைக்கேல்.

    அந்த பெண்ணை மறந்து விடுப்பா என நான் சொன்னாலும் மைக்கேல் அந்தப் பெண்ணை பற்றி தான் பேசி கொண்டு இருந்தான். ஏன் என்னை தனியாய் வர சொல்லி விட்டு பிறகு எனக்கு முன்னால் கிழிந்த நைட்டி போட்டு கொண்டு அவள் உலவ வேண்டும். என்னை பரிசோதித்து பார்த்து இருக்கிறாள் என்கிற ரீதியில் அவனது பேச்சு இருந்தது.

    மற்றொரு சமயம் அவனை அறைக்கு வெளியில் அமர்த்தி விட்டு அவனது மருத்துவரோடு தனியாய் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த OCD பிரச்சனை இருப்பவர்களில் சிலருக்கு அதீத காம உணர்வுகள் இருக்குமென சொன்னார். அப்படியானால் அவன் தானாக பேசவில்லை. அவனாக இப்படியான கதாபாத்திரமாக மாறவில்லை. இந்த மனச்சிக்கல் தான் அவனை இப்படியாக மாற்றியிருக்கிறது. அப்படி என்றால் இது அவனில்லை, அந்த மனச்சிக்கல் தான். இல்லையென்றால் இந்த மனச்சிக்கலே அவன் தானா? பல கேள்விகளைக் கேட்க நினைத்தும் மருத்துவரிடம் எதுவும் கேட்காமல் கிளம்பி விட்டேன்.

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • மண் புழுதி தழுவியிருக்கும் தார்சாலையின் ஓரம்
    ஒரு கடை முன்னால் தொங்குகிறது அந்த போஸ்டர்.
    போஸ்டரில் நெகிழ்ந்த ஆடையில் தாராளமாய் தன்னை காட்டும் நடிகை.
    காகிதம் தான்.
    விரிகின்றன என் கண்கள்.
    ஆனால் முதுகை சுடுகின்றன ஆயிரம் பார்வைகள்.

    நிஜத்தில் அல்லாத இந்த ஆயிரம் பார்வைகளையும்
    யாருமற்ற பாலைவனத்திலும்
    எனது முதுகில் உணர்ந்து திரியும் நான்.


  • முதல் சந்திப்பிலே ஆச்சரியப்படுத்தும் மனிதர்கள் உண்டு. சுந்தரமூர்த்தியுடனான முதல் சந்திப்பு அவ்வாறு தான் இருந்தது.

    சுந்தரமூர்த்திக்கு அறுபது வயதிருக்கும். வெள்ளை சட்டை, வேட்டி தான் உடுத்தி இருந்தார். பணக்காரர் என்பதை அவரது வீடும் அவரது வீட்டை அலங்கரித்த பொருட்களுமே சொல்லின. அவருக்கென இருந்த பிரத்யேக அறையில் தான் என்னை சந்தித்தார். அந்த அறை வியாபார நிமித்தமாக வருபவர்களைச் சந்திப்பதற்காக என யூகித்தேன். வியாபாரத்திற்கென தனி அலுவலகம் அவருக்கில்லை என சொன்னார். தேர்ந்த ரசனையுடையவர் என்பதை அவர் அந்த அறையை அலங்கரித்து இருந்த விதமே சொன்னது. மென் நீல சுவர். தூசி படியாத நீல தரைவிரிப்பு. நான்கு சேர்கள். ஒரு நீளமான சோபா. பெரிய மேஜை. ஒரு மர பீரோ. சுவரில் அழகான ஓவியங்கள் இரண்டு. யார் வரைந்தது என தெரியவில்லை. ஆனால் மென்நீல சுவருக்குள் பொருந்துவதற்காகவே வரைந்தாற் போலிருந்தன. அறையின் பிரதானம் அந்த கம்ப்யூட்டர் மானிட்டர் தாம். அந்த அறையின் கர்ப்பகிரக தெய்வம் போல நாயகமாக இருந்தது. கம்ப்யூட்டர் மேஜையில் எக்கசக்க டிவிடிகள், சிடிகள் அதற்கான டிரேயில் அடுக்கபட்டிருந்தன.

    நான் அவருடன் பேசி கொண்டிருந்த போது ஓர் ஆவலில் என் கை அவரது டிவிடிகளை அலசியது. எல்லாமே வீடியோ கேம்ஸ் டிவிடிக்கள். அப்போது தான் கவனித்தேன். வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்காகவே அலங்கரிக்கபட்ட அறை இது. எல்லாம் புது மெஷின்கள். நவீன கேம்ஸ் வகையறாக்கள். இந்த அறுபது வயது ஆளா இந்த வீடியோ கேம்ஸினை விளையாட போகிறார்? அல்லது அது அவரது பேரன் (?) அறையா?

    “எனக்கு டூப்ளிகேட்டே பிடிக்காது. எல்லாமே புதுசு கம்பெனி ஐட்டமா இருக்கணும். சவுண்ட் சிஸ்டம், சாப்ட்வேர் எல்லாமே! கம்ப்யூட்டர் ரிப்பேர் பண்றவர் டூப்ளிகேட் கிராக் கேம்ஸ் தருவேன்னு சொன்னாரு. ஆனா நான் கடையில ஒரிஜினலைத் தான் வாங்கி பயன்படுத்தறேன்.” அறுபது வயதுக்காரர் தான் பேசுகிறார்.

    நான் புன்னகைக்கிறேன். அடப்பாவி பணக்கார சொகுசு வாழ்க்கையா?

    “வீடியோ கேம்ஸ்ல மூணு வகை இருக்கு. ஒண்ணு கார் ரேஸ் மாதிரியான விளையாட்டு. இன்னொன்று லாவகமாய் நகர்ந்து நகர்ந்து ஒவ்வொரு லெவலாய் ஆடும் பொறுமையான விளையாட்டு. மூன்றாவது தான் ஸ்டரடஜி கேம். எனக்கு மூனாவது தான் பிரியம். செஸ் விளையாடற மாதிரி. ஆனா போர்ட் கேம் இல்ல. ஏஜ் ஆப் எம்ப்பையர் மாதிரி. ஒவ்வொரு லெவலாய் நகர்ந்து கடைசி ஸ்டேஜ் வர பல மாசங்களாகும். அதுவும் என்னை மாதிரி நாள்முழுக்க விளையாட்டே கதின்னு கிடந்தா தான். இல்லன்னா வருஷக்கணக்கா ஒரே கேம் விளையாட்டிட்டு இருக்க வேண்டியது தான்.”

    விளையாட்டில் இத்தனை வகையா? நாள்முழுக்க விளையாட்டே கதின்னு கிடப்பாரா?

    சுந்தரமூர்த்தியை புரிந்து கொள்ள எனக்கு ஒரு வாரத்திற்கு மேலானது. அவர் ஒரு மிஸ்டர் பெர்பெக்ட். காலையில் நடை பயிற்சி. பகலில் அலுவலக வேலை போல வீடியோ கேம்ஸ். மாலையில் குடும்பத்துடன் காரில் எங்காவது பொழுதுபோக்கு விஷயம். பிறகு நண்பர்கள். இரவு நீண்ட நேரம் மீண்டும் வீடியோ கேம்ஸ். ஒழங்கான குடும்பஸ்தன் போல நடந்து கொண்டார்.

    “சிட்டியில எனக்கு நிறைய கடைகள் இருக்கு. எல்லாத்தையும் பார்த்துக்க ஆட்கள் இருக்காங்க, நிர்வகிக்க சொந்தங்கள் இருக்காங்க. வீட்ல பணத்துக்கு குறைச்சல் இல்ல. போதாதுக்கு இன்னும் கொட்டிட்டு இருக்கு.”

    சுந்தரமூர்த்தியின் வீட்டில் அவரை யாரும் தொந்திரவு செய்வது கிடையாது. அவருண்டு, அவரது வீடியோ கேம்ஸ் உலகமுண்டு.

    “தம்பி! ரொம்ப கஷ்டப்பட்டு ஏழை குடும்பத்துல இருந்து படிப்படியா வளர்ந்து வந்தவன் நான். சின்ன வயசுல இருந்து எனக்கு எது பிடிக்குமோ எது மேல ஆசையோ அது எனக்கு கிடைக்கவே கிடைக்காது. உழைக்கிறது தவிர வேறு எதுவுமில்லாம என் வாழ்க்கைய கழிச்சிட்டேன். இப்ப அதுக்கெல்லாம் சேர்த்து ரெஸ்ட் எடுக்கிறேன்.”

    சுந்தரமூர்த்தி பற்றி வியந்தபடி அவரிடமிருந்து நான் விடை பெற்று அவரது அறையிலிருந்து வெளியே வந்தேன். வெளியே ஹாலில் அவரது மகன் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அவர் மகனுக்கு முப்பது வயதிருக்கலாம். டீவியில் ஓடி கொண்டிருக்கும் ஒரு தமிழ் சீரியலை ஆவலாய் பார்த்து கொண்டிருந்தார்.

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • “…நமது அரசியலைப்பு உருவாகி அறுபது வருடங்களாகி விட்டன. தீண்டாமை இன்னும் அழிந்தபாடில்லை…” – நீதிபதி பி.கே.மிஸ்ரா & நீதிபதி ஜெயசந்திரன், உயர்நீதிமன்றம்.

    மேற்சொன்ன வார்த்தைகள் சமீபத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகளால் சொல்லபட்டவை. என்ன வழக்கு அது?

    திருச்சி அருகே மணப்பாறை தாலுக்காவில் உள்ள சம்பட்டி பஞ்சாய்த்து இடுகாட்டில் தலித் உடலை புதைக்க அனுமதி மறுத்தனர் சாதி இந்துக்கள். இது நடந்தது டிசம்பர் 2008இல். மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என எல்லா உயர் அதிகாரிகளும் அங்கு வந்து சமரசம் பேசினர். சாதி இந்துக்கள் தலித் உடலை இடுகாட்டில் அனுமதிக்க தயாராக இல்லை. காலம் காலமாக அரசு உயரதிகாரிகள் எடுக்கும் அதே முடிவை தான் இந்த உயரதிகாரிகளும் எடுத்தார்கள். சர்ச்சை உருவானால் சட்டம் ஒழுங்கு கெடும் என்பதால் எதற்கு வம்பு என்று தலித் உடலை வேறு இடத்தில் புதைத்து கொள்ள சொல்லி விட்டார்கள்.

    தற்போது இந்த விஷயத்தை பற்றி வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு மீதான விசாரணையில் தான் நீதிபதிகள் மேற்சொன்ன வரிகளை சொன்னார்கள். இத்தனைக்கும் இது அரசால் கட்டபட்ட இடுகாடு. மாவட்ட ஆட்சி தலைவரும், காவல் துறை அதிகாரிகளும் தீண்டாமையை தடுக்க இன்னும் தீவிரம் காட்டியிருக்க வேண்டும் என நீதிபதி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

    சாதி பிரச்சனைகள் வரும்போது, முக்கியமாக தலித் மக்கள் தங்களுடைய உரிமைகளை கோரும் போது காலம் காலமாக அரசும் அரசாங்க அதிகாரிகளும் அவர்களுக்கு எதிராக நிற்பதை பல சமயங்களில் காண முடியும். ஒன்று, அதிகாரிகள் பெரும்பாலும் சாதி இந்துகளாய் இருப்பது ஒரு காரணம். மற்றொன்று அதிகாரிகளுக்கு தங்களுடைய கடமைகளை விட, வீண் சிரமம் இல்லாமல் வேலைகளை முடித்து கொள்ள வேண்டும் என்கிற நழுவல் புத்தி. இந்த புத்தியினை பெரும்பாலும் காவல்நிலையங்களில் பார்க்கலாம். அங்கு பொதுவாக யார் புகார் கொடுக்க போனாலும், “இருக்கிற வேலை போதாதா, நீ வேற புகார் கொடுக்க வந்துட்ட,” என்பார்கள்.

    அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் ஒரு சிறு விளக்கை இருண்ட வனத்தில் ஏற்றியிருக்கிறார்கள்.

    ஓவியம் – deborahmcintosh


  • நடுத்தர வர்க்கத்திற்கான ஓட்டல்களில் சர்வர்கள் அலட்சியம் தாங்க முடியவில்லை. தண்ணீர் டம்ளர்களில் விரலை நுழைத்து அதை நமக்கு பருக தந்து விட்டு போகிறார்கள். என்ன இருக்கு என்றால் ஒரே நான்கு ஐட்டம் தான் சொல்வார்கள்.

    “இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா.”

    பக்கத்து டேபிளில் ஒருவர் குழி பனையாரத்தையும், இன்னொருவர் சாம்பார் இட்லியையும் சுவைத்து கொண்டிருக்கும் போது இந்த நான்கு ஐட்டம் மட்டும் ஏன் சொல்கிறாய் என்று கேட்டால் மெனு கார்ட்டை டேபிளில் வைத்து விட்டு போய் விடுவார்கள்.

    சில ஓட்டல்களில் சர்வர்களை பிடிப்பதே கஷ்டம். சாம்பாருக்காக எச்சக் கையோடு சர்வருக்காக நிமிஷக்கணக்கில் காத்து கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.

    என் நண்பன் ஒருவனோடு இப்படி ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது இதே மாதிரியான வேதனை (உட்கார்ந்து கால் மணி நேரமாகியும் ஆர்டர் எடுக்க ஆள் வரவில்லை.) என் நண்பன் மேனேஜரை கூப்பிட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டான். அடுத்தடுத்த உபசரிப்புகள் கடகடவென நடந்தன.

    நண்பனின் திறமை எனக்கு தெரியும். ஏனெனில் அவன் ஆறு மாதம் சர்வராய் வேலை பார்த்தவன் ஆயிற்றே.

    நண்பனின் பெயர் சுந்தரம். கல்லூரியில் என்னுடன் படித்தவன். திருநெல்வேலி அருகே ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன். அப்பா இல்லை. வீட்டில் பிரச்சனை. கல்லூரி முடித்த பிறகு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. ஒரு நாள் தாயாருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளிவந்தவன் என் அறைக்கு வந்தான். நான் நாளிதழ்களில் கிளாசிவைட் விளம்பரங்களில் பார்த்து வேலை தேட சொன்னேன்.

    சென்னையில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமா? முதல் நாள் அலைச்சலுடன் சோகத்துடன் அமர்ந்திருந்தான். அடுத்த நாள் ஓர் ஓட்டலில் நிர்வாக வேலைக்கு நேர்காணலுக்கு போகிறான்.

    “கிடைக்காதுன்னு சொல்லாதீங்க. வேற என்ன வேலை இருக்கோ அத கொடுங்கன்னு கேளுடா,” என்றேன்.

    அடுத்த நாள் இரவு, சுந்தரம் என்னிடம் அவனுக்கு அந்த ஓட்டலிலே வேலை கிடைத்ததாகவும், அங்கேயே தங்கி கொள்ள போவதாகவும் சொல்லி விட்டு போனான். அப்புறம் மூன்று மாதங்கள் கழித்து ஓரு நாள் என்னை சந்திக்க வந்தான். வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள், கையில் தங்க காப்பு என தோற்றமே மாறி வந்தான். எல்லாருக்கும் விருந்து வைத்தான்.

    மாதங்கள் உருண்டோடின. பிறகு வேறு ஒரு நண்பன் மூலம் நடந்த கதையை அறிந்தேன்.

    வேலை தேடி சுந்தரம் அந்த ஓட்டலுக்கு போன போது, அந்த நிர்வாக வேலை அவனுக்கு கிடைக்கவில்லை. நான் சொன்னபடி எனக்கு வேறு எதாவது வேலை கொடுங்க என கேட்டு இருக்கிறான். சர்வர் வேலை தானிருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள். அதை செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். பட்டதாரிகளுக்கு இந்த வேலை ஒத்து வராது என்று சொன்னவுடன் அப்படியானால் இப்பவே கல்லூரி சர்டிபிகேட்களை கிழித்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறான். கிடைத்து விட்டது சர்வர் வேலை. சில மாதங்களுக்கு பிறகு அவனது வீட்டார் தேடி வந்து அவனை மீட்டு ஊருக்கு திரும்ப கூட்டி போனார்கள்.

    பிறகு நிலைமை சகஜமானது. சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னை சந்திக்க வருவான். என்னை பொறுத்த வரைக்கும் சுந்தரம் பற்றிய மதீப்பீடை இரண்டு காலவகையாக வைத்து இருக்கிறேன். சுந்தரம் ஓட்டல் வேலைக்கு போவதற்கு முன், சுந்தரம் ஓட்டல் வேலைக்கு போனதற்குப் பின்.

    சுந்தரம் அந்த ஓட்டல் வேலைக்கு சேர்வதற்கு முன் அப்பாவி இளைஞன். எளிதில் பயப்படுவான். மிக நல்லவன். யாரிடமும் சண்டைக்குப் போக மாட்டான். அதாவது ஓட்டலில் நான் சொன்ன மாதிரி சண்டையெல்லாம் போடும் ரகமில்லை. ஆனால் சண்டையிடுமளவு எப்படி மாறினான்?

    ஓட்டலில் சர்வர் வேலை அவனை மாற்றி விட்டது. அவன் பட்டதாரி என்பது அவனுக்கும் ஓட்டல் முதலாளிக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அதனால் மற்றவர்களுடன் கலகலப்பாய் பழகுவதில் ஒன்றும் பிரச்சனையில்லை. ஆனால் மனதினுள் தீராத வெறி. பணம் சம்பாதிக்க வேண்டுமென்கிற வெறி. அதற்கும் அங்கே ஒரு குழு இருந்தது. சர்வர் வேலை பார்த்தது போக மற்ற நேரத்தில் வேறு வேலைகளில் ஈடுபட தொடங்கினான். ரெயில் நிலையங்களில் பிளாக் டிக்கெட் டெலிவரி பாய், அமெரிக்கன் தூதரகத்தில் வாசலில் கியூவில் நிற்பதற்கு வாடகை ஆள் – இப்படி அவன் செய்த வேலைகளின் பட்டியல் நீளமானது. அந்த ஒரு வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் அவன் நிறைய சம்பாதித்து விட்டான். வீட்டிற்கு போகும் போது தங்க ஆபகரணங்களாய் எல்லாவற்றையும் மாற்றி கொண்டு போனான்.

    ஓகே! இப்போது அந்த சுந்தரத்துடன் தான் ஓட்டலில் சாப்பிட்டு வெளியே வந்து கொண்டிருக்கிறேன். ஓட்டலில் அவன் சண்டை போட்டதும் கல்லூரி காலத்தில் இதே சுந்தரம் எப்படி வாயில்லா பூச்சியாய் இருந்தான் என நினைத்து பார்த்தேன். காலம் மனிதர்களை எப்படியெல்லாம் பதப்படுத்துகிறது.

    “ஏண்டா சர்வருங்க எல்லாம் பெரும்பாலும் இப்படி இருக்காங்க,” என சுந்தரத்திடம் கேட்டேன்.

    “இப்படி இந்த வேலையில இருக்கோமே அப்படிங்கிற எரிச்சல், தாழ்வு மனப்பான்மை, வர்றவன் போறவன் எல்லாம் நம்மை வையற மாதிரியான இடத்துல இருக்கோமேனு வருத்தம் இதெல்லாம் சர்வர்களுக்கு அதிகம். குறிப்பா முப்பது வயசு தாண்டின சர்வர்களுக்கு அதிகம். அடுத்து இது ஒண்ணும் கஷ்டப்பட்டு கிடைச்ச வேலையில்ல. இந்த ஓட்டலில் இல்லையானா அடுத்த ஓட்டல்ல வேலை கிடைச்சுடும். இது ஒரு மனோநிலை. அடுத்து நீ நினைக்கிற மாதிரி சுறுசுறுப்பான சர்வரா இருக்கிறது ரொம்ப கஷ்டம். வேலைக்கு சேர்ந்த முதல் இரண்டு நாள் அப்படி இருக்கலாம். ஆனா அதுக்கு அப்புறம் எப்படியிருந்தாலும் திட்டு விழ தான் செய்யுதுன்னு மத்தவங்களை மாதிரி ஆகிவிட வேண்டியது தான்.”

    “இவ்வளவு தெரிஞ்ச நீ எதுக்கு அந்த சர்வரையும் மானேஜரையும் திட்டுன?”

    சுந்தரம் புன்னகைத்தான்.

    “சர்வர் உலகத்தை பத்தி அக்கறைபடறது வேற. ஒழங்கா நமக்கு வேலை நடக்கணும்கிறது வேற. அப்புறம் இன்னொரு விஷயம். சண்டை போட்டா தான் கொஞ்சம் உபசரிப்பு இருக்கும். ஆனா எல்லை மீறி சண்டை போட்டா வேற மாதிரி ஆகிடும்.”

    சுந்தரம் விடைபெற்று தனது காரில் கிளம்பி சென்றான்.

    நன்றி:

    ஓவியம்: Victoria Heryet

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்!
    ஒவ்வொரு வீட்டிற்கு வெளியேயும் தொங்குகின்றன தொய்ந்து நைந்து போன முகமூடி!
    வீட்டிற்குள் வந்ததும்
    அவரவர் கண்ணாடியில் பார்த்து கொள்கிறார்கள்
    முகமூடி கழற்றபட்ட தங்கள் முகங்களை.

    முகமூடியை கழற்றியும்
    முகத்தில் தெரியவில்லை முகம்.

    சிலர் மட்டும் கழுவி கொண்டே இருக்கிறார்கள் முகத்தை!