•  என்னுடைய பதிவு ஒன்று ஒரு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அதில் உள்ள 16 பிரிவுகளில் உள்ள ஒரு பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றதாகவும் அதனால் அந்த தளம் எனக்கு ஒரு பதக்கம் கொடுத்ததாகவும் அந்த பதக்கத்தை நான் என் வலைப்பதிவின் முகப்பில் மாட்டி வைத்திருப்பேன் என சில மாதங்களுக்கு முன்னால் யாராவது சொல்லியிருந்தால் நான் சிரித்திருக்கக் கூடும். எனக்கு விருது கிடைக்க போவுதா? நல்ல கதை! என்கிற மாதிரியான தன்னடக்கம் அல்ல. நான் ஒரு பரிசு பதக்கத்தை ஷோ கேஷில் வைக்க மாட்டேன் என்கிற மாதிரியான திமிர் தான்.

    ஆனால் இன்று அது தான் நடந்தது. பதக்கத்தை கொடுத்தவுடன் முதல் ஆளாய் ஓடி போய் அதை வாங்கி வந்து முகப்பில் எல்லாரும் பார்க்கிற மாதிரி வைத்த பிறகு தான் இதிலே என்ன தவறு இருக்கிறது என எண்ணம் ஓடியது. பரிசு வாங்குவதற்கு துள்ளும் மனமும், வாங்கிய பரிசினை நண்பர்களுக்கு காட்டுகிற குதூகலமும் இன்றும் என்னிடம் இருப்பது, ‘நல்ல வேளை இன்னும் மனுசனா தான் இருக்கோம்,’ என்பதை உறுதி செய்தது.

    என் மனைவி தான் சொல்வாள், “நீ ரொம்ப தான் வேஷம் போடுற. ஆனா சராசரிகளை விட சராசரி நீ,” என்று. சராசரியாக தான் இருக்க வேண்டும் என்பது தான் இன்று எனது விருப்பமாக இருக்கிறது. இல்லையெனில் பித்து பிடித்து ரோட்டில் திரிய வேண்டியது தான். இது பொதுவாக சொன்ன கருத்து அல்ல. எனக்கு தனிப்பட்ட வகையில் நானே சொல்லி கொண்ட கருத்து. இதற்கு மேல் இதை பற்றி பட்டியலிட்டால் அப்புறம் எனது வெளி வேஷம் கலைந்து விடும் என்பதால், ஸ்டாப்!

    தமிழ்மணம் எனும் பிரபல தமிழ் வலைப்பதிவு திரட்டி 2009-ம் ஆண்டிற்காக நடத்திய சிறந்த இடுகைக்களுக்கான போட்டி கடந்த இரண்டு மாதமாக இரண்டு கட்டமாக நடந்து நேற்றோடு முடிவிற்கு வந்திருக்கிறது. ஏறத்தாழ பதினாறு பிரிவுகளில் வாக்கெடுப்பு மூலம் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த இரண்டு இடுகைகளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் ‘தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி தொடர்பான கட்டுரைகள்’ என்கிற பிரிவில் என்னுடைய தலித்தை கொளுத்தினார்கள் என்கிற பதிவு இரண்டாவது இடத்தை பெற்று இருக்கிறது.

    பதக்கம் எனக்கு பிடித்து இருக்கிறது என்பதினை மீண்டும் சொல்லி கொள்கிறேன். இதோடு புக்லேண்ட்ஸ் புத்தக கடையில் 500 ரூபாயிற்கு புத்தகங்கள் வாங்கி கொள்ள ஒரு கூப்பன் அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்கள். என்ன புத்தகங்கள் வாங்குவது என்பதை இப்போதே சிந்திக்க தொடங்கி விட்டேன். நல்ல புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள்.


  • ஆயிரம் முட்களாய் குளிர்.
    சுருண்டு கிடக்கும் கிழவியிடமிருந்து
    பிளாட்பார்ம் எங்கும் பரவுகிறது நடுக்கம்.
    அவளது தனிமையை அவ்வபோது தின்று போகின்றன
    சாலை பெருவாகனங்கள்.
    கருவிழிக்குள் எறும்புகள் பாதை அமைக்கும் வரை காத்திருக்கிறது இருள்.

    பிறகு ஒரு இரவு
    குளிரையும் இருளையும் மாண்டவளுக்காக அங்கே படையல் போட்டு
    உட்கார்ந்திருக்கிறாள் மற்றொரு பிளாட்பார்ம் கிழவி.


  •  சிறு வயதில் இருந்தே எனக்கு புது வருட பிறப்பு என்பது தீபாவளி, பொங்கல் போல ஒரு பண்டிகை தான். வளர்ந்ததும் புது வருட பிறப்பு என்பது எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டிய தினமாக மாறியது. மொழி தெரியாத ஊரில் சுற்றியது, இலக்கில்லாத பயணத்தில் கழித்தது, நண்பர்களுடன் சண்டை போட்டது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என புது வருட முதல் தின நிகழ்வுகள் திட்டமிட்டோ அல்லது திட்டம் இல்லாமலோ எதோ ஒரு மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டதாகவே அமைகின்றன.சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயில் அருகே மென்சனில் தங்கியிருந்த நாட்களில் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு மெரீனா கடற்கரையில் கூடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கண்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.

    “ஹேப்பி நியூ இயர்,” என்பது ஓர் இனிய கீதம் போல இளைஞர்களின் மூச்சுக்காற்றின் வெப்பத்தோடும் மது வாடையோடும் கடற்கரையை நிரப்பியிருக்கும். கடற்கரையை ஒட்டிய சாலையில் நூற்றுக்கணக்கான டூவீலர்கள் குடிக்கார இளைஞர்களால் பரபரத்து கொண்டிருக்கும். நிறைய போலீசார் குவிந்திருப்பார்கள். ஆனால் அந்த கூட்டத்தை கட்டுபடுத்த அவர்களை போல பத்து மடங்கு எண்ணிக்கை அதிகம் தேவை. ஆக அன்றிரவு அங்கே போலீசார் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருப்பார்கள்.

    யார் யாரை பார்த்தாலும் “ஹேப்பி நியூ இயர்” என கைக் குலுக்கி கொள்வார்கள். அன்றைய இரவு பெண்களை அங்கே பார்க்க முடியாது. ஒரு முறை அந்தக் கூட்டத்தில் ஒரு வெளிநாட்டு பெண்மணி மாட்டி கொண்டார். நூறு பேரிடமாவது கை குலுக்கி விட்டு தான் அவரால் அங்கிருந்து தப்ப முடிந்தது.

    பனிரெண்டு மணி அடித்ததும் இந்தியா பாகிஸ்தானை கிரிக்கெட்டில் வீழ்த்தியது போல ஒரே கரகோஷமும் ஆர்ப்பரிப்பும் எழும். மிருகங்களின் சந்தோஷம் போல இயற்கையோடு மனிதர்கள் இணையும் தருணம் அது.

    சாரை சாரையாக நடந்து வீட்டிற்கு திரும்பும் கூட்டத்தில் நகையணிந்த வாலிபர்களை வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்து சந்திற்குள் இழுத்து சென்று கொள்ளையடிக்க ஒரு கூட்டம் பாரதியார் சாலையில் காத்திருக்கும். அடுத்த நாள் காலை புத்தாண்டு முதல் சூரிய உதயத்தின் போது என்றுமில்லாத குப்பைகள் கடற்கரையில் மிகுந்திருக்கும்.

    புத்தாண்டு முதல் நாள் போன்கள் வாழ்த்துகளை சொல்லும் எஸ்.எம்.எஸ்களால் நிரம்பி வழியும்.

    “ஹலோ ஹேப்பி நியூ இயர்.”

    “ஸாரி ராங் நம்பர்.”

    “பரவாயில்லை. ஹேப்பி நியூர் இயர்.”

    எதற்கு இந்த பரபரப்பு? புத்தாண்டு தினம் ஏன் இப்படி தமிழகத்தில் மாறி போனது. கோயில்களை புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் திறந்து வைக்க வேண்டிய அளவு தமிழர்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்கான காரணம் என்ன? தனது தனித்தன்மையை மறந்து அதனை இழந்து கொண்டிருக்கும் ஓர் இனம் காணாமல் போன தனது பண்டிக்கை காலங்களை இப்படியாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு பிறப்பு என வேறு ரூபங்களில் கொண்டாடி திருப்தி பட்டு கொள்கிறது என்றே தோன்றுகிறது.

    இந்த கொண்டாட்டத்தில் புத்திசாலிகளாக இருப்பவர்கள் சிலர் தான். அதில் ஒரு பகுதியினர் செல்போன் கம்பெனிகாரர்கள். மற்ற நாட்களில் இலவச எஸ்எம்எஸ் என்றெல்லாம் விளம்பரப்படுத்தியவர்கள் இப்போது டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் அனுப்பப்படும் அனைத்து எஸ்எம்எஸ்களுக்கும் ஐம்பது பைசா கட்டணம் என அறிவித்து இருக்கிறார்கள். அதாவது உங்கள் சேவை திட்டத்தின்படி எஸ்எம்எஸ்ஸின் வழக்கமான பில் ஐம்பது பைசாவிற்கு குறைவாக இருந்தால் மட்டுமே இது செல்லுபடியாகும். ஐம்பது பைசாவிற்கு மேல் கட்டணம் என்று நிலையில் இருப்பவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.

    புத்தாண்டு பிறப்பு என்பது நமது கடந்த ஆண்டை ஒரு முறை அலசி பார்த்து நமது தவறுகளை திருத்தி கொள்ளவும் வருகிற ஆண்டை திட்டமிட்டு கொள்ளவும் கிடைக்கிற வாய்ப்பு என்று என்னை நானே சமாதானப்படுத்தி கொள்ள நினைக்கிறேன். ஆனால் அப்படி எதுவும் உருப்படியாக நடந்ததே இல்லை என்பதால் அதுவும் வெற்று வார்த்தைகளாகவே தெரிகிறது. Resolutionகள் போட்டு போட்டு நிறைய பேப்பர்கள் ஏற்கெனவே வீணாகி விட்டதால் இந்த ஆண்டு புத்தாண்டு பிறப்பு தினம் என்பது வெறுமனே ரெஸ்ட் எடுக்க மட்டுமே. அது கூட எனது வேலை அனுமதித்தால் தான். அப்புறம் நான் சொல்ல மறந்து விட்டேன், “ஹேப்பி நியூ இயர்.”  கோவித்து கொள்ளும் உணர்வாளர்களுக்கு, “இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.”


  • பாம்புகள்!
    தடித்தவை! இளைத்தவை! பெருந்தலை!
    நீண்டவை! குறுகியவை!
    சில படமெடுக்கும்! சில சுருங்கி கிடக்கும்!
    ஒன்றன் மேல் ஒன்றாய் நெளிந்து கொண்டு இருக்கும்
    ஆயிரக்கணக்கான சர்ப்பங்கள்
    சிலந்தி வலைப்பின்னலாய்
    பச்சைவெளியை கறுப்பாக்கி கொண்டிருக்கின்றன.

    உச்சியில் ஆணவமாய் தாண்டவமாடும்
    ஐந்து தலையானின் சீறல்
    மிச்சமிருக்கும் தாவரங்களையும் வாடச் செய்கின்றன.

    வானத்தை சூழ்கின்றன செந்நிற மேகங்கள்.
    நிலமென்றும் மலையென்றும் பாராது
    நடுநடுங்க செய்கிறது
    மெல்லியதாய் படமெடுத்து பின் விஸ்வரூபமெடுக்கும்
    நிலநடுக்கம்.

    விட்டு விட்டு பெய்த மழையால்
    உருவாகிறது ஒரு பெருவெள்ளம்.

    ஐந்து தலையானில் தொடங்கி
    ஓரே சர்ப்பமாய் பின்னி நிற்கின்றன
    மற்ற ஆயிரக்கணக்கான பாம்புகள்.

    ஒரு மின்னல் வெட்டி முறிந்து போனது.


  • எவ்வளவோ முறை தவிர்க்க முயன்றாலும்
    இன்று மீண்டும்
    அந்த விழிகளை பார்த்து விட்டேன்.

    சுயத்தை மறந்து
    தரையோடு தரையாய்
    கரைந்தாற் போல பரிதவிப்பு.

    தனது அடுத்த நொடி
    இன்னொருவன் கைகளால் எழுதபட போகிறதென பயம்.

    சுருண்டு பொசுங்கி புள்ளியாய்,
    கடைசி எழுத்திற்குள்
    ஒளிந்திருக்கும் இயலாமை.

    கண்களால் மன்றாடுவதை தவிர
    உடலிலும் உயிரிலும்
    வேறு செயலில்லை.

    கூர்மையானதொரு ஆயுதம்
    என்னுள் ஆழமாய் எங்கோ எதையோ அறுக்கிறது.


  • ஸ்ரீ லங்கா கார்டியன் பத்திரிக்கையில் வெளிவந்த அருந்ததி ராயின் பேட்டியில் இருந்து சில பகுதிகள்.

    …நிலைமை முற்றிலும் மோசமாக இருக்கிறது. நான் (இலங்கை) முகாம்களை நேரிடையாக பார்வையிடவில்லை. ஆனால் அங்கே மிக பெரிய மனித உரிமை மீறல் பிரச்சனை நடந்து கொண்டிருப்பது வெளிப்படை. அதை உலகம் அலட்சியபடுத்துகிறது.  லட்சக்கணக்கான மக்களை முகாம்களில் அடைத்து வைத்து அவர்கள் மீது வெற்றி கொக்கரிப்பு செய்வது என்பது அதிர்ச்சியான விஷயம். மனதை உறைய செய்யும் கொடுமை. அரசாங்கம் அங்கு நடப்பதை வெளியுலகம் அறிய முடியாதபடி செய்து இருக்கிறது. ஆனாலும் அதை தாண்டி வெளி வந்த சில தகவல்களை பாருங்கள்.  (நாஜிகளின்) முகாம் என அதற்கு பெயரிடுவது தான் பொருத்தமாக இருக்கும்.  இவை எல்லாம் பொய் என்றால் இலங்கை அரசு எதற்கு மீடியாவை முகாம்களுக்கு போக அனுமதி மறுக்கிறது…

    …இந்திய மக்கள் பல்வேறுபட்ட பின்புலங்களை உடையவர்கள். இங்குள்ள ஊடகங்கள் இலங்கையில் என்ன நடந்தது என்பதை கவனமாய் தவிர்த்து விட்டன. அதனாலே மக்களுக்கு இல்ங்கையில் நிலவும் சூழல் பற்றி ஒன்றுமே தெரியாது. இந்தியாவில் உள்ள அதிகாரத்தின் ஒரு பகுதி அரசு இயந்திரத்தின் வலிமையின் மீது மையல் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் மக்களின் குரலை நசுக்கி விட இயலும் என நினைக்கிறார்கள். இவர்களுக்கு இஸ்ரேல் பிடித்திருக்கிறது. இஸ்ரேல் கடைபிடிக்கும் வழிமுறைகள் பிடித்திருக்கிறது. இது வெட்க பட வேண்டியது. ஓர் இனவாரியான மைனாரிட்டி மக்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை. அரசு பயங்கரவாதத்தினை காஷ்மீரில், நாகாலாந்தில் பார்க்க முடியும்…

     

    …இலங்கை அரசாங்கத்தின் வழிமுறைகளை இந்திய அரசு மாவோயிஸ்டகளுக்கு எதிராக பயன்படுத்தும் என நாங்கள் நினைக்கிறோம். வளங்கள் நிறைந்த காட்டு பகுதியினை தொழில் அதிபர்களுக்காக இந்திய அரசு கைப்பற்ற நினைக்கிறது…

    …கார்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கான பணம் இதில் சம்பந்தபட்டு இருப்பதால் இந்த பிரச்சனை இப்போதைக்கு முடிய போவதில்லை. நம்மை சுற்றி பாருங்கள், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை, இப்போது இந்தியா எல்லா இடங்களிலும் உள்நாட்டு போர் நடக்கிறது. இது முற்றிலும் கவலையளிக்கக்கூடிய நிலை…

    மேலதிக வாசிப்பு
    அருந்ததி ராயின் முழு பேட்டி


  • நாங்கள் சில நூறு பேர் இருந்தோம்.
    ஏழெட்டு மின்னல் கீற்றுகள்
    ஒரே சமயத்தில் வானத்தில் தோன்றுவதை பார்த்தோம்.
    அடர் கருப்பினூடாக அந்த மின்னல் கிழிசல்கள்
    அவரது வருகைக்கு முன்னுரை எழுதின.

    குழந்தை அழும் சத்தம்.
    அதை அதட்டும் ஒலி.
    அழுகை கட்டுபடாமல் பெரும் சத்தமாகி
    தொற்று போல பலருக்கும் பரவுகிறது.
    ஒரு பெண் தேம்பி தேம்பி அழுகிறாள்.
    முதியவர் சரிந்து தரையில் விழுகிறார்.
    ஒரு கூட்டுப் பாடல் போல அழுகை ஒலி
    பெரும் வடிவெடித்து வெடிக்கிறது.

    ஒரு பாம்பு நெளிவது போல
    எங்களுக்கு அடியில் பூமி நெளிகிறது.
    ஒரு பெண் பயந்து அலறுகிறாள்.
    காற்று எங்களது முகத்தில் மழைத்தூறலை வீசி அடிக்கிறது.
    கண்ணிமைக்கும் நேரத்தில் அது நிகழ்ந்தது.


  • கடும் தண்ணீர் தட்டுபாடு, அச்சுறுத்தும் மழைக்காலம், டெண்ட் கூரைகளை பெயர்த்தெடுக்கும் பலத்த காற்று, கழிவறைகள் வழிந்து வாழும் டெண்ட்களுக்கு இடையில் ஓடும் சுகாதாரமற்ற நிலை, இட நெருக்கடி, ராணுவத்தினர் செய்யும் சித்ரவதைகள், அவ்வபோது ராணுவத்தினரால் காணாமல் போகும் முகாம்வாசிகள், முடக்கபட்ட சுதந்திரம் என்று தற்போது இலங்கையில் உள்ள தமிழர் முகாம்கள் பெரும் அவல நிலைக்கு ஆளாகி இருக்கிறது. இதற்கு ஆதாரமாய் அங்கு நடக்கும் விஷயங்கள் பற்றிய நேரடி சாட்சியங்களை Human Rights Watch என்கிற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது அறிக்கையில் சமீபத்தில் வெளியிட்டது. அதன் சுருக்கம் கீழே கொடுக்கபட்டு இருக்கிறது.

    இலங்கையில் இன்று இரண்டறை லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் சிறை வைக்கபட்டு இருக்கிறார்கள். ஐ.நாவின் கூற்றுபடி சரியாக 2,55,551 பேர். வவூனியா மாவட்டத்தில் உள்ள மானிக் முகாமில் தான் அதிகமானோர் தங்க வைக்கபட்டிருப்பதாக தெரிகிறது.

    மானிக் முகாமிற்கு அருகே உள்ள ஒரு நதியில் இருந்து பைப்லைன் மூலமாக தான் தண்ணீர் முகாமிற்கு அளிக்கபட்டு வந்தது. ஆனால் அக்டோபர் ஐந்தாம் தேதி இதன் முக்கியமான பம்பிங் யூனிட் அணைக்கபட்டது. நதியில் மிக குறைவான அளவு நீரோட்டம் இருப்பதே இதற்கு காரணம் என சொல்லபட்டது. இதன் காரணமாக முகாம்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு முப்பது லிட்டர் தண்ணீர் தான் அளிக்கபடும் என நிபந்தனை செய்திருக்கிறார்கள். ஐ.நாவின் அகதிகளுக்கான நிறுவனம் ஒரு தனி நபருக்கு ஒரு நாளைக்கு பதினைந்து லிட்டர் தண்ணீர் கொடுக்கபட வேண்டுமென பரிந்துரை செய்தது மீறப்பட்டு இருக்கிறது.

    முகாமில் உள்ள 38 வயதான ஜீவிதா, “இன்று காலை நான் என் குடும்பத்திற்காக இருபது லிட்டர் தண்ணீர் வாங்கினேன். என் குடும்பத்தில அஞ்சு பேர். நாளை காலை வரை வேற தண்ணீ கிடைக்காது. நாங்க குடிக்கிறதுக்கு, சமைக்கிறதுக்கு, துணி துவைப்பதற்கு, குளிப்பதற்கு எல்லாம் இவ்வளவு தண்ணீ தான். வேற கிடையாது. மூணு நாளா எங்க குடும்பத்துல யாருமே குளிக்கலை. கேம்ப் நிர்வாகிகளுக்கு இத பத்தி கவலையே கிடையாது,” என்று சொன்னார்.

    முப்பது வயது ஆனந்தி தனது ஒரு வயது மகனுடன் முகாமில் இருக்கிறார். “இன்னிக்கு நாலறை மணி நேரமா கியூவுல நின்றிருந்தேன். அதுக்கு மேல நிற்க முடியல்லை. ரொம்ப அசதியாயிடுச்சு. நேத்து நடு ராத்திரியில் இருந்தே கியூவுல நின்னு காலையில ஒன்பது மணிக்கு தான் தண்ணீ கிடைச்சுது. முப்பது லிட்டர் கிடைச்சுது. எனக்கு பரவாயில்லை, நானும் என் மகனும் தான். ஆனா பத்து பேர் குடும்பத்துல இருந்தாலும் இவ்வளவு தண்ணீர் தான் குடுக்கிறாங்க. அவங்க பாடு இன்னும் கஷ்டம்,” என்கிறார் ஆர்த்தி.

    முப்பத்தி இரண்டு வயதான மாதவி,” தண்ணீ கஷ்டத்துல மக்கள் ரொம்ப துவண்டு போயிட்டாங்க. இங்க ரொம்ப நிலைமை சிக்கலா இருக்கு. ஏழாம் தேதி திடீரென்று அரை மணி நேரம் தண்ணீ வந்தது. மக்கள் எல்லாம் பக்கெட்டை தூக்கிட்டு ஓடி போய் அடிதடி தள்ளுமுள்ளாகி பெரிய சண்டை ஆகிடுச்சு. ஒருத்தருக்கொருத்தர் வாய் தகராறு ஆகி கற்கள் எல்லாம் வீசிக்கிட்டாங்க. நாளைக்கு இதே நிலைமை இருந்தா இந்த முகாம் முள்வேலிகளை தூக்கி எறிஞ்சிட்டு எல்லாரும் நதிக்கு போய் நாங்களா தண்ணீர் பிடிப்போம்னு பேசிக்கிட்டாங்க,” என்று நடந்ததை சொன்னார்.

    கடந்த இரண்டு வாரங்களாக வவூனியா மானிக் முகாம்களில் பலத்த காற்று அடிப்பதால் முகாம் கூரைகள் பல இடங்களில் அறுந்து விட்டது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் வசிக்கும் குமரவேல் என்பவர்,” மரத்து கிளைகள் எல்லாம் பலத்த காத்துல உடைஞ்சு முகாம் கூரைங்க மேல விழுது. டென்ட்டிற்கு வெளியே தான் சமையல் செய்ய வேண்டியதிருக்கு. பலத்த காத்துனால தூசியும் மண்ணும் சாப்பாட்டுல விழுது. இங்க வாழறது ரொம்ப கடினமான விஷயம்,” என்கிறார்.

    வவூனியாவில் உள்ள மானிக் முகாமின் இரண்டாவது பிரிவில் குமரவேல் தற்போது இருக்கிறார். இங்கு உள்ள இடப்பற்றாகுறை காரணமாக அவருடைய குடும்பத்தில் உள்ள ஐந்து பேர் மற்றும் வேறொரு குடும்பத்தை சார்ந்த நான்கு பேர் ஒரே டெண்ட்டில் வசிக்க வேண்டியதிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைத்த அளவுகள்படி பார்த்தால் இந்த இரண்டாவது பிரிவில் 29,000 பேருக்கு குறைவாக தான் தங்க வைக்கபட முடியும். ஆனால் உண்மையில் இங்கு 52,000 பேர் வசிக்கிறார்கள். இரவுகளில் பெண்கள் டெண்ட்களில் தூங்குகிறார்கள். ஆண்கள் டெண்ட்டிற்கு வெளியே தூங்க வேண்டியதிருக்கிறது. அக்டோபர் மாதம் வழக்கமாய் வரும் மழைக்காலம் தொடங்கி விட்டால் தங்களது நிலை என்னாவாகும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்கிறார் குமரவேல். “போன மாசம் கடுமையா மழை பெய்ஞ்சுது. இங்க மழை தண்ணீ ஓடறதுக்கு வழியில்லை. அது அப்படியே தேங்கிடுது. அப்புறம் நாங்க நடக்கவே முடியாத நிலைமை வந்துடுது,” என்று கவலைபடுகிறார் குமரவேல்.

    கடந்த கடும்மழை காரணமாக கழிவறையில் இருந்து மல கழிவுகள் டெண்ட் வழியாக ஓட தொடங்கி விட்டது. இத்தகைய அசாதாரண வாழ்க்கை சூழலில் முகாம்வாசிகள் ராணுவத்தினருடன் சில சமயம் மோதல்களில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வருகின்றன. செப்டம்பர் 26-ம் தேதி ராணுவத்தினர் இப்படி ஏற்பட்ட மோதலை முடிவிற்கு கொண்டு வருவதற்காக கூட்டத்தினை பார்த்து சுட்டிருக்கிறார்கள். இதில் இருவருக்கு காயமேற்பட்டு இருக்கிறது. ஒரு குழந்தையினை துப்பாக்கி குண்டு தாக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதை பற்றி முகாம் நிர்வாகம், “கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள்,” என்று சொல்லியிருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்தது வேறு என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

    வவூனியாவில் உள்ள மானிக் முகாமில் முதல் பிரிவிற்கு இரண்டாம் பிரிவிற்கும் இடையில் தடுப்பு அமைக்கபட்டிருக்கிறது. Zone one & two என்று இவை அழைக்கபடுகின்றன. இந்த இரு பிரிவிற்கு இடையே உள்ள மக்கள் தங்களது உறவுகளை சந்திக்க சிலசமயம் அனுமதிக்கடுகிறார்கள். முதல் பிரிவில் சமையல் செய்ய விறகுகள் கிடைப்பதில்லை என்பதால் அதற்காகவும் மக்கள் இரண்டாம் பிரிவிற்கு போகிறார்கள். அன்று மாலை ஐந்தரை மணிக்கு இந்த பிரிவுகளுக்கு இடையிலான ரோட்டினை கடந்து போக அனுமதி வேண்டி மக்கள் நீண்ட கியூவில் நின்று காத்து இருந்தார்கள். அப்போது விறகுகளை சுமந்தபடி ரோட்டினை கடந்த ஒரு மனிதனை ராணுவத்தினர் எந்த காரணமும் இல்லாமல் தாக்க துவங்கியிருக்கிறார்கள். மக்கள் இதனை தடுக்க முயன்ற போது மேலும் ராணுவத்தினர் அங்கு கூடி முகாம் மக்களை அடித்து இருக்கிறார்கள். ஒரு ராணுவ வீரன் கையெறி குண்டினை கூட்டத்தின் மீது எறிவதாக தூக்கி காட்டியிருக்கிறான். அதற்கு அடுத்து நடந்த துப்பாக்கி சூட்டில் தான் இருவருக்கு காயமேற்பட்டு இருக்கிறது. இதற்கு பிறகு வேறொரு ராணுவ வீரன் முதலில் அடிபட்ட ஆள் கொணடு வந்த விறகு கட்டின் மேல் வெடிகுண்டினை பொருத்தி அதனை தனது செல்போன் கேமராவில் படமெடுத்து இருக்கிறான். இதனை தொடர்ந்து பத்தொன்பது பேர் கைது செய்யபட்டார்கள். அவர்களில் சிலர் மட்டுமே பிறகு விடுவிக்கபட்டார்கள். கைது செய்யபட்டவர்களை ராணுவத்தினர் கடுமையாக அடித்து சித்ரவதை செய்ததாக சொல்லபடுகிறது.

    செப்டம்பர் 23-ம் தேதி இது போல வவூனியாவில் உள்ள மற்றொரு முகாமில் (பூந்தோட்டம் முகாம்) ராணுவத்தினர் முகாம்வாசிகளை அடித்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் அங்கு ஒரு முகாம்வாசி திடீரென ராணுவத்தினரால் வேறு இடத்திற்கு அழைத்து செல்லபட இருந்தார். அதனை மக்கள் தட்டி கேட்டார்கள். இதில் ராணுவத்தினரின் வாகனங்கள் அடிக்கபட்டன. இதன் காரணமாக மூன்று மணி நேரம் அங்கு கலவரச் சூழல் இருந்தது.

    ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மானிக் முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டினை பற்றி தனக்கு அறிக்கை கொடுக்குமாறு கேட்டிருக்கிறது. இச்சூழலில் உலகமெங்கும் மனித உரிமை ஆர்வலர்கள் இந்த முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு இங்குள்ள மக்கள் அனைவரும் சுதந்திரமாய் தங்களது ஊருக்கு செல்ல நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டுமென வற்புறுத்தியபடி இருக்கிறார்கள்.

    தமிழக அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் பத்து பேர் கொண்ட குழு ஒன்று தற்போது இலங்கை முகாம்களை நேரடியாக பார்வையிட சென்றிருக்கிறது. கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், சுதர்ஸன நாச்சியப்பன், ஜே.எம்.ஆருண் உள்ளடக்கிய இந்த குழு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள முகாம்களை பார்வையிட்டு இருக்கிறார்கள். நாளை அவர்கள் வவூனியா முகாம்களுக்கு செல்கிறார்கள். இந்த நிலையில் இந்த குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு செல்வதற்கு கொடுக்கபட்டிருந்த அனுமதியினை இலங்கை அரசு ரத்து செய்து இருக்கிறது. இந்த குழுவினர் என்னென்ன கண்ணீர் கதைகளை நேரில் பார்க்க போகிறார்கள் என்பதையும் இவர்களது நேரடி பயணம் எத்தகைய மாற்றத்தை கொண்டு வரும் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


  • பக்கத்தில் படுத்திருக்கும் பெண்
    யாரென தெரியவில்லை.
    இருளை அகற்ற சுவிட்ச்
    எங்கிருக்கிறது என புரியவில்லை.
    இது என் வீடுமில்லை.
    இங்கு இதற்கு முன் வந்ததாய்
    ஞாபகமும் இல்லை. 

    என் துணிகளை தேடி
    தரையில் கைகளால் துளாவிய போது
    மீண்டும் வந்தது
    மண்டைக்குள் அந்த நெளியும் புழு.

    கண்கள் இருட்டின.
    காதிலிருந்து இரத்தம் வழிந்தது.
    அந்த புழு பெருத்து கொண்டு இருக்கிறது.
    உடலெங்கும் வலி வியாபித்தது.
    விஷ முற்கள் கடகடவென
    உடலெங்கும் முளைக்க தொடங்குகின்றன.

    முதுகு தண்டினில்
    மற்றொரு புழு இப்போது நகர தொடங்குகிறது.
    தரையில் படுத்து துடிக்கிறேன்.
    எழுந்து நின்றால் சற்று வலி குறையும் என
    எழுந்து நிற்கிறேன்.

    எதையும் அறியாமல் நிர்வாணமாய்
    தூங்கி கொண்டிருக்கும் அந்த பெண் யார் என
    இப்போதும் புலப்படவில்லை.

    காற்று தான் வலியை கொண்டு வருகிறதா?
    ஜன்னலில் எட்டி பார்த்தேன்.
    நான் நிற்பது கட்டாயம்
    பத்து அல்லது பதினைந்தாவது மாடியாவது இருக்கும்.
    இது கட்டாயம் என்னுடைய நகரமல்ல.

    ஜன்னலில் ஏறி அமர்ந்தேன்.
    என்னுடைய நிர்வாணம் இப்போது நடுங்க வைத்தது.
    மீண்டும் புழு மண்டையில் நெளிய காத்திருந்தேன்.
    அது நெளிய தொடங்கிய அந்த கணத்தில்
    ஜன்னலில் இருந்து வெளியே குதித்தேன்.


  • இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சனை எது?

    • பாகிஸ்தானுடன் நீடிக்கும் மோதல் மனபோக்கு
    • நாட்டினுள் ஊடூருவி தொல்லை கொடுக்கும் தீவிரவாதிகள்
    • உள்நாட்டு கலவரம் செய்யும் மாவோயிஸ்ட்டுகள்
    • கட்டுபடுத்த இயலா விலையேற்றம்
    • அரசு நிர்வாகத்தை அரித்து தின்று கொண்டிருக்கும் லஞ்சம்
    • சாதி பாகுபாடும் தலித் மற்றும் மலைவாசி மக்கள் மீதான வன்முறைகளும்

    என்னை கேட்டால் சாதி தான் இந்தியாவின் மைய பிரச்சனை என்பேன். ஆயிரமாயிரம் காலமாய் சாதியால் எழுப்பப்பட்டு வந்த இந்த சமூகம் இன்று சாதிய பாகுபாடுகளால் அவலத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு சாட்சியாக இன்றும் இந்தியா எங்கும் சாதி பாகுபாடு காரணத்தால் எக்கச்சக்க வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இதில் பெரும்பாலனவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கபடுவதில்லை என்பது ஒரு பக்கம். பல சமயங்களில் பாதிக்கபட்டவர்களே காவல்துறையால் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் அல்லது கைது செய்யபடுகிறார்கள்.

    மத்திய பிரதேச சம்பவம்

    மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கிறது சிவ்புரி மாவட்டம். தலித்களுக்கு எதிரான வன்முறைகள் இங்கு அதிகம் நடப்பதுண்டு. சவ்புரியில் வசிக்கும் நாராயண் சிங் என்னும் 56 வயது தலித் ஒருவர் இந்த வாரம் உயிரோடு எரிக்கபட்டார். இன்று உயிருக்கு போராடிய நிலையில் அவர் மருத்துவமனையில் இருக்கிறார். 70000 ரூபாய் கடனை திரும்ப செலுத்தவில்லை என்கிற காரணத்திற்காக கடன் கொடுத்தவரின் ஆட்கள் இந்த குற்றத்தை செய்தார்கள் என வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை காவல்துறை தேடி கொண்டிருக்கிறது.

    தலித்களின் வறுமையில் பணம் சம்பாதிக்கும் வட்டிக்காரர்கள்

    மத்திய பிரதேச சம்பவத்தில் மூன்று விஷயங்களை கவனிக்க முடியும். ஒன்று, தலித் மக்களை பெரும்பாலும் ஆட்டி படைக்கும் வட்டிக்காரர்கள். வறுமையில் இருக்கும் தலித் மக்களை குறி வைத்தே இயங்கும் வட்டிக்காரர்கள் இந்தியாவெங்கும் இருக்கிறார்கள். பெரும்பாலும் படிப்பறிவற்ற இம்மக்களிடையே சட்டத்திற்கு முரணாக அதிக வட்டிக்கு கடன் கொடுக்கபடுகிறது. கடன் செலுத்த தவறுபவர்களுக்கு அடித்தல், உதைத்தல், நிலத்தை பிடுங்குதல், நகைகளை களவாடுதல், இப்போது நடந்தது போல கொலை முயற்சி, கொலை, அந்த வீட்டு பெண்களிடம் பாலியல் சீண்டல் என சட்டத்திற்கு முரணான விஷயங்கள் அரங்கேறுகின்றன. தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவத்தை சில மாதங்களுக்கு முன்பு கேள்விபட்டேன். கடன் செலுத்த தவறிய காரணத்தினால், ஓர் ஆட்டோ டிரைவரின் மனைவியை தூக்கி கொண்டு போய் விட்டார்களாம் கடன்காரர்கள். இதை ‘நடந்தது என்ன’ நிகழ்ச்சியில் வெளிபடுத்துவதற்காக சம்பந்தபட்டவர்களை தேடிய போது துர்திர்வஷ்டமாக அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இப்படி வறுமையில் உழலும் மக்களை குறி வைத்து, அதிலும் குறிப்பாக தலித் மக்களை குறி வைத்து மிக பெரிய அளவில் வட்டிக்காரர்கள் இயங்குகிறார்கள் என்பது உண்மை.

    தலித் மக்களின் நிலங்கள் களவாடபடுகின்றன

    மத்திய பிரதேச சம்பவத்தை கவனிக்கும் போது குறிப்பிட வேண்டிய இன்னொரு பிரச்சனை நில அபகரிப்பு. இந்த சம்பவத்தில் நாராயண் சிங்கின் இரண்டு ஏக்கர் நிலத்தை கைபற்ற கடன் கொடுத்தவர் முயன்று இருக்கிறார். இதில் தான் ஆரம்பமாகி இருக்கிறது பிரச்சனை. சமீப வரலாற்றை புரட்டி பார்த்தால் தலித் மக்களின் நிலம் பல வகைகளில் அபரிதமாக வலுக்கட்டாயமாக பறிக்கபட்டிருப்பதை காணலாம். தலித் மக்களுக்காக ஒதுக்கபட்ட பஞ்சமி நிலத்தை பெரும்பாலும் இன்று சாதி இந்துகள் கையகபடுத்தி வைத்திருப்பது இதற்கு ஓர் உதாரணம்.

     ஏன் எரிக்கிறார்கள்?

    கடைசியாக இந்த விஷயத்தில் நான் எழுத விரும்புவது இது தான். எதற்காக எரிக்கிறார்கள்? ஊரில் பல பேர் முன்னிலையில் எதற்காக இப்படி ஒரு விபரீத தண்டனை? கிராமத்து சாதி இந்துக்கள் முன்னிலையில் தலித் இளைஞர்கள் பல வித அசிங்கங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். தலித் பெண்கள் நிர்வாணமாக்கபட்டிருக்கிறார்கள். பண்டிட் குயின் படத்தில் காட்டியது போல ஊரே சேர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போன்ற கொடூரங்கள் இந்தியாவில் நடந்திருக்கின்றன. ஊருக்கு நடுவில் இப்படி ஒரு கொடூரமான தண்டனை கொடுக்கும் போது அங்கிருக்கும் மற்ற தலித்கள் இனி காலத்திற்கும் வாய் பேச முடியாத, எதிர்ப்பை காட்ட முடியாத அளவு பயத்தில் உறைந்து போவார்கள். கொங்கோல் அரசர்களும் கிராமத்து பண்ணையார்கள் கண்டு பிடித்த முறை இது.

    “இனி நம்ம சாதி பொம்பளைங்க சாதி மாறி ஆசை வைக்க கூடாது” – கவிதை

    தலித் மற்றும் மலைவாசி மக்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க நாடு தழுவிய விழிப்புணர்வும், கிராமங்கள் தோறும் கண்காணிப்பு குழுக்களும், தொலை நோக்கு பார்வையாக இதற்கான திட்டங்களும் செயல்வடிவங்களும் போர்கால அவசரத்தில் இயற்றபட வேண்டும். இல்லையெனில் இன்னும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாவது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவது மட்டுமல்ல, இந்த நாடு காலத்தே பின்னோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை பிறகு யாராலும் தடுக்க முடியாமல் போய் விடும். அப்புறம் ச்சும்மா நகரத்து மத்திய வர்க்கத்தினரை ஏமாற்ற வேண்டுமானால் ‘2012இல் இந்தியா வல்லரசு ஆகும்’ அல்லது ‘ஜிடிபி எட்டினை கடக்கும்’ போன்ற அர்த்தமில்லா பிரச்சாரத்தை பரப்பி கொண்டிருக்கலாம்.

     நன்றி

    புகைப்படம்: Fady Habib (புகைப்படக்காரர் தனது புகைப்படத்தை பற்றி சொன்னது – “பாகுபாடு நிறத்தினை வைத்து தொடங்குவதில்லை அது தனிபட்ட மனிதனின் மனநிலையால் உருவாகிறது. இந்த (புகைப்படத்தில் தோன்றும்) கை உறுதியை பற்றிய கற்பிதத்தினை உருவாக்கலாம். ஆனால் இது உண்மையில் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமான விரல்களின் ஒற்றுமையால் உண்டானது என்பது புரிந்து கொள்ளபட வேண்டும்.)